இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் செயல்களில் பிறர்சிநேகம்

 தாங்கள் நேர்மையான விதத்தில் தங்கள் அயலார் அனைவரையும் நேசிப்பதாகச் சிலர் கூறுவார்கள். ஆனால் அவர்களில் யாருக்காகவும் இவர்கள் தங்களையே வருத்திக் கொள்ள மாட்டார்கள். ""என் சிறு குழந்தைகளே, நாம் வார்த்தையிலோ, நாவிலோ அல்லாமல் செயலிலும், சத்தியத்திலும் நேசிப்போமாக'' என்று அர்ச். அருளப்பர் கூறுகிறார். பிச்சையிடுவது மனிதர்களை மரணத்திலிருந்து விடுவிக்கிறது, பாவங்களிலிருந்து அவர்களைச் சுத்திகரிக்கிறது, தேவ இரக்கத்தையும், நித்திய வாழ்வையும் அவர்களுக்குப் பெற்றுத் தருகிறது என்று பரிசுத்த வேதாகமம் நமக்குக் கூறுகிறது. ""தர்மம் ஆத்துமத்தை மரணத்தினின்று இரட்சிக்கும், பாவங்களை நிவிர்த்தி பண்ணும், தேவ கிருபையையும், நித்திய ஜீவியத்தையும் பெறுவிக்கும்'' (தோபி.12:9). நீ உன் அயலானை அவனது துன்பத்திலிருந்து எப்படி விடுவிக்கிறாயோ, அப்படியே கடவுளும் உன்னை விடுவிப்பார். ""எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்'' (மத்.7:2). இதனாலேயே அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர், மற்றவர்களுக்கு அன்பு காட்டுவது கடவுளிடமிருந்து ஒரு பெரும் ஆதாயத்தைச் சம்பாதிப்பதற்கான வழியாகும் என்று கூறுகிறார். ""தர்மம், எல்லாச் செயல்களிலும் அதிக ஆதாயமுள்ளது.'' அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாள், காட்சி தியானத்தில் தான் பரவச நிலைக்கு உட்படும்போது அனுபவிக்கும் மகிழ்ச்சியை விட அதிகமான மகிழ்ச்சியைத் தன் அயலானைத் துன்பத்திலிருந்து விடுவிக்கும்போது அடைவதாக அடிக்கடி கூறுவாள். ""ஏனெனில், நான் காட்சிதியானத்தில் இருக்கும்போது, கடவுள் எனக்கு உதவுகிறார். ஆனால் நான் ஓர் அயலானின் துன்பத்தைத் தீர்க்கும்போது, நான் கடவுளுக்கு உதவுகிறேன்'' என்று அவர் கூறுகிறாள். ஏனெனில் நாம் நம் அயலாருக்குச் செய்யும் ஒவ்வொரு பிறர்சிநேகச் செயலையும் கடவுள் தமக்கே செய்யப் பட்டதாக ஏற்றுக்கொள்கிறார். ஆனால் மற்றொரு புறத்தில், அர்ச். அருளப்பர் சொல்வது போல, தேவையில் இருக்கும் ஒரு சகோதரனுக்கு உதவி செய்யாதவன் கடவுளை நேசிக்கிறான் என்று சொல்ல முடியுமா? ""ஒருவன் தன் சகோதரன் இக்கட்டுப் படுகிறதைக் கண்டும், அவனுக்கு (இரங்காமல்) தன்னுள்ளத்தை மூடிக்கொண்டால், தேவசிநேகம் அவனிடத்தில் நிலைப்பது எப்படி?'' (1 அரு.3:17). இங்கே தர்மம் என்பது பணமும் மற்ற பொருட்களும் கொடுப்பது என்பது மட்டுமல்ல, மாறாக, அயலானின் தேவைகளிலிருந்து அவனை விடுவிக்கும்படி அவனுக்கு ஒவ்வொரு உதவியையும் செய்வது என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும். அர்ச். தெரேசம்மாள் ஒவ்வொரு நாளும் தனது துறவற சகோதரிகளுக்கு ஏதாவது ஒரு பிறர்சிநேகச் செயலைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் என்று சொல்லப்படுகிறது. பகல் பொழுதில் அப்படிச் செய்ய அவளால் முடியாத போதெல்லாம் இரவில் தன் அறைக்கு முன் கடந்து செல்லும் சகோதரிகளுக்கு வெளிச்சம் காட்டுவதில் கவனமாக இருப்பாள் என்றும் சொல்லப் படுகிறது. புனிதர்கள் தங்கள் உதவி யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதோ அவர்களிடம் மிகுந்த பிறர்சிநேகமும் தயவும் நிரம்பியவர்களாக இருந்தார்கள். ""நீதிமான்கள் இரக்கம் உடையவர்களாயிருக்கிறார்கள், இரக்கமும் புரிகிறார்கள்'' (பழ.13:13).வழக்கமாகக் கொண்டிருந்தாள் என்று சொல்லப்படுகிறது. பகல் பொழுதில் அப்படிச் செய்ய அவளால் முடியாத போதெல்லாம் இரவில் தன் அறைக்கு முன் கடந்து செல்லும் சகோதரிகளுக்கு வெளிச்சம் காட்டுவதில் கவனமாக இருப்பாள் என்றும் சொல்லப் படுகிறது. புனிதர்கள் தங்கள் உதவி யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதோ அவர்களிடம் மிகுந்த பிறர்சிநேகமும் தயவும் நிரம்பியவர்களாக இருந்தார்கள். ""நீதிமான்கள் இரக்கம் உடையவர்களாயிருக்கிறார்கள், இரக்கமும் புரிகிறார்கள்'' (பழ.13:13).

நோயாளிகளுக்கு விசேஷ தயவு காட்டுவதும் கடவுளுக்கு மிகப் பிரியமானது. நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களுக்கு ஊழியம் செய்வதை விட நோயாளிகளுக்கு உதவி செய்வது பல மடங்கு அதிகப் பேறுபலனுள்ளது. உடல் நலத்தோடு இருப்பவர்களை விட நோயாளிகளுக்கு அதிக உதவி தேவைப்படுகிறது. அவர்கள் வேதனை, மனச்சோர்வு, மரண பயம் ஆகியவற்றால் துன்பப் படுகிறார்கள், சில சமயங்களில் அவர்கள் அனைவராலும் கைவிடப் படுகிறார்கள். ஓ, அவர்களது துன்பங்களில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்படி உழைப்பது கடவுளுக்கு எவ்வளவு பிரியமானதாக இருக்கிறது! அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாள் நோயாளிகளுக்கு உதவினாள், அவர்களுக்கு ஊழியம் செய்தாள். கடவுளுக்குப் பிரியமான இந்த வேலையில் தான் எப்போதும் ஈடுபட்டிருக்குமாறு ஏதாவது ஒரு மருத்துவமனையில் வசிக்க அவள் ஆசைப்பட்டாள். ""ஒரு சமூகத்தில் பரிசுத்த ஆவியானவர் ஆட்சி செலுத்துகிறாரா என்று நீ அறியண விரும்பினால், அங்கே நோயாளிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று கேள்'' என்று சுவாமி அந்தோனி டாரஸ் என்பவர் அடிக்கடி கூறுவார். உத்தமதனத்தை அடைய விரும்புபவர்கள் நோயாளிகளுக்குப் பிறர்சிநேகம் காட்டுகிறார்கள். ஆகவே, தர்மங்களாலோ, அல்லது சிறு பரிசுகளைக் கொண்டோ நோயாளிகளின் துன்பத்தைத் தீர்ப்பதில் கவனமாயிரு, உன்னால் முடிந்த வரை, கடவுளின் சித்தத்திற்குப் பணிந்திருப்பதை, அல்லது தங்கள் துன்பங்களையெல்லாம் அவருக்கு ஒப்புக்கொடுப்பதைப் பயிற்சி செய்யும்படி, உன் வார்த்தைகளால், அல்லது அறிவுரைகளால் அவர்களைத் தேற்ற முயற்சி செய். நன்றியை எதிர்பார்க்காதே ; மாறாக, அவர்களுடைய முறைப்பாடுகளையும், பொறுமையற்றதனத்தையும், முரட்டுத்தனத்தையும் பொறுத்துக் கொள். ஆண்டவரே உன் பிறர்சிநேகத்துக்கு வெகுமதி தருவார். அர்ச். தெரேசம்மாள் சபையினரின் காலப் பதிவேடுகளில் சகோதரி சம்மனசுக்களின் இசபெல்லாவைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. அவள் மரணத்திற்குப் பிறகு நேரடியாக மோட்சத்திற்கு ஏறிச் செல்வதாகவும், பெரும் மகிமையொளிக்கு மத்தியில் தேவதூதர்களால் சுமந்து செல்லப்படுவதாகவும் காணப்பட்டாள். பிற்பாடு ஒரு துறவறக் கன்னிகைக்கு அவள் தோன்றி, நோயாளிகளிடம் தான் காட்டிய பிறர்சிநேகத்திற்காக அந்த மகிமையைக் கடவுள் அவளுக்குத் தந்தருளியதாக அவள் கூறினாள்.