இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தாவரங்களை அழிக்கும் செடிப் பேன் பூச்சி

முறுமுறுத்தல், கீழ்ப்படியாமை ஆகியவற்றையும், அவற்றிற்கான தீர்வையும் பற்றிய கனவு-காட்சி. ஓர் எச்சரிக்கை!

1876 அக்டோபர் மாதத்தின் முதல் வாரம்

பின்வரும் கனவு 1876 விடுமுறை நாட்களில், அக்டோபர் 1 முதல் 7 வரை லான்ஸோவில் நடந்த மூன்றாவது தியானத்தின் முடிவில் டொன் போஸ்கோவால் விவரிக்கப்பட்டது. பதிவேடு களில் அது பதிவு செய்யப்பட்டுள்ள விதம் பின்வருமாறு:

டொன் போஸ்கோ தாம் ஒரு மிகப்பெரிய மண்டபத்தில் இருப்பதாகக் கண்டார். பல்வேறு சபைகளைச் சேர்ந்த துறவிகள் பெரும் எண்ணிக்கையில் அங்கே ஒன்றுகூடியிருந்தனர். அவர் வந்து சேர்ந்தபோது, எல்லோரும் அவரைத்தான் எதிர்பார்த்துக் கொண் டிருந்தார்கள் என்பது போல, எல்லோருடைய கண்களும் அவரை நோக்கித் திரும்பின. கூட்டத்தின் நடுவில் மிக வினோதமான முறையில் உடையணிந்த ஒரு மனிதரையும் அவர் கண்டார். அந்த மனிதரின் தலை ஒரு வெள்ளைக் கைக்குட்டையால் மூடப்பட் டிருந்தது. அவருடைய உடல் ஒரு வகையான வெள்ளை விரிப்பால் மூடப்பட்டிருந்தது. அந்தப் ‘பித்துக்குளி' யாராயிருக்கக் கூடும் என்று அவர் விசாரித்தபோது, “அந்த வேடிக்கையான மனிதன்” கனவு காண்கிறவராகிய டொன் போஸ்கோவேதான் என்று அவருக்குச் சொல்லப்பட்டது!

அவர் அந்தத் துறவிகளின் பெருங்கூட்டத்தின் மத்தியில் முன்னேறிச் சென்றார். அவர்கள் புன்னகைத்தபடி அவரைச் சுற்றி ஒரு மனித வளையத்தை உருவாக்கினார்கள். ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை. அவர் மிகுந்த ஆச்சரியத்தோடு அவர்களைச் சுற்றிலும் பார்த்தார். ஆனால் எல்லோருமே அவரைத் தொடர்ந்து பார்த்தக் கொண்டும், சிரித்துக் கொண்டும் மௌனமாக இருந்தார்கள். இறுதியாக அவரே அவர்களிடம்:

“ஏன் என்னைப் பார்த்து இப்படிச் சிரிக்கிறீர்கள்? என் தோற்றம் உங்களுக்கு சிரிப்பைத் தருகிறதா?” என்று கேட்டார்.

“இல்லவே இல்லை ” என்று சிலர் பதிலளித்தார்கள். “நீர் இங்கு வந்த காரணம் எங்களுக்குத் தெரியும் என்பதால்தான் நாங்கள் சிரிக்கிறோம்.”

“எனக்கே அது உறுதியாகத் தெரியாதபோது, உங்களுக்கு அது எப்படித் தெரிந்திருக்கும்? உங்கள் சிரிப்பு என்னை ஆச்சரியப் படுத்துகிறது.”

“காரணம் என்னவென்றால், நீர் இப்போதுதான் லான்ஸோ விலுள்ள உம் துறவிகளுக்கு தியானம் கொடுத்திருக்கிறீர்.”

“அதனால் என்ன?"

“இப்போது உம்முடைய இறுதி மறையுரையில் அவர்களுக்கு என்ன சொல்வது என்று கண்டுபிடிப்பதற்காகவே நீர் வந்திருக்கிறீர்.”

“அப்படியே இருக்கட்டும்! எனக்கு உதவும்படி உங்களிடம் நான் இரந்து கேட்கிறேன். அர்ச். பிரான்சிஸ் சலேசியாரின் சபை இன்னும் அதிகமாக செழித்து வளர உதவக்கூடிய ஏதாவது ஒரு நல்ல அறிவுரையை நான் அவர்களுக்குத் தர வேண்டும் என்று விரும்பு கிறேன். உங்களால் அதை எனக்குத் தர முடியுமா?”

“நாங்கள் ஒரே ஒரு ஆலோசனை மட்டும் தருகிறோம்: செடிப் பேனுக்கு எதிராகத் தங்களைக் காத்துக் கொள்ளும்படி உம் குழந்தைகளிடம் கூறும்.”

“செடிப் பேனா? அதற்கும், என் சபைக்கும் என்ன சம்பந்தம்?”

“செடிப் பேனை உம்முடைய சபையிலிருந்து விலக்கி வைத்திருக்க உம்மால் முடியும் என்றால், சபை நீண்ட காலம் நிலைத்திருக்கும். அது நன்கு செழித்து வளர்ந்து, எண்ணற்ற ஆன்மாக்களுக்கு மிகுந்த நன்மை செய்யும்.”

“நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை .”

“புரியவில்லையா? செடிப் பேனின் கசையடி பல துறவற சபைகளை அழித்து விட்டிருக்கிறது. வேறு பலர் தங்கள் மேலான நோக்கங்களை அடைய விடாதபடி அது அவர்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறது.”

“என்னை மன்னியுங்கள், உங்கள் அறிவுரையை நீங்கள் விளக்கமாகச் சொல்லவில்லை என்றால் அது எனக்குப் பயன் படாமல் போகும். எனக்கு அதில் எதுவுமே புரியவில்லை .”

“அப்படியானால் நீர் இவ்வளவு அதிகமான இறையியலைப் படித்தும் ஒரு பயனுமில்லை .”

“இது விஷயத்தில் நான் என் கடமையைச் செய்து விட்டதாக நம்புகிறேன். ஆனாலும் செடிப் பேனைப் பற்றிக் குறிப்பிடுகிற ஆய்வுக் கட்டுரை எதையும் நான் வாசித்ததேயில்லை.”

“ஆயினும் இறையியல் செடிப் பேனைப் பற்றி நிறைய சொல்கிறது. இந்த வார்த்தையின் தார்மீக, மற்றும் ஆன்மீகப் பொருள் என்ன?”

“இந்த வார்த்தைக்கு அடிப்படையான காரியங்களில் எந்த ஒரு ஆன்மீகப் பயன்பாட்டிலும் ஒரு தொலைவான குறிப்பைக் கூட என்னால் காண முடியவில்லை .”

“இந்த இரகசியத்தைப் புரிந்து கொள்ள உம்மால் இயலாத தால், உமக்கு அதை விளக்கிச் சொல்பவர் ஒருவர் இதோ வருகிறார்.”

இச்சமயத்தில், கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அசைவை டொன் போஸ்கோ உணர்ந்தார். யாருக்காகவோ பாதை விடப் பட்டது. இப்போது புதிதாக வந்த ஒருவர் தோன்றி, இரண்டு வரிசைகளுக்கு நடுவே அவரை நோக்கி முன்னேறி வந்தார். டொன்போஸ்கோ அவருடைய தோற்றத்தை ஆராய்ந்தார். ஆனால் அந்த மனிதர் அவருக்கு முற்றிலும் அந்நியராகத் தெரிந்தார். ஆயினும் நன்கு பழக்கமானது போன்ற அவருடைய நடத்தை ஒரு பழைய நண்பருடையது போலிருந்தது. டொன் போஸ்கோ உடனே அந்த அந்நியரிடம் பேசத் தொடங்கினார்.

“இந்தக் கனவான்கள் என்னைச் சிக்க வைத்துள்ள இந்த சிக்கலில் இருந்து என்னை நீர் விடுவிப்பீர் என்றால், நான் உம்மை வரவேற்கிறேன். செடிப் பேன் துறவற இல்லங்களை அழித்து விடுவதாக அச்சுறுத்துகிறது என்று நான் நம்ப வேண்டுமென இவர்கள் விரும்புகிறார்கள். தியானத்தின் கடைசி உரையின் கருப் பொருளாக செடிப் பேனையே நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இவர்கள் விரும்புகிறார்கள்.”

“இந்தக் காரியங்களைத் தாம் அறியாதிருக்கையில், டொன் போஸ்கோ தம்மை ஒரு ஞானியென்று நினைக்கிறாரா? உம் முழு பலததையும் கொண்டு நீர் செடிப் பேனை எதிர்த்துப் போராடுவீர், உம் குழந்தைகளையும் அப்படியே செய்யச் செய்வீர் என்றால், உம்முடைய சபை செழித்து வளரத் தவறாது. செடிப் பேன் என்னும் வாதை என்பது என்ன என்று உமக்குத் தெரியுமா?” என்று அவர் கேட்டார்.

“அது மரங்களையும் செடிகளையும் தாக்கி, பெரும் சேதத்தை உண்டாக்குகிற ஒரு நோய் என்று எனக்குத் தெரியும்.”

“இந்த நோயின் காரணம் என்னவென்று நினைக்கிறீர்?"

“மிகச் சிறிய எண்ணிலடங்காத நோய்க் கிருமிகள் ஒரு தாவரத்தில் ஏறி, அதைத் தங்களுக்கு முழுமையாக சொந்தமாக்கிக் கொள்வதுதான்.” |

“இந்த நோய்க் கிருமியிடமிருந்து அக்கம்பக்கத்திலுள்ள தாவரங்களை எப்படிக் காப்பாற்றுவீர்?”

“இது எனக்குத் தெரியாது.”

“நான் சொல்லப் போவதை நன்றாக மனதில் இருத்திக் கொள்ளும். செடிப் பேன் முதலில் ஒரு செடியிலோ, மரத்திலோ தோன்றுகிறது. மிக விரைவில் பக்கத்திலுள்ள தாவரங்களும், அவை தூரத்திலிருந்தாலும் கூட, பாதிக்கப்படுகின்றன. இந்தக் கிருமி ஒரு திராட்சைத் தோட்டத்திலோ, பழத் தோட்டத்திலோ, அல்லது வேறு வகையான ஒரு தோட்டத்திலோ தோன்றும்போது, அது மிக வேகமாகப் பரவுகிறது. அந்தத் தோட்டத்துக் கனியின் முழு அழகும், நம்பிக்கையும் வெறுமையாகிப் போகிறது. அது எப்படிப் பரவுகிறது என்று உமக்குத் தெரியுமா? தொடுதலால் அல்ல, தூரம் அதைத் தடுக்கிறது. இந்தக் கிருமி மரம் விட்டு மரம் ஊர்ந்து செல்வதால் அல்ல, ஏனெனில் இது பரிசோதனையால் நிரூபிக்கப் பட்டு விட்டது. ஒரு தாவரத்திலிருந்து வேறொன்றுக்கு இந்தக் கிருமியைக் கொண்டு போய்ச் சேர்ப்பது காற்றுதான். இவ்வாறு ஒரு மலைப் பகுதி முழுவதும், அல்லது பசுமையாய்ச் சிரிக்கிற ஒரு சமவெளி முழுவதும் விரைவில் பயனற்றுப் போகிறது. இதே விதமாக முறுமுறுப்பு, கோள் சொல்லுதல் ஆகியவற்றின் காற்றானது, கீழ்ப்படியாமையின் நோய்க் கிருமியை வெளியிடங்களுக்குச் சுமந்து செல்கிறது. இப்போது உமக்குப் புரிகிறதா?”

“ஆம். இப்போதுதான் எனக்குப் புரியத் தொடங்குகிறது.”

“இப்படிப்பட்ட ஒரு காற்றால் பரப்பப்படும்போது, இந்த வகையான செடிப் பேன் விளைவிக்கிற தீங்கு விவரிக்கப்பட முடியாதது. முதலில் அது பரஸ்பர பிறர்சிநேகத்தை நன்கு செழித்து வளர்ந்து கொண்டிருக்கிற மடங்களிலும் கூட குளிர்வித்து விடகிறது; ஆத்தும இரட்சணிய தாகம் தணிந்து போகிறது; அடுத்து, சோம்பல், சொகுசான வாழ்க்கையின்மீது ஆசை பிறக்கிறது; இறுதியாக அனைத்து துறவறப் புண்ணியங்களும் மறைந்து போகின்றன. பொதுவான இடறலின் காரணமாக, முன்பு வணக்கத் துக்குரியதும், ஆச்சரியத்துக்குரியதுமானதாக இருந்தது இப்போது கடவுளுடையவும், மனிதர்களுடையவும் சாபத்திற்குரிய பொருளாக மாறுகிறது. பாதிக்கப்பட்ட ஓர் உறுப்பினர் தன் நோய்க் கிருமியைப் பரப்ப ஓர் இல்லத்திலிருந்து மற்றொரு இல்லத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. கோள் சொல்லுதல் என்னும் காற்று, இந்த நாச வேலையைச் செய்யப் போதுமானதாக இருக்கிறது. நான் சொல்வதை நம்பி ஏற்றுக் கொள்ளும், இதுதான் சிலதுறவற சபைகளின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது.”

“உம் வார்த்தைகளிலுள்ள உண்மையை நான் கண்டுபிடிக் கிறேன். ஆனால் இப்படிப்பட்ட ஒரு துர்ப்பாக்கியத்தைத் தடுப்பது எப்படி?”

“அரைகுறை நடவடிக்கைள் உதவாது; மிகக் கடுமையான தீர்வுகள் பயன்படுத்தப்பட வேண்டும் இந்த நோய்க் கிருமியை அழிக்க பல விதமான வழிமுறைகள் முயற்சி செய்து பார்க்கப்பட்டு விட்டன. ஆனால் பயனில்லை. பாதிக்கப்பட்ட பகுதியை வெட்டி எரித்து விடுவது மட்டுமே பயன்தரக் கூடிய வழி. அதுவும் துரிதமாக, நோய் தோன்றியுள்ளதன் முதல் அடையாளம் தெரிந்தவுடனே செய்யப்பட வேண்டும். திராட்சைத் தோட்டத்தைக் காப்பாற்று வதற்கு, உடனடியாக பாதிக்கப்பட்ட மரத்தோடு அதைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் உடனடியாக எரித்துவிட வேண்டும். திராட்சைத் தோட்டம் முழுவதுமே பாதிக்கப்பட்டு விட்டது என்றால், அப்போது அது முழுவதுமாக சுட்டெரித்துச் சாம்பலாக்கப்பட வேண்டும், அப்போதுதான் பக்கத்துத் திராட்சைத் தோட்டங்களைக் காப்பாற்ற முடியும். ஆகவே மேலதிகாரிகளின் விருப்பத்தை எதிர்ப்பது, சபை விதியை ஆணவத்தோடு அலட்சியம் செய்வது, பொதுவாழ்வின் கடமைகளை இழிவாக மதிப்பது போன்ற நோய்க் கிருமிகள் ஓர் இல்லத்தில் தோன்றும்போது, நீர் சற்றும் தாமதிக்கக் கூடாது. அந்த இல்லத்தை வேரோடு பிடுங்கி விடும், அதன் உறுப்பினர்களை அனுப்பி விடும். ஆபத்தான சகிப்புத்தன்மை உம்மை மேற்கொள்ள விடாதேயும். ஓர் இல்லத்தை எப்படிக் கையாள்கிறீரோ, அப்படியே எந்த ஒரு தனி மனிதனையும் நீர் கையாள வேண்டும். சில சமயங்களில் பாதிக்கப்பட்ட ஓர் உறுப்பினர் தனிமைப்படுத்தப்பட்டால், அவர் குணமாகி, மீண்டும் நல்லது செய்வார் என்று தோன்றலாம்; அல்லது நீர் அவர்மீது கொண்ட பாசத்தின் காரணமாக, அல்லது சபையின் நற்பெயரை உயர்த்தக்கூடிய அவருடைய சாதனைகள், திறமைகள் ஆகியவற்றின் காரணமாக, அவருடைய குற்றத்தை வெளிப்படுத்த நீர் விரும்பாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட சிந்தனை எதுவும் உம்மீது ஆதிக்கம் செலுத்தாதபடி பார்த்துக் கொள்ளும். இத்தகைய மனிதர்கள் தங்கள் பழக்கங்களை ஒருபோதும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் மனந்திரும்ப சாத்தியமேயில்லை என்று நான் சொல்ல வில்லை . மாறாக, அது மிக அபூர்வமாகவேதான் நிகழ்கிறது என்றுதான் நான் வற்புறுத்திக் கூறுகிறேன். உண்மையில் அது எவ்வளவு அரிதாக நிகழ்கிறது என்றால், அந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஒரு மடாதிபருக்குப் போதிய காரணங்கள் இருக்க சாத்தியமே இல்லை என்று சொல்லி விடலாம். சிலர் வெளியுலகில் இன்னும் மோசமானதைச் செய்வார்கள் என்று நீர் எதிர்ப்புத் தெரிவிக்கலாம். அது அவர்களுடைய பிரச்சினை. தங்கள் சொந்த ஆங்காரத்தின் விளைவுகளை அவர்களே சுமந்து கொள்வார்கள்; ஆனால் உம் சபை தீங்கிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்.”

"அவர்களை சபையிலேயே வைத்திருந்து, மிகுந்த பொறுமையின் வழியாக அவர்களை உண்மையாகவே நல்வழிக்குத் திருப்ப முடியும் என்றால் என்ன செய்வது?”

“இது வெறும் வீணான அனுமானம்தான். இந்த வகையான ஆங்காரமுள்ள ஒருவன் ஆண்டவருடைய திராட்சைத் தோட்டத்தில் களைகளை விதைத்து விடுவானோ என்ற சந்தேகத்தோடு அவனை சபையில் வைத்திருப்பதை விட, அப்படிப்பட்டவனை நீக்கி விடுவதே நல்லது. இதை நன்றாக மனதில் இருத்திக் கொள்ளும். தேவைப்பட்டால் இதை உறுதியாக நடைமுறைப்படுத்தும். உம்முடைய இயக்குனர்களோடு நீர் நடத்தும் உரையாடல்களுக் குரிய கருப்பொருளாக இதை ஆக்கிக் கொள்ளும். மேலும் இதுவே தியானத்தை முடித்து வைக்கும் உமது மறையுரையின் தியானப் பொருளாகவும் இருக்கட்டும்.”

“உமது கருணையுள்ள அறிவுரைக்கு மிக்க நன்றி. கடவுளின் உதவியோடு இதை நிறைவேற்ற நான் என்னால் முடிந்ததைச் செய்வேன். ஆனால், தயவு செய்து, இப்போது நீர் யார் என்று சொல்லும்.”

“இன்னும் என்னை உமக்கு அடையாளம் தெரிய வில்லையா? எவ்வளவு அடிக்கடி நாம் சந்தித்துப் பேசிக் கொண் டிருந்திருக்கிறோம் என்பது உமக்கு நினைவில்லையா?”

அந்த அந்நியர் இப்படிப்பேசிக் கொண்டிருக்கையில், அருகில் நின்றவர்கள் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.

சரியாக இந்நேரத்தில் துயில் எழுவதற்கான மணி ஒலிக்க, டொன் போஸ்கோவின் உறக்கம் கலைந்தது.