இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - பாரூரிலும் வேறு சில ஊர்களிலும்

பாரூரில் இந்துக்களுக்கு ஒரு பெரிய திரு நாள். வீதிகளெல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆண் பெண் சிறுபிள்ளைகள் அடங்கலும், நல்லுடைகள் உடுத்தி மகிழ்ச்சியா யிருந்தார்கள். தேர் ஊர்வலம் வரும் நேரமாயிற்று. பெருந்திரள் கோவிலண்டை கூடியது. 

யானைமேல் அம்பாரி வைத்து, அதில் சிலையொன்று நாட்டப்பட்டது. பின் மேள தாளங்களுடன் ஊர்வலம் தொடங்கியது. அது செல்லும் வீதிகளில் எல்லாம் மக்கள் தத்தம் இல்லங்களினின்று தீபதூபங் காட்டி, மலர்கள் சாற்றித் தங்கள் தேவதையைப் போற்றி ஆராதித்தார்கள். பூசாரிகள் மந்திரம் ஓதி காணிக்கைகள் பெற்று, எல்லோருக்கும் பிரசாதம் அளித்துக் கொண்டு சென்றார்கள்.

இந் நேரத்தில் தான் தோமையார் அவ்வூருக்கு வந்து சேர்ந்தார். உடனே அவரும் கும்பலில் கூடி அவர்களுக்கு ஞான ஒளி பிரகாசிக்கும்படி பரமபிதாவைப் பிரார்த்தித்துக் கொண்டு போனார். அங்கு நின்றவர்களில் சிலர் தோமையாரை இன்னாரெனக் கண்டுகொண்டு, ''இதோ இருக்கிறான் மந்திரவாதி, பாலையூரில் அநேகரைக் கெடுத்துவிட்டு இப்போது இங்கு வந்திருக்கிறான். விடாதேயுங்கள்'' என்று கூவினார்கள். மக்கள் இதைக்கேட்டுச் சினந்து, அவர்மேல் கல்லெறிந்தும், தடியோங்கியும் அவரை அவ்விடம் விட்டுத் துரத்தத் தலைப்பட்டார்கள். 

அச் சமயம் மேகம் இருண்டது, வானத்தில் இடி முழங்கியது. மின்னல் பளீர் பளீர் என்று ஒளிர்ந்து வீசியது. ஒரு பெரிய இடி அம்பாரிமேல் விழ யானை அங்ஙனமே பட்டு மாண்டது. அம்பாரி தட்டுத் தடு மாறி வீழ்ந்தது. சிலையோ தவிடுபொடியாகிவிட்டது. பக்கத்திலிருந்த மக்கள் நிலை தவறிக் கீழே விழுந்து மரித்தார்கள். தூர நின்றவர்கள் திகைத்துத் தள்ளாடி, அச்சம் மேலிட்டுப் பேச இயலாதவர்களாய் மலைத்து நின்று விட்டார்கள் ,

தோமையார் அவர்களை நோக்கி "மக்களே! நீங்கள் வணங்கும் தேவர்களை விட்டு விடுங்கள். தம்முடைய வல்லமையை இப்போது உங்கள் முன் காட்டியிருக்கும் ஒரே கடவுளை ஆராதியுங்கள்'' என்று புத்திமதி உரைத்தார்.

அங்கு நின்ற சிலர் அப்போஸ்தலரை நோக்கி, (தோமையாரே! முத்தப்பனே! எங்களை இரட்சிக்கும் படி உம் தேவனை மன்றாடும்'' என்று இரந்து கேட்டுக் கொண்டார்கள். ''உங்களுக்கு நித்திய வாழ்வை அளிக்கும் இறைவன் உங்களது மரணத்தை விரும்பவில்லை என்பதை நிச்சயமாக நம்புங்கள்'' என்று அவர் சொல்லிவிட்டுக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரும்படி கேட்டார். 

தண்ணீர் கொண்டு வரப்பட்டதும் அதை ஆசீர்வதித்துத் தரையில் கிடந்த பிணங்களின் மீது தெளித்து, "வாழ்வுக்கும் சாவுக்கும் காரண கர்த்தாவும், இகத்தையும் பரத்தையும் படைத்தவரும் ஒரே கடவுள்தானென்று சகலருக்கும் எண்பிக்கும் வண்ணம் மாண்டு கிடக்கும் மானிடரே! பிதா சுதன் பரிசுத்த ஆவியின், பெயரால் உயிர்த்து எழுவீர்களாக'' என்று சொல்லி சிலுவை அடையாள மிட்டுப் பிணங்களை மந்திரித்தார். 

உடனே அங்குக் குழுமி நின்றவர் அனைவரும் அதிசயப்பட, மரித்தோர் எல்லாரும் தூக்கம் தெளிந்து எழுவார்போல் எழுந்திருந்தனர் ஆதலால் அப்போஸ்தலரை அவர்கள் பின்பற்றினர். அங்கு உடைந்து தகர்ந்து கிடந்த சிலைகளை ஏறெடுத்துப் பார்ப்பவர் இல்லாமல் போயிற்று. தன்னைப் பின் தொடர்ந்து வந்த மக்களை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று, சத்திய சுவிசேஷத்தை அவர்களுக்குப் போதித்தார். அவர்கள் அவரது உபதேசத்தைச் சரியாய்க் கேட்டறிந்தபின் ஞானஸ்நானம் பெற்றார்கள். புதிதாகத் தழுவிய சத்திய வேதத்தில் அவர்களுக்கு எவ்வளவு வைராக்கியம் இருந்ததென்றால், முன் சிலைகளுக்காகக் கட்டப்பட்டிருந்த ஆலயத்தை இயேசுவின் கோவிலாக மாற்றி அதன் உச்சியில் திருச்சிலுவையையும் நாட்டினர்.

திரளான மக்கள் கிறிஸ்துவர்களானதைக் கண்ட பிராமணர்கள் தோமையார் மீது பெரிதும் வெறுப்புக்கொண்டு அவரைப் பழி வாங்கக் கங்கணங் கட்டி நின்றனர். அப்போஸ்தலர் நிராணம் என்னும் ஊருக்கு வந்தபோது ஒரு பெண் பிரசவித்தாள். பிராமணர்களால் தூண்டப்பட்ட அப்பெண்ணும், அவளின் தந்தையும் ஒன்று கூடி தோமையாரே அதற்குக் காரண கர்த்தாவென்று அவர்மேல் பழி சுமத்தினதும் அல்லாமல், நீதி மன்றத்திலும் வழக்குத் தொடுத்தார்கள். வாதி பிரதிவாதிகள் நீதிபதி முன் நின்றார்கள். அப்போது அப்போஸ்தலர் நீதிபதியை நோக்கிக் ''குழந்தையை இங்குக் கொண்டுவரும்படிச் செய்வீராக'' என்று கேட்டுக்கொண்டார். அதன்படி குழந்தையும் கொண்டு வரப்பட்டது. தோமையார் குழந்தையை அணுகி அதன் இதழ்களில் சிலுவை அடையாளம் வரைந்து, ''சிறு குழந்தாய்! உன் தந்தை எவனென்று எனக்குச் சொல்வாயாக'' எனப் பணித்தார். பச்சைக் குழந்தை இவரே என் பிதா'' என்று அங்கு நின்ற ஒரு மனிதனைச் சுட்டிக்காட்டியது. அவனும் அதை மறுக்காது ஒப்புக்கொண்டான்.

பிறகு அந்த ஊரைவிட்டு மேலையாத்தூருக்குப் போனார் தோமையார். அங்குள்ளவர்கள் அப்போஸ்தலரைத் தூற்றிப் பரிகாசம் பண்ணினார்களே ஒழிய, பெரும் பிரயாசைப்பட்டும், மனந்திரும்பியவர் ஒருவரும் இல்லை. இதனால் கவலை மேலிட்டவராய்த் தோமையார் அருகேயிருந்த மலையில் தனித்திருந்து செபிக்கச் சென்றார். பாறையில் ஒரு சிலுவையைச் செதுக்கி அதன் முன் முழங்கால் படியிட்டு, இரவை செபத்தில் கழித்தார். ''கர்த்தாவே! இங்குள்ள ஆத்துமாக்களைக் கொடும்'' என்று பன்முறை மன்றாடினார். கடைசியாகக் களைத்துப்போகப் பாறையின் மீது சோர்ந்து விழுந்தார். 

அப்பொழுது பரிசுத்த கன்னிமரியாயி கனவில் தோன்றி "தோமா! ஏன் கவலையுற்றிருக்கின்றீர்'' என்று கேட்டார். 

தோமை: பரிசுத்த தேவ தாயே! இவ்விடமுள்ள மக்கள் மத வைராக்கியமுடையவர்கள். மெய்யங் கடவுளாகிய உமது திருக்குமாரன் இயேசுவை விசுவசிக்க மறுக்கின்றார்களே , 

மரியாயி: கவலை வேண்டாம். திரும்பப் போய் பிரசங்கிப்பீராக! உமது நாவில் தக்க வார்த்தைகளை வரச் செய்வார் திருச்சுதன். அவர்களும் அவற்றை மறுக்கமாட்டார்கள்.

அப்போஸ்தலர் இவ்வாக்கினால் திடங்கொண்டு எழுந்து உடனே ஊருக்குள் விரைந்து சென்றார். அப்போது அவருக்கு எல்லாரும் மரியாதை செய்தனர். அவர் அருகே பலர் வந்து கூடினர். அவர்களுக்குச் சத்திய வேதத்தைப் போதித்தார். அன்று, என்றும் இல்லாத கவனத்தோடு உற்றுக் கேட்டனர்; சொல்வதை எல்லாம் விசுவசித்தனர்; கடைசியாகக் கிறிஸ்துவர்கள் ஆயினர்.

கரங்கனூர் அரசன் கேரளப்பெருமாளாகிய பிலவேந்திரர் தன் பொருளைக் கொண்டு பல கோயில்களைக் கட்டிவைத்தார். அவர் மருமகனாகிய இராயப்பன், டீக்கன் சாந்திப்புஸ், மலையாக்கல் எனும் பிராமண வாலிபனாகிய தோமா ராபன், சங்கபுரி, பாக்காத்தோ மட்டம், கதர் பூர் பூபன், இன்னும் மற்ற சீடர்கள் எல்லாரும் பல இடங்களில் பரிசுத்த வேதத்தைப் போதித்தனர். அவர்கள் உழைப்பினால் மலையாளப் பகுதியில் திருச்சபை நிறுவப்பட்டது,