இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

புனித அடிமைத்தனத்தின் வெளிப் பயிற்சிகள்

60. நாம் இப்பொழுது கூறியுள்ள இப்பக்தி முயற்சி யின் அகப்பயிற்சிகள் போக, நாம் விட்டுவிடவோ, புறக் கணிக்கவோ கூடாத சில (புறப்) பயிற்சிகளும் உள்ளன.

அர்ப்பணமும் அதைப் புதுப்பித்தலும் 

61. முதல் காரியம், நாம் நம்மை அடிமைகளாக்குகிற மரியாயின் கரங்கள் வழியாக சேசுவுக்கு நம்மை அர்ப்பணித்துக் கொடுக்க ஒரு முக்கியத் திருநாளைத் தெரிந்து கொள்ளுதலாகும். அந்தக் கருத்துக்காக அன்று நாம் திவ்விய நற்கருணை உட்கொண்டு அந்த நாளை செபத்தில் செலவிட வேண்டும். ஆண்டிற்கு ஒரு தடவை யாவது அதே தினத்தில் நம் அர்ப்பணத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

தேவதாய்க்கு ஒரு காணிக்கை சமர்ப்பித்தல்

62. அடுத்த இரண்டாம் காரியம், ஒவ்வொரு வருட மும் அதே நாளில், மாதாவுக்கு நம் அடிமைத்தனத்தையும் அவர்கள் மீது நம் சார்புடைமையையும் காட்டுவதற்காக, எஜமான்களுக்கு அவர்களுடைய அடிமைகள் செலுத்தி வந்துள்ள வணக்கத்தைப் போல ஏதாவது ஒரு சிறு காணிக் கையைச் செலுத்துதலாகும். இந்தக் காணிக்கை ஒரு பரித்தியாக முயற்சியாகவோ தர்மக் கிரியையாகவோ, அல்லது ஒரு திருயாத்திரையாகவோ, சில ஜெபங்களா கவோ இருக்கலாம். முத். மரியானோ என்பவர் ஆண்டுதோறும் அதே தினத்தில் மாதாவின் பீடத்தின் முன்பாக தம்மையே கசையால் பகிரங்கமாக அடித்துக்கொண்டார் என்று அவருடைய சகோதரரான அர்ச். தமியான் இராயப்பர் கூறுகிறார். இப்படிப்பட்ட ஊக்கம் நம்மிடம் கேட்கப் படவில்லை. அவ்வாறு செய்யும்படி நாம் ஆலோசனை கூறவுமில்லை. ஆனால் நாம் மாமரி அன்னைக்குக் கொஞ்ச மாகக் கொடுத்தாலும் அதைத் தாழ்ச்சியும் நன்றியுமுள்ள இருதயத்தோடாவது கொடுப்போமாக

மங்கள வார்த்தை திருநாளைத் தனிப்பட்ட முறையில் கொண்டாடுவது. 

63. அதற்கடுத்த மூன்றாவது காரியம், இப்பக்தி முயற்சியின் பாதுகாவல் திருநாளாகிய மங்கள வார்த்தைத் திருநாளை ஆண்டுதோறும் தனிப்பக்தியுடன் கொண் டாடுவதாகும். நித்திய வார்த்தையானவர் நம்மீது கொண்ட அன்பினால், சார்ந்து நிற்றலுக்குத் தம்மையே உட்படுத்தியதை மகிமைப்படுத்தவும், கண்டுபாவிக்கும் படியாகவும் இத்திருநாள் ஏற்படுத்தப்பட்டது.

ஜெபக் கிரீடமும் மாக்னிபிக்காத் என்ற கீதமும் சொல்லுதல் 

64. நான்காவது பயிற்சி என்னவென்றால், ஒவ்வொரு நாளும் மாதாவின் ஜெபக் கிரீடத்தைச் சொல்லுதல். இது மூன்று பரலோக மந்திரங்களாலும் பன்னிரண்டு அருள் நிறை மந்திரங்களாலும் ஆனது. மேலும் மாக்னிபிக்காத் என்ற மரியாயின் கீதத்தையும் அடிக்கடி சொல்லுதல். மாதாவால் இயற்றப்பட்ட கீதம் இது ஒன்றே நமக்குக் கிடைத்துள்ளது. இது கடந்த காலத்தில் கடவுளின் வரப் பிரசாதத்திற்கு நன்றியாகவும், தற்போதைக்கு அவரிடம் புது ஆசீர்வாதங்களைக் கேட்பதற்கும் சொல்லப்படும். நற்கருணை வாங்கிய பின் இப்பாடலை நன்றியறிதலாகச் சொல்லத் தவறக் கூடாது. கற்றறிந்த ஜெர்சன் என்பவர், மாதாவே நற்கருணை உட்கொண்டபின் இதைச் சொல்லி வந்ததாகக் கூறுகிறார்.

சிறு சங்கிலி அணிந்து கொள்ளுதல் 

65. ஐந்தாவது காரியம் மந்திரிக்கப்பட்ட ஒரு சிறு சங்கிலியை கழுத்தைச் சுற்றியோ, கையிலோ காலிலோ, அல்லது உடலைச் சுற்றியோ அணிந்து கொள்ளுதல். நுணுகிப் பார்த்தால் இதைச் செய்யாவிட்டாலும் கூட இப்பக்தியின் கருப்பொருள் பாதிக்கப்படாது. ஆயினும் இச்சங்கிலி அணிவதை இகழ்வதும், மறுப்பதும், அதைப் புறக்கணித்து விடுவதும் ஊறு விளைவிப்பதாகும்.

இவ்வெளி முத்திரையை அணிவதற்கான காரணங்கள் இவை :

1. நாம் கட்டப்பட்டிருந்த மரணத்துக்குரிய சங்கிலியான ஜென்மப்பாவத்தினுடைய தளைகளிலிருந்து பாதுகாக்கப்படுவதற்காக.

2. நமக்கு உண்மையான விடுதலையளிப்பதற்காக நமதாண்டவர் கட்டப்படச் சித்தங்கொண்ட கயிறுகளை யும், அன்பான தளைகளையும் மகிமைப்படுத்துவதற்காக.

3. இந்தக் கட்டுகள் அன்பின் பந்தனங்களாக இருக் கின்றன. "நாம் அவர்களை சிநேக வடத்தால் இழுத் தோம்'' (ஓசே 11;14). இதனால் நம் செயல்களை இப் புண்ணியத்தின் தூண்டுதலினால் மட்டுமே நாம் செய்ய வேண்டும் என அவை நமக்கு நினைப்பூட்ட வேண்டும்.

4. இறுதியாக, அடிமைகளாகிய நாம் சேசு மரியே நம் கதி என்று அவர்கள் மேல் கொள்ளும் சார்பை நமக்கு நினைப்பூட்டுவதற்காக இந்தச் சங்கிலிகளை அணிவது வழக்கமாக இருக்கிறது. சேசுவுக்கும் மாமரிக்கும் அடிமைகளாக இருந்த பல பெரியோர்கள் இந்தச் சிறு சங்கிலிகளை எவ்வளவுக்கு மதித்தார்களென்றால், தங்கள் கால்களில் அவைகளை கட்டிக் கொண்டு துருக்கியரின் அடிமைகளைப் போல் பகிரங்கமாக அவற்றை இழுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வில்லையே என்று முறைப்பாடு சொல்வார்கள்.

ஓ! எல்லா சக்கரவர்த்திகளின் தங்கக் கழுத்தணி களையும், இரத்தினக் கற்களையும் விட அதிக விலையுயர்ந் ததும், அதிக மகிமை பொருந்தியதுமாகிய சங்கிலிகளே! ஏனெனில் அவை நம்மை சேசுவுடனும் மரியாயுடனும் சேர்த்துக் கட்டுகின்றனவே! அவர்களின் மதிப்புக்குரிய சின்னமாகவும், சிறப்பாடையாகவும் உள்ளனவே!

இந்தச் சங்கிலிகள் வெள்ளியால் செய்யப்படாவிட்டால், குறைந்தது இரும்பாலாவது செய்யப்பட்டிருப்பது நல்லதென்பதை நாம் கவனிக்க வேண்டும். இது வசதிக்காக.

வாழ்நாளில் அவைகளை ஒருபோதும் எடுத்து விடக் கூடாது. அவைகள் நீதித் தீர்ப்பு நாளில் கூட நம்முடன் இருக்க வேண்டும். எக்காளம் தொனிக்க, நீதித்தீர்ப்பின் நாளில் பிரமாணிக்கமுள்ள இவ்வடிமை ஒருவனுக்கு என்ன மகிழ்ச்சி! என்ன மகிமை! என்ன வெற்றி! அவனுடைய எலும்புகள் மண்ணிலிருந்து இவ்வடிமைத்தனத்தின் சங்கிலியால் கட்டப்பட்டபடியே எழும்பி வருமே! அச் சங்கிலி அழியாமல் இருக்குமென்று தோன்றுகிறது. இந்த ஒரு நிலையே பக்தியுள்ள ஒரு அடிமை தன் சங்கிலியை, அது எவ்வளவு வசதிக்கேடாக இருந்தாலும், ஒருபோதும் எடுத்து விடாதபடி அவனைப் பலமாகத் தூண்ட வேண்டும்.