இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். சூசையப்பர் திருநாள்

சேசு மரியாயின் திருக்கரங்களில் மரிக்கும் மகிழ்ச்சியை அர்ச். சூசையப்பர் கொண்டிருந்தார். வாழ்வாக இருப்பவரின் திருக்கரங்களில் இறப்பவருக்கு மரணம் எப்படி வேதனையானதாக இருந்திருக்க முடியும். அர்ச். சூசையப்பரின் பக்தர்கள் தங்கள் மரண நேரத்தில், அவர்கள் மகிழ்ச்சியோடு இறக்கத் தங்களுக்கு உதவி செய்யும்படி சூசையப்பர் சேசுவோடும் மரியாயோடும் அவர்களைச் சந்திப்பார் என்று உறுதியாக நம்ப வேண்டும்.

ஆண்டவரின் புனிதர்களின் மரணம் அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றதாக இருக்கிறது (சங்.115:15). சேசுவுக்கும், மாமரிக்கும் பிரமாணிக்கமாக ஊழியம் செய்த பின், அர்ச். சூசையப்பர் நாசரேத்தூரில் இருந்த வீட்டில் தம் வாழ்வின் முடிவை வந்தடைந்தார். தேவதூதர்கள் அவரைச் சூழ்ந்திருக்க, அவரது பரிதாபமான படுக்கையின் ஒரு பக்கத்தில் தேவதூதர்களின் அரசரான சேசு கிறீஸ்துநாதரும், மறு பக்கத்தில் தமது கன்னி மணவாளியான மாமரியும் அவருக்கு உதவி செய்ய, இந்த இனிய, மேன்மை மிக்க தெய்வீகத் தோழமையில், பரலோக சமாதானத்தால் நிரப்பப்பட்டவராக அவர் இந்த நிர்ப்பாக்கிய வாழ்வை விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.

இத்தகைய ஒரு மணவாளியும், சூசையின் மகன் என்னும் பெயரால் அழைக்கப்படத் தயை கூர்ந்த மீட்பரும் சூசையப்பரோடு இருந்தது, அவரது மரணத்தை அதீத இனிமையும், மதிப்பும் உள்ளதாக்கியது. வாழ்வாகவே இருப்பவரின் திருக்கரங்களில் மரித்தவருக்கு மரணம் எப்படி வேதனையுள்ளதாக இருந்திருக்க முடியும்? சேசு மரியாயின் திருவாய்களிலிருந்து மாறி மாறி வந்த நித்திய வாழ்வின் வார்த்தைகள், சூசையப்பரின் வாழ்வின் முடிவில் அவரது ஆத்துமத்தினுள் ஊதிய கலப்பற்ற இனிமையையும், ஆறுதல்களையும், ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கைகளையும், அமைந்த மனதையும், தேவசிநேகத் தீச்சுவாலைகளையும் விளக்கிக் கூறவும், புரிந்து கொள்ளவும் யாரால் இயலும்? ஆகவே, அர்ச். சூசையப்பர் முழுமையான, மாசற்ற தேவசிநேகத்தின் காரணமாக இறந்தார் என்ற அர்ச். பிரான்சிஸ் சலேசியாரின் கருத்து உண்மையாயிருக்க மிகுந்த வாய்ப்புள்ளது.

என் பரிசுத்த பிதாப்பிதாவே, இப்போது நீர் பரலோகத்தில், ஒரு மகிமையின் சிங்காசனத்தின்மீது, பூமியில் உமக்குப் பணிந்திருந்த உமது நேசத்திற்குரிய சேசுவுக்கு அருகில் பேரின்பத்தில் திளைத்திருக்கிறீர் என்பதால், தேவ சமாதானத்தை என்னிடமிருந்து திருடிக் கொள்ளத் தொடர்ந்து பாடுபட்டு வரும் பசாசுக்கள், தீய ஆசாபாசங்கள் ஆகிய ஏராளமான எதிரிகளுக்கு மத்தியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிற என்மீது இரக்கமாயிரும். ஆ, சேசு மரியாயோடு இவ்வுலகில் எப்போதும் இருக்க நீ பெற்றிருந்த வரத்தின் வழியாக, நானும் ஒரு நாள் நிததியப் பேரின்ப இராச்சியத்தில் உம்மோடு சேசு மரியாயின் நட்புறவில் மகிழ்ந்திருக்கும்படியாக, நரகத்தின் தாக்குதல்களை எதிர்த்து நின்று, சேசு மாமரிக்காக மரிப்பதன் வழியாக, எப்போதும் கடவுளோடு இணைந்து வாழும் வரத்தை எனக்குப் பெற்றுத் தந்தருளும்.

ஆகவே அர்ச். சூசையப்பரின் மரணம் இவ்வாறு பரிபூரண சமாதானமும் இனிமையும் உள்ளதாகவும், எல்லா வகையான வேதனைகள், அச்சங்களிலிருந்து விடுபட்டதாகவும் இருந்தது; ஏனெனில் அவரது வாழ்வு எப்போதும் பரிசுத்தமானதாக இருந்தது. கடவுளை நோகச் செய்தவர்களும், நரகத்திற்குத் தகுதியுள்ளவர்களுமான மனிதர்கள் இத்தகைய ஒரு மரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் உண்மையில், அர்ச். சூசையப்பரால் பாதுகாக்கப்படுவோர், தங்கள் மரண நேரத்தில் மிகுந்த ஆறுதலைப் பெற்றுக்கொள்வார்கள். ஒரு காலத்தில் கடவுளே அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார்; அவர் பசாசுக்களுக்குக் கட்டளையிட அதிகாரம் கொண்டிருக்கிறார். அவருடைய பக்தர்களின் கடைசி நேரத்தில் பசாசுக்கள் அவர்களை சோதிக்காத படி, அவர் அவற்றைத் துரத்தியடிப்பார், தடை செய்வார். ஆகவே, இந்த மாபெரும் பரிந்து பேசும் புனிதரின் உதவியைத் தன் மரண நேரத்தில் பெற்றுக்கொள்ளும் ஆன்மா பாக்கியம் பெற்றது! அவர் சேசு மரியாயின் உதவியோடு மரித்ததாலும், எகிப்துக்கு ஓடிப் போன போது, மரண ஆபத்துக்களிலிருந்து குழந்தை சேசுவைக் காப்பாற்றினார் என்பதாலும், நல்ல மரணத்தின் பாதுகாவலராக இருக்கவும், மரிக்கும் தருவாயிலுள்ள தமது பக்தர்களை நித்திய நரகத்தின் ஆபத்திலிருந்து விடுவிக்கவும் அவர் தேவ சலுகை பெற்றவராக இருக்கிறார்.

என் பரிசுத்த பாதுகாவலரே, உமது ஒட்டுமொத்த வாழ்வும் பரிசுத்தமானதாக இருந்ததால், இத்தகைய ஒரு பரிசுத்த மரணத்தை அடைய நீர் நீதியுள்ள உரிமையைக் கொண்டிருந்தீர். நானே ஒரு நிர்ப்பாக்கிய மரணத்திற்கு மட்டுமே தகுதியுள்ளவனாக இருக்கிறேன். ஏனெனில் என் தீய வாழ்வின் மூலம் நான் அதற்கு என்னைத் தகுதியாக்கிக் கொண்டேன். ஆனால் நீர் என்னைப் பாதுகாப்பீர் என்றால், நான் இழக்கப்பட மாட்டேன். நீர் என் நித்திய நடுவரின் மிகச் சிறந்த நண்பராக இருப்பது மட்டுமின்றி, அவரை ஆபத்திலிருந்து காப்பாற்றியவராகவும, அவரது பாதுகாவலராகவும் இருந்திருக்கிறீர். தேவரீர் சேசுவிடம் என்காகப் பரிந்து பேசினால், எனக்குத் தண்டனைத் தீர்ப்பிடுவது எப்படியென அவர் அறியாதிருப்பார். மாமரிக்குப் பிறகு, எனது முதன்மையான பரிந்து பேசுபவராகவும் பாதுகாவலராகவும் உம்மையே நான் தேர்ந்து கொள்கிறேன். ஏதாவது ஒரு விசேஷ பக்தி முயற்சியைக் கொண்டும், உமது பாதுகாவலில் என்னை வைப்பதன் மூலமாகவும் ஒவ்வொரு நாளும் உம்மை மகிமைப்படுத்துவதாக நான் வாக்களிக்கிறேன். உமது ஊழியனாயிருக்க அடியேன் தகுதியற்றவன்; ஆனால் நீர் சேசு மரியாயின் மீது கொண்டுள்ள அன்பின் ஐக்கியத்தைப் பார்த்து, உமது நிரந்தர ஊழியனாக என்னை ஏற்றுக்கொள்ளும். உமது இவ்வுலக வாழ்வில் நீர் அனுபவித்து மகிழ்ந்திருந்த சேசு மரியாயின் தோழமையின் வழியாக, கடவுளின் வரப்பிரசாதத்தை இழப்பதன் மூலம் அவரிடமிருந்து நான் ஒருபோதும் பிரிக்கப்படாதபடி என் வாழ்நாள் முழுவதிலும் என்னைப் பாதுகாத்தருளும். உமது மரணத்தின்போது சேசுவும், மாமரியும் உமக்குத் தந்தருளின உதவி ஒத்தாசையின் வழியாக, என் மரண நேரத்தில் என்னைப் பாதுகாத்தருளும். இவ்வாறு, உம்முடையவும், சேசு மரியாயினுடையவும் தோழமையில் மரித்து, ஒரு நாள் உமக்கு நன்றி செலுத்தவும், உம்மோடு சேர்ந்து நம் சர்வேசுரனை என்றென்றும் போற்றித் துதிக்கவும், அவரை நேசிக்கவும் நான் பேறு பெறுவேனாக.