அன்பு தேவை

சார்ளி ஒரு சேரியில் வசித்தான். அது ஒரு பெரிய பட்டணத்தையடுத்திருந்தது. அவனுக்குத் தந்தை கிடையாது; அவர் இறந்து போனார். தாய் இன்னொருவரை மணமுடித்தாள். அந்த வீட்டில் ஒரே ஓர் அறை இருந்தது. சார்ளி, அவனுடைய தாய், சிற்றப்பா, தம்பி, தங்கைமார் எல்லாரும் வசித் தனர். சேரியில் வளர்ந்த அவன் சுத்தமாயிருக்க மாட்டான், தலை சீவுகிறதில்லை, குறும்புத்தனம் பண்ணுவான்.

விளையாட அவனுக்கு வீட்டில் இடம் இல்லை. அவன் விளையாடுவது தெருக்களிலும் நதியோரத் திலுமே. அவன் போன்ற சேரிச் சிறுவர்களுட னேயே விளையாடவேண்டும். விளையாட வேறு யாரும் கிடையாது.

தன்னை யாருமே நேசிக்கவில்லை என அவனுக்குத் தெரியும். சிற்றப்பா எப்பொழுதும் மிருகம் போல் நடப்பார். அவனுடைய தாயோ முரட்டுத்தன மாய்ப் பேசுவாள். கணவனும் மனைவியும் மதி மயங்கக்குடிப்பார்கள்.

சேரியில் சார்ளியுடன் விளையாடி வந்த சிறுவர் களிற் பலரை சமூக நல சேவையாளர்கள் உல்லாசப் பிரயாணமாக பல இடங்களுக்கு அழைத்துப் போவார்கள். அவனை ஒரு போதுமே கூட்டிச் செல்ல மாட்டார்கள். “அவன் அசுத்தம் நிறை சிறுவன்" என ஒருவர் சொல்வார். " அவன் நல்ல பையனாயிருக்க முடியாது'' என இன்னொருவர் சொல்வார்.

ஒரு நாள் அவன் விளையாடிக் கொண்டிருக்கை யில், உல்லாசப் பிரயாணத்துக்கென சிறுவர்களைச் சேர்ப்பதற்காக சிலர் வந்தனர். வந்தவர்களில் ஒருத்தி நல்லவள். இதுவரை வந்தவர்களினின்று அவள் வித்தியாசமாகத் தோன்றினாள். அந்தப் பெண் சார்ளியைக் கவனித்தாள். அவன் வழக்கம் போல் அழுக்குக் கந்தை தரித்திருந்தான். “இந்தச் சிறுவனையும் அழைத்துப்போவோம்'' என்று அந்தப் பெண் சார்ளியைச் சுட்டிக் காட்டிச் சொன்னாள்.

“ஓ இல்லை. அவன் வேண்டாம். அவனை நாங்கள் ஒரு போதும் கூட்டிப் போவதில்லை' என ஒருவர் கூறினார். “அதனால் தான் அவனை எப்படியாவது இந்த முறை அழைத்துச் செல்ல வேண்டும் என்று சொல் கிறேன். ஏனைய சிறுவர்களை விட இவனுக்கு உல்லா சப்பிரயாணம் அதிக தேவை. இவன் எப்படியாவது போகவேண்டும்'' என அந்தப்பெண் வற்புறுத்தவே, “நல்லதம்மா, உங்களைத் திருப்திப்படுத்த இம்முறை அவனை அழைத்துப் போவோம். சார்ளி, உன் பேரையும் சேர்த்திருக்கிறது. சுத்தமாய் வரவேண் டும். குறிப்பிட்ட இடத்துக்கு நேரத்துடன் வந்து விடு'' என வந்தவர்களில் ஒருவர் சொன்னார்.

இதுவரை சார்ளி அறிந்திராத மகிழ்ச்சி அவனது உள்ளத்தில் எழுந்தது. அவனை நேசிக்க ஒருவராவது இருந்தாரே, அவனை விரும்பித் தேட ஒருவராவது அகப்பட்டாரே. குறிப்பிட்ட இடத் துக்கு நேரத்துடன் போக சார்ளி தீர்மானித்தான். சுத்தமான உடையுடன் போக உறுதி செய்தான். அந்த நல்ல பெண்ணும் ஒரு வேளை அங்கு வரலாம்.

அந்தப் பெரிய நாள் இறுதியாக வந்தது. அதி காலையில் மோட்டார் வாகனங்களில் சிறுவர்கள் புறப்பட்டனர். சேரிகளை விட்டு, உல்லாசப் பிரயாண ஸ்தலத்தை நோக்கிச் சென்றார்கள். சிறுவர்களுக் காக அன்று தேர்ந்தெடுத்திருந்த இடம் மிக அழகா னது. பெரிய மைதானம் அது. ஒரு நதியும் அதில் ஓடியது. இத்தகைய அழகான இடத்தைச் சிறுவர் கள் இதற்கு முன் பார்த்ததில்லை. அது மோட்சமாக் கும் என்று முதலாய் சில சிறுவர்கள் நினைத்தார்கள்.

ஆற்றில் ஒதுக்கமான ஓர் இடத்தில் குளிக்க சிறு வர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். சிறுவர்கள் குளித் தார்கள். நீரில் விளையாடினார்கள். அவர்கள் கொண்ட மகிழ்ச்சியை வர்ணிக்க முடியாது. claim

அவர்களது ஆனந்தம் நெடுநேரம் நீடிக்கவில்லை. திடீரென ஓர் அபயக் குரல் கேட்டது. பீற்றர் என்னும் சிறுவன், பாதுகாப்புக்காகப் போடப்பட்டு இருந்த கயிற்றின் மேல் ஏறினான். நடு ஆற்றில் விழுந்து விட்டான். நீர் அவனை அடித்துக் கொண்டு சென்றது.

எல்லோரும் பயந்து நடுங்கினார்கள். பீற்றர் அடித்துச் செல்லப்படுவதைக் கவலையுடன் சிறுவர் கள் நோக்கினர். அவன் நீரில் அமிழ்ந்தி இறப்பதும் நிச்சயம்: ஏனெனில் அத்தனை வேகமாகச் சென்ற நீரில் யாரும் இறங்கத் துணியமாட்டான், பீற்றரைக் காப்பாற்றுவது முடியாத காரியம் எனச் சிறுவர்கள் பேசிக்கொண்டார்கள்.

திடீரென யாரோ ஒரு சிறுவன் நீரில் குதித்த சத் தம் கேட்டது. எல்லோருமே திடுக்கிட்டார்கள். இன் னொருவனும் சாகவேண்டியிருக்குமே என நினைத் தார்கள். அந்தச் சிறுவன் யார்? கண்டு பிடிக்க முடிய வில்லை. சிறுவனது தலையை மாத்திரம் அவர்கள் பார்த்தார்கள். அமிழ்ந்தி இருந்த சிறுவன் பக்கமாக அவன் இரு கைகளையும் தூக்கி தூக்கி அடித்து நீந்திக் கொண்டிருந்தான்.

அது வேறு யாருமல்ல, சார்ளியே. அவனது வீட்டினருகில் ஓர் ஆறு ஓடியது. நீர் அதில் எப் பொழுதும் கலங்கியிருக்கும். அதில் அவன் நீந்தி பழக்கம் இருந்தது. மீன் போல் நீந்துவான்.

சார்ளி விரைவாக நீந்தினான். கடைசியாக பீற்றரை அணுகியதும் சார்ளி அவனது தலைமயி ரைப்பிடித்து, வெகு சிரமத்துடன் கரையின் பக்க மாக நீந்தினான். இருவரும் கரை சேர்ந்ததும் எல் லோரும் அவர்களைச் சுற்றி வளைந்து கொண்டார்கள். தரையிற் கிடத்தப்பட்ட பீற்றரையே உற்றுப் பார்த் தார்கள். "உயிர் இருக்கிறதா? பிழைத்துக் கொள் வானா? போர்வை கொண்டு வாருங்கள்; வெந்நீர் கொண்டு வாருங்கள். முதல் உதவி கொடுங்கள்" என்றெல்லாம் சத்தம் கேட்டது.

செய்யக்கூடியதையெல்லாம் பீற்றருக்குச் செய் தார்கள். பீற்றர் கண்களைத் திறந்தான். எழுந்து உட்கார்ந்தான். போர்வைகளால் அவனை மூடினார் சூடான பானம் பருகக் கொடுத்தார்கள். அவனுக்கு அரச உபசாரம் நடந்து கொண்டிருந்தது.

திடீரென ஒரு பெண்ணின் குரல் கேட்டது. "அவன் எங்கே? பீற்றரைக் காப்பாற்றிய சிறுவன் எங்கே?" என அந்தப் பெண் வினவினாள். சார்ளியும் உல்லாசப் பிரயாணத்துக்குச் செல்லவேண்டும் என்று வற்புறுத்திய பெண் அவளே.

சார்ளி எங்கே போனான் என்று ஒருவருக்கும் தெரியாது. அவனைத் தேடுவதற்காக அந்தப் பெண் கூட்டத்தை விட்டுப் புறப்பட்டாள். சார்ளி சிறிது தொலைவில் நின்று கொண்டிருந்தான். உடை நனைந் திருந்தமையால் உடல் நடுங்கிக் கொண்டிருந்தான். அந்தப் பெண் திரும்பவும் கூட்டத்தை அணுகி, "பீற்றரைக் காப்பாற்றிய சிறுவனுக்காக பணம் வசூலிப்போம். இவ்வளவாவது நாம் செய்ய வேண் டும்'' என்றனள். எல்லோரும் அதற்கு இணங்கினர். ஒருவன் தொப்பியைப் பிடித்துக் கொண்டு எல்லோ ரிடமும் போனான். நிறையப் பணம் கிடைத்தது. அதைப் பெண்ணிடம் கொடுத்தார்கள். அவள் சார்ளியை நோக்கி விரைந்து சென்றாள். ''தம்பி, பீற்றரைக் காப்பாற்றியதற்கு தங்கள் நன்றியைக் காண்பிக்க சிறுவர் இந்தத் தொகையை வசூலித்திருக் கிறார்கள். இதைப் பெற்றுக்கொள்” என்றாள்.

“அம்மா, நன்றி. பணம் வேண்டாம்'' என சார்ளி பகர்ந்தான். பெண் அதிசயித்தாள். “வேறு என்ன வேண்டும்?' என்றாள். பீற்றர் உட்கார்ந்திருந்த இடத்தை சார்ளி நோக்கினான். பீற்றரையே எல்லோ ரும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். “அந்தச் சிறு வன் பெறும் அன்பில் ஒரு சிறிதாவது எனக்குக் காட்டப்பட ஆசிக்கிறேன்'' என சார்ளி கூறினான்.

அவனது உள்ளத்தின் உணர்ச்சிகளை அவள் அறிந்து கொண்டாள். கண்களிலிருந்து நீர் வழிந் தது. சிறுவனது உள்ளத்தின் அந்தரங்க ஆசையை அவள் கண்டு அதை நிறைவேற்றத் தீர்மானித்து, "தம்பி, பயப்படாதே, அவ்வித அன்பு உனக்கும் கிடைக்கும்” என்றனள். அவள் சொன்ன சொல் தவறவில்லை.