அரசன் மஹாதேவன் தன் மனைவி திருப்பதியையும், கிருஷ்ணன் மனைவி மகு தானியையும் பற்பல விதத்தில் ஆக்கினைப்படுத்தினான். ஆனால் அவர்கள் விசுவாசத்தைக் கைவிடாது நிலையாய் இருந்தனர். எப்பேர்ப்பட்ட வாதனைகளும் கிறிஸ்துவிடம் இருந்து அவர்களைப் பிரிக்கமுடியவில்லை. அவர்களது துன்ப காலத்தில் ஆறுதல் அளிக்க ஒரு நாள் தோமையார் அவர்களுக்குத் தோன்றி, "மக்களே! கடவுள் மேல் முழு நம்பிக்கையாய் இருங்கள். சீக்கிரம் அவரது திருப்பெயர் மகிமைப்படுத்தப்படும். உங்கள் துன்பம் இன்பமாக மாறிவிடும்'' என்று உரைத்தார்.
இவ் வார்த்தைகளால் தேறுதலுற்ற இரு பெண்மணிகளும் அரசன் செய்துவந்த எல்லா விதத் துன்ப வருத்தங்களையும் சோதனைகளையும் வீரத்துடனும் பொறுமையுடனும் சகித்துக் கொண்டு, கடைசிவரையிலும் கடவுளைக் கைவிடாது நின்றார்கள். மஹாதேவனும் கிருஷ்ணனும் தம் முயற்சிகள் யாவும் பயனற்றுப் போவதைக்கண்டு மனஞ்சலித்து, அவர்களுக்கு மறுபடியும் யாதொரு தொல்லையும் கொடாது விட்டனர்.
அரசனின் இரண்டாவது மகன் கடும் வியாதியாயினன். தேர்ந்த வைத்தியர் பலரைக்கொண்டு சிகிச்சைகள் செய்வித்தும் குணப்படவில்லை. சிறுவனோ சாவுக்குரிய வேதனைப்பட்டான். அரசன் ஆற்றொணாக் கவலையில் அமிழ்ந்தியிருந்தான். தன் மூத்த குமாரனாகிய விஜயன் கிறிஸ்தவனாகி விட்ட படியால் வியாதி வாய்ப்பட்டுள்ள மகனையே பட்டத்துக்கு உரியவனாகப் பாவித்து வந்தான் அரசன். ஆதலால் பட்டத்து இளவரசனுக்கு மரணங் கிட்டிவருவதைப் பார்த்து, அரசனின் மனம் இன்னது செய்வதென்று தெரியாமல் தாமரையிலைத் தண்ணீர்போல் தத்தளித்துக் குழம்பிப் பெரிதும் வாதைப்பட்டது.
"அப்போஸ்தலரது கல்லறையைத் திறந்து அவர் எலும்பு ஒன்றை எடுத்து என் மகன் கழுத்தில் போடுவேன். அப்போது அவன் சுகம் அடைவான்”, என்று சொல்லிக் கொண்டே அப்போஸ்தலர் கல்லறையை நோக்கிப் பித்தம் பிடித்தவன் போல் ஓடினான். அப்படி ஓடுகையில் தோமையார் தோன்றி அவனை வழி மறித்து, “உயிரோடு இருக்கையில் என்னை நம்பாத நீ இறந்தபின் நம்புவதென்ன விந்தையோ? ஆயினும் மகனே! கலங்காதே ! இயேசு உன் மட்டில் இரங்குவார். அவரது இரக்கத்தை நீயே கண் கூடாகக் காண்பாய்" என்று கூறினார்.
அரசனோ இக் காட்சியைக் கண்டதும் திடுக்கிட்டுத் திகைத்தவனாய்த் தூண் போல் நின்றான். பின் தன்னுணர்வு அடைந்து தான் புறக்கணித்துவிட்ட தனது மூத்த குமாரன் டீக்கன் விஜயனிடம் விரைந்து சென்று, "மகனே! அப்போஸ்தலரது திருப்பண்டம் ஏதாகிலுங் கொடு. உன் தம்பி சாகும் நிலையில் உள்ளான். அப்போஸ்தலர் அவனைக் குணப்படுத்துவார்" என்று அலறிப்பதறி உரைத்தான். விஜயனும் விரைவாய்ச்சென்று செய்தியைப் பாவுல் மறை ஆயருக்குத் தெரிவித்து, இருவருமாகக் கல்லறைக்குப்போய் அதைத் திறந்து, வேதசாட்சியின் இரத்தம் படிந்த மண்ணில் சிறிது எடுத்து மஹாதேவனுக்குக் கொடுத்தார்கள்.
அரசன் அதை பய பக்தியுடன் பெற்றுக் கொண்டு போய் சிறு துணியில் முடிந்து நோயாளியின் கழுத்தில் கட்டினான். அவனது படுக்கையின் பக்கம் முழுங்காலிட்டுக் கண்ணீர் சொரியக் கனிந்த இருதயத்தோடும் விசுவாசத்தோடும் "கிறிஸ்துவே! உம்மை விசுவசிக்கின்றேன்” என்று செபித்தவுடனே நோயாளி திடத்தோடு படுக்கையை விட்டு எழுந்தான்.
இந்த அற்புதம் மஹாதேவனின் விசுவாசத்தை மேலும் உறுதிப்படுத்தியது தான் தோமையாருக்கு இழைத்த தீங்கு அனைத்தையும் நினைந்து உருகி நெஞ்சம் புண்ணாகினான்; எழுந்தான்; கோவிலைத் தேடி ஓடினான்; பாவுல் மறை ஆயர் முன் தெண்டனிட்டுக் குப்புற விழுந்து, "ஆண்டவரே! நான் பெரும்பாவி! அருளாளராகிய பரிசுத்த அப்போஸ்தலரைக் கொலை செய்தேன் ஆண்டவராகிய இயேசு நாதர் என் குற்றத்தைப் பொறுக்கும் வண்ணம் எனக்காக மன்றாடும். இன்று முதல் நான் இயேசுவின் அடிமை. என்னை ஏற்றுக்கொள்ளும்'' என்று பணிவுடன் வேண்டினான். பாவுல் ஆயர் அரசனுக்கு ஞானஸ்நானம் கொடுத்து சிலுவை என்னும் பெயரிட்டார். இதைக் கேள்விப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆனந்தமடைந்து உண்மையான கடவுளைப் பணிவுடன் புகழ்ந்து போற்றினார் கள். அதுமுதல் அப்பகுதியில் கிறிஸ்தவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரிக்கலாயிற்று கடவுளும் அவர்களை மிகுதியாய் ஆசீர்வதித்துக் காப்பாற்றி வந்தார்.