பரிசுத்த கன்னிமரியாயின் மீது பக்தி கொள்வதன் அவசியம்

14. பரிசுத்த கன்னி மாமரி , உந்நத சர்வேசுரனின் கரத்திலிருந்து வந்த ஓர் சிருஷ்டிதான் என்றும், அவ ருடைய அளவற்ற மகத்துவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ஒரு அணுவிலும் சிறிய பொருள்தான், அல்லது ஒன்றுமேயில்லை - ஏனென்றால் சர்வேசுரன் ஒருவரே '' இருக்கிறவர்" (யாத். 3:14) என்றும், சத்திய திருச்சபையுடன் நான் ஒப்புக் கொள்கிறேன்.

எனவே எப்போதும் சுயாதீன சுதந்திரமுடையவரும் சுயநிறைவு கொண்டவருமான இப்பெரும் ஆண்டவராகிய கடவுள், தமது சித்தத்தை நிறைவேற்றவும் தம் மகிமையை வெளிப்படுத்தவும் மகா பரிசுத்த கன்னிமரியாயை ஒரு தவிர்க்கமுடியாத தேவையாகக் கொண்டதில்லை, இப் பொழுது கொள்வதுமில்லை. எதனையும் செய்வதற்கு அவர் அதை விரும்புவதே போதுமானது.

15. ஆயினும், நடந்துள்ள காரியங்களை அப்படியே பார்க்கும் போதும், சர்வேசுரன் மரியாயை உண்டு பண்ணியது முதல் தம் மிகப் பெரும் செயல்களை ஆரம்பிப்பதும் முடிப்பதும் மாமரியாலேயே என்று நாம் காணும் போதும், ஒரு காரியத்தை நாம் திட்டமாகக் கொள்ள முடியும்.

அதாவது: தாம் கடவுளாக இருப்பதால், இனிமேல் வருங்காலங்களில் அவர் தம் திட்டத்தை மாற்ற மாட்டார் - தம் உணர்விலும் செயலாற்றும் முறையிலும் மாறவும் மாட்டார் என்று நிச்சயிக்கலாம்.