காரிருள்

"இவனுடைய கால்களைக் கட்டி இவனை வெளியே இருளில் தள்ளுங்கள் " (மத். 22:13; 25:30). என்று அரச மகனின் திருமண உவமையில் ஆண்டவர் கூறுகிறார். நரக நெருப்பு சுடராமல் எரிவதாகும். அங்கு தொட்டுணரக்கூடிய இருட்டு நிலவுகிறது. பாரவோன் அரசனின் கடினப்பட்ட இருதயத்திற்குத் தண்டனையாக தொட்டு உணரத் தக்க இருளை ஒரு வாதையாக சர்வேசுரன் எகிப்தின் மீது சுமத்தினார். இந்த அகோரமான காரிருளால் எகிப்தியர்கள் ஒருவரை ஒருவர் காண முடியாமலும், ஒருவனும் தான் இருந்த இடத்தை விட்டு நகர முடியாமலும் போயிற்று (யாத்.10:22, 23). ஆனால் இந்த இருள் மூன்று நாட்கள் மட்டுமே நீடித்தது.

முழுமையான இருளுக்குள் அடைந்து கிடப்பது, மனிதனைப் பைத்தியமாக்கி விடக்கூடிய பயங்கரமான வாதையாகும். நரக இருளோ நித்தியத்திற்கும் நீடிப்பது. மூச்சைத் திணறடிப்பதும், ஒவ்வொரு விநாடியும் கடும் திகிலை உண்டாக்குவதுமான இருட்டு அது.

அர்ச். பெரிய தெரேசம்மாள் ஒரு காட்சியில் தான் நரக நெருப்பில் மூழ்கியிருந்ததாகக் கண்டாள். "அந்தக் கொள்ளை நோய் பரவியிருந்த இடத்தில் என்னால் உட்காரவோ, படுக்கவோ முடியவில்லை, அதற்குப் போதிய இடமில்லை. சுவரிலுள்ள ஒரு துளையில் நான் திணிக்கப்பட் டிருந்ததாக உணர்ந்தேன். அதன் சுவர்கள் எல்லாப் பக்கங்களிலும் என்னை நெருக்கி, என்னை மூச்சுத் திணறச் செய்தன. அங்கே வெளிச்சமும் இல்லை. எல்லாமே அடர்த்தியான, தொட்டு உணரக் கூடிய இருளாக இருந்தது. இது எப்படி என்று எனக்குப் புரியவில்லை : அங்கே வெளிச்சமே இல்லை என்றாலும் வேதனை தரக்கூடிய எல்லாவற்றையும் என்னால் பார்க்கமுடிந்தது” என்று எழுதி வைத்திருக்கிறாள்.

"கன்னங்கரேறென்று மரண இருளுள்ளதும், சாவின் நிழல் சூழ்ந்ததும், அலங்கோலம் நிறைந் ததும், நித்திய பயங்கரம் குடிகொண்டிருக்கிறதுமான தேசம்..." (யோபு 10:21). "ஆண்டவரின் நாள்... இருளும் அந்தகாரமும் அடர்ந்த நாள்; கார்முகிலும், கடும் புயலும் சூழ்ந்த நாள்" (யோவேல்.2:2).

"இராச்சியத்தின் மக்களோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்" (மத். 8:12).