இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்ய இருதயம்!

சேசுநாதரின் தந்தை யார்? ஒருவேளை, யாராவது ஒரு பெரிய, கல்வி ஞானம் மிக்க தத்துவஞானியா? இல்லை. அப்படியானால் ஒருவேளை ஒரு மாபெரும் அரசரா? அதை விடவும் மேலானவர்! உலகம் முழுவதினுடையவும் பேரரசரா? ஆம், இன்னும் மேலானவர்! ஒருவேளை, பரலோகங்களின் மீதும் ஆட்சி செலுத்துகிறவரா? ஆம், காணக் கூடியவையும், காண முடியாதவையுமாகிய பரலோகங்களை ஆளுகிறவர்! அவர் ஓர் ஆட்சியாளருக்கும் மேலானவர். இந்த பிரபஞ்சத்தில் இருக்கிற சகலத்தையும் அவரே படைத்தார் - நாம் நடக்கிற இந்த நிலம், விலையுயர்ந்த கற்கள், ஜீவ ராசிகள் - இவற்றில் சில, நம் வெறுங்கண்ணால் காண முடியாத அளவுக்கு மிகச் சிறியவை - வேறு சில, பல டன்கள் எடையுள்ள அளவுக்கு மிகப் பெரியவை. அவர் பூச்சிகளையும், பறவைகளையும், மிருகங்களையும் - இனத்திற்கு ஒன்றாக அல்ல - மாறாக பல இலட்சம் வகைவகையான ஜீவராசிகளைப் - படைத்தார். தனக்கென ஒரு சிறிய உலகத்தை முழுமையாகக் கொண்டிருக்கிற மனிதன், கடவுளின் மிக முக்கியமான சிருஷ்டிகளில் ஒன்றாக இருக்கிறான். அதன்பின் எண்ணிக்கையில்லாத சம்மனசுக்களின் படைத்திரள் வருகிறது. மேலும் விண்வெளியில் தொலைதூரத்தில், மிகச் சிறிய ஒளிப்புள்ளிகளை நாம் காண்கிறோம். நாம் நட்சத்திரங்கள் என்று அழைக்கிற இவையும்கூட, அவருடைய சிருஷ்டிகளாகவே இருக்கின்றன. இவை (இவற்றில் சில) நம் சூரியனைவிட பலகோடி மடங்கு பெரியவை. சூரியனோ நம் பூமியை விட மூன்று கோடி மடங்கு பெரியது. ஓ, இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு பரந்து விரிந்ததாக இருக்கிறது! நம்முடைய இந்த மிகச் சிறிய பூமியில் இருக்கிற நாம் ஒரு மணல் துகளின் அளவு அல்லது ஒரு தூசித் துகளின் அளவுகூட இல்லாதிருக்கிறோம்.

எத்தகைய அதியற்புதமான உலகத்தை கடவுள் சிருஷ்டித்திருக்கிறார்! இவற்றில் ஏதேனும் ஒன்றாவது ஜீவித்திருப்பதற்கு முன்னமே, நமது இரட்சகர் தம் பிதாவோடும், தம் பிதாவிலும், அவரை நேசித்தபடியும், அத்தியந்த பேரின்பத்தோடும் வாழ்ந்து கொண்டிருந்தார். பரலோகத்தினுடையவும், பூலோகத்தினுடையவும் மாபெரும் சர்வேசுரன்! ஓ! அவரைப் பற்றி விவரிக்க யாரால் முடியும்? பரிதாபத்திற்குரிய, செயலற்ற சிறு பூச்சிகளாகிய நம்மால் அவரைப் புரிந்து கொள்ளத் தொடங்கக் கூட முடியாது; அப்படியிருக்க அவரைப் பற்றி மற்றவர்களுக்கு விளக்குவதற்கான வார்த்தைகளை நாம் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? (களிமண்ணாலான இந்த சரீரத்தை நாம் கொண்டிருக்கும் வரையிலும்) சர்வேசுரன் இருக்கிறபடியே நாம் அவரைக் காண்போமானால், மகிழ்ச்சியாலும், நேசத்தாலும் நாம் நிச்சயமாக இறந்து விடுவோம். நித்தியத்தில்தான் நாம் அவரைக் காண்போம். அப்போது மட்டும்தான் நித்திய பிதாவினுடையவும், அவரில் ஜீவிக்கிற அவருடைய பூரண நேசத்திற்குரிய திருச் சுதனுடையவும் அந்தக் காட்சியின் அழகைத் தாங்கக் கூடியவர்களாக நாம் இருப்போம். 

சேசுநாதர் இந்த மாபெரும் சர்வேசுரனுடைய, இந்த நித்திய பிதாவினுடைய திருச் சுதனாக இருக்கிறார், இருந்தாலும், நாம் அவரைக் கண்டுபிடிக்கிறோமா? அவருடைய பிதாவின் அரண்மனையில் நாம் அவரைக் காணவில்லை! இல்லை, நாம் அவரை ஓர் அந்நிய தேசத்தில் ஒரு பரதேசியாகவும், ஒரு தொழுவத்தில் சிறு குழந்தையாகவும் காண்கிறோம். அவர், செல்வந்தராகிய ஒரு பிதாவின் சுதனாக இருந்தாலும், ஏழையாக இருக்கிறார்; உலகங்கள் அவரால் படைக்கப்பட்டிருந்தாலும், பலவீனராகவும், தனித்து எதுவும் முடியாதவராகவும் இருக்கிறார்; அவர் எஜமானர்களுக்கெல்லாம் எஜமானராகவும், அரசர்களுக்கெல்லாம் அரசராகவும் இருந்தாலும், ஓர் ஊழியனின் உருவத்தில் இருக்கிறார்.

இதன் பொருள் என்னவாக இருக்கலாம்? கடவுள் ஏன் மனிதன் ஆனார்? சர்வ வல்லபர் ஏன் தனித்து எதுவும் செய்ய முடியாதவர் ஆனார்? பிரபஞ்சத்தின் செல்வமிக்க சொந்தக்காரர், ஏன் ஏழையானார்? எஜமானர் ஏன் ஓர் அடிமையானார்? ஏனென்றால், நரகத்தினுடையவும், நித்திய அழிவினுடையவும் பாதையில் இருந்த பாவ ஜென்மங்களாகிய நம்மை அவர் நேசித்தார். அவர் நம்மை நேசித்து, நம்மைப் போல பலவீனராகவும், ஏழையாகவும் ஆவதன் மூலம் நமது அன்பை வெற்றிகொள்ளத் திட்டமிட்டார். ஒருமுறை நம் அன்பைத் தாம் வெற்றிகொள்ளும்போது, அவர் நமக்காகக் காத்திருக்கும் அச்சத்திற்குரிய கதியிலிருந்து நம்மை மீட்டு இரட்சித்து, தாமும், தமது பிதாவும் உந்நதமாக அரசாளுகிற தமது பரலோக மாளிகைக்கு நம்மைக் கூட்டி வருகிறார்.


நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்ய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!