இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - ஒரு கொம்புள்ள பூனை

இரண்டு அல்லது மூன்று இரவுகளுக்கு முன் நான் ஒரு கனவு கண்டேன். அதை நீங்கள் கேட்க விரும்புகிறீர்களா? நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். ஆகவே நீங்கள் எப்போதும் என் கனவில் இருக்கிறீர்கள். 

நான் உங்களோடு விளையாட்டு மைதானத்தில் இருப்பது போலத் தோன்றியது. நீங்கள் என்னைச் சுற்றிக் கூட்டமாகக் கூடியிருந்தீர்கள். ஒவ்வொருவரும் கையில் ஒரு ரோஜாவோ, ஒரு லீலியோ, ஒரு வயலட் மலரோ, அல்லது ரோஸ் மற்றும் லீலி ஆகிய இரண்டுமோ, அல்லது வேறு ஏதாவது மலரோ வைத்திருந்தீர்கள். 

திடீரென ஒரு மிகப் பெரிய, பார்வைக்கு அருவருப்பான பூனை தோன்றியது. அது நிலக்கரியைப் போல கறுப்பாக இருந்தது. அதற்குக் கொம்புகள் இருந்தன. கண்கள் நெருப்புக் கனலைப் போலச் சிவந்திருந்தன. அதற்கு நீண்ட, கூர்மையான கால்நகங்களும், அருவருப்பான முறையில் வீங்கிய வயிறும் இருந்தன. 

இந்த அருவருப்பான மிருகம் திருட்டுத்தனமாக பதுங்கிப் பதுங்கி உங்களுக்கு அருகில் வந்து, மிக வேகமாக உங்கள் மலர்களைப் பற்றிப் பிடித்துத் தரையில் இழுத்துப் போட்டது. இந்த அருவருப்பான மிருகத்தை முதன்முதல் பார்த்தபோது, நான் கடும் அச்ச வசப்பட்டேன். ஆனால் நான் அதிசயித்துப் போகும்படியாக, நீங்கள் அதைப் பற்றி எந்தக் கவலையும் பயமும் இல்லாதவர்களாகத் தோன்றினீர்கள். 

என் மலர்களைத் தரையில் இழுத்துப் போட அது என்னை நோக்கி ஊர்ந்து வந்ததைக் கண்டு, நான் அங்கிருந்து ஓடிப்போகும்படி உடனே திரும்பினேன். ஆனால் யாரோ ஒருவர் என்னை நிறுத்தினார். அவர் என்னிடம்: “ஓடி விடாதீர். உம் சிறுவர்களிடம் விரைந்து போய், அந்த மிருகத்திற்கு அவர்களுடைய மலர்கள் எட்டாதபடி, அவர்கள் தங்கள் கைகளை உயர்த்தி வைத்துக் கொள்ளும்படி சொல்” என்றார்.

அவர் சொன்னபடியே நானும் செய்தேன். அந்த இராட்சத மிருகம் எம்பிக் குதிக்கவே மிகக் கடுமையாக முயன்றது. ஆனால் அதன் பாரம் அசங்கியமான முறையில் அது மீண்டும் தரையில் விழச் செய்தது.

என் பிரியத்துக்குரிய மகன்களே, லீலி மலர் சரீர பரிசுத்த தனத்தின் அடையாளம். அதற்கு எதிராகப் பசாசு முடிவில்லாத போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. தங்கள் மலரைத் தாழ்வாகப் பிடித்திருக்கிறவர்களுக்கு ஐயோ கேடு! பசாசு அவர்களிடமிருந்து அதைப் பறித்துக் கொள்ளும். 

அளவுக்கு அதிகமாக உண்பதன் மூலம், அல்லது உணவு வேளைகளுக்கு இடையே உண்பதன் மூலம் தங்கள் உடல்களைக் கொழுத்துப் போகச் செய்பவர்களும், வேலை செய்வதைத் தவிர்த்து தங்கள் நேரத்தை வீணாக்குபவர்களும், சில வகையான உரையாடல்கள் அல்லது நூல்களில் பிரியம் வைத்திருப் பவர்களும். சுய மறுதலிப்பை எதிர்ப்பவர்களும் இப்படிப் பட்டவர்களே... என் குழந்தைகளே, கடவுளை முன்னிட்டு, இந்த எதிரியை எதிர்த்துப் போராடுங்கள், அல்லது அது உங்களை அடிமைப்படுத்தி விடும்.

இந்த வெற்றிகள் வெல்லக் கடினமானவை. ஆனாலும் நாம் பயன்படுத்த வேண்டிய வழிமுறையைப் பரிசுத்த வேதாகமம் நமக்குச் சொல்கிறது; “இந்த வகைப் பேய் ஜெபத்தாலும், உபவாசத் தாலும் மட்டுமே துரத்தப்பட முடியும்” (மத்.17:20). 

உங்கள் கரங்களை உயர்த்துங்கள், அப்போது உங்கள் மலர் பாதுகாப்பாக இருக்கும். பரிசுத்ததனம் ஒரு பரலோகப் புண்ணியம். அதைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறவன் எவனும் தன்னையே பரலோகத்தை நோக்கி உயர்த்த வேண்டும். 

ஜெபமே உங்கள் இரட்சணியம். பக்தியோடு சொல்லப்படும் உங்கள் காலை, மாலை ஜெபங்களையும், தியானம் மற்றும் திருப்பலி பூசையையும், அடிக்கடி செய்யும் பாவசங்கீர்த்தனம், அடிக்கடி வாங்கும் நற்கருணை, பிரசங்கங்கள், அறிவுரைகள், திவ்விய நற்கருணை சந்திப்புகள், ஜெபமாலை, மற்றும் உங்கள் பள்ளிக் கடமைகள் ஆகியவற்றையே நான் ஜெபம் என்கிறேன். 

ஜெபத்தின் மூலம் நீங்கள் மோட்சத்தை நோக்கி உயர்வீர்கள். இவ்வாறு நீங்கள் புண்ணியங்களில் எல்லாம் மிக அழகானதைக் காத்துக் கொள்வீர்கள். பசாசு என்னதான் முயற்சி செய்தாலும், அவனால் அதை உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள இயலாது.