இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தந்த மயமாயிருக்கிற உப்பரிகையே!

யானைத் தந்தத்திற்கு இரு சிறந்த குணங்களுண்டு; ஒன்று அதன் தூய வெள்ளை நிறம், மற்றது அதன் உறுதி. தந்தத்தின் வெண்மையும், பளிங்கின் பளபளப்பும் பார்க்கப் பார்க்க இரம்மியமாக இருக்கிறதன்றோ? மேலும் மிருகங்களிற் பெரியது யானை. யானைக் கொம்பும், யானையின் உருவத்திற்கும் சக்திக்கும் ஏற்றாற்போல் உறுதியும் வன்மையும் பெற்றிருக்கிறது.

தந்தத்தின் இவ்விரு சிறந்த குணங்களும் நம் மாதாவிடம் விளங்குவதைக் காணலாம். மாமரி அன்னை யிடமன்றி வேறு எவரிடம் வானவரும் கண்டு அதிசயிக்கும் ஆத்தும சரீர பரிசுத்தமும், செளந்தரியமும் விளங்கு கின்றன? களங்கமற்ற கன்னிமையை அவர்களைப் போன்று காத்தவர் யார்? 

வசீகரிக்கும் வனப்பும், திட உறுதியும் கொண்ட யானைத் தந்தங்களால் ஆக்கப்பட்ட ஓர் உப்பரிகையை (கோபுரத்தை) வர்ணிப்பது எங்ஙனம்! தந்தத்தின் பண்புகளை ஒப்பற்ற முறையில் தன்னிடம் கொண்டு விளங்கின நம் மாதாவை “தந்தமயமாயிருக்கிற உப்பரிகையே” என்று அழைப்பது தகுமன்றோ?

நம் மாதாவின் அணிகலமான பரிசுத்ததனத்தைப் பற்றி பல முறை விவரித்துக் கூறியுள்ளோம். எனவே இங்கு, பரிசுத்த புண்ணியங்களை அநுசரிப்பதில் அவர்கள் காட்டிய வீரத்தையும் துன்பம் நிறைவாழ்வில் அவர்களது மன உறுதியையும், வலிமையையும் பற்றி மட்டுமே விரிவாக ஆராய்வோம்.

கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுவதில் மாமரி அன்னை காட்டிய மனத்திடனைக் கண்டு வியப்படை யாதவர் யார்? இளவயதில் தனது பெற்றோரையும், வீடு வாசலையும் விட்டு தேவாலயத் திருப்பணியைத் துவக்கின நாள் முதல் துன்ப வருத்தங்களும் இக்கட்டு இடைஞ்சல் களும் அவர்களை நிழல் போலத் தொடர்ந்து வருகின்றன. 

தேவதூதரின் மங்கள வார்த்தையேற்று, தேவசுதனை அற்புதமாகக் கர்ப்பம் தரிக்கிறார்கள் அன்னை. நீதிமான் சூசையப்பரோ தேவ வல்லமையின் அற்புத நிகழ்ச்சியை அறியாது மனங்கலங்குகிறார். கன்னிமாமரியோ தேவ சித்தத்துக்கு அமைந்து உண்மையை வெளியிடாமல் மெளனம் சாதிக்கிறார்கள். 

கர்ப்பவதியாக இருந்தும் அகுஸ்துஸ் பேரரசனுடைய ஆணைக்கு அடிபணிந்து பெத்லகேமுக்குச் சென்றபோதும், அங்கு இரவில் தங்க இடமின்றி மாட்டுத் தொழுவில் தங்கி மனுக்குல மீட்பரை பெற்றெடுத்த போதும், அன்று தேவாலயத்தில் குழந்தை யைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தபோது சிமியோ னும் அன்னாளும் தன்னையும் தன் பிரிய மகனையும் குறித்து வசனித்த தீர்க்கதரிசனங்களைக் கேட்ட பிறகும், கொடுங்கோல் வேந்தனின் கரங்களிலிருந்து தனது சிசுவை மீட்க இரவோடு இரவாக எஜிப்து நாட்டை நோக்கி ஓடின போதும், சேசு பாலகனுக்குப் பன்னிரு வயது நடக்கும்போது மூன்று நாள் அவர் திருமுகம் காணாதிருந்த போதும், நாசரேத்தூரில் நம்முடைய சேசு நெற்றி வியர்வை நிலத்தில் விழ தச்சுவேலை செய்தபோதும் கன்னிமரியாயின் தாயுள்ளம் எவ்வளவு கஸ்தியடைந் திருக்கும் என்பதைச் சற்றே யோசியுங்கள். ஆயினும் இதனால் தேவமாதா மனமுடைந்து வாடினார்களா? வீண்பயத்திற்கும் அவநம்பிக்கைக்கும் இடம் கொடுத்து மனம் குன்றினார்களா? இல்லை.

சேசுநாதர் முப்பது வருடம் மறைந்த ஜீவியத்தை முடித்து, மூன்று வருடம் நடத்தின பகிரங்க ஜீவியத்தில் அல்லும் பகலும் அனுபவித்த களைப்பும், தவிப்பும், மனத்தைப் பிளக்கும் மனவேதனைகளும் நம் அன்னை அறியாதவையோ? 

தன் ஆருயிர் மைந்தன் கன்னெஞ்ச யூதரால் சிலுவையில் அறையப்பட்டு கல்வாரி மலையில் கள்வர்கள் நடுவில் அகோர வேதனைகளுக்கு மத்தியில் ஒரு கொடும் துரோகியைப் போலத் தொங்குவதையும், அவரது விரோதிகள் அவரைப் கேலி பரிகாசம் செய்வ தையும், அவர் மேல் வசைமாரி பொழிவதையும் கண்டு, மனங்குலையாது சிலுவையடியில் நின்றார்கள் மாதா. என்னே அன்னையின் திடவுள்ளம்! “சேசுவின் அன்னை சிலுவையடியில் நின்று கொண்டிருந்தாள்” என்றுரைக்கும் சுவிசேஷ வாக்கியம் ஒன்று மட்டுமே நமதன்னையின் மனங்கலங்கி மடியாத தைரியத்தையும், தேவ சித்தத்திற்கு அமைந்த மனதையும் பட்டப்பகல் போல எடுத்துக் காட்டப் போதுமானது.

அர்ச். அருளப்பரைத் தவிர சேசுவின் மற்ற சீஷர்கள் யாவரும் கோழைகளைப் போன்று ஓடி விடுகின்றனர். தங்கள் திவ்ய குருவுடன் தாங்களும் மரிக்கத் தயார் என வீரம் பேசிய அர்ச். தோமையார் எதிரிகளின் கையினின்று தப்பித்து மறைந்து கொண்டார். மற்ற யாவரும் மறுதலித்த போதிலும், தான் மட்டும் தனது திவ்ய இரட்சகரை மறுதலியேனென்று இறுமாப்புடன் கூறிய அர்ச். இராயப்பர், ஒரு ஸ்திரீயின் வார்த்தைக்குப் பயந்து தம் திவ்விய குருவை ஆணையிட்டு மறுதலிக்கிறார். 

ஆனால் நமதன்னையோவெனில், தனது திவ்விய குமாரனின் சிலுவைப் பாதைச் சுவடுகளைப் பின்பற்றி கல்வாரி மலை ஏறுகிறார்கள். தன் மகன் அகோர வேதனைகள் மத்தியில் தொங்கும் சிலுவையடியில் நிற்கிறார்கள். அவர்களன்றோ வீரத்தாய்!! தன் மகன் அவஸ்தைப்படுவதைக் கண்டு, மனம் பிளந்து அவர்கள் உயிர் நீக்காதது தந்தத்தைப் போன்ற அவர்களுடைய மன உறுதியை எடுத்துக் காட்டுகிறதன்றோ? எனவே, “தந்தமயமாயிருக்கிற உப்பரிகையே” என்ற புகழ் நம் அன்னைக்கு எவ்வளவு பொருத்தமானது!

இனி நம்மைத் தாமே நாம் சற்று நோக்கின், நமது கோழைத்தனம் வெளிப்படும். பாவச் சோதனைகளும், சமயங்களும் நம்மை அணுகாத நாட்களில் நாம் உற்சாகத்துடனிருக்கிறோம். புண்ணிய வழி நடப்பதும், தேவ கட்டளைகளையும் திருச்சபைக் கட்டளைகளையும் அனுசரித்தலும் கடினமாகத் தோன்றுவதில்லை. ஆனால், சோதனைகள் நம்மை அடுத்து வரும்போதும், துன்பங்கள் நம்மை அணுகும்போதும், பாவச் சமயங்களை அகற்ற பரித்தியாகம் செய்ய அவசியம் நேரிடும்போதும் நாம் அலுத்துச் சலித்து விடுகிறோம். 

சோதனைகள் நம்மைத் தாக்கும்போதும் அவைகளின்மீது வெற்றி கொள்ள நமக் குத் தைரியமில்லை. கஷ்ட வருத்தங்கள் ஏற்படும் போது மனமுடைந்து போகிறோம்; ஜெபம் செய்வதும், கோயிலுக்குச் செல்வதும், பூசை காணுதலும் நமக்கு கடினமாக வும் கசப்பாகவும் தோன்றுகின்றன. நாம் நமது அந்தஸ் தினுடையவும், வேதத்தினுடையவும் கடமைகளைச் சரிவர நிறைவேற்றி, பாவத்தை விலக்கி புண்ணியத்தில் வளர வேண்டுமானால், தைரியம் என்னும் வரம் நமக்கு அவசியம். இதற்காக ஜெபித்தல் நமது கடன். தேவத் திரவிய அனுமானங்களை அடிக்கடி பெற்று நமது ஆத்து மத்தைத் திடப்படுத்தல் அவசியம். 

நமது சரீரத்தின் பலன் குன்றாதிருக்க ஆகாரம் உண்ணுதல் எவ்வளவு அவசியமோ, அவ்விதம் நமது ஆத்துமத்திற்கும் போஜனம் அவசியம். நமது திவ்விய இரட்சகர் தமது சரீரத்தைத் தானே பரிசுத்த திவ்விய நற்கருணை வழியாய் நமக்குக் கொடுத்திருக்கிறார். இத்திவ்விய போஜனத்தை அடிக்கடி, கூடுமானால் தினமும் உட்கொள்ள முயலுவோம். நமது ஆத்துமமும் பலப்படும். நம்மைப் பலப்படுத்துகிற நமதாண்டவரின் உதவியால் நம்மால் சகலமும் செய்யக் கூடும்.

“அன்னையே! தஞ்சமென்று ஓடிவரும் உமது தாசர்களான எம்மை நோக்கிப் பாரும். உலகும், உலக ஆசாபாசங்களும், கர்ச்சிக்கும் சிங்கம் போன்று யாரை விழுங்கலாமென்று சுற்றித் திரியும் பசாசின் தந்திர சோதனைகளும், சரீரமும், அதன் சிற்றின்ப நாட்டங்களும் ஓயாது எங்களை அலைக்கழிக்கின்றன. இப்புயல்களுக்கு முன் எங்களது மனம் குன்றுகின்றது, ஆத்துமம் சோர் வடைகின்றது. தந்தக் கோட்டை போன்ற உறுதியான உம் மிடம் ஓடிவருகிறோம். எங்களுக்காக உமது திருக்குமார னிடம் மன்றாடி, எங்கள் ஆத்தும சத்துருக்களை வெல்ல எங்களுக்கு வேண்டிய பலனையும், திடனையும் பெற்றுத் தாரும் அம்மா.” 


தந்தமயமாயிருக்கிற உப்பரிகையே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!