இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஒரு சிறிய வகை அணில்!

டொன் போஸ்கோ இரவு ஜெபங்களுக்குப் பிறகு டொன் போஸ்கோ தம் சபையினருக்கு ஒரு சுருக்கமான உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரையை அவர் எப்போதும் “நல்லிரவு” வாழ்த்துடன்தான் முடிப்பார். இந்தப் பாரம்பரியம் சலேசியப் பள்ளி களில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த உரை, “நல்லிரவு” வாழ்த்துரை எனப்படுகிறது.

டொன் போஸ்கோவின் வாழ்க்கை வரலாற்று நினைவுக் குறிப்புப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பல “நல்லிரவு” உரைகளில் ஒன்றின் சுருக்கம் இதோ:

1859-ல் டொன் போஸ்கோவிடமிருந்து நான் கேட்ட அவருடைய முதல் “நல்லிரவு” உரைகளில் ஒன்று, அடிக்கடி திருவருட்சாதனங்களைப் பெறுவது பற்றியதாக இருந்தது. இது சிறுவர்கள் சமீபத்திய கோடை விடுமுறைக்குப் பிறகு பொதுவாக இன்னும் கைக்கொள்ளாதிருந்த ஒரு வழக்கமாக இருந்தது. டொன் போஸ்கோ ஒரு கனவை விவரித்தார். அதில் அவர் ஆரட்டரியின் முக்கிய நுழைவாயிலருகில் நின்று கொண்டிருக்க, சிறுவர்கள் வீடுகளிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அவரைக் கடந்து நடந்த போது, கடவுளுக்கு முன் அவர்களுடைய ஆன்ம நிலையை அவரால் காண முடிந்தது. ஒரு அன்னியரும் ஒரு சிறு பெட்டியைப் பிடித்தபடி அவர்களோடு உள்ளே நுழைந்தார். இந்த அன்னியர் சிறுவர்களோடு சேர்ந்தே இருந்தார். பாவசங்கீர்த் தனத்திற்கான நேரம் வந்தபோது, அவர் அந்தப் பெட்டியைத் திறந்து, ஒரு வகை சிறு அணிலை வெளியே எடுத்து, அதை வைத்து ஒரு வகையான பொம்மலாட்டத்தைத் தொடங்கினார். சிறுவர்களும் கோவிலுக்குப் போவதற்குப் பதிலாக, அவரைச் சுற்றிக் கூட்டங்கூடி, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். அவர் மெதுவாக அவர்களைக் கோவிலிலிருந்து வெகு தூரத்திலிருந்த மைதானத்தின் மறுமுனைக்கு அழைத்துச் சென்று விட்டார்.

அதன்பின் யார் பெயரையும் குறிப்பிடாமல், டொன் போஸ்கோ பல சிறுவர்களின் ஆன்ம நிலையை விளக்கத் தொடங் கினார். பாவசங்கீர்த்தனத்திலிருந்து சிறுவர்களை திசை திருப்பவும், அதைரியப்படுத்தவும் பசாசு செய்யும் முயற்சிகளையும், அது இட்டு வைக்கும் கண்ணிகளையும் பற்றியும் அவர் பேசினார். அந்தச் சிறிய அணிலின் தந்திரங்களை அவர் நடித்துக் காட்டியது பலரை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. ஆனாலும், அது தங்கள் ஆன்ம நிலையை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டியது. பிற்பாடு தனிப்பட்ட முறையில் பலரிடம், வேறு யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் கருதியிருந்த காரியங்களை அவர் எடுத்துரைத்த போது, இந்த சிந்தனை இன்னும் தீவிரமடைந்தது.

இந்தக் கனவு பெரும்பாலான சிறுவர்களை இன்னும் அடிக்கடி, பொதுவாக, வாரம் ஒரு முறை, பாவசங்கீர்த்தனம் செய்யத் தூண்டும் ஒரு சிறந்த கருவியாக இருந்தது. இயல்பாகவே, அவர்கள் திவ்விய நன்மை வாங்குவதும் வெகுவாக அதிகரித்தது.

ஒரு முறை உடல் ஆரோக்கியத்தையும், அதைப் பராமரித்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத் தேவையையும் பற்றி டொன் போஸ்கோ பேசிக் கொண்டிருந்தபோது, ஜோசப் போன்ஜியோவான்னி என்னும் துறவி, பேசுவதற்கு அவரிடம் அனுமதி கேட்டதும் எனக்கு நினைவிருக்கிறது. அனுமதி கிடைத் ததும், “அப்படியானால், நல்ல ஆரோக்கியத்தை அனுபவித்து மகிழவும், நீண்ட வாழ்வு வாழவும் நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று அவர் கேட்டார்.

டொன் போஸ்கோ பதிலளித்தார்: “நான் உங்களுக்கு ஓர் இரகசியம் சொல்கிறேன், அல்லது, ஒரு காரியத்தைப் பரிந்துரைக் கிறேன். இது சகோதரர் போன்ஜியோவான்னிக்கு நான் தரும் பதிலாக இருக்கும் என்றாலும், உங்கள் எல்லோருக்கும் கூட அது மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். நல்ல ஆரோக்கியத்தை அனுபவித்து மகிழவும், நீண்ட வாழ்வு வாழவும் உங்களுக்கு நான்கு காரியங்கள் தேவை: 

1. இரவில் படுக்கச் செல்லும்போது, ஒரு தெளிந்த மனசாட்சி; அதாவது நித்தியத்தைப் பற்றிய பயம் இல்லாமை. 

2. உண்பதில் மிதமாயிருத்தல். 

3. ஒரு சுறுசுறுப்பான வாழ்வு. 

4. நல்ல தோழர்கள், அதாவது கெட்டுப் போனவர்களிடமிருந்து விலகியோடுதல்.

அதன்பின் அவர் இந்த நான்கு காரியங்களையும் சுருக்கமாக விளக்கிக் கூறினார்.

நாம் காண இருப்பதைப் போல, டொன் போஸ்கோவின் “நல்லிரவு” வாழ்த்துரைகள் ஞானமுள்ள வகையில் ஆரட்டரியை நிர்வகித்து வந்தன. அதே அத்தியாயத்தில் டொன் போஸ்கோவின் கருணையுள்ள உறுதிப்பாட்டின் சில உதாரணங்களையும் நாம் வாசிக்கலாம்.