மாதா கூறுகிறார்கள்

5, 6 ஏப்ரல்  1944.

பெரிய வியாழக் கிழமையின் முந்திய மாலை இது.  சிலர் இந்தக் காட்சி இங்கே பொருத்தமில்லை என நினைப்பார்கள்.  ஆனால் ஓர் இனிய காட்சி உனக்குக் கொடுக்கப்பட்டாலும்கூட சிலுவையில் அறையப்பட்ட சேசுவை நேசிக்கிறவளாயிருக்கிற உன் துயரம், உன் இருதயத்தில் இருக்கவே செய்யும்.  அது, எரியும் ஒரு சுவாலையிலிருந்து வெளிப்படும் அனலைப் போன்றது.  அவ்வனல் நெருப்பல்ல, ஆயினும் நெருப்புத்தான்.  சுவாலைதான் நெருப்பு.  அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் நெருப்பல்ல. எந்த பாக்கியமான அல்லது சமாதானமான காட்சியும் அந்தத் துயரத்தை உன் இருதயத் திலிருந்து அகற்ற முடியாது.  அதை ஒரு பொக்கிஷமாக, உன் உயிரினும் மேலான பொக்கிஷமாகக் கருதிக் கொள்.  ஏனென்றால் தம் குமாரனை விசுவசிக்கிற ஒருவனுக்கு சர்வேசுரன் கொடுக்கிற கொடைகளில் மிகப் பெரியது அதுதான்.  மேலும், இந்த வாரத்தில் நினைவுகூறப்படுகிறவைகளுடன் இணைத்துப் பார்த்தால், என் காட்சி அதன் சமாதானத்துடன் பொருந்தாததல்ல.

இன்னும், என் சூசையப்பரும் தமது பாடுகளை அனுபவித்தார்.  ஜெருசலேமில் அவர் என் நிலைமையைக் கவனித்ததிலிருந்து அது தொடங்கியது.  பல நாட்களாக அது நீடித்தது.  எனக்கும் சேசுவுக்கும் அது அவ்வாறே இருந்தது.  சூசையப்பருடைய ஆத்துமத்திற்கும் இவ்வேதனை குறைவாக இருக்கவில்லை.  நீதியுள்ள என் மணாளனுடைய புனிதத்தினால் மட்டுமே அது கண்ணியமாக மறைவான முறையில் வைக்கப்பட்டிருந்தது.   அதனால்தான் அது நூற்றாண்டுக் காலங்களாக கவனிக்கப்படாமலே இருந்து வந்துள்ளது.

ஆ!  எங்களின் முதல் பாடுகள்!  அதனுடைய அந்நியோந்நிய, மவுனமான கூர்மையை யாரால் உணரக் கூடும்!  என்னுடைய மன்றாட்டைக் கேட்டு சூசையப்பருக்கு இந்த திருநிகழ்ச்சியைப் பரலோகம் இன்னும் வெளிப்படுத்தவில்லை என்று நான் கண்டபோது, எனக்கு ஏற்பட்ட வேதனையை யார் விவரிக்க முடியும்?

அவர் வழக்கம்போலவே என்னிடம் மரியாதையுடன் நடந்ததைப் பார்த்தபோது, அவருக்கு அது தெரியவில்லை என்று கண்டுபிடித்தேன்.  நான் கடவுளுடைய வார்த்தையானவரை என்னிடம் கொண்டிருந்ததை அவர் அறிந்திருப்பாரானால், என் உதரத்தில் அடைபட்டிருந்த அந்த தேவ வார்த்தையை கடவுளுக்குரிய வணக்கங்களால் ஆராதித்திருப்பார்.  அவ்வணக்கத்தை அவர் செய்யத் தவறியிருக்க மாட்டார்.  ஏனெனில் நானும் அதை ஏற்க மறுத்திருக்க மாட்டேன். எனக்காக அல்ல, எனக்குள் இருந்த அவருக்காக.  பத்துக் கற்பனைகளையும், மன்னா அடங்கிய பாத்திரத்தையும் உடன்படிக்கைப் பெட்டகம் தன்னுள் கொண்டிருந்தது போல!

ஆண்டவரை நான் நம்பியிருந்தது வீணாயிற்று என்று என்னை ஒப்புக்கொள்ளச் செய்வதற்கு முயற்சித்தது என்னுடைய அங்கலாய்ப்பு.  அதற்கு எதிராக நான் செய்த போராட்டத்தை யார் அளக்க முடியும்?  ஓ!  அது சாத்தானின் கொடூரமான கோபம் என்று நினைக்கிறேன்.  சந்தேகம் எனக்குப் பின்னால் எழுவதையும், என் ஆத்துமத்தை சிறைப்படுத்தவும், ஜெபிப்பதிலிருந்து அதைத் தடை செய்யவும் அவன் தன் சில்லிட்ட நகங்களை நீட்டுவதையும் கண்டுபிடித்தேன்.  சந்தேகம் என்பது உள்ளத்திற்கு மிக ஆபத்தானது, சாகடிக்கக் கூடியது. அது சாகடிக்கக் கூடியது ஏனென்றால் நம்பிக்கையிழப்பு என்றழைக்கப்படுகிற சாவுக்குரிய நோயின் முதல் தூதுவன் சந்தேகமே.  நம் ஆன்மா இழக்கப் படாமலும் நாம் கடவுளை இழந்துபோகாமலும் இருக்க வேண்டு மானால், சந்தேகத்தை நம் எல்லா பலத்தோடும் நாம் எதிர்க்க வேண்டும்.  

சூசையப்பருடைய வேதனையையும் அவருடைய நினைவுகளையும், அவருடைய உணர்வுகளின் கொந்தளிப்பையும் யார்தான் உள்ளபடி உரைக்க முடியும்?  பெரிய புயலில் சிக்கிய சின்னப் படகைப் போல, ஒன்றைவிட இன்னொன்று      அதிக கூர்மையாக தாக்கி வேதனையளித்து எதிர்க்கும் கருத்துக்களின் சுழியிலும், சிந்தனைக் குழப்பத்திலும் அவர் இருந்தார்.  மொத்தத்தில் பார்த்தால், அவர் தன் மணவாளியால் வஞ்சிக்கப்பட்ட மனிதனாகவே இருந்தார்.  அவர் தம்முடைய நற்பெயரும் அவருடைய உலகத்தின் மதிப்பும் தம்மைச் சுற்றிலும் இடிந்து விழுவதைக் கண்டார்.  தம் பத்தினியின் நிமித்தம், நிந்திக்கும் விரல்கள் தம்மைச் சுட்டிக் காட்டுவதையும் ஊரார் தம்மைப் பரிதாபத்துடன் நோக்குவதையும் கண்டார்.  யாவற்றிற்கும் மேலாக ஒரு செயலின் அத்தாட்சியால் என்மீதிருந்த அவரின் அன்பும் மதிப்பும் மரண அடிபட்டு விழுந்து கிடப்பதைக் கண்டார்.

இந்த விஷயத்தில் அவருடைய அர்ச்சிஷ்டதனம் என்னுடையதைவிட அதிகமாகப் பிரகாசித்தது.  ஒரு மணவாளியின் பாசத்தோடு இந்த சாட்சியத்தை நான் கூறுகிறேன்.  ஏனென்றால் ஞானமுடையவரும் விவேகமுள்ளவரும், பொறுமையுள்ள நல்ல மனிதனுமாகிய என் சூசையப்பரை               நீங்கள் நேசிக்க வேண்டுமென நான் ஆசிக்கிறேன்.  அவர் இரட்சண்யத் திருநிகழ்ச்சியை விட்டுப் பிரிக்கப்பட்டிருக்கவில்லை.  மாறாக அவர் அதனுடன் நெருக்கமாக இணைக்கப் பட்டிருக்கிறார்.  ஏனெனில் அவர் அதற்காகப் பாடுபட்டார்; அதற்காக துயரத்தினால் தம்மையே தகன பலியாக்கினார்.  தம் புனிதத்தினால் தம்முடைய பரித்தியாகத்தைக் கொண்டு உங்கள் இரட்சகரைக் காப்பாற்றினார்.

சூசையப்பர் இவ்வளவு புனிதமுடையவராயில்லாதிருந்தால் அவர் மனித முறைப்படி நடந்திருப்பார்.  விபசாரி என்று நானும், என்னோடு என் பாவத்தின் மகனும் கல்லால் எறியப்பட்டு அழிந்து போகும்படி என்னைக் குற்றஞ்சாட்டியிருப்பார்.  அவர் குறைந்த புனிதமுடையவராயிருந்தால் அவருடைய சோதனையில் அவருக்கு வழிகாட்டும் ஒளியை கடவுள் கொடுத்திருக்க மாட்டார்.  ஆனால் சூசையப்பரோ புனிதமுடையவராயிருந்தார்.  அவருடைய தூய்மையான உள்ளுயிர் கடவுளிடம் வாழ்ந்தது.  அவருடைய தேவ சிநேகம் பற்றியெரிந்து வலுவோடிருந்தது.  அவர் மூப்பர்கள் முன்பாக என்னைக் குற்றஞ்சாட்டாதிருந்ததாலும், எஜிப்தில் சேசுவைக் காப்பாற்றும்படியாக உடனே கீழ்ப்படிந்து       அன்பினால் எல்லாவற்றையும் விட்டுவிட்டதாலும் உங்கள் இரட்சகரைக் காப்பாற்றினார்.

சூசையப்பருடைய பாடுகளின் மூன்று நாள்களும் எண்ணிக்கையில் குறைவாயினும் அவற்றின் கூர்மையில் மிக ஆழமானவை.  அவை எனக்கும் பயங்கரமுள்ளவைகளாயிருந்தன.  அவை என்னுடைய முதல் பாடுகளின் நாட்கள்.  ஏனென்றால் அவருடைய வேதனையை நான் அறிந்தேன்.  அதை என்னால் குறைக்கக் கூடவில்லை.  “மவுனமாயிரு” என்று  என்னிடம் கூறிய தேவ கட்டளைக்கு நான் கீழ்ப்படிய வேண்டியிருந்தது.

நாங்கள் நாசரேத் வந்து சேர்ந்தபின் அவர் இரண்டொரு வார்த்தையில் வழியனுப்பிவிட்டுப் புறப்பட்டு விட்டார்.   அவர் குறுகிய காலத்தில் மூப்படைந்து விட்டவர்போல் கூனிக் குறுகிக் காணப்பட்டார்.  மேலும் மாலையில் வழக்கம்போல் அவர் வரவில்லை.  பிள்ளைகளே, அதனால் என் இருதயம் மிகவும் கசந்து அழுதது.  நான் என் வீட்டில் தனிமையாய் அடைபட்டிருந்தேன்.  அங்கேயிருந்த எல்லாம் என் மங்கள வார்த்தையையும் கடவுளின் மனிதாவதாரத்தையும் எனக்கு நினைவூட்டின.  பழுதற்ற கன்னிமையுடைய சூசையப்பருக்கு நான் விவாகமானதை அங்குள்ளதெல்லாம் எனக்கு ஞாபகப்படுத்தின.  அவநம்பிக்கைக்கெதிராகவும், சாத்தானுடைய நுட்ப தந்திரத்திற்கெதிராகவும் போராடிக் கொண்டிருந்தேன்.  நான் கொண்டது நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை.  நான் செய்தது ஜெபம், ஜெபம், ஜெபம்.  சூசையப்பரின் சந்தேகத்திற்கும் குழப்பத்திற்கும் நியாயமான நம்பிக்கையிழப்பிற்கும் நான் அளித்தது மன்னிப்பு, மன்னிப்பு, மன்னிப்பு.

என் பிள்ளைகளே!  நம்முடைய சார்பாக கடவுள் தலையிட்டு செயல்படச் செய்வதற்கு நாம் நம்புவதும் ஜெபிப்பதும் மன்னிப்பதும் அவசியமாகும்.  நீங்கள் உங்கள் பாடுகளை ஏற்று வாழ வேண்டும்.  ஏனென்றால் உங்கள் பாவங்களால் அதற்கு நீங்கள் பாத்திரமானீர்கள்.  அப்பாடுகளை மேற்கொள்ளவும் அவைகளை மகிழ்ச்சியாக மாற்றவும் உங்களுக்குக் கற்றுத்தர என்னால் கூடும்.  வரையறை இல்லாமல் நம்புங்கள்.  நம்பிக்கையுறுதியோடு ஜெபியுங்கள்.  மன்னிக்கப்படும்படியாக மன்னியுங்கள்.  நீங்கள் விரும்பும் சமாதானம் கடவுளின் மன்னிப்பாகவே இருக்கும்.

இதற்குமேல் இப்போதைக்கு வேறொன்றும் நான் கூறவில்லை.  உயிர்ப்பு விழாவின் வெற்றிக்குப் பிறகு வரையிலும் மவுனம் இருக்கும்.  இது திருப்பாடுகளின் காலம். உன் இரட்சகர் மீது இரக்கப்படு.  அவருடைய அழுகுரலுக்கு செவிகொடு.  அவருடைய காயங்களையும் கண்ணீர்களையும் எண்ணிப் பார்.  உனக்காக அவர் பாடுகளைப் பட்டார்.  உனக்காகக் கண்ணீர் சிந்தினார்.  உன் இரட்சண்யத்தை நினைவூட்டும் அந்தக் காட்சி தவிர மற்றெல்லாக் காட்சியும் மறையட்டும்.