அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே!

தேவ ஊழியத்துக்காக பரிசுத்த மாமரியிடத்தில் சுடர் விட்டெரிந்த அக்கினியையும், ஆர்வத்தையும், பக்தி, தேவசிநேகம் இவைபோன்ற வார்த்தைகள் முற்றிலும் நமக்கு எடுத்துக்காட்டுவதில்லை. அவர்களுக்குச் சரிநிகரானதோர் தாய் இவ்வுலகில் இதுவரை பிறந்ததுமில்லை; பிறக்கப்போவதுமில்லை. 

தான் தேவனின தாய் என்பதை நன்கறிந்திருந்தார்கள் அக்கன்னித்தாய். மற்ற சகல சிருஷ்டிகளுக்கும் தனக்கும் பல விதத்திலும் வேற்றுமை உண்டு என்பதையும், தான் மாத்திரமே தேவ சிநேக ஒன்றிப்பில் அளவற்ற விதமாய் ஊன்றியிருப் பதையும் அறிந்திருந்தார்கள். எவ்வளவுக் கெவ்வளவு உலகிலிருந்து பிரிக்கப்பட்டிருந்தார்களோ அவ்வளவுக் கவ்வளவாய் சர்வேசுரனுடன் ஒன்றிக்கப்பட்டிருந்தார்கள்.

இதில் அரியதோர் பாடம் அடங்கியிருக்கிறது. நாம் உலக செல்வங்களையும், மகிமைகளையும் நாடி அவைகளையே நம் கடைசிக் கதியென்று திரியுங்கால், கடவுளை மறந்து நமது நித்திய சம்பாவனையை இழந்து விடுகிறோம். ஆனால் நாம் எவ்வளவுக்கெவ்வளவு இவ் வுலக ஆசாபாசங்களையும் இன்பசுகங்களையும் வெறுத் துத் தள்ளுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தேவ சிநேகத்தில் ஒன்றிக்கிறோம். 

தற்காக நாம் கோவிலில் தங்கி ஜெபப்புத்தகத்தை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை வாசிக்க அவசியமில்லை. நாம் ஆற்றும் ஒவ்வொரு பணியையும், செய்யும் ஒவ்வொரு கிரிகை யையும் சுத்த கருத்துடன் தேவ மகிமைக்காக ஒப்புக் கொடுப்போமானால், அதுவே நாம் தேவ சிநேகத்தில் மென்மேலும் வளருவதற்கு ஓர் தூண்டுகோலாக இருக்கும். தேவபக்தியில் மரியன்னைக்கிருந்த அணை கடந்த ஆர்வம் ஆனந்தம் நாம் ஊகிக்கும் தரமன்று. இதனால் சர்வேசுரன் தாம் உண்டாக்கிய இந்த மேலான சிருஷ்டியைக் கண்டு ஆனந்தமடைந்தாரென சொல்ல அவசியமில்லை.

அவர்கள் தன் இளம் பிராயத்தைக் கழித்த ஜெருசலேம் தேவாலயம் பாக்கியம் பெற்றது. அவர்கள் பரிசுத்த வாழ்க்கை நடத்திய நாசரேத் இல்லம் பாக்கியம் பெற்றது. இதிலும் தேவனைத் தாங்கிய அவர்களது திருவுடலானது மகா பாக்கியம் பெற்றது. தாய்க்கும் மகனுக்குமுள்ள நெருங்கிய உறவை விட வேறோரு உறவை நாம் கருத முடியாது. 

மாமரி தாயாகவும், மகன் சேசு தேவனாகவுமிருக்கும்போது கன்னிமரிக்கும் தேவனுக்குமுள்ள நெருங்கிய உறவை, பாசத்தை “அத்தியந்த பக்தியென்றால்” பொய்யாகாது. இக்காரணம் பற்றியே, திருச்சபை பரிசுத்த அன்னையை “அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே” என வாழ்த்துகிறது. 

அர்ச். சின்னப்பர், “நான் ஜிவிக்கிறேன்; ஆயினும் நான் அல்ல, சேசுவே என்னில் ஜீவிக்கிறார்” (கலாத். 2:20) என்றார். தேவ சிநேக அக்கினியால் பற்றி எரிந்த அர்ச். சவேரியார், “போதும் தேவனே, போதும்” என்றார். அப்படியானால் பரிசுத்த கன்னிகையைப் பற்றி என்ன சொல்லுவோம்? அர்ச்சியசிஷ்டவர்கள் அவர்களை செந்தழல், தேவ அன்பின் சுடரொளி என்று அழைக்கிறார்கள். அவர்கள் தன் வாழ்நாட்களில் ஒரு நாளாவது, ஏன், ஒரு கணமாவது தனது சிருஷ்டிகரை நினையாது இருந்ததில்லை. “சம்மனசுகளும் இந்த ஒன்றிப்பை நினைத்து ஆச்சரியப்படுகின்றார்கள்,” என்று அர்ச். பெர்நார்து கூறுகிறார். 

“என் ஆத்துமம் சர்வேசுரனை மகிமைப்படுத்துகிறது. எனது ஜீவன் இரட்சகராகிய தேவனிடத்தில் ஆனந்தமாய் எழும்பி அக மகிழுகின்றது,” என்று நம் தாயே கூறியுள்ளார்கள். அவர்கள் தன் பேரானந்தத்தை தேவனிடத்தில் கண்டடைந்தார்கள்.

“பரிசுத்த மாமரியே! பக்தியின் பாத்திரமே! தேவ ஒன்றிப்பே! தேவ ஒன்றிப்பின் மாதிரிகையே! அர்ச்சிக்கப் பட்டவர்களே! அர்ச்சிக்கப்பட்டவர்களின் இராக்கினியே! துன்பக் கடலில் அல்லற்படும் உமது மக்களைக் கிருபைக் கண்ணோக்கும். தேவ ஒன்றிப்பில் எங்களைச் சேரும். பாவத்தால் அசுத்தமடைந்த எங்கள் ஆத்துமங்களை அர்ச்சியும். எங்கள் பக்தியில், தாழ்மையும், உறுதியும் உள்ளவர்களாக்கும், உமது தூய இதயத்திலிருந்து ததும்பி வழியும் பக்தியால் எங்கள் இருதயங்களை நிரப்பி, அவைகள் தேவனுக்குகந்த காணிக்கையாகச் செய்தருள கிருபை புரிந்தருளும்.” 


அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!