இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அடிமைத்தனம் மூன்று வகை

32. நம்மையே மரியாயிடம் அடிமைகளாகக் கொடுப்பதில் இந்தப் பக்தி அடங்கியுள்ளது என்று நான் கூறியிருக்கிறேன், ஆனால் மூவகையான அடிமைத்தனம் இருப்பதைக் கவனியுங்கள்:

* இவ்வார்த்தைகள், இவ்வர்ப்பணத்தலின் உண்மையான தன்மையை நமக்குக் கூறுகின்றன. இவ்வர்ப்பணத்தில் நாம் சேசுவாலும் மாமரியாலும் சொந்தமாகக் கொள்ளப்பட்ட ஒரு நிலையில் நம்மை வைக்கிறோம் --அவர்களுடைய சித்தத்தில் முழுவதும் சார்ந்துள்ள நிலை அது. இப்படிப்பட்ட ஒரு நிலை ஒரு அடிமையின் தன்மையும் நிலைமையுமாகும். ஆனால் இந்த கௌரவமான அடிமைத்தனத்தில் எந்த ஒரு இழிவோ அல்லது கொடுமையோ இல்லை என்று காட்டுவதற்காக, அர்ச். லூயிஸ் மோன்போர்ட் இது சுயமாக எடுக்கப்பட்ட அடிமைத்தனம் என்றும், மதிப்பும், அன்பும் நிரம்பியதென்றும் கடவுளின் பிள்ளைகளுக்குரிய உண்மையான சுதந்திரத்தைக் கொடுப்பது என்றும் விளக்கிச் சொல்கிறார்.

ஆகவே, " அடிமை," "அடிமைத்தனம் " என்ற வார்த்தைகளைக் கண்டு பயப்படவோ எதிர்ப்படையவோ காரணம் எதுவும் இல்லை. வார்த்தையைப் பாராமல், ஆண்டவர் ஆன சேசுவுக்கு மாதாவின் வழியாக முழுவதுமாய் நிரந்தரமாய் சுயநலமற்று கீழ்ப்பட்டிருப்பதும், அவர்களைச் சார்ந்து இருப்பதுமாகிய நிலையைப் பார்க்க வேடும்.

"வேறு வார்த்தையை உபயோகித்தால் என்ன?'' என்று யாரும் கேட்கலாம். இந்தத் தனியான அர்ப்பண நிலையைக் குறித்துச் சொல்ல வேறு வார்த்தை இல்லாததாலேயே இதை உபயோகிக்கிறோம்.

முதல் வகை, இயற்கையின் அடிமைத்தனம். இந்த வகையில் எல்லா மானிடரும், நல்லவர்களும் கெட்டவர்களும், கடவுளின் அடிமைகளாயிருக்கிறார்கள்.

இரண்டாம் வகை, கட்டாய அடிமைத்தனம். இவ்வகையில் பசாசுக்களும், தீர்ப்பிடப்பட்டவர்களும் கடவுளின் அடிமைகளாயிருக்கிறார்கள்.

மூன்றாம் வகை, அன்பின் விருப்ப அடிமைத்தனம். இதன்படியே மரியாயின் வழியாக கடவுளுக்கு நாம் நம்மை அர்ப்பணம் செய்ய வேண்டும். இது மனித சிருஷ்டிகளான நாம் நம்மையே சிருஷ்டிகரான கடவுளுக்குக் கொடுக்கக் கூடிய மிக உத்தமமான வழியாகும்.