நித்திய ஞானமானவரின் செயல்களில் அவரது சாந்தம்!

123. இறுதியாக, இயேசு தமது செயல்களிலும், தமது நடத்தை முழுவதிலும் சாந்தமுள்ளவராக இருக்கிறார். ''அவர் எல்லாவற் றையும் நன்றாகச் செய்திருக்கிறார்" (மத் 7:37). அதாவது அவர் செய்த எல்லாமும் எத்தகைய நேர்மையோடும், ஞானத்தோடும், பரிசுத்ததனத்தோடும், சாந்தத்தோடும் செய்யப்பட்டன என்றால், தவறான. அல்லது குழப்பமான எதையும் அவரில் காண இயலாதிருந்தது. நமது அன்புள்ள இரட்சகர் தமது நடத்தையும் எத்தகைய சாந்தத்தையும் கனிவையும் எப்போதும் வெளிப்படுத்தி வந்தார் என்பதை இப்போது சிந்திப்போம். 

124. ஏழைகளும், சிறு குழந்தைகளும் தங்களில் ஒருவராகவே அவரைக் கண்டு அவரை எங்கும் பின்தொடர்ந்தனர். நம் பிரியத்திற்குரிய இரட்சகரில் அவர்கள் கண்ட எளிமையும், கருணையும், தாழ்ச்சியுள்ள மரியாதையும், பிறர் சிநேகமும் அவர்கள் அதிக மதிகமாக அவரிடம் இன்னும் நெருங்கி வரச் செய்தன. ஒரு நாள் அவர் தெருக்களில் போதித்துக் கொண்டிருந்த போது, வழக்க மாக அவரைச் சுற்றியிருக்கும் குழந்தைகள் பின்னாலிருந்து அவரை நெருக்கினார்கள். நம் ஆண்டவருக்கு மிக அருகிலிருந்த அப்போஸ்தலர்கள் அவர்களைப் பின்னுக்குத் தள்ளினார்கள். சேசுநாதர் இதைக் கண்டபோது அவர்களைக் கடிந்து கொண்டு, "குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்காதீர்கள்" என்று அவர்களிடம் கூறினார் (மத். 19:14). அவர்கள் அவரைச் சுற்றி ஒன்று கூடியபோது, அவர் அவர்களை அணைத்து, கனிவோடும், கருணையோடும் அவர்களை ஆசீர்வதித்தார். ஏழைகள் அவர் எளிய உடைகள் அணிந்திருந்ததையும், தமது நடையுடை பாவனைகளில் எளிமையுள்ளவராகவும், எந்த விதமான வெளிப் பகட்டும், கர்வமும் இல்லாதவராகவும் இருப்பதைக் கண்ட போது, அவரோடு மிக எளிதாகப் பேசிப் பழகினர். பணக்காரர்களும், ஆங்காரமுள்ளவர்களும் அவரைப் பற்றி அவதூறு பேசி, அவரைத் துன்புறுத்தியபோது, அவர்கள் அவரை ஆதரித்துப் பாதுகாத்தார்கள். அவரும் தம் பங்கிற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களைப் புகழ்ந்து, ஆசீர்வதித்தார். 

125. ஆனால் பரிதாபத்திற்குரிய பாவிகளிடம் அவரது தொடர்பு களில் அவர் காட்டிய சாந்தத்தையும், மரிய மதலேனம்மாளிடம் அவர் காட்டிய கனிவையும், சமாரியப் பெண்ணை அவளுடைய தீய வழிகளிலிருந்து திருப்புவதில் அவர் காட்டிய பரிவிரக்கத் தையும், விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை மன்னிப்பதில் அவர் காட்டிய தயாளத்தையும், பகிரங்கப் பாவிகளின் மீது வெற்றி கொள்ளும்படி அவர்களோடு பந்தியமர்வதில் அவர் வெளிப்படுத்திய பிறர்சிநேகத்தையும் எப்படி விளக்குவது? அவருடைய எதிரிகள் அவரது இந்த மாபெரும் கருணையையே ஒரு பொய்க் காரணமாகப் பிடித்துக் கொண்டு, அவருடைய சாந்தமும் கனிவும் மற்றவர்கள் மோயீசனின் சட்டத்தை மீறும்படி அவர்களை ஊக்குவிக்க மட்டுமே பயன்படுகிறது என்று சொல்ல வில்லையா? அவர் பாவிகளுக்கும் ஆயக்காரர்களுக்கும் நண்பர் என்று அவரை ஏளனமாக அழைக்கவில்லையா? தம்மைக் காட்டிக் கொடுக்கத் தீர்மானித்திருந்த யூதாஸின் இருதயத்தை வெற்றி கொள்ள அவர் மிகுந்த கருணையோடும், கவலை யோடும் முயற்சி செய்யவில்லையா? அவனுடைய பாதங்களைக் கழுவும் போது, அவர் அவனைத் தம் நண்பன் என்று அழைக்கவில்லையா? தம்மைக் கொல்பவர்களின் அறியாமையைக் காரணமாகக் கூறி, அவர்களை மன்னிக்கும்படி எத்தகைய பிறர்சிநேகத்தோடு அவர் தம் பிதாவாகிய சர்வேசுரனை மன்றாடினார்! 

126. அவதரித்த ஞானமானவர் எவ்வளவு அழகும், சாந்தமும், பிறர்சிநேகமும் உள்ளவராயிருக்கிறார்! நித்தியம் தொட்டே அழகுள்ளவராக இருக்கும் அவர், பிதாவின் மகத்துவப் பேரொளி யாகவும், அவருடைய நன்மைத்தனத்தின் மாசற்ற கண்ணாடி யாகவும், சாயலாகவும் இருக்கிறார். அவர் சூரியனை விட அதிக அழகுள்ளவராகவும், ஒளியை விட அதிகப்பிரகாசமானவராகவும் இருக்கிறார். நித்தியத்தில் மட்டுமின்றி, காலத்திலும் கூட அவர் பரிசுத்த ஆவியானவரால் மகா பரிசுத்தமாகவும், கறைதிரையின்றி யும், அழகானவராகவும், மாசற்றவராகவும் உருவாக்கப்பட்டு, அழகுள்ளவராக இருக்கிறார். தமது வாழ்நாளின் போது, அவர் மனிதர்களின் கண்களையும் இருதயங்களையும் வசீகரித்தார். இப்போது சம்மனசுக்களின் மகிமையாக இலங்குகிறார். மனிதர் களிடம் அவர் எவ்வளவு அன்பும், கனிவுமுள்ளவராக இருக்கிறார்! குறிப்பாக, யாரைத் தேடி காணக்கூடிய விதத்தில் அவர் இந்த உலகிற்கு வந்தாரோ, இப்போதும் ஒவ்வொரு நாளும் யாரை அவர் காணக் கூடாத விதமாகத் தேடிக் கொண்டிருக்கிறாரோ, அந்தப் பரிதாபத்திற்கு உரிய பாவிகளிடம் அவர் எவ்வளவு நேசமும், கனிவும் உள்ளவராக இருந்தார்!