இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அணைக்க முடியாத நெருப்பு!

அவர் என்னை வெளியே நடத்திச் சென்றார். நாங்கள் ஒரு நடைபாதை வழியாக இறங்கிச் சென்று, கீழே இருந்த ஒரு குகைக்குச் சென்றோம். அதன் வாயிலில், “வெர்மிஸ் ஏயோரும் நோன் மோரியேத்தூர் எத் இஞ்ஸ் நோன் எக்ஸ்திங்குவேத்தூர் - அவர்களுடைய புழுவும் இறவாது, அவர்களுடைய நெருப்பும் அணையாது” (இசை.66:24) என்ற வாசகத்தை நான் வாசித்தேன். “தாபித் தோமினுஸ் ஓம்னிப் பொத்தென்ஸ் இஞ்ஞெம் எத் வெர்மெஸ் இன் கார்னெஸ் ஏயோரும் உத் உராந்த்துர் எத் சென்த்ஸியாந்த் உஸ்க்வே இன் செம்பித்தேர்னும் - அவர் அக்கினி யையும், புழுக்களையும் அவர்கள் உடலிலே அனுப்புவதால், அவர்கள் சதாகாலத்திற்கும் எரிந்து வேதனைப்படுவார்கள்” (யூதித். 16:21).

இங்கே நம் பள்ளிகளில் மாணவர்களாக இருந்தவர்களின் மனவுறுத்தல் எவ்வளவு கொடூரமானதாக இருந்தது என்பதைப் பார்க்க முடிந்தது. மன்னிக்கப்படாத ஒவ்வொரு பாவத்தையும், அதற்குரிய நீதியுள்ள தண்டனையையும், தங்கள் வழிகளைத் திருத்திக்கொள்ளவும், புண்ணியத்தில் நிலைத்திருக்கவும், மோட்சத்தை சம்பாதித்துக் கொள்ளவும் அவர்களுக்கு இருந்த எண்ணற்ற, சாதாரண, அசாதாரண வழிகளையும், திவ்விய கன்னிகை யால் தங்களுக்கு வாக்களிக்கப்பட்டவையும், தங்கள் மீது பொழியப் பட்டவையுமான அநேக நன்மைகளைத் தாங்கள் பயன்படுத்தாமல் விட்டு விட்டதையும் நினைவுகூர்வது அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட வாதையாக இருந்தது! மிக எளிதாக மீட்டு இரட்சிக்கப்பட்டிருக்க தங்களுக்கு வாய்ப்புகள் இருந்திருந்தும், இப்போது இனி மீட்கப்பட முடியாதபடி நித்தியத்திற்கும் தாங்கள் இழக்கப்பட்டு விட்டதை நினைப்பதும், தாங்கள் செய்த, ஆனால் ஒருபோதும் கடைப்பிடிக் காத பல நல்ல பிரதிக்கினைகளை நினைத்துப் பார்ப்பதும் அவர்களுக்கு எப்படிப்பட்ட சித்திரவதையாக இருந்தது! நரகம் உண்மையில் நல்ல விருப்பங்களால் பாவப்பட்டிருக்கிறது!

இந்த கீழ்க் குகையில் அந்த நெருப்பு மயமான சூளைக்குள் விழுந்த ஆரட்டரியைச் சேர்ந்த சிறுவர்களை நான் மீண்டும் கண்டேன். அவர்களில் சிலர் இப்போது நான் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்; வேறு சிலர் முன்னாள் மாணவர்களாக, அல்லது எனக்கு அந்நியர்களாகக் கூட இருந்தார்கள். நான் அவர்களை நெருங்கிச் சென்று பார்த்தபோது, அவர்கள் புழுக்களால் மூடப்பட்டிருந்ததைக் கண்டேன். அவை அவர்களுடைய முக்கிய உறுப்புகளை, அதாவது இருதயத்தையும், கண்களையும், கைகளையும், கால்களையும், மொத்த உடலையுமே எவ்வளவு ஆக்ரோஷத்துடன் கரம்பித் தின்று கொண்டிருந்தன என்றால், அதை விளக்க வார்த்தைகளே இல்லை. உதவியற்றவர்களாகவும், அசைவற்றவர்களாகவும், அந்தச் சிறுவர்கள் எல்லா விதமான வாதை களுக்கும் இரையாகியிருந்தார்கள். அவர்களோடு பேச முடியும், அல்லது அவர்கள் சொல்லும் எதையாவது கேட்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் இன்னும் நெருக்கமாகச் சென்றேன். ஆனால் ஒருவனும் பேசவில்லை, என்னைப் பார்க்கவுமில்லை. அதன்பின் நான் என் வழிகாட்டியிடம் ஏன் அவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், சபிக்கப்பட்டவர்களிடமிருந்து சுதந்திரம் முழுவதுமாக அகற்றப்பட்டிருக்கிறது என்று விளக்கினார். ஒவ்வொருவனும் தன் சொந்தத் தண்டனையை, எந்த விதமான விதிவிலக்குமின்றி முழுமையாக அனுபவித்தாக வேண்டும்.

அவர் தொடர்ந்து, “இப்போது, நீரும் அந்தக் குகைக்குள் நுழைய வேண்டும்” என்றார்!

“ஓ, முடியாது” என்று நான் கடும் அச்சத்தோடு எதிர்ப்புத் தெரிவித்தேன். “நரகத்திற்குச் செல்லுமுன், ஒருவன் தீர்வையிடப்பட வேண்டும். நான் இன்னும் தீர்வையிடப்படவில்லை. ஆகவே நான் நரகத்திற்குப் போக மாட்டேன்.”

“கேளும். நரகத்தை சந்தித்து, உம் சிறுவர்களைக் காப்பாற்றுவது, அல்லது வெளியேயே இருந்து கொண்டு, அவர் களைக் கடும் வேதனைக்கு உள்ளாக்குவது, இவற்றில் நீர் எதைச் செய்யப் போகிறீர்?” என்று அவர் கேட்டார்.

நான் ஒரு கணம் வாயடைத்துப் போனேன். அதன்பின் அவரிடம், “நான் என் சிறுவர்களை நேசிக்கிறேன் என்பதும், அவர்கள் எல்லோரையும் காப்பாற்ற விரும்புகிறேன் என்பதும் உண்மைதான். ஆனால் அதற்கு வேறு வழி ஏதும் இல்லையா?” என்று நான் பதிலுக்குக் கேட்டேன்.

“ஆம். உம்மால் முடிந்த எல்லாவற்றையும் நீர் செய்வீர் என்றால், ஒரு வழி இருக்கிறது.”

இப்போது என்னால் அதிக எளிதாக சுவாசிக்க முடிந்தது. அதே கணத்தில், “இத்தகைய வாதைகளில் இருந்து என் அன்புக்குரிய இந்த மகன்களை என்னால் காப்பாற்ற முடியும் என்றால், எவ்வளவு கடுமையான உழைப்பையும் கண்டு நான் அஞ்சப் போவதில்லை” என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

“அப்படியானால் உள்ளே வாரும்” என்ற என் நண்பர் தொடர்ந்து, “உள்ளே வந்து, உங்கள் சிறுவர்கள் தவம் செய்யும்படி அவர்களை வழிநடத்தவும், நித்திய மரணத்திலிருந்து அவர்களை மீட்கவும் நம் எல்லாம் வல்லவரும், நல்லவருமான கடவுள் எப்படி ஓராயிரம் வழிகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் என்று பாரும்” என்றார்.

அதன்பின் அவர் என் கையைப் பிடித்து, குகைக்குள் என்னை நடத்திச் சென்றார். அதற்குள் நான் காலெடுத்து வைத்ததும், திடீரென ஓர் அதியற்புத அழகுள்ள மண்டபத்திற்குள் நான் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதைக் கண்டுகொண்டேன். அதன் திரையிட்ட கண்ணாடிக் கதவுகள், அந்த மண்டபத்திற்கு வரும் இன்னும் பல நுழைவாயில்களை மறைத்தன.

அந்த வாசல்களின் ஒன்றின்மீது, “ஆறாம் கற்பனை” என்ற வாசகத்தை நான் வாசித்தேன். அதைச் சுட்டிக் காட்டி, என் வழிகாட்டி என்னிடம்: “இந்தக் கட்டளைக்கு எதிரான மீறுதல்கள் பல சிறுவர்கள் நித்தியத்திற்கும் அழிந்து போகச் செய்தன” என்றார்.
“அவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்யவில்லையா?”

“செய்தார்கள். ஆனால் ஒன்றில் அவர்கள் பரிசுத்ததனம் என்னும் அழகிய புண்ணியத்திற்கு எதிரான பாவங்களை மறைத் தார்கள், அல்லது அரைகுறையாக அவற்றைச் சொன்னார்கள். உதாரணமாக அத்தகைய பாவங்களை நாலைந்து முறை செய்திருக்க, அவர்கள் அவற்றை இரண்டு மூன்று முறை மட்டுமே செய்ததாக சொன்னார்கள். வேறு சிறுவர்கள் முன்பு தங்கள் குழந்தைப் பருவத்தில் இந்தப் பாவத்தைச் செய்திருக்கலாம். ஆனால் வெட்கப்பட்டு அவர்கள் அவற்றைப் பாவசங்கீர்த்தனத்தில் சொல்லவே யில்லை, அல்லது அவற்றைப் போதுமான அளவுக்கு சொல்ல வில்லை. மற்றவர்கள் உண்மையான மனஸ்தாபமில்லாமலும், எதிர் காலத்தில் இப்படிப்பட்ட பாவங்களைத் தவிர்க்கும் நேர்மையான பிரதிக்கினை இன்றியும் பாவசங்கீர்த்தனம் செய்தார்கள். வேறு சிலரும் கூட இருக்கிறார்கள். இவர்கள் ஆத்தும சோதனை செய் வதற்குப் பதிலாக, தங்கள் பாவசங்கீர்த்தன குருவை எப்படி மிகத் திறமையாக ஏமாற்றுவது என்பதைக் கண்டுபிடிக்க முயல்வதிலேயே தங்கள் நேரத்தையெல்லாம் செலவிட்டனர். இந்த மனநிலையோடு சாகிறவன் தண்டனைத் தீர்ப்பிடப்பட்டவர்களில் தானும் ஒருவனா யிருப்பதைத் தேர்ந்து கொள்கிறான். ஆகவே அவன் நித்தியத்திற்கும் நரகத்தில் வேதனைப்படுகிறான். மெய்யான மனஸ்தாபத்தோடு மரிப்பவர்கள் மட்டுமே நித்தியத்தில் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். இப்போது நம் இரக்கமுள்ள கடவுள் ஏன் உம்மை இங்கே கூட்டி வந்தார் என்பதைக் காண நீர் விரும்புகிறீரா?” அவர் திரையை உயர்த்திக் காட்ட, அங்கே ஆரட்டரி சிறுவர்களின் கூட்டம் ஒன்றை நான் கண்டேன். அவர்கள் எல்லோருமே எனக்குத் தெரிந்தவர் கள்தான். இந்தப் பாவத்தின் காரணமாகவே அவர்கள் அங்கே இருந்தார்கள். இப்போது, இங்கே, நல்ல நடத்தையுள்ளவர்களாகத் தோன்றும் சிலரும் அவர்களிடையே இருந்தார்கள்.

“இப்போது, நான் அவர்களைத் தனித்தனியாக எச்சரிக்கும் படியாக, அவர்களுடைய பெயர்களைக் குறித்துக் கொள்ள நீர் நிச்சயமாக என்னை அனுமதிப்பீர்” என்றேன் நான்.

“அது தேவையில்லை !”

“அப்படியானால், நான் அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லும்.”

“அடக்கமின்மைக்கு எதிராக எப்போதும் போதியும். ஒரு பொதுவான எச்சரிக்கை போதுமானது. அவர்களை நீர் தனித்தனி யாகக் கண்டித்தாலும், அவர்கள் வாக்களிப்பார்கள், ஆனால் அதை நிறைவேற்றுவதில் எப்போதும் ஆர்வமாயிருக்க மாட்டார்கள் என்பதை மனதில் கொண்டிரும். உறுதியான பிரதிக்கினை செய்ய ஒருவனுக்கு கடவுளின் அருள் தேவைப்படுகிறது. அது உம் சிறுவர் களுக்கு ஒருபோதும் மறுக்கப்படாது. அவர்கள் ஜெபிப்பார்கள் என்றால், கடவுள் இரக்கமாயிருப்பதன் மூலமும், மன்னிப்பதன் மூலமும் கடவுள் தம் அன்பை வெளிப்படுத்துகிறார். உம் பங்கிற்கு, அவர்களுக்காக ஜெபித்து, பரித்தியாகங்கள் செய்யும். சிறுவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் உம் கண்டிப்புள்ள அறிவுரைகளைக் கேட்டு, நல்ல ஆத்தும சோதனை செய்வார்களாக. என்ன செய்ய வேண்டும் என்று அது அவர்களுக்குச்சொல்லும்.”

அடுத்த அரை மணி நேரத்தை ஒரு நல்ல பாவசங்கீர்த்தனத் திற்குத் தேவையானவை பற்றி விவாதிப்பதில் நாங்கள் செலவிட் டோம். அதன்பின் என் வழிகாட்டி பல தடவைகள் உரத்த குரலில், “அவெர்த்தேரே! அவெர்த்தேரே!” என்றார்.

“நீர் சொல்வதன் பொருள் என்ன?” 

“வாழ்வை மாற்றுங்கள்!”