இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வேளாங்கண்ணி - புதிய பங்கு

நாகப்பட்டினம் பங்கைச் சேர்ந்த வேளாங்கண்ணித் திருத்தலத்தில் திருப்பயணிகளின் வருகை வளர்ந்து கொண்டே வந்தது. அங்கு வாழ்ந்த மக்களுக்கும், திருப்பயணிகளுக்கும் மறைப் பணியாற்ற 1771-ஆம் ஆண்டு அருள் திரு அந்தோணியோ தெ ரொசாரியோ புதிய பங்கின் முதல் பங்குக் குருவாக நியமிக்கப்பட்டார்.

பல ஆண்டுகள் நாகப்பட்டினத்தின் பங்குத் தந்தையாக பணியாற்றிய இவர் வேளாங்கண்ணிப் பங்குத் தலத்தைச் சிறப்பிக்க ஆவன செய்தார். பங்கு ஆலயம் புனித ஆரோக்கிய அன்னையின் பெயரால் அழைக்கப்பட்டது. தேவ தாயின் பிறப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ஆம் நாள் பங்கின் பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணி புதிய பங்காக இவ்வாறு உருவாக்கப்பட்டதைப் பற்றி மயிலை மறை மாவட்ட ஆயர்ப் பதிவேடுகளில் [Archives Pg. 79] விவரங்கள் கிடைக்கின்றன.

1847-ம் ஆண்டு வரை, கோவா மறை மா நிலத்தையும், மயிலை மறை மாவட்டத்தையும் சேர்ந்த பிரான்சீஸ்கு சபை குருக்கள் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய பங்குகளைக் கண்காணித்து வந்தனர். 1961-ஆம் ஆண்டு வரை வேளாங்கண்ணி ஆலயப் பீடப்படியில் பிரான்சீஸ்கு சபைக் குருக்கள் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆலயப் பீடப்படியில் பிரான்சீஸ்கு சபை புனிதர்களான அந்தோணியார், பிரான்சிஸ் இருவரின் திருச் சு ரூபங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதிலிருந்தே இவ்வாலயம் அச் சபையினரின் பொறுப்பில் இருந்துள்ளது என்பதை அறியலாம். 1889-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் வரை அருள் திரு மிக்கேல் பிரான்சிஸ்கோ பெர்னாண்டஸ் இச்சபையின் இறுதிப் பங்கு குருவாகப் பணியாற்றினார். 1890-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வேளாங்கண்ணி மறை மாவட்டக் குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாளடைவில் திருப்பயணி களின் எண்ணிக்கை உயர்ந்த தால், ஆலயத்தையும் படிப்படியாக விரிவுபடுத்த வேண்டியிருந்தது. முதலில் 70 அடி நீளமும், 22 அடி அகலமும் உள்ள முன் சாலை அமைக்கப்பட்டது. 1920-ஆம் ஆண்டு இம் முன் சாலையுடன் மேலும் 20 அடி சேர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் முகப்பில் 82 அடிக்கு உயர்ந்த இரு கோத்திக் கோபுரங்களும் கட்டப்பட்டன, 1933-ஆம் ஆண்டு, பீடத்தின் வலது புறமும் இடது புறமுமாக இரு இறக்கைச் சாலைகளும், பீடத்தின் பின்புறமாகத் திருப்பட்டு அறையும், [Sacristy] பீடத்தின் மேல்நோக்கி 92 அடிக்கு எட்டு மூலைகளைக் கொண்ட வளைவுக் கோபுரமும் [Dome] எழுப்பப்பட்டன. இம்மாற்றங்களுக்கு இடையே போர்த்துக்கீசியரின் எழிலார்ந்த பீங்கான் வேலைப்பாடுகள் பீடத்தில் அப்படியே விட்டு வைக்கப்பட்டிருந்தன, இந்நிலையில் 1933-ஆம் ஆண்டு அமல அன்னையின் பிறப்பு விழாவுக்கு முன் ஆலயம் புனிதம் செய்யப்பட்டது. இவ்வாறு ஆலயத்தை அழகுறக் கட்டி முடித்தவர், அன்றைய வேளாங்கண்ணியின் பங்குத் தந்தையான அருள் திரு செபஸ்தியார் சேவியர் தெ நொரோஞ்ஞா ஆவார்.

ஆலயத்தை அடுத்து ஒரு மாடியுடன் அமைந்த குருக்கள் இல்லத்தையும், உயரமான தேர் இருக்கையையும், ஆலயத்தைச் சுற்றிலும் எழில்மிகு மதிலையும் இவரே கட்டினார். 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21-ம் நாள் அன்னையின் பிறப்பு விழாவை விண்ணகத்தில் சிறப்பிக்க மரியாளின் ஊழியராகிய இவரை இறைவா அழைத்துக் கொண்டார். ஆலயப் பெருமை சேர்த்த இவரது உடல் ஆலய முகப்பில் அடக்கம் செய்யப்பட்டது.

1942-ஆம் ஆண்டு முதல் 1963-ஆம் ஆண்டு வரை வேளாங்கண்ணிப் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய பேரருள் திரு மிக்கேல் வின்சென்ட் ரொட்ரிக்ஸ் அடிகளார், பால்காரச் சிறுவனுக்கு மாதா காட்சி தந்த இடமான மாதாக் குளத்தை அழகுற அமைத்தார். ஆலயத்திலிருந்து குளத்துக்குச் செல்லும் வழியையும் உருவாக்கினார்; முதியோர் இல்லமும் திருத்தல நினைவுச் சின்ன நிலையமும் அமைத்தார்.