5 மார்ச் 1944.
சேசு கூறுகிறார் :
“...கடவுளையும் அவருடைய சம்மனசுத் தூதர்களையும் தவிர மற்றெல்லாவற்றிற்கும், உலகத்திலுள்ள அனைத்திற்கும் அதிபதியாக கடவுள் மனிதனை ஏற்படுத்தினார் என நாம் ஆதியாகமத்தில் வாசிப்பதில்லையா? மனிதனுடைய மகிழ்ச்சியிலும், எல்லா ஜீவ வஸ்துக்கள் மீது அவனுக்குள்ள ஆதிக்கத்திலும் மனுஷியை அவனுக்குத் துணையாகத் தந்தார் என்றும் நாம் வாசிப்பதில்லையா? நன்மை தீமை அறிவிக்கும் மரத்தின் கனியைத் தவிர மற்றெல்லாவற்றின் கனிகளையும் உண்ண அவர்களுக்கு அனுமதியிருந்ததென்றும் வாசிப்பதில்லையா? ஏன்? “அவன் ஆண்டு கொள்ளும்படி” என்ற வார்த்தைகளின் பொருள் என்ன? நன்மை தீமை அறிவிக்கும் மரத்தின் அர்த்தம் என்ன? இந்தக் கேள்விகளை நீ எப்போதாவது கேட்டிருக்கிறாயா ஓ மனிதனே, பயனற்ற பல கேள்விகளைக் கேட்பவனே, பரலோக உண்மைகளைப் பற்றி ஒருபோதும் கேள்வி கேட்காதவனே! உன்னுடைய ஆன்மா அது உயிருடன் இருந்தால் அது உனக்குச் சொல்லும். ஏனென்றால் வரப்பிரசாதத்தில் இருக்கும் ஓர் ஆன்மா, உன் சம்மனசானவருடைய கையில் ஒரு பூவைப் போல் ஏந்தப்பட்டிருக்கும். ஒரு மலரைப்போல் சூரியனால் முத்தமிடப்பட்டு, பரிசுத்த ஆவியினால் பனியால் தெளிக்கப்பட்டிருக்கும். அவர் அதை அனற்படுத்துகிறார், பிரகாசிப்பிக்கிறார், மோட்ச ஒளிகளினால் தெளித்து அலங்கரிக்கிறார். உனக்கு உன் ஆத்துமத்துடன் பேச மட்டும் தெரியுமானால், உன்னைப் போல் இஸ்பிரீத்துவாயிருக்கிற (Spiritus என்ற சொல்லுக்கு ஆவி என்ற சொல் சரியாகப் பொருந்தாததால் அதுவே தமிழிலும் “இஸ்பிரீத்து” என்றே நம் முன்னோர் முறைப்படி வைக்கப்பட்டுள்ளது.) கடவுளைப் போல் உன்னை ஆக்குகிற உன் ஆன்மாவை நீ நேசிப்பா யானால், எத்தனை உண்மைகளை அது உனக்குச் சொல்லித்தரும்!
உன் ஆத்துமத்தைக் கொல்லும் வரையிலும் நீ அதைப் பகைப்பதற்குப் பதிலாக, அதை நீ நேசிப்பாயானால் எப்பேர்ப்பட்ட பெரிய நண்பனை நீ கொண்டிருப்பாய்! ஓ மனிதர்களே, நீங்கள் பேசுவதற்கு எவ்வளவு ஆவல்படுகிறீர்கள்; உங்கள் நட்புகளால் ஒருவரையயாருவர் பாழாக்குகிறீர்கள். இந்த நட்புகள் சில சமயம் ஏற்படுவதுபோல் தகாதவைகளாயில்லாவிட்டாலும் அநேகமாக எப்போதும் உபயோகமற்றவையாயிருக்கின்றன; வீணான, கேடு விளைவிக்கும் உலகத்தன்மையான வார்த்தைச் சச்சரவுகளாக இருக்கின்றன. உங்கள் ஆன்மாவை நீங்கள் நேசித்தால், பரலோக காரியங்களைப் பற்றி நீங்கள் உரையாடக்கூடிய எப்படிப்பட்ட உந்நத பெரிய நண்பனாக உங்கள் ஆன்மா இருக்கும்!
“ஒருவன் என்னைச் சிநேகித்தால் என் வாக்கியத்தை அனுசரிப்பான்; என் பிதாவும் அவனை நேசிப்பார்; நாங்கள் அவனிடம் வந்து அவனுக்குள் வாசம் பண்ணுவோம்” (அரு. 14:23) என்று நான் சொல்லவில்லையா? தேவ இஷ்டப்பிரசாதத்தில் இருக்கும் ஆத்துமம் சிநேகத்தைக் கொண்டிருக்கிறது. சிநேகத்தைக் கொண்டிருப்பதால் அது கடவுளைக் கொண்டிருக்கிறது - அதாவது ஆத்துமத்தைப் பாதுகாத்து வருகிற பிதாவையும் அதற்குப் படிப்பிக்கிற சுதனையும் அதை பிரகாசிப்பிக்கிற இஸ்பிரீத்து சாந்துவையும் கொண்டிருக்கிறது. இதனால் அது அறிவையும், புத்தியையும், ஞானத்தையும், ஒளியையும் கொண்டிருக்கிறது. ஆகவே உன் ஆத்துமம் எவ்வளவு உந்நதமான உரையாடல்களை உன்னுடன் செய்ய முடியும் என்று எண்ணிப் பார்! இப்படிப்பட்ட உரையாடல்கள் சிறைச்சாலைகளின் நிசப்தத்தையும், துறவிகளுடைய அறைகளின் அமைதியையும், ஆசிரமங்களின் மவுனத்தையும், நோயுற்ற புனித மனிதரின் சந்தடியற்ற அறைகளையும் நிரப்பின. இத்தகைய உரையாடல்கள் சிறையிடப்பட்டு, வேத சாட்சியத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தவர்களுக்கும், சத்தியத்தைத் தேடிய அடைபட்ட சந்நியாசிகள் கன்னியர்களுக்கும், கடவுளைப் பற்றி முதிர்ந்த அறிவைப் பெற ஆவல் கொண்டிருந்த தபோதனர் களுக்கும், நோயாளிகள் தங்கள் சிலுவைகளைச் சகித்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, அதை நேசிப்பதற்கும் அவர்களுக்கு ஆறுதலளிப்பவையாக இருந்தன.
உங்கள் ஆத்துமத்திடம் எப்படிக் கேள்வி கேட்க வேண்டுமென்று உங்களுக்குத் தெரிந்திருந்தால், “அவன் ஆதிக்கம் செலுத்தும்படி” என்ற வார்த்தைகளின் உண்மையான, விரிவான, சிருஷ்டிப்பைப் போல் முழுமையான பொருள் உங்களுக்குக் கூறப்படும். அது இப்படி இருக்கும். மனிதனுடைய மூன்று நிலைகளிலும் அவன் அனைத்தின் மேலும் ஆதிக்கம் செலுத்துபவனாயிருப்பான். தாழ்நிலை அதாவது விலங்கின் நிலை. நடுநிலை அதாவது தார்மீக ஒழுக்க நிலை. மேல்நிலை அதாவது ஞான நிலை. இம்மூன்று நிலைகளும் ஒரேயயாரு நோக்கத்திற்காக மட்டுமே ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்; கடவுளை சுதந்தரித்துக் கொள்வதற்காக, கடவுளுக்குத் தகுதி பெற்றவனாயிருந்து அவரைச் சுதந்தரித்துக் கொள்ள வேண்டும். இத்தகுதி எப்படி வருமென்றால், ஒருவனுடைய “தான்” என்பதின் வலிமை முழுவதையும் கீழ்ப்படுத்தும் கண்டிப்புள்ள கட்டுப்பாட்டினால்தான். அதை ஒரேயயாரு காரியத்திற்காக மட்டும் - கடவுளைச் சுதந்தரித்துக் கொள்வதற்காக. அவருக்குத் தகுதி பெற்றவன் ஆவதற்கெனவே வழிப்படுத்த வேண்டும். உங்கள் ஆன்மா உங்களுக்கு இதைக் கூறும்: நன்மையினுடையவும் தீமையினுடையவும் அறிவு கடவுளால் தடைசெய்யப்பட்டிருந்தது. காரணம், அவர் தம்முடைய சிருஷ்டிகளுக்கு இலவசமாக நன்மையை ஏற்கெனவே அளித்திருந்தார். நீங்கள் தீமையை அறிய வேண்டும் என அவர் விரும்பவில்லை. ஏனெனில் அது சுவைக்கு இனிய கனியாயினும் அதன் சாறு உங்கள் இரத்தத்தில் பரவி விட்டால் உங்களைக் கொன்று விடக் கூடிய ஒரு காய்ச்சலை அது கொண்டு வருகிறது. ஒரு கொடிய தாகத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் பொய்யான கனிச் சாற்றை எவ்வளவுக்கதிகம் பருகுவீர்களோ அவ்வளவுக் கதிகமாகும் அத்தாகம்.
“கடவுள் அதை ஏன் அங்கு வைத்தார்?” என்று நீங்கள் மறுத்துக் கேட்கக் கூடும். ஏனென்றால்: முழுவதும் செளக்கியமாயிருக்கிற ஒரு உடம்பில் சில அரக்கத்தனமான நோய்கள் எழுவதுபோல தீமையானது தானாக எழும்பிய ஒரு சக்தியாகும்.
லூஸிபர் ஒரு சம்மனசாயிருந்தான்; எல்லா சம்மனசுக்களிலும் அழகுடையவனாயிருந்தான். அவன் ஒரு உத்தம ஞான வஸ்து. கடவுளுக்கு மட்டுமே தாழ்ந்தவனாயிருந்தான். அப்படியிருந்தும் அவனுடைய பிரகாசமான தற்பொருளில், கர்வத்தின் ஆவி ஒன்று எழுந்தது. அவன் அதைக் கலைத்து விடவில்லை. மாறாக அவன் அதை அடைகாத்து அதைக் கட்டிப்படுத்தினான். இந்த அனலூட்டலினால் தீமை பிறந்தது. மனிதனுக்கு முன்னதாகவே அது இருந்தது. பரலோகத்தை அவசங்கைப்படுத்தினவனாகிய, தீமைக்கு அனலூட்டிய சபிக்கப்பட்டவனை கடவுள் அங்கேயிருந்து வெளியே தள்ளினார். அவனோ நித்தியத்திற்கும் தீமைக்கு அனலூட்டம் செய்கிறனாகி இப்பொழுது அவனால் பரலோகத்தை அசுத்தப்படுத்தக் கூடாததால் அவன் பூமியை அசுத்தப்படுத்தியிருக்கிறான்.
அந்த உருவகமான மரம் இவ்வுண்மையை எண்பிக்கிறது. கடவுள் மனிதனிடமும் மனுஷியிடமும் இவ்வாறு கூறியிருந்தார்: சிருஷ்டிப்பின் எல்லா விதிகளையும் இரகசியங்களையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆயினும் மானிட சிருஷ்டிகர் என்னும் எனது உரிமையைப் பறிக்காதீர்கள். மனுக்குலம் பலுகுவதற்கு என்னுடைய சிநேகமே போதுமானது. அந்த சிநேகம் உங்களிடையே பரவும். புலன்களின் இச்சை இல்லாமல், சிநேகத்தின் துடிப்புகளினாலேயே மனித இனத்தின் புது ஆதாம்களைத் தூண்டும். உங்களுக்கு நான் எல்லாவற்றையும் அளித்திருக்கிறேன். மனிதனை உருவாக்கும் இரகசியத்தை மட்டுமே எனக்கென வைத்துள்ளேன்.
இந்த அறிவின் கன்னித்தன்மையை மனிதன் இழக்கும்படி செய்ய சாத்தான் விரும்பினான். தன் நஞ்சுள்ள நாவினால் ஏவாளின் அங்கங்களையும், கண்களையும் பசப்பி சீராட்டி, ரூபிகரங்களையும், முன்பு அவர்களிடம் இல்லாதிருந்த புலன் கூர்மையையும் தூண்டியெழுப்பினான். காரணம், அதற்கு முன் தீமையானது அவர்களை போதை கொள்ளச் செய்ததில்லை.
ஏவாள் “பார்த்தாள்.” பார்த்து, பரீட்சிக்க விரும்பினாள். அவளுடைய மாமிசம் எழும்பியது. ஓ! அவள் அப்போது கடவுளை நோக்கிக் கூப்பிட்டிருக்க வேண்டும். அவள் அவரிடம் விரைந்து சென்று: “தந்தாய்! சர்ப்பம் என்னைத் தொட்டது, நான் கொந்தளிக்கிறேன்” என்று அவள் சொல்லியிருந்தால், பிதா தம் சுவாசத்தால் அவளைப் பரிசுத்தப்படுத்தி குணப்படுத்தியிருப்பார். அது அவளுக்கு உயிரை அளித்ததுபோல் ஒரு புது மாசின்மையை அவளுக்குள் புகுத்தியிருக்கும். சர்ப்பத்தின் நஞ்சை அவள் மறக்கும்படி செய்திருக்கும். அது மட்டுமல்ல, இப்போது தான் குணமடைந்த நோயின் மட்டில் இயல்பாகவே ஒருவனுக்கு ஏற்படும் வெறுப்பைப் போல், அந்த சர்ப்பத்தின் மேல் அருவெறுப்பை அது அவளிடம் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் ஏவாள் பிதாவிடம் போகவில்லை. அவள் பாம்பிடமே மீண்டும் செல்கிறாள். அவ்வுணர்வு அவளுக்கு இனிதாயிருக்கிறது. “மரத்தின் கனி புசிப்பதற்கு நன்றாகவும், பார்வைக்குப் பிரியமாகவும் ஏற்புடையதாகவும் இருந்தது. ஆகவே அவள் அதை எடுத்து உண்டாள்.”
அப்போது அவள் “கண்டுபிடித்தாள்.” இப்பொழுது தீமையானது அவளுக்குள் இருந்தது. அவளுடைய குடலைக் குடைந்தது. விலங்குகளின் பழக்கங்களையும், அவைகளின் சத்தங்களையும் புதுக் கண்களுடன் பார்த்தாள். புதுச் செவிகளுடன் கேட்டாள். மதிகெட்ட ஆவலோடு அவைகளுக்காக ஏக்கங் கொண்டாள்.
ஏவாள் தன்னிலேயே பாவத்தைத் தொடங்கினாள். அதைத் தன் துணைவனுடன் செய்து முடித்தாள். அதனாலேயே பெண்ணின் மீது அதிக பளுவான தீர்ப்பு சுமத்தப்பட்டது. அவளாலே மனிதன் கடவுளை எதிர்ப்பவனாகி, இச்சைக்கும் மரணத்துக்கும் ஆளானான். அவளாலே அவன் தன் மூன்று ஆதிக்கங்களையும் செய்ய இயலாதவனானான். தன்னுடைய உள்ளம் கடவுளை எதிர்க்க அவன் அனுமதித்ததால் ஞான ஆதிக்கத்தையும், தன்னுடைய ஆசாபாசங்கள் தன்னை ஆளவிட்டதால் தார்மீக ஒழுக்க ஆதிக்கத்தையும் தன்னுடைய மாம்சத்தை விலங்குகளின் உணர்ச்சிக்கு இறக்கிக் கொண்டு வந்ததால் தன் சரீரத்தின் மீது ஆதிக்கத்தையும் இழந்தான். “சர்ப்பம் என்னை ஏமாற்றியது” என்கிறாள் ஏவாள். “ஸ்திரீ அந்தப் பழத்தை எனக்குக் கொடுத்தாள், நான் உண்டேன்” என்கிறான் ஆதாம். அது முதல் இம் மும்முனைப் பேராசை அம்மூன்று நிலைகளையும் ஆதிக்கம் செய்து வருகிறது.
தேவ வரப்பிரசாதம் ஒன்றே இரக்கமற்ற இந்த அரக்கனின் பிடியைத் தளர்த்த முடியும். தேவ வரப்பிரசாதம் உயிருடன் இருந்தால், அது முழு உயிராற்றலுடன் இருந்தால், ஒரு பிரமாணிக்கமுள்ள மைந்தனின் நல்லுள்ளத்தினால் அது மேலும் மேலும் உயிராற்றலுடன் வைத்துக் கொள்ளப்படுமானால், அது இந்த அரக்கனை நெரித்துக் கொல்வதில் வெற்றி பெறும்; அதன்பின் பயப்பட எதுவுமிராது. உள்ளரங்கக் கொடுங் கோலர்களான மாம்சத்திற்கும் ஆசாபாசங்களுக்கும் அது பயப்படாது. வெளியரங்கக் கொடுங்கோலர்களான உலகிற்கும் உலகின் வல்லவர்களுக்கும் அஞ்சாது. அது கலாபனைகளுக்கும் மரணத்திற்கும் பயம் கொள்ளாது. அப்போஸ்தலரான சின்னப்பர் கூறுவது போல்: “அவைகளில் யாதொன்றிற்கும் நான் பயப்படுகிறதுமில்லை; என்னைப் பார்க்கிலும் என் உயிரைப் பெரிய காரியமாக எண்ணுகிறதுமில்லை. சர்வேசுரனுடைய கிருபையின் சுவிசேஷத்திற்கு சாட்சியம் சொல்லும்படி ஆண்டவராகிய சேசுநாதரிடத்தில் நான் பெற்றுக் கொண்ட பிரசங்கத் தொழிலையும் நிறைவேற்றி என் ஜிவிய அயனத்தையும் முடிப்பேனாகில் அதுவே போதும்” (அப். நட. 20:24).