வழித்துணை

மெக்ஸிகோ நாட்டின் தலைநகரம் மெக்ஸிக்கோ பட்டணம். அப்பட்டணத்துக்கு சிறிது தூரத்தில் அமெக்கா என்னும் ஊர் இருக்கிறது. அங்கு இருந்த கார்மேல் சபை கன்னியர் மடத்துக்கு ஒரு நாள், சேவகர்கள் சென்றார்கள். வாசலை உடைத்து உள்ளே நுழைந்து கன்னியரை வெளியே போகும்படி உத்தரவிட்டார்கள்; சேவகர்கள் யாவரும் முரடர்கள். கன்னியரோ யாருக்குமே தீங்கு செய்யாதவர்கள். சேவகர்கள் மரியாதையின்றி கன்னியரைத் திட்டி “உடனே இந்த வீட்டை விட்டுக் கிளம்புங்கள்” என்றார்கள். வேத கலக காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மிகு சாதாரணம்.

கன்னியரின் தலைவி சேவகர்களை அணுகி எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். பணிவுடன் அவர்களை மன்றாடினார்கள், கெஞ்சிக் கேட்டார்கள்.  “இன்னும் சிறிது காலமாவது எங்களை விட்டு வையுங்கள். திடு திடுப்பென நாங்கள் எங்கு போக முடியும்? இன்னொரு இடம் அகப்படும் வரை பொறுமையாயிருங்கள். நாங்கள் ஏழைகள், எங்களுக்கு உதவியில்லை” என மன்றாடினார்கள். அந்தக் கொடிய சேவகர்கள், “உடனே வெளியேறு'' எனக் கத்தினர்.

அந்த முரடர்களோடு பேசிப் பயனில்லை என்று கன்னியர் கண்டனர். தங்களுக்குள்ள சொற்ப சாமான்களை எடுத்துக் கொண்டு புறப்படத் தயார் செய்யும்படி தலைவி ஏனைய கன்னியரிடம் கூறினார்கள்.

சில கன்னியரோடு தலைவி கோயிலுக்குச் சென்றார்கள். கோயிலில் திவ்ய நற்கருணை இருந்தது. அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். அல்லாவிடில், அந்தத் துஷ்ட சேவகர்கள் சற்பிரசாத அப்பங்களை நிந்திப்பார்கள், பரிகசிப்பார்கள், ஒருவேளை தரையில் வீசி காலால் மிதிப்பார்கள், இதை விட மோசமான தேவ துரோகங்களையும் அவர்கள் செய்யலாம். தலைவியே திவ்ய நற்கருணையை தன்னுடன் தூக்கிப் போக வேண்டும், ஏனெனில் குருவானவர் ஒருவரும் கிடையாது. குருக்களை ஏற்கெனவே வேத விரோதிகள் துரத்திவிட்டார்கள்.

மிகு பக்தியுடனும் உருக்க மிகு நேசத்துடனும் தலைவி திவ்ய நற்கருணைப் பேழையைத் திறந்து, சற்பிரசாத பாத்திரத்தின் மூடியை எடுத்து, நீர் நிரம்பிய கண்களோடு ஆராதனைக்குரிய சிறு வெள்ளை அப்பங்களை - தன் கடவுளை-நோக்கி, “நேசமிகு ஆண்டவரே, வேறு வழியில்லையே. உம்மையே நான் தொட வேண்டியிருக்கிறதே'' என்றார்கள்.

தலைவி கரங்குவித்து அங்கு நிற்கையில் பாத்திரத்திலிருந்து திரு அப்பங்கள் தாமாகவே எழும்பி; ஏனைய கன்னியருடைய உதடுகள் முன்போய் நின்றன, தங்கள் பரலோக பத்தாவின் அற்புத நேசத்தைக் கண்டு கன்னியர் கண்ணீர் சிந்தி வாயைத் திறந்தனர். நடுங்கிக் கொண்டிருந்த அவர்களது நாவினுள் சற்பிரசாத அப்பம் இறங்கினது. என்ன ஆச்சரியம்! கடவுளே தம்மை அவர்களுக்குக் கொடுத்தார். நற்கருணைப் பாத்திரம் வெறுமனாயிற்று.

ஆனால் திவ்ய நற்கருணை ஆசீர்வாதத்திற்கு உபயோகிக்கப்படும் பெரிய அப்பம் இன்னும் இருந்தது: பாத்திரத்தோடு இருந்தது. தலைவி அதை தன் கையில் எடுத்தார்கள். உடனே திரு அப்பம் பாத்திரத்திலிருந்து ஆகாயத்தில் எழும்பியது, ஆகாயத்தில் நின்ற அது தானாகவே இரண்டாய் மடங்கியது பூசை நேரத்தில் குருவானவர் திவ்விய நற்கருணை உட்கொள்ளுகையில் திரு அப்பத்தை மடிப்பது போல் மடிந்திருந்த, அது தலைவியின் உதடுகள் முன் போய் நின்றது. பரலோக மகிழ்ச்சியுடன் அவர்கள் தன் கடவுளை உட்கொண்டார்கள். திவ்விய நற்கருணையில் யேசு தம்மை நேசித்தவர்களின் இருதயங்களில் பத்திரப்படுத்தப்பட்டார்

அவர்கள் தங்கள் மடத்தை விட்டுப் போன போது, யேசு அவர்களுடனிருந்தார். தம் நேசர்களின் ஆறுதலுக்காக யேசு அந்தப் புதுமையைச் செய்து தம் அளவற்ற இரக்கத்தைக் காண்பித்தார்.

என்ன செய்யக் கூடும்? தபசு காலம் ஜெபத்தின் நாட்கள், பரித்தியாக முயற்சிகள் செய்ய வேண்டிய காலம், தபசு காலம். ஆண்டுதோறும் விபூதித் திருநாளன்று தொடங்கி நாற்பது நாட்களாக நீடித்திருக்கும். யேசு தம் பகிரங்க வாழ்க்கையைத் தொடங்குமுன் வனாந்தரத்தில் நாற்பது பகலும் நாற்பது இரவும் உபவாசமாயிருந்தார்.

தபசு காலத்தில், ஆண்டவர் பட்ட கொடிய பாடுகளையும் மரணத்தையும் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். சிலுவைப்பாதையைச் செபித்தால் மாத்திரம் பற்றாது. தபசு காலத்தின் ஏனைய பத்தி முயற்சிகளிலும் நாம் பங்குபற்ற வேண்டும். இந்த நாட்களில் உலகெங்கும் நல்ல கத்தோலிக்கர் ஒருசந்தி பிடிக்கிறார்கள், அதிகம் செபிக்கிறார்கள், ஒறுத்தல் செய்கிறார்கள். நல்ல சிறுவர்களும் இவ்விதமே செய்கிறார்கள். அவர்கள் ஒருசந்தி பிடிக்க அவசியமில்லை என்றாலும் சுய பரித்தியாக முயற்சிகள் பல செய்கின்றனர். தபசு காலத்தில் அவர்கள் மிட்டாய் சாப்பிடுவதில்லை, சினிமா நாடகங்ளைப் பார்ப்பதில்லை, வேத போதக நாடுகளுக்குக் கொடுக்கும்படி செலவைக் குறைக்கிறார்கள். தங்களுக்காகப் பாடுபட்ட யேசுவுடன் ஒன்றித்து, யேசுவுக்காக, இவ்விதம் தங்களை அவர்கள் ஒறுத்து வருகின்றனர். கிறிஸ்துநாதர் பட்ட பாடுகள் அவர்களுடைய கண் முன் இருப்பதால், ஒறுத்தல் செய்வது அவர்களுக்கு இன்பம் தருகிறது.

யேசுவுக்காக வேதனைப்பட்ட ஒரு நீக்ரோ சிறுவனைப் பற்றி இங்கு சொல்லப் போகிறேன். அவன் உண்மையாவே நம் எல்லோருக்கும் நல்ல மாதிரி . “அவன் அவ்வளவு செய்யக்கூடுமானால் நான் சொற்பமாவது செய்யலாம். அவனுடன் என்னை நான் ஒப்பிட்டுப் பார்த்தால், நான் பெரும் கோழை' என நீயும் நானும் சொல்லலாம்.

அந்த நீக்ரோ சிறுவன் பெயர் பெனோ. வேதம் போதிக்கச் சென்றிருந்த குருவானவர் பிரசங்கிப்பதை அவன் கேட்டான். நல்ல கடவுள் பரலோகத்தையும் பூலோகத்தையும் அவற்றிலடங்கிய சகலத்தையும் படைத்தார். நம்மை மீட்டு, நம் ஆதித்தாய் தகப்பனது பாவத்தால் மூடப்பட்ட மோட்ச வாசல்களைத் திறந்து விடும்படி தம் யேசு சுதனாகிய யேசுவை நல்ல கடவுள் இந்த உலகத்துக்கு அனுப்பினார் என அவன் கேள்விப்பட்டதும், அவன் மனது உருகியது. சிநேகமும் பட்சமும் நிறைந்த நல்ல கடவுளைப் பற்றி குருவானவர் பேசுவதைக் கேட்கும்படி பெனோ அடிக்கடி வந்தான். நல்ல யேசு தனக்காகப் பட்ட பாடுகளையும், முக்கியமாக அவரைக் கற்றூணில் கட்டி அடிக்கையில் அவர் பட்ட பயங்கர வேதனையையும், நினைக்கையில் அவன் கண்ணீர் வடிப்பான். பெனோ அடிமை. அடிமைகளை கொடிய எஐமான்கள் ஈவு இரக்கமின்றி சாட்டைகளால் அடிப்பார்கள்; இது பெனோவுக்கு நன்றாகத் தெரியும்.

வேத சத்தியங்களையெல்லாம் பெனோ அறிந்ததும் அவன் கிறிஸ்தவனானான், கடவுளுடைய மகவானான், மோட்ச சுதந்திரத்தைப் பெற்றான். குருவானவர் அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். அப்பொழுது அவனுக்கு வயது பத்து.

அவன் சிறுவனாயிருந்தபோதிலும் ஏற்கனவே அடிமை. அவனுடைய எஜமான் மிகக் கொடியவன். அந்த எஜமானுக்கு குருவானவர் என்றால் பிடியாது, கத்தோலிக்க வேதம் என்றாலும் பிடியாது. பெனா ஞானஸ்நானம் பெற்று விட்டான் என அவன் கேள்விப்பட்டதும் அவன் கடும் கோபம் கொண்டான் "அந்தக் குருவிடம் நீ போகக்கூடாது, போனால் சாட்டையடி கிடைக்கும்'' என அவன் பயமுறுத்தினான்

என்ன செய்வதென்றறியாது பெனோ திகைத்தான். கொஞ்ச நாட்களாக குருவானவரை அணுகவில்லை. வேதத்தைப்பற்றி அறிய வேண்டுமானால் அவரிடம் போகவேண்டும். வேதத்தில் திடனாயிருந்து ஒழுக வேண்டுமானால் திவ்விய பூசை காண வேண்டும், தேவ திரவிய அனுமானங்களைப் பெற வேண்டும். அங்கு போனால் கிடைக்கும் தண்டனையையும் அவன் அறிந்திருந்தான். என்றாலும் எஜமானனுக்குத் தெரியாமல் குருவானவரைச் சந்தித்து வந்தான்.

இதை எஜமான் கண்டுபிடித்து விட்டான். பெனோவைத் தன்னிடம் கொண்டு வரும்படி கட்டளையிட்டான், “என் உத்தரவுகளுக்கு நீ கீழ்ப்படியவில்லை, துஷ்ட கிறிஸ்தவர்களிடம் நீ போய் வந்திருக்கிறாய்'' என அவன் கத்தி, சிறுவன் ஒரு வார்த்தை முதலாய்ப் பேசு முன், "இவனைத் தூணிற்கட்டி சாட்டையால் இருபத்தைந்து அடி கொடு ” எனக் கூவினான்.

சாட்டையில் முடிச்சுகள் உண்டு. கூரிய சிறு ஆணிகளும் இருந்தன. அடித்தவனும் ஓர் அடிமையே; அவன் கல்நெஞ்சன். சிறுவனோ வேதனை தாங்க மாட்டாமல் உருண்டான். உடலெல்லாம் இரத்தமாயிற்று, "உன் யேசுக்கிறிஸ்து உனக்காக இப்பொழுது என்ன செய்யப் போகிறான்?" என நிஷ்டூர எஜமான் பரிகாசமாகக் கேட்டான்.

"அவர் வேதனையைப் பொறுமையுடன் சகிக்க எனக்கு பலம் கொடுக்கக்கூடும்'' என பெனோ கூறி, கற்றூணில் கட்டியடிபட்ட யேசுவை நோக்கி, அவருடன் வேதனைப்பட திடம் கேட்டு மனதுக்குள் பிரார்த்தித்தான்.

அவன் தந்த பதிலைக் கேட்டதும் எஜமானுக்கு இன்னும் அதிக கோபம் வந்தது. 'கூட. இருபத்தைந்து அடி கொடு" என கர்ஜித்தான்.

சதை கிழிந்தது. இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. வேதனை தாங்க மாட்டாமல் அவன் புரண்டு சத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

"இப்பொழுது உன் யேசுக்கிறிஸ்து உனக்காக என்ன செய்யக்கூடும்?" என எஜமான் கேட்டான். சாத்தானைப் போல் வெற்றியடைந்தவனாக அவன் காணப்பட்டான்.

"அவருக்காக நான் சகிக்கும் வேதனைகளுக்காக நான் சம்பாவனை பெறுவேன் என நான் நினைத்துக் கொள்ள அவர் எனக்கு உதவி செய்கிறார்'' என சிறுவன் கூறினான். அவன் உதடுகள் நடுங்கின.

அந்தத் துஷ்டனுக்கு அதிகக் கோபம் வந்தது. "இன்னும் கூட இருபத்தைந்து அடி கொடு'' என்றான். சிறுவன் சொல்லொண்ணா அவஸ்தைப்படும் போது அந்தத் துஷ்டன் பார்த்து ஆனந்தித்து, “இப்பொழுது உன் யேசுக்கிறிஸ்து உனக்காக என்ன செய்ய முடியும்?'' என்றான். உமக்காக ஜெபிக்க அவர் எனக்கு உதவி செய்கிறார் என சிறுவன் கூறி உயிர் விட்டான்.