இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இன்னும் சிறிது காலம், அதன்பின் என்னைக் காண மாட்டீர்கள்

காலத்தை விடக் குறுகியது வேறு எதுவுமில்லை, ஆயினும் அதை விட அதிக மதிப்புள்ளதும் எதுவுமில்லை. அதை விடக் குறுகியது எதுவுமில்லை, ஏனெனில் கடந்த காலம் என்பது இனி இல்லை, எதிர்காலம் நிச்சயமில்லை, நிகழ்காலம் என்பது ஒரே ஒரு கணம்தான். ""இன்னும் சிறிது காலம், அதன் பின் என்னைக் காண மாட்டீர்கள்'' என்று சேசுகிறீஸ்துநாதர் கூறினார். நம் வாழ்வு பற்றி நாமும் இதே வார்த்தைகளைக் கூறலாம். அது, அர்ச். யாகப்பர் கூறுகிறபடி, ""சிறிது காலம் மட்டும் தோன்றுகிற புகை'' மட்டுமே (4:15).

"காலம் குறுகினதாயிருக்கிறது... அழுகிறவர்கள் அழாதவர்களைப் போலவும், சந்தோ´க்கிறவர்கள் சந்தோ´யாதவர்களைப் போலவும், விலைக்குக் கொள்ளுகிறவர்கள், ஒன்றையும் சுதந்தரியாதவர்களைப் போலவும், இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதை அனுபவியாதவர்களைப் போலவும் இருக்கவேண்டும்'' என்று அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் கூறுகிறார் (1 கொரி. 7:29,30,31). ஆகவே, நாம் இவ்வுலகில் இருக்கும் காலம் மிகக் குறுகியது என்பதால், அழுபவர்கள் அழாதவர்களைப் போல் இருக்க வேண்டுமென்று அப்போஸ்தலர் சொல்கிறார், ஏனெனில் அவர்களுடைய துயரங்கள் விரைவில் கடந்து போகும்; மகிழ்கிறவர்கள் மகிழ்ச்சியற்றவர்களைப் போல் இருக்க வேண்டும், உல்லாசங்களில் தங்களுக்குள்ள நாட்டங்களில் அவர்கள் கருத்தைச் செலுத்தக் கூடாது, ஏனெனில் அவை விரைவில் முடிந்து போகும். இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதன் கடந்து போகிற நன்மைகளை அனுபவிக்காமல் இருந்து, நித்திய வாழ்வை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லி முடிக்கிறார்.

"மகனே, காலத்தில் கவனமாயிரு'' என்று பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார் (சீராக்.4:23). மகனே, காலத்தைப் பாதுகாக்கக் கற்றுக் கொள், அதுவே கடவுள் உனக்குத் தரும் எல்லாக் கொடைகளிலும் மிகப் பெரியதும், அதிக விலைமதிப்புள்ளதுமாக இருக்கிறது. காலம் கடவுளுக்கு இணையான மதிப்புள்ளது என்று அர்ச். சியென்னா பெர்னார்தீன் கூறுகிறார்; ஏனெனில் தான் நன்றாகச் செலவிட்ட ஒவ்வொரு கணத்திலும் மனிதன் கடவுளைச் சொந்தமாக்கிக் கொள்கிறான். அவர் மேலும் தொடர்ந்து, இவ்வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஒரு மனிதன்தன் பாவங்களுக்கு மன்னிப்பும், கவுளின் வரப்பிரசாதமும், பரலோக மகிமையும் பெற்றுக் கொள்ள முடியும் என்கிறார். இதனாலேயே அர்ச். பொனவெந்தூரும், ""காலத்தை இழப்பதை விடப் பெரிய இழப்பு வேறு எதுவுமில்லை'' என்கிறார்.

ஆனால், காலத்தை விட அதிக மதிப்புள்ளது வேறு எதுவும் இல்லை என்றாலும், மனிதர்களின் மதிப்பில் அதை விடக் குறைந்த மதிப்புள்ளதும் எதுவுமில்லை என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார். சிலர் நாலைந்து மணி நேரம் விளையாட்டில் ஈடுபட்டிருப்பதை நீ பார்க்கிறாய். இவ்வளவு அதிகமான நேரத்தை அவர்கள் ஏன் வீணாக்குகிறார்கள் என்று நீ கேட்டால், ""உல்லாசமாக இருப்பதற்கு'' என்று அவர்கள் பதில் சொல்வார்கள். வேறு சிலரோ ஒரு நாளில் பாதி நேரம் தெருவில் சும்மா நின்று கொண்டிருப்பார்கள், அல்லது ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எனன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், தாங்கள் பொழுது போக்கிக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறுவார்கள். இதே புனிதர் தொடர்ந்து, ""ஏன் இந்த நேரத்தை வீணாக்குகிறீர்கள்? உங்கள் பாவங்களுக்காக அழும்படியாகவும், தேவ வரப்பிரசாதத்தை சம்பாதித்துக் கொள்வதற்காகவும் கடவுளின் இரக்கம் உங்களுக்குத் தருகிற ஒரு மணி நேரத்தையும் கூட நீங்கள் ஏன் இழக்க வேண்டும்?'' என்று கேட்கிறார். ஓ, வாழ்வின் போது, மனிதர்களால் அலட்சியம் செய்யப்படும் காலமே, மரண நேரத்திம், குறிப்பாக மறு உலகிலும் நீ எவ்வளவு அதிகமாக ஆசித்துத் தேடப்படுவாய்! காலம் என்பது இவ்வாழ்வில் மட்டும் நாம் அனுபவிக்கும் ஓர் ஆசீர்வாதமாகும்; மறுவுலகில் இது அனுபவிக்கப்படுவதில்லை; மோட்சத்திலோ, நரகத்திலோ இது காணப்படுவதில்லை. நரகத்தில் சபிக்கப்பட்ட ஆத்துமங்கள் கண்ணீரோடு: ""ஓ, ஒரே ஒரு மணி நேரம் மட்டும் நமக்குத் தரப் படுமானால்!'' என்று சொல்லி ஏங்குவார்கள். தங்கள் நித்திய அழிவை மாற்றிக் கொள்ளத் தங்களுக்கு உதவக் கூடிய ஒரு மணி நேரத்திற்காக, ஏன், ஒரே ஒரு நிமிடத்திற்காகவும் கூட, என்ன விலை தரவும் அவர்கள் தயாராயிருப்பார்கள். ஆனால் இந்த ஒரு மணி அல்லது ஒரு நிமிடம் இனி அவர்களுக்கு ஒருபோதும் கிடைக்காது. மோட்சத்தில் அழுகை இல்லை. ஆனால், புனிதர்கள் துயரப்படுவது சாத்தியம் என்றால், பூமியில் தாங்கள் வீணாக்கிய காலத்தில் இன்னும் எவ்வளவோ அதிக மகிமையை சம்பாதித்திருக்கலாமே என்ற நினைவாலும், இந்தக் காலம் இனி ஒருபோதும் தங்களுக்குத் தரப்படப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டாலுமே அவர்கள் துயரம் கொள்வார்கள்.

ஓ என் ஆன்மாவின் தேவனே, இவ்வளவு அதிகமான இரக்கங்களை நீர் எனக்குக் காண்பித்திராவிட்டால், இந்தக் கணத்தில் என்னுடைய பாகம் என்னவாயிருந்திருக்கும்! நரகத்தில் இருக்கும் மூடர்களில் நானும் ஒருவனாக இருந்திருப்பேன். ஓ என் ஆண்டவரே, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், என் குருட்டுத் தனத்தில் என்னைக் கைவிட்டு விடாதபடி உம்மை மன்றாடுகிறேன். மன்னிப்புக் கேட்குமாறும், உம்மிடமிருந்து வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வேன் என நம்புமாறும் நீர் என்னைத் தயவோடு அழைப்பதை நான் உணர்கிறேன். ஆம், என் இரட்சகரே,, உம்முடைய குழந்தைகளில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்வீர் என்று நான் நம்புகிறேன். உம்முடைய குழந்தை என்று அழைக்கப்பட நான் தகுதியற்றவன்! பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் நான் பாவம் செய்தேன்!

அர்ச். பிரான்சிஸ் போர்ஜியா கடவுளுக்காகத் தமது காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் பயன்படுத்துவதில் கவனமாக இருந்தார். மற்றவர்கள் பயனற்ற காரியங்களைப் பேசிக் கொண்டிருந்த போது, அவர் தமது பரிசுத்த நேசப் பற்றுதல்களோடு கடவுளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர் எவ்வளவு ஞான ஒடுக்கம் உள்ளவராக இருந்தார் என்றால், பல்வேறு காரியங்களைப் பற்றி உரையாடுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, என்ன பதில் சொல்வது என்று அவர் அறியாதிருந்தார். இதுபற்றி மற்றவர்கள் அவரைத் திருத்த முயன்றபோது, ""வீணான காரியங்களில் என் நேரத்தை வீணாக்குவதை விட மற்றவர்களால் அறிவற்றவன் என்று கருதப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்'' என்றார் அவர்.

"நான் என்ன தீமை செய்து விட்டேன்?'' என்று சிலர் கேட்பார்கள். கேளிக்கைகளிலும், தேவையற்ற உரையாடல்களிலும் ஆத்துமத்திற்கு ஆதாயமற்ற, பயனில்லாத அலுவல்களிலும் உன் நேரத்தைச் செலவிடுவது தீமை இல்லையா என்று நான் கேட்கிறேன். இந்தக் காலத்தை நீ வீணாக்குவதற்காகத்தான் கடவுள் அதை உனக்குத் தந்தாரா? ""செல்வாக்கு நாளில் குறை செய்து கொள்ளாதே; செய்யக் கூடுமான நன்மையை ஒன்றும் தவறாமல் செய்'' (சீராக்.14:14) என்று பரிசுத்த ஆவியானவர் அறிவுறுத்துகிறார். அர்ச். மத்தேயு சுவிசேஷத்தில் கூறப்பட்டுள்ள வேலையாட்கள் தீயது எதுவும் பேசவில்லை. அவர்கள் எதுவும் செய்யாமல் தெருக்களில் நின்று நேரத்தை வீணாக்கிக் கொண்டு மட்டும் இருந்தார்கள். ஆனால், ""நீங்கள் நாள் முழுவதும் சோம்பலாய் இங்கே நிற்பது ஏன்?'' என்று அவர்கள் கடிந்துகொள்ளப்பட்டார்கள் (மத்.20:6). தீர்வை நாளில் சேசுநாதர் வீணாக்கப்பட்ட ஒவ்வொரு மாதத்துக்கும், நாளுக்கும் மட்டுமல்ல, மாறாக, பயனற்ற விதமாய்ப் பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் கணக்குக் கேட்பார்: ""மனிதர் பேசும் ஒவ்வொரு பயனற்ற வார்த்தைக்கும் தீர்வை நாளில் அவர்கள் கணக்குக் கொடுப்பார்கள்'' (மத்.12:36 ). இவ்வாறே நீ வீணாக்கும் ஒவ்வொரு கணத்திற்கும் அவர் கணக்குக் கேட்பார். அர்ச். பெர்னார்ட் கூறுகிறபடி, கடவுளுக்காகச் செலவிடப்படாத நேரம் முழுவதும் வீணாக்கப்பட்ட நேரமே. இதனாலேயே பரிசுத்த ஆவியானவர்: ""உன் கையால் செய்ய முடியும்போதே, அதை ஆர்வத்தோடு செய்து விடு; ஏனெனில், நீ எங்கே விரைந்து சென்று கொண்டிருக்கிறாயோ, அந்த நரகத்தில் வேலையுமில்லை, வேலை செய்யக் காரணமுமில்லை . . .'' என்கிறார். இன்று நீ செய்ய முடிந்த வேலையை நாளைக்குத் தள்ளிப் போடாதே, ஏனெனில் நாளை நீ இறந்து போகலாம், இனி நன்மை செய்யக் காலமே இல்லாததும், உன் புண்ணியங்களின் வெகுமதியை நீ அனுபவிக்க, அல்லது உன் பாவங்களுக்குரிய தண்டனையை அனுபவிக்க மட்டுமே நீ செல்வதுமான மற்றொரு உலகத்திற்கு நீ போய்விடலாம். ""இன்று அவருடைய குரலைக் கேட்பீர்களாகில், உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்'' (சங்.94). இன்றே அவரது அழைப்புக்குக் கீழ்ப்படியுங்கள்; ஏனெனில் நாளை உங்களுக்கு இனி நேரமில்லாமல் போகலாம், அல்லது கடவுள் இனி உங்களை அழைக்காமலே போகலாம். நம் இரட்சணியம் முழுவதும் தேவ அழைத்தல்களுக்கு, கடவுள் நம்மை அழைக்கும் காலத்தில் செவிகொடுப்பதையே சார்ந்திருக்கிறது.

ஓ என் தேவனே, என்னை ஒளிர்வித்தருளும்! உம்மை நோகச் செய்வது மட்டுமே தீமை என்றும், உம்மை நேசிப்பது மட்டுமே நன்மை என்றும் நான் புரிந்து கொள்ளச் செய்தருளும். உமக்காக உழைப்பதில் என் எஞ்சிய நாட்களைச் செலவிட எனக்கு உதவும். மரியாயே, என் நம்பிக்கையே, எனக்காகப் பரிந்துபேசுங்கள்.