அமைந்த மனதோடு ஏற்றுக்கொள்ளப்படும் நோய் உத்தமமான பாவப் பரிகாரம்!

பரிகாரத்தின் அவசியம்

ஒவ்வொரு பாவமும் கடவுளின் சட்டத்திற்கு எதிராக அனுப விக்கப்பட்ட ஒரு முறையற்ற இன்பத்தில் அடங்கியிருக்கிறது. பாவத்தில் கடவுளின் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஓர் இன்ப மும், கடவுளின் சட்டத்தை மீறியதால் அவருக்கு ஏற்படும் நிந்தை அவமானமும் இருக்கிறது. எனவே, பாவப் பரிகாரத்தில், அந்த முறையற்ற இன்பத்திற்கு எதிராக ஒரு துன்பத்தை ஏற்றுக்கொள் வதும், அந்தத் துன்பத்தைக் கடவுளின் மகிமைக்காக மனப்பூர்வ மாகவும், அமைந்த மனதோடும் ஏற்றுக்கொள்வதும் அடங்கி யிருக்க வேண்டும்.

பரிகாரத்தில் மூன்று வகைகள் அடங்கியுள்ளன. முதலாவது, பரிபூரணமான, முழுமை யான பரிகாரம் (Satisfaction). சர்வேசுரனுக்குத் தகுதியுள்ள இந்தப் பரிகாரத்தை அவருக்கு இணை யான தெய்வத்துவம் உள்ள ஒருவரால் மட்டுமே நிறைவேற்ற முடியும். மனிதனின் பாவத்தைப் பற்றிய காரியத்தில், நம் ஆண்டவர் நம் இடத்தை எடுத்துக்கொண்டு, நம் இரட்சணியத்திற்கு முற்றிலும் அவசியமாயிருந்த இந்தப் பரிகாரத்திற்காகத் தம்மையே பலியாகத் தமது பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தார். இவ்வாறு நம் ஆண்டவரின் தெய்வீகத்தின் அளவற்ற இரக்கத்தால் தூண்டப் பட்டு அவர் நிறைவேற்றிய இந்த முழுமையான பரிகாரத்தால் நாம் இரட்சிக்கப்பட்டோம்.

இரண்டாவது வகை, தேவ நீதிக்குப் பரிகாரம் செய்யும் கருத்தை மட்டும் கொண்டு பரிகாரம் செய்வது (Expiation). சர்வேசுரன் அடிமை மனஸ்தாபத்தை விட உத்தம மனஸ்தாபத்தையே நம்மிடம் அதிகம் தேடுகிறார் என்றாலும், தம்முடைய அளவற்ற இரக்கத்தின் காரணமாக, நம் அடிமை மனஸ்தாபத்தையும் கூட ஏற்றுக்கொண்டு நம் பாவங்களை மன்னிக்கிறார். அதே விதமாகத்தான் அவர் இந்த வகைப் பரிகாரத்தையும் ஏற்றுக்கொள்கிறார்.

மூன்றாவது வகை (Reparation), பிள்ளைக்குரிய அன்போடும், தகப்பனுக்குச் செய்யப்பட்ட நிந்தை அவமானத்திற்குப் பரிகாரம் செய்யும் கருத்தோடும், அமைந்த மனதோடும், ஆர்வத்தோடும் துன்பங்களை ஏற்றுக்கொள்வதில் அடங்கியுள்ளது. இதுவே தேவனுக்குப் பிரியமான பரிகாரம்; சேசுக்கிறீஸ்துநாதருடைய திருப்பாடுகளோடும், திருமரணத்தோடும் சேர்த்து இவ்வகைப் பரிகாரம் ஒப்புக்கொடுக்கப்படும்போது, இது சர்வேசுரனுக்கு முற்றிலும் உகந்ததாக இருந்து, நம் புத்திக்கு எட்டாத பெரும் இரட்சணியப் பலன்களை விளைவிக்கிறது. இதனால்தான் அர்ச். குழந்தை தெரேசம்மாள், ""தேவசிநேகத்தோடு தரையில் கிடக்கும் ஒரு குண்டூசியைக் குனிந்து எடுப்பதும் கூட ஓர் ஆத்துமத்தை மனந்திருப்ப வல்லதாக இருக்கிறது''  என்கிறாள்.