இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தருமத்தினுடைய கண்ணாடியே!

சகல புண்ணியங்களும் நற்குணங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்றவர் நமதாண்டவராகிய சேசு கிறீஸ்துநாதர். நாம் மோட்சம் சேர நமக்கு வழிகாட்டி அவரே. எனவே அவரைப் பின்பற்றிச் செல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். அவருடைய முன்மாதிரி கையைப் பின்பற்றி, அவருடைய புண்ணியங்களை நமது வாழ்வில் அனுசரிக்க முயலுவதில்தான் அர்ச்சியசிஷ்டதனம் அடங்கியுள்ளது. 

திருச்சபையில் வணங்கப்பட்டு வரும் அர்ச்சியசிஷ்டவர்கள் யாவரும் நமதாண்டவரின் புண்ணியங்களைக் கண்டுபாவிக்கப் பிரயத்தனம் செய்தவர்களே. அவர்கள் ஒவ்வொருவரிடமும் நமதாண்டவரின் புண்ணியங்களில் ஒன்று தலைசிறந்து விளங்கியது. உதாரணமாக அர்ச். பிரான்சிஸ்குவிடம் தரித்திரமும், அர்ச். சலேசியாரிடம் தாழ்ச்சியும், அர்ச். ஞானப்பிரகாசியாரிடம் பரிசுத்த கற்பும் ஒளிவிட்டுப் பிரகாசித்தன.

ஆனால் அர்ச். கன்னிமரியம்மாள், மற்ற அர்ச்சிய சிஷ்டவர்களைப் போல், ஒருசில புண்ணியங்களில் மட்டுமல்ல, ஆனால் சகல புண்ணியங்களிலும் நமதாண்டவரைக் கண்டுபாவித்தார்கள். நமதாண்டவ ரிடம் விளங்கிய புண்ணியங்கள் யாவும் அவர்களிடமும் பிரதிபலித்தன. இதனால்தான் திருச்சபை அவர்களை “தருமத்தினுடைய கண்ணாடியே” எனப் போற்றுகிறது. இப்புகழின் முழு உண்மையையும் உணர, “தருமம்” என்றால் என்ன, “கண்ணாடி” என்றால் என்ன என்பதை அறிவது அவசியம்.

“தருமம்” என்னும் பதம் இலத்தீன் மொழி யிலுள்ள “யுஸ்தீத்ஸியா” (Justitia=Justice) என்னும் பதத்தின் தமிழ்ச் சொல்லாகும். Justitia என்னும் பதத்தை தருமம் என்றல்லாது நீதி என்று மொழிபெயர்த்தலே தகும். எனவே தமிழில் “நீதியின் கண்ணாடியே” என்று சொல்லுவதே சிறந்தது.

நீதி--ஒவ்வொருவருக்கும் உரிய உரிமைகளை (Rights) அவரவருக்குச் செலுத்துவதில்தான் நீதி அடங்கியுள்ளது. நம்மைப் படைத்தக் காத்துவரும் நமது தேவன் மட்டிலும், நம்மைச் சுற்றியுள்ள அயலார் மட்டிலும், நமது மட்டிலும் நாம் அநுசரிக்க வேண்டிய கடமைகள் பல உண்டு. 

சர்வேசுரனுக்கு ஆராதனை செலுத்தி, அவருடைய கற்பனைகளைச் சரிவர அநுசரித்து, செய்த பாவங்களுக்காகத் தக்க பரிகாரம் செய்வதில் சர்வேசுரன் மட்டில் நாம் அநுசரிக்க வேண்டிய கடமைகள் அடங்கியுள்ளன. நமது அயலாரில் சிலர் நமக்கு மேம்பட்டவர்களாயும், வேறு சிலர் சரிசமானமாயும், மற்றும் அநேகர் கீழ்ப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள். 

பெரியோர்கள் மட்டில் வணக்கம், கீழ்ப்படிதல், சிநேகம் காண்பிப்பதிலும், நமக்கு சரிசமான மானவர்களுக்கு பிறர் சிநேகம் காண்பித்து அவர்களுக்குத் தக்க காலத்தில் புத்திமதி சொல்லி உதவி புரிவதிலும், நமக்குக் கீழ்ப்பட்டவர்களைப் பராமரித்து, பிறர் சிநேகத்துடன் கண்டித்து, பட்சம் காண்பிப்பதிலும், நமது புறத்தியார் மட்டில் நாம் அநுசரிக்க வேண்டிய கடமைகள் அடங்கியுள்ளன. 

மனிதனுடைய மேன்மைக்குப் பொருந் தாதவைகள் யாவையும் விலக்கி, நமது அந்தஸ்துக்குரிய புண்ணியங்களைச் செய்து நமது ஆத்தும ஈடேற்றத் திற்கான முயற்சிகளைச் செய்வதில் நமது மட்டிலுள்ள கடமைகளை நிறைவேற்றுகிறோம் இவற்றில்தான் நீதி என்னும் புண்ணியம் அடங்கியுள்ளது.

சுருங்கக் கூறின், பத்துக் கற்பனைகளின் அடக்க மாகிய 1) எல்லாவற்றையும் பார்க்க கடவுளைச் சிநேகிக்கிறது, 2) தன்னைத் தான் சிநேகிக்கிறது போல மற்றெல்லோரையும் சிநேகிக்கிறது என்ற இரு கற்பனைகளின் அநுசரணையில் நீதி என்னும் புண்ணியம் அடங்கியுள்ளது. 

எனவே ஒரு மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு புண்ணியத்தில் ஓங்கி வளர்ந்துள்ளானோ, அவ்வளவுக் கதிகமாய் நீதிமான் எனறு அழைக்கப்படத் தகுதியுள் ளவன். வேதாகமம் அர்ச். சூசையப்பரை “நீதிமான்” என்று அழைக்கிறது. தேவசிநேகம், பிறர்சிநேகத்திற்கடுத்த புண்ணியங்கள் அவரிடம் விளங்கின என்பதே அதன் அர்த்தமாகும்.

மனிதாவதாரமெடுத்த நமதாண்டவரிடம் சகல புண்ணியங்களும் அளவற்ற விதமாய்ப் பிரகாசித்தன. அவரே நீதி. இதைக் குறித்துத்தான் சேசுவின் திருநாமப் பிரார்த்தனையில், “நீதி ஆதித்தனாகிய (சூரியன்) சேசுவே” எனத் திருச்சபை மன்றாடுகிறது.

“கண்ணாடி” என்றால் என்ன என்பது யாவரும் அறிவர். கண்ணாடியின் குணமும் யாவரும் அறிந்ததே. எப்பொருள் தனக்குமுன் நிறுத்தப்படுமோ, அப்பொருளின் பிரதியைத் தாங்குதல் கண்ணாடியின் இயல்பான குணம். மேலும் ஒளிக் கிரணங்கள் தன்மேல் விழுந்தால், அதைப் பிரதிபலிக்கும் குணம் கண்ணாடிக்கு உண்டு.

நமது மோட்ச அன்னை தனது திவ்விய குமாரனும், தேவனுமாகிய சேசுவிடம் விளங்கின சகல புண்ணியங் களையும் மற்ற சகல அர்ச்சியசிஷ்டவர்கள் யாவரையும் விட அதிகமாய்க் கண்டு பாவித்தார்களென நாமறிவோம். அவர்களிடம் விளங்கிய தேவசிநேகம், பிறர் சிநேகம், தாழ்ச்சி, கற்பு முதலிய புண்ணியங்களின் அளவைக் கண்டறியக் கூடியவர் யார்? 

இவ்வுலகில் பிறந்த எம்மனிதனும் ஒரு சமயத்திலென்கிலும் அற்பப் பாவத்தில் விழாமலிருப்பது கூடாத காரியம். ஆனால் திரிதெந்தின் என்னும் திருச்சபை பொதுச் சங்கம் படிப்பிப்பது போல், நமது தாய் தேவனின் விசேஷ வரத்தால் அற்பப் பாவம் யாவற்றிலுமிருந்து காப்பாற்றப்பட்டார்கள் (Cfr. Conc. Trid. Sess. VI, Can. 23). 

எனவே அவர்களிடம் நீதி என்னும் புண்ணியம் ஆச்சரியப்படத் தக்க விதமாய் விளங்கியது. உண்மையில் சூரியனிடமிருந்து புறப்படும் ஒளிக்கிரணங்கள் எவ்விதம் கண்ணாடியின்மேல் பட்டு பிரதிபலிக்கப்படுகின்றனவோ, அவ்விதமே நீதியின் சூரியனாகிய சேசுவிடமிருந்து புறப்படும் புண்ணியக் கதிர்கள், ஒரு சிருஷ்டியால் எவ்வளவு மேலாகப் பிரதிபலிக்கப்பட முடியுமோ, அவ்வளவு மேலாக மாமரியன்னையால் பிரதிபலிக்கப்படுகின்றன. 

எனவே, “நீதியின் (தருமத்தின்) கண்ணாடியே” என்று திருச்சபை அவர்களை அழைக்கும்போது அது வெறும் புகழ்ச்சி மட்டுமல்ல, அதில் எவ்வளவோ ஆழ்ந்த பொருள் அடங்கியுள்ளது. நம் மாதாவின் இப்பெருமையைக் குறித்து நாமும் அக்களிப்போம். சேசுவிடம் விளங்கின புண்ணியங்களை நாமும் கண்டுபாவிக்க நமக்கு வேண்டிய தேவ உதவியைப் பெற்றுத் தருமாறு அவர்களைப் பக்தியுடன் மன்றாடுவோம்.

“ஓ! மரியாயே! எங்கள் தாயாரே! நீதி ஆதித்தனாகிய உமது திருக்குமாரனின் புண்ணிய நிறைவைப் பிரதிபலிக்கும் கண்ணாடியே! உம்மை நாங்கள் வாழ்த்திப் புகழ்கின்றோம். மாதாவே! நீர் உமது திருக்குமாரனின் புண்ணியங்களைக் கண்டுபாவித்தீர். அவரது புண்ணியங்கள் உம்மிடத்திலும் ஒளிர்ந்தன. உமது மக்களாகிய நாங்களோ, புண்ணியப் பாதையினின்று வெகு தூரம் விலகி நிற்கிறோம். நீதியென்பது இன்னும் எங்கள் உள்ளங்களில் ஆழ வேரூன்றவில்லை. தாயே! நீதியை நேசித்து, நீதிமான்களாய் மரிக்க எங்களுக்கு அருள் பெற்றுத் தாரும்.” 


தருமத்தினுடைய கண்ணாடியே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!