தம்மையே மனிதர்களுக்குத் தர நித்திய ஞானமானவர் கொண்டுள்ள ஏக்கமுள்ள ஆசை!

64. நித்திய ஞானமானவருக்கும் மனிதனுக்குமிடையே உள்ள நட்பின் பந்தம் எவ்வளவு நெருக்கமானது என்றால், அது நம் அறிவுக்கும், புத்திக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. 

ஞானமானவர் மனிதனுக்காக, மனிதன் ஞானமானவருக்காக! "அவர் மனிதனுக்கு அளவில்லாத திரவியமாயிருக்கிறார்" (ஞான 7:14), சம்மனசுக்களுக்கோ, வேறு எந்த சிருஷ்டிகளுக்குமோ அல்ல!

மனிதர்கள் மீது ஞானமானவர் கொண்டுள்ள நட்பு, சிருஷ்டிப்பில் மனிதன் கொண்டுள்ள இடத்திலிருந்தும், அவன் நித்திய ஞானமானவரின் அதிசயங்களின் சுருக்கமாக இருப்பதி லிருந்தும், அவனுடைய சிறிய, ஆயினும் மிக மேலான உலகத் திலிருந்தும், அவனுடைய உயிருள்ள சாயலிலிருந்தும், பூமியின் மீது அவருடைய பிரதிநிதியாக அவன் இருப்பதிலிருந்தும் எழுகிறது (காண்க: எண்கள் 35-38). 

ஞானமானவர் தமது அளவு கடந்த நேசத்தின் காரணமாக, மனிதனை மீட்டு இரட்சிக்குமாறு, தம்மையே மரணத்திற்குக் கையளித்திருப்பதால் அவர் மனிதனை ஒரு சகோதரனாகவும், ஒரு நண்பனாகவும், ஒரு சீடனாகவும், ஒரு மாணவனாகவும், தம் சொந்த இரத்தத்தின் விலை யாகவும், தம் இராச்சியத்தில் தமது உடன் வாரிசாகவும் நேசிக்கிறார். 

மனிதனைப் பொறுத்த வரை, ஞானமானவரிடமிருந்து தன் இருதயத்தைப் பிரித்து வைத்திருப்பது, அல்லது அவரிடமிருந்து அதைப் பிடுங்கிக் கொண்டு அகன்று போவது. அவருக்கு ஒரு பெரும் நிந்தை அவமானத்தையே தருவதாக இருக்கும்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...