இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் வார்த்தைகளில் பிறர்சிநேகம்

புறணி பேசுபவனின் நாவு மூன்று புறம் கருக்குள்ள வாளாக இருக்கிறது என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார். அது அயலானின் நற்பெயரைச் சிதைக்கிறது; அந்தப் புறணியைக் கேட்பவர்களின் ஆத்துமங்களைக் காயப்படுத்துகிறது; புறணி பேசுபவனிடமிருந்து தேவ வரப்பிரசாதத்தை அகற்றி அவனுடைய ஆத்துமத்தையே கொல்கிறது. ""மறைவாய்க் கோள் சொல்கிறவன், சத்தம் போடாமல் கடிக்கும் பாம்புக்குச் சமமாயிருக்கிறான்'' (சங்கப்.10:11).

வார்த்தைகளில் சகோதர நேசத்தை அனுசரிப்பதற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக, புறணி பேசுவதன் எல்லா வகைகளையும் நீ விலக்க வேண்டும். ""கோள் சொல்கிறவன் தன் ஆத்துமத்தைக் கறைப்படுத்துவான், அவன் சகலராலும் வெறுக்கப்படுவான்'' என்கிறார் பரிசுத்த ஆவியானவர் (சீராக்.21:31). ஆம்; அவன் கடவுளுக்கும் மனிதருக்கும், தங்கள் சொந்த வேடிக்கைக்காக அவனது அவதூறான வார்த்தைகளைப் பாராட்டி அவனை ஊக்கப் படுத்துபவர்களுக்கும் கூட வெறுப்புக்குரியவன் ஆவான். அவர்களும் கூட அவனைத் தவிர்க்கின்றனர். ஏனெனில் மற்றவர்களைப் பற்றித் தங்களிடம் அவன் அவதூறு பேசுவது போல, தங்களைப் பற்றி மற்றவர்களிடமும் அவதூறு பேசுவான் என்று அவர்கள் நியாயமாகவே பயப்படுகின்றனர். மற்ற துர்க்குணங்களை விட்டு விட்டவர்களும் கூட இதை எளிதாக விலக்க முடிவதில்லை என்று அர்ச். ஜெரோம் சொல்கிறார்: ""மற்றப் பாவங்களை விட்டு விட்டவர்கள் தொடர்ந்து அவதூறு பேசும் பாவத்தில் விழுகிறார்கள்.'' கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் கூட, ஓர் அயலானின் நற்பெயரைக் காயப்படுத்தாமல் தங்களால் பேச முடியாது என்னும் அளவுக்கு மிகக் கூரிய நாவுகளை உடைய சிலர் இருப்பது பரிதாபத்திற்குரியது! தாமஸ் கேன்டிம்ப்ரேட்டென்சிஸ் என்பவர் கூறுவது போல, கோள் சொல்பவனாயிருந்த ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு நேர்ந்த கதி இவர்களுக்கும் நேராமல் கடவுள் காப்பாராக. இவன் கடுங்கோப வெறியில், தன் பற்களால் தன் நாக்கைக் கடித்துக் குதறியபடி மரணமடைந்தான். இவனைப் போன்ற மற்றொரு பாவியைப் பற்றி அர்ச். பெர்னார்ட் பேசுகிறார். இவன் அர்ச். மலாக்கியின் நற்பெயரைக் கெடுக்க முயன்றான். திடீரென அவனுடைய நாக்கு வீங்கி, புழுத்துப் போனது! இந்தப் பரிதாபமான நிலையில் அந்தப் பரிதாபத்திற்குரிய மனிதன் ஏழு நாட்கள் கடும் வேதனையுற்ற பின் மரணமடைந்தான்.

ஆனால் அனைவரைப் பற்றியும் நல்ல விதமாகப் பேசுபவர்கள் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் எவ்வளவு பிரியமானவர்களாக இருக்கிறார்கள்! ""தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களை ஒரு தடவை கூடக் குறை பேசாத எந்த மனிதனையாவது எனக்குத் தெரியும் என்றால், அவனுக்குப் புனிதப் பட்டம் கொடுக்கப்பட நான் முயற்சிகள் எடுப்பேன்'' என்று அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாள் கூறுவது வழக்கம். ஆகவே, பிறரைப் பற்றிய அவதூறான ஒரு வார்த்தை கூடப் பேசிவிடாதபடி எச்சரிக்கையாக இரு. எல்லாவற்றிற்கும் மேலாக, மிக அற்பமான அளவிலும் கூட உன் மேலதிகாரிகளின் நற்பெயருக்குக் களங்கம் வருவித்து விடக் கூடிய எந்த விதமான பேச்சுக்கும் எதிராக உன்னையே நீ காத்துக் கொள். அவர்களைப் பற்றி அவதூறு பேசுவதன் மூலம், அவர்களது தீர்ப்புகள் மற்றும் அதிகாரம் ஆகியவற்றில் பிறர் கொண்டிருக்கும் மரியாதையை நீ குறைத்து விடுவது போலவே, உன் தோழர்களின் கீழ்ப்படிதல் உணர்வையும் நீ குறைத்து விடுவாய்.

புறணி என்னும் பாவம் மற்றவர்களைப் பற்றி உண்மையல்லாத செய்திகளைப் பரப்புவது, அவர்களுடைய குறைகளை மிகைப் படுத்திக் காட்டுவது, அவர்களுடைய மறைவான பாவங்களை வெளிப்படுத்துவது ஆகியவற்றால் மட்டுமின்றி, அவர்களுடைய புண்ணியச் செயல்களைக் குறைபாடுள்ளவையாகக் காட்டுவதாலும், அவற்றிற்கு ஒரு தீய நோக்கம் கற்பிப்பதாலும் கூட செய்யப் படுகிறது. மற்றவர்களின் நற்செயல்களை மறுப்பதும், அவர்களுக்குச் செலுத்தப்படும் நியாயமான புகழ்ச்சிக்கு அவர்களுக்குள்ள தகுதியையும் கேள்விக்குள்ளாக்குவதும் கூட புறணி என்னும் பாவம்தான். தங்கள் அவதூறுகளை அதிகம் நம்பக்கூடியவையாக ஆக்கும்படி சிலர் மற்றவர்களைப் புகழத் தொடங்கி, அவர்களைப் பற்றி அவதூறு பேசுவதில் முடிக்கின்றனர். இப்படிப்பட்டவன் மிகுந்த திறமையுள்ளவனாக இருக்கிறான், ஆனால் அவனிடம் ஆங்காரம் இருக்கிறது; இவன் மிகுந்த தாராளமுள்ளவன், ஆனால் அதே சமயம் பழிவாங்கும் குணமுள்ளவன் என்றெல்லாம் இவர்கள் பேசுகிறார்கள்.

ஆ, என் தேவனே, என் பாவங்களை தேவரீர் கண்ணோக்காமல், என் இரட்சணியத்திற்காகத் தம் உயிரைப் பலியாக்கியவரான உமது திருமகன் சேசுநாதரை நோக்கிப் பாரும். சேசுவின் நிமித்தமாக என் மீது தயவாயிருந்து, உமக்கு எதிராகவும், குறிப்பாக என் அயலான் மீது சிநேகமில்லாததால் அவனுக்கு எதிராகவும் நான் கட்டிக்கொண்ட பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும். ஆண்டவரே, உமக்கு வெறுப்பூட்டுகிற எதையும் என்னில் அழித்து, எல்லாவற்றிலும் உம்மை மகிழ்விக்கும் நேரிய ஆசையை எனக்குத் தந்தருளும்.

அனைவரைப் பற்றியும் நல்ல விதமாகப் பேசுவதில் கவனத்தோடு இரு. மற்றவர்கள் உன்னைப் பற்றி எப்படிப் பேச வேண்டுமென நீ விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களைப் பற்றிப் பேசு. நீ பேசும்போது உன்னோடு இல்லாதவர்களைப் பொறுத்த வரை, அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாள் தரும் அற்புதமான விதியைப் பின்பற்று: ""மற்றவர்கள் முன்னிலையில் எதைச் சொல்ல விரும்ப மாட்டாயோ, அதை அவர்கள் இல்லாத போதும் ஒருக்காலும் சொல்லாதே.'' ஒருவன் மற்றவர்களைப் பற்றிப் புறணி பேசுவதை நீ எப்போதாவது கேட்க நேரிட்டால், அவனுடைய பிறர்சிநேகமின்மையை ஊக்கப்படுத்தாதபடி கவனமாயிரு, அவனுடைய வார்த்தைகள் உனக்குப் பிடிக்கவில்லை என்பதை உன் தோற்றத்தில் காட்டு. இல்லாவிடில் அவனுடைய குற்றத்தில் நீயும் பங்கு பெறுவாயண். ஒன்றில் நீ அவனைக் கடிந்து கொள்ள வேண்டும், அல்லது பேசும் விஷயத்தை மாற்றி விட வேண்டும், அல்லது அங்கிருந்து சென்று விட வேண்டும், குறைந்த பட்சம் அவன் பேசுவதைக் கவனிக்காமல் இருக்க வேண்டும். ""முட்களால் உன் செவிகளுக்கு வேலியிடு; தீய நாவு பேசுவதைக் கேளாதே'' என்று பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார் சீராக். 28:28). புறணிக்கு எதிராக, அது உன் செவிக்குள் புகாதபடி, முட்களால் அவற்றிற்கு வேலியிடு. ஆகவே, ஒருவன் மற்றவர்களைப் பற்றி அவதூறு பேசுவதை நீ கேட்கும்போதெல்லாம், குறைந்த பட்சம் உன் மவுனத்தாலோ, அல்லது உன் முக பாவனையாலோ, அல்லது கண்களைத் தாழ்த்திக் கொள்வதாலோ, அந்த உரையாடலில் உனக்குப் பிரியமில்லை என்பதைக் காட்டுவது அவசியம். எதிர்காலத்தின் உனக்கு முன்னால் யாரும் மற்றொருவனைப் பற்றி அவதூறு பேசத் துணியாத விதத்தில் எப்போதும் நடந்துகொள். உன்னால் முடியும்போது, அவதூறாகப் பேசப்படும் மனிதனின் இடத்தை நீ எடுத்துக் கொள். ""உன் உதடுகள் இரத்தாம்பர நாடாவைப்போல் சிவப்பானவை'' (உந்.சங்.4:3). என் மணவாளியே உன் உதடுகளை நான் செந்நிற நாடாவைப் போலாக்குவேன் என்கிறார் ஆண்டவர். அதாவது, அர்ச். நிஸ்ஸா கிரகோரியாரின் விளக்கப்படி, உன் வார்த்தைகள் மற்றவர்களின் குறைகளை முடிந்த வரை மறைத்து மூடும் அளவுக்கு பிறர்சிநேகத்தால் நிறைந்திருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சமாக, அவர்களுடைய செயல்கள் மன்னிக்கப்படத் தக்கவை என்றால், அவர்களுடைய நோக்கம் சரியானதே என்று நீ வாதிட வேண்டும். ""செயலை ஆதரிக்க உன்னால் இயலவில்லை என்றால், அதன் நோக்கத்தையாவது ஆதரித்துப் பேசு'' என்கிறார் அர்ச். பெர்னார்ட். சூரியஸ் என்பவர் கூறுவதுபோல, மடாதிபதி கான்ஸ்டபைல் என்பவர் ""தமது சகோதரர்களின் மூடுதுகில்'' என்று அழைக்கப்பட்டார். ஏனெனில் இந்தப் பரிசுத்த துறவி, மற்றவர்களைப் பற்றி யாராவது குறை பேசுவதைக் கேட்ட போதெல்லாம், அவர்களை மூடிப் பாதுகாக்கவும், ஆதரிக்கவும் முற்பட்டார். அர்ச். தெரேசம்மாளும் இப்படியே நடந்துகொண்டாள். அவளைப் பற்றித் துறவறக் கன்னியர் வழக்கமாக, அவள் முன்னிலையில் தங்கள் நற்பெயர் பாதுகாப்பாக இருந்தது, ஏனெனில் அவள் அதை எப்போதும் ஆதரித்துக் காத்து வந்தாள் என்று சொல்வதுண்டு.