இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - வெல்லப்படாதவர்கள்:

இந்தக் காகிதம், ஒருபோதும் தீமையால் வெல்லப்படாதவர் களின் பெயர்களைக் கொண்டிருந்தது. அவர்களின் எண்ணிக்கை மிகப் பெரிதாக இருந்தது. நான் அவர்கள் எல்லோரையும் என் முன் கண்டேன். 

அவர்களில் பலரை நான் அறிந்திருந்தேன். இன்னும் பலரை முதன்முறையாகப் பார்த்தேன். மிகப் பெரும் கஷ்டங் களையும், ஆபத்துக்களையும் எதிர்கொண்டாலும், அவர்கள் எப்படி கடவுளுக்காக அச்சமின்றியும், பயத்தால் பின்வாங்காமலும் வாழ்கிறார்கள் என்பதை நான் பார்த்தேன். 

அவர்கள் ஒரு சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தது போலவும், மறைவிடங்களில் ஒளிந்திருப்பவர்களால் தொடர்ச்சியாகத் தாக்கப்படுவது போலவும் அவர்களுடைய வாழ்வு இருந்தது. அவர்கள் பெரும் தடைகளால் பெருமளவுக்கு தடுக்கப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், ஆயினும் அவர்கள் ஒருபோதும் வெல்லப்படவில்லை, காயப் படுத்தப்படவுமில்லை .

டோமினிக் அதன்பின் இரண்டாவது காகிதத்தைத் தந்தான். அதன்மீது பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த வார்த்தை: கடுமையாகக் காயப்பட்டவர்கள்

இந்தக் காகிதத்தின்மீது, கடவுளைக் கடுமையாக நோகச் செய்தவர்களும், பயணத்தில் மோசமாக காயப்படுத்தப்பட்டவர் களும், ஆயினும் நல்ல பாவசங்கீர்த்தனம், திவ்விய நன்மை ஆகியவற்றின் மூலம் தங்கள் சமநிலையைத் திரும்பப் பெற்றுக் கொண்டவர்களும், தங்கள் காயங்களை ஆற்றிக் கொண்டவர்களுமான சிறுவர்களின் பெயர்கள் இருந்தன. 

இவர்களில் சிலர் தங்கள் அனுபவத்தால் அதைரியப்படுவதன் அடையாளங்களை வெளிப் படுத்தினாலும், மொத்தத்தில் இவர்கள் மீண்டும் தொடர்ந்து முன்னேறிச் செல்ல கடுமையாக முயன்று கொண்டிருந்தனர். இவர்கள் முதல் காகிதத்தில் இருந்த எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். நான் இவர்கள் எல்லோரையும் கண்டேன். அவர்களில் மிகப் பலரை மீண்டும் அடையாளம் கண்டு கொண்டேன்.

மூன்றாவது காகிதத்திற்காக நான் கையை நீட்டினேன். அதன்மீது நான் காண முடிந்த வார்த்தைகள்: தீமையால் வெல்லப்பட்டவர்கள்

இந்தக் காகிதத்தின்மீது கனமான பாவங்களால் கடவுளை மறுதலித்தவர்களும், தொடர்ந்து பாவத்தில் நிலைத்திருந்தவர்களும், அவருடைய நட்பிலிருந்து விலக்கப்பட்டவர்களாகவே நிலைத்திருப்பதில் திருப்தி கொண்டவர்களாகவும் இருந்த சிறுவர் களின் பெயர்களை நான் பார்த்தேன்.

அவன் என்னிடம் மிகத் தீவிரமான முறையில், “ஒரு நிமிடம் பொறுங்கள், இந்தக் காகிதத்தைத் திறக்கும்போது, ஒரு மிகக் கடுமையான துர்நாற்றம் வெளிப்படும். அதை உங்களாலோ, என்னாலோ தாங்க முடியாது. அவ்வாறே அது கடவுளுடைய தூதர்களுக்கும், கடவுளுக்குமே கூட சகிக்க முடியாததாக இருக்கிறது” என்றான்.

“கடவுளுடைய தூதர்கள் சுத்த அரூபிகளாக இருக்க, இது எப்படி சாத்தியம்?” என்று நான் கேட்டேன்.

“அதன் அர்த்தம் இதுதான்: உங்களுக்கும், உங்களுக்குக் குமட்டலை வருவிக்கிற காரியத்திற்குமிடையே நீண்டதூரம் இருக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி விரும்புவீர்களோ, அப்படியே கனமான பாவத்தால் கடவுளை மறுதலிக்கிறவர்களும் அவரிட மிருந்து மேலும் மேலும் அதிக தூரத்திற்குப் பிரிக்கப்படுகிறார்கள்” என்று அவன் பதில் சொன்னான்.

அதன்பின் அவன் அந்தக் காகிதத்தை என்னிடம் தந்து,

“இதைப் பார்த்துவிட்டு, உங்கள் மகன்களுக்காக இதை நல்ல முறையில் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். அந்தப் பூங்கொத்தை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.. எல்லோரும் அப்படி ஒரு பூங்கொத்தைக் கொண்டிருப்பதையும், அதை ஒருபோதும் இழந்து போகாதிருப்பதையும் உறுதி செய்து கொள்ள கடுமையாக முயலுங்கள்.” இப்படிச் சொல்லி விட்டு, அவன் என்னை விட்டு விலகி, தனக்குப் பின்னால் கூட்டமாக இருந்த மற்றவர்களுக்கு மத்தியில் சென்று மறைந்தான்.

நான் அந்தக் காகிதத்தைத் திறந்தேன்... அதில் பெயர்கள் எதையும் நான் காணவில்லை. மாறாக ஒரு மின்னல் வீச்சின் நேரத்தில் நான் எனக்கு முன்பாக அதில் பெயர் எழுதப்பட்டிருந்தவர்கள் அனைவரையும் பார்த்தேன். கனத்த இருதயத்தோடு நான் அவர் களை உற்றுநோக்கினேன். 

அவர்களில் பெரும்பாலானவர்களை நான் அறிந்திருந்தேன். அவர்கள் ஆரட்டரியை, அல்லது நம் பள்ளிகளில் ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் சாதாரணமாக நல்ல சிறுவர்கள் என்றும், சிலர் மிகச் சிறந்தவர்கள் என்றும் கூட கருதப்பட்டவர்கள். . . ஆனால் அவர்கள் தங்கள் வெளித்தோற்றத்திலிருந்து இப்படி மிகவும் மாறுபட்டிருந்தார்கள்!

காகிதம் திறக்கப்பட்டபோது, அதிலிருந்து எவ்வளவு பயங்கரமான துர்நாற்றம் எழுந்தது என்றால், நான் அதனால் முழுவதுமாக மேற்கொள்ளப்பட்டேன். என் தலை கடும் வலியால் கிறுகிறுக்கத் தொடங்கியது. நான் எவ்வளவு கடுமையாக வாந்தி யெடுக்கத் தொடங்கினேன் என்றால், சாகப் போகிறேன் என்று நினைத்தேன்.

எல்லாமே இருண்டு போயிற்று. காட்சி மறைந்து போயிற்று. ஊருடுவும் மின்னல் வெட்டு ஒன்று வானத்தைக் கிழித்தது. அதன் அச்சமூட்டும் இடியோசை என் காதில் பயங்கரமாக அதிர்ந்து கொண்டிருக்கையில், அச்சத்தால் நடுங்கியபடி நான் விழித் தெழுந்தேன்.

அந்தத் துர்நாற்றம் இன்னும் என் அறையில் இருந்தது. அது சுவர்களிலும், தட்டுமுட்டுகளிலும் ஒட்டிக் கொண்டிருந்தது. அடுத்த பல நாட்களாக அது அங்கேயே நிலைத்திருந்தது. இவ்வாறு கடவுளை மறுதலித்து, சுய திருப்தியின் பயங்கரங்களுக்குத் தங்களைக் கையளிப்பவர்களின் பெயரும் கூட கடவுளுக்கு அருவருப்பானதாக இருக்கிறது.

அந்தத் துர்நாற்றத்தின் நினைவு எனக்கு வரும்போதெல்லாம் நான் வலியாலும், குமட்டல் உணர்வாலும் புதிதாகப் பற்றிப் பிடிக்கப்படுகிறேன். மிகுந்த சிரமத்துடன்தான் வாந்தியெடுப்பதைத் தவிர்க்கிறேன்.

இந்த அட்டவணைகளில் எழுதப்பட்டிருக்க நான் கண்ட பெயர்களை உடைய சிறுவர்களில் சிலரிடம் நான் பேசிவிட்டேன். கனவில் நான் கண்டவை மிகவும் உண்மையானவை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.