மரியாயும் சூசையும் ஜெருசலேமுக்குப் புறப்படுகிறார்கள்.

27 மார்ச்  1944.

 அவர்கள் அர்ச். எலிசபெத்தம்மாளிடம் போக புறப்பட்டுச் செல்வதைக் காண்கிறேன்.  சூசையப்பர் தனக்கு ஒன்றும் மாதாவுக்கு ஒன்றுமாக இரண்டு கோவேறு கழுதைகளுடன் வந்திருக்கிறார்.  அதில் ஒரு கழுதைக்கு வழக்கமான சேணத்துடன் ஒரு நூதன விசையும் பொருத்தப்பட்டிருக்கிறது.  அது என்னவென்று எனக்குப் பிந்தித்தான் புரிந்தது.  அது மாதாவின் துணிகள் நனையாமலிருப்பதற்காக சூசையப்பர் வாங்கிய ஒரு மரப் பேழையைத் தொங்க விடும் ஏற்பாடுதான்.  முன்யோசனையுடன்  கொடுக்கப்பட்ட அந்த பரிசுக்காக மாதா சூசையப்பருக்கு நிறை மனமாய் நன்றி செலுத்துவது எனக்குக் கேட்கிறது.  தான் ஒரு பொட்டலத்தில் கட்டி வைத்திருந்த தன் துணிகளை அந்தப் பெட்டிக்குள் மாதா அடுக்கி வைக்கிறார்கள்.

வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு அவர்கள் பயணம் தொடங்குகிறார்கள்.  அது காலை வேளை.  இளஞ்சிவப்பான உதயத்தை கிழக்கில் நான் காண்கிறேன். நாசரேத் ஊர் இன்னும் துயில் கலையவில்லை.  தன் ஆடுகளை ஓட்டிச் செல்லும் ஓர் இடையனை மட்டும் அவர்கள் சந்திக்கிறார்கள்.  ஆடுகள் ஒன்றையயான்று நெருக்கிக்கொண்டே மந்தையாக நடந்து செல்கின்றன.  கத்திக் கொண்டே போகின்றன.  ஆட்டுக்குட்டிகள் தங்கள் கீச்சுக் குரலில் அதிகம் கத்துகின்றன.  நடந்து கொண்டே தங்கள் தாயாடுகளிடம் பால் குடிக்க முயல்கின்றன.  தாயாடுகள் அதிக சத்தமாய்த் தங்கள் குட்டிகளைக் கூப்பிட்டுக் கொண்டே மேய்ச்சலை நோக்கி விரைகின்றன.  

மந்தையைப் போக விடும்படி மாதா கழுதையை நிறுத்தியிருக்கிறார்கள்.  ஆடுகளைப் பார்த்து புன்முறுவல் கொள்கிறார்கள்.  கழுதையின் பக்கத்தில் வரும் சாந்தமான அவ்வாடுகளை சேணத்திலிருந்து குனிந்தபடி தட்டிக் கொடுக்கிறார்கள்.  இடையன் வருகிறான்.  அவன் புதிதாகப் பிறந்த ஓர் ஆட்டுக் குட்டியைத் தூக்கி வைத்திருக்கிறான்.  மாதாவிடம் சற்று நின்று பேசுகிறான்.  அது அதிகமாய்க் கத்துகிறது.  மாதா அதன் ரோஜா சாயையுள்ள முகத்தை தடவிக் கொடுத்து: “அது தன் தாயைத் தேடுகிறது.  இதோ உன் அம்மா வந்துவிட்டாள்.   அவள் உன்னை விட்டுப் போக மாட்டாள் ஆட்டுக்குட்டி” என்கிறார்கள்.  ஏற்கெனவே அதன் தாய் ஆடு இடையன் காலில் உராய்த்துக் கொண்டு தன் பின்னங்கால்களில் நின்றபடி குட்டியின் முகத்தை நக்குகிறது.

இலைகளில் துளிகள் விழும் ஓசையை ஏற்படுத்தியபடி அம்மந்தை கடந்து செல்கிறது.  அது போன தடத்தில் தூசி எழும்புகிறது.  குளம்புத் தடங்களும் தெரிகின்றன.

சூசையப்பரும் மாதாவும் மீண்டும் புறப்படுகிறார்கள்.  அது மிகக் குளிரான காலையாதலால் சூசையப்பர் தன் பெரிய மேல் வஸ்திரத்தை அணிந்திருக்கிறார்.  மாதா ஒரு கோடு போட்ட போர்வையால் மூடிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டுப்புறம் வழியே பக்கவாட்டில் இருவரும் பயணம் தொடருகிறார்கள்.  எப்போதாவது ஒரு வார்த்தை பேசுகிறார்கள்.   சூசையப்பர் தன் அலுவல் பற்றி சிந்திக்கிறார். மாதா ஒருமுகப்பட்ட தன் சிந்தனையில் புன்னகை புரிகிறார்கள்.  இடைக்கிடையே சுற்றிலும் பார்க்கிறார்கள்.  காண்கிறவற்றைப் பற்றி சிறுநகை புரிகிறார்கள்.  சூசையப்பரையும் பார்க்கிறார்கள்.  அப்போது ஓர் ஆழ்ந்த கவலையான நினைவு அவர்களின் முகத்தை மங்கச் செய்கிறது.  சூசையப்பரைப் பார்த்தபடியே மறுபடியும் புன்னகை கொள்கிறார்கள்.  சூசையப்பர் அதிகம் பேசுவதில்லை.  அவர் பேசுவது மாதாவுக்கு எல்லாம் செளகரியமாக இருக்கிறதா, ஏதும் தேவையா என்று கேட்பதற்குத்தான்.

இப்போது சாலையில் ஆள் நடமாட்டம் அதிகரிக்கிறது - குறிப்பாக கிராமங்களின் அருகில். ஆனால் மாதாவும் சூசையப்பரும் அவர்களை அதிகம் கவனிக்கவில்லை.  வண்டியிழுக்கிற மிருகங்களின் மணியோசை மத்தியில் அவர்கள் தொடர்ந்து செல்கிறார்கள்.  ஒரே ஒரு தடவை மரங்களுக்கடியில் நிறுத்தி கொஞ்சம் உரொட்டியும் ஒலிவக் காய்களையும் உணவாகக் கொண்டு ஒரு பாறையிடுக்கில் ஓடும் ஓடையின் நீரைப் பருகுகிறார்கள்.    அதன்பின் இன்னொரு தடவை திடீரென்று ஒரு கருமேகத்திலிருந்து பெய்த மழைக்கு ஒதுங்கும்படி நிற்கிறார்கள்.

நீண்டு நிற்கிற ஒரு பாறையின் மறைவில் மழைக்கு ஒதுங்கினார்கள்.  தண்ணீர் புகாத தன் பெரிய மேல் வஸ்திரத்தை மாதாவிடம் வற்புறுத்திக் கொடுக்கிறார் சூசையப்பர்.  அவருடைய பாதுகாப்பு பற்றி மாதாவுக்கு உறுதி ஏற்படும்படியாக, சேணத்திலிருந்த ஒரு பழுப்புப் போர்வையால் தன் தலையையும் தோள்களையும் மூடிக் கொள்கிறார்.  அது அநேகமாக கழுதையின் மூடுவஸ்திரமாயிருக்கும்.  தலைமூடியால் முகமும், உடல் முழுவதும் மூடப்பட்டிருக்கிற மாதா ஒரு சிறு துறவிபோல் காணப் படுகிறார்கள்.

மழை நிற்கிறது.  ஆனால் தூறிக் கொண்டேயிருக்கிறது.  சேறாகிவிட்ட சாலை வழியே மாதாவும் சூசையப்பரும் பயணம் தொடருகிறார்கள்.  அது இளந்தளிர் காலம்.  ஆகவே விரைவில் சூரியன் பயணத்தை செளகரியமாக்குகிறது.  இரு கோவேறு கழுதைகளும் இப்பொழுது அதிக உற்சாகத்துடன் நடைபோடுகின்றன.

இத்துடன் காட்சி முடிகிறது.