சேசு, யூதா, யாகப்பர் ஆகிய மூவருக்கும் மாதா ஆசிரியையாகிறார்கள்.

29 அக்டோபர்  1944.

சேசு கூறுகிறார்:

“சின்ன அருள், வா, வந்து பார். உனக்கு வழிகாட்டுகிற என் கரம் உன்னைத் தாங்கி நடத்த, என் குழந்தைப் பருவ ஆண்டுகளுக்கு மீண்டும் வா.  என் சிறுவகால சுவிசேஷத்துடன், நீ காண்பதையும், அதிலேயே எஜிப்தில் திருக்குடும்பம் இருந்த காட்சியையும் சேர்க்க வேண்டும்.  அவைகளை இணைக்க வேண்டிய வரிசைமுறை இது:  எஜிப்தில் திருக்குடும்பம்; பின் சேசு குழந்தைக்குக் கொடுக்கப்பட்ட முதல் தொழிற் பாடம்; அடுத்து நீ இப்பொழுது எழுதப் போகும் நிகழ்ச்சி;  பின் (நவம்பர் 25-ம் நாளுக்கென வாக்களிக்கப்பட்ட) நான் முதுநிலையடைந்த நிகழ்ச்சி;  கடைசியாக சேசு தன் பன்னிரு வயதில் பாஸ்கா விழாவில் சாஸ்திரிகளின் நடுவே இருந்த காட்சி.  நீ இப்பொழுது காணப்போவது காரணமில்லாமலல்ல.  அது, என் சிறுவயதினுடையவும் என் உறவினருடன் என் தொடர்புகளைப் பற்றியும் சில நுணுக்கங்களைத் தெளிவாக்குகிறது.  மேலும் என் இராஜரீகத்தின் திருநாளில் அது உனக்கொரு பரிசு.  நீ அதைக் காணும் போதெல்லாம் நாசரேத் இல்லத்தின் சமாதானத்தை உனக்குள் உணருகிறாயல்லவா?  ஆதலால், இனி எழுது.” 

வழக்கமாக அவர்கள் உணவருந்துகிறதும் மாதா தன் தறியில் அல்லது தையில் வேலையில் ஈடுபடுகிறதுமான அறையை நான் காண்கிறேன்.  அது சூசையப்பருடைய தச்சுப்பட்ரைக்குப் பக்கத்தில் உள்ளது.  அவர் வேலை செய்கிற சத்தம் எனக்குக் கேட்கிறது.  இந்த அறையில் நிசப்தம் நிலவுகிறது.  மாதா சில கம்பளித் துண்டுகளைத் தைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நிச்சயம் அவைகள் அவர்களே நெய்ததுதான்.  அவை சுமார் ஒன்றரை மீட்டர் அகலமும் அதுபோல் இரண்டு மடங்கு நீளமுமாக உள்ளன.  அவை  அர்ச். சூசையப்பருக்கு ஒரு மேல் வஸ்திரம் செய்வதற்காக என்று நினைக்கிறேன்.

சமையல் தோட்டத்திற்குள் திறக்கிற கதவின் வழியே, அசையும் டெய்ஸி மலர் வேலி தெரிகிறது.  மலர்கள் ஊதா நீல வண்ணமாயிருக்கின்றன.  அவை “மரியாக்கள்”  அல்லது “நட்சத்திர வானம்” என அழைக்கப்படுகின்றன.  அவற்றின் பெளதீகப் பெயர் எனக்குத் தெரியவில்லை.  அவை நிறையப் பூத்திருப்பதால் கனிதரும் பருவம் எனத் தெரிகிறது.  செடிகளின் பச்சை இன்னும் அடர்த்தியாக அழகாகவே இருக்கிறது.  சூரிய ஒளி படுகிற சுவரில் இரண்டு தேன் கூடு பெட்டிகள் உள்ளன.  பிரகாசமான சூரிய வெளிச்சத்தில் தேனீக்கள் இரைந்து கொண்டு ஆடுகின்றன.  அத்தி மரத்திலிருந்து திராட்சைக்கும் அதிலிருந்து மாதுளைக்கும் பறக்கின்றன.  மாதுளை நிறைய உருண்டைப் பழங்கள்.  சில வெடித்து, பசுஞ் சிவப்பான தோட்டினுள்ளே சிவப்பு மாணிக்கங் களின் வரிசை மஞ்சள் பிரிவுகளுடன் காணப்படுகிறது.  

சேசு மரங்களுக்கடியில் தன் வயதுக் குழந்தைகள் இருவரோடு விளையாடுகிறார்.  அவர்களுக்கும் சுருள்முடி உள்ளது.  ஆனால் அது இளம் பொன்னாக இல்லை, கறுப்பாயிருக்கிறது.  ஒருவனின் முடி அதிக கறுப்பாயிருக்கிறது - ஒரு கறுப்பு ஆட்டுக்குட்டி போல.  அது அவன் முகத்தை கூடுதல் வெள்ளையாகக் காட்டுகிறது.  அவன் கண்கள் ஊதா நீலமாய் அழகாக அகன்று பெரிதாயிருக்கின்றன.  மற்றவனின் முடி அவ்வளவு சுருள் இல்லை.  அது இருண்ட பழுப்பு நிறம்.  பழுப்பு நிறக் கண்கள்.  அவன் நிறம் அவ்வளவு வெண்மையில்லை.  கன்னங்களில் ரோஜா நிறம் படிந்துள்ளது.  சேசுவின் சிறிய இளம் பொன் தலை, ஒளி பற்றி எரிவதுபோல் காணப்படுகிறது.  மூவரும் நல்ல இணக்கமாக சில சிறு வண்டிகளை வைத்து விளையாடுகிறார்கள்... வண்டிகளில் பல பொருள்கள்:  இலைகள், சிறு கற்கள், மரச் சீவல்கள், சிறிய மரத் துண்டுகள் உள்ளன.  அது கடை வியாபார விளையாட்டாக இருக்க வேண்டும்.  சேசு தன் தாய்க்கு ஜாமான்கள் வாங்குகிறார்.  ஒவ்வொரு ஜாமானாக வாங்கி ஒவ்வொரு தடவை மாதாவிடம் கொண்டு போகிறார்.  வாங்கப்பட்ட எல்லாப் பொருள்களையும் மாதா முகமலர்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறார்கள்.

பின் விளையாட்டு மாறுகிறது.  அந்த இரு சிறுவரில் ஒருவன்: “நாம் எஜிப்திலிருந்து வந்த யாத்திரை விளையாட்டை விளையாடலாம்.  சேசுதான் மோயீசன்.  நான் ஆரோன்.  நீ... மரியா.” 

“ம் ம்!  நான் ஒரு பையன்!” 

“பரவாயில்லை.  எல்லாம் ஒன்றுதான்.  நீதான் மரியா.  நீ பொற்கன்றுக்குட்டியின் முன் நடனம் ஆட வேண்டும்.  அதோ அந்த தேன்கூடு பெட்டிதான் பொற்கன்றுக்குட்டி.” 

“நடனம் நான் ஆட மாட்டேன்.  நான் ஒரு ஆண்பிள்ளை.  பெண்பிள்ளையாக இருக்க மாட்டேன்.  நான் உண்மையான விசுவாசி.  ஒரு சிலை முன்னால் நடனம் ஆட மாட்டேன்.” 

அப்போது சேசு:  “நாம் அந்த பாகத்தை நடிக்க வேண்டாம்.  இதை விளையாடலாம்:  மோயீசனுக்கு வாரிசாக ஜோஸுவா தெரிந்தெடுக்கப்படுகிறாரே அதை.  அப்போ விக்கிரக ஆராதனை என்ற கொடிய பாவம் இராது.  யூதாவும் ஓர் ஆண் பிள்ளையாகவும் என் வாரிசாகவும் இருப்பதில் சந்தோஷப்படுவான்.  உனக்கும் சந்தோஷம்தானே?” 

“ஆம் சேசு!  ஆனால் மோயீசன் அதற்குப் பின் இறந்து போகிறாரே.  நீயும் சாக வேணுமே.  நீ சாக நான் விரும்பவில்லை.  என்னை எப்போதும் உனக்குப் பிடிக்குமல்லவா?” 

“எல்லாரும் சாகிறார்கள்.  ஆனால் நான் சாகுமுன் இஸ்ராயேலை ஆசீர்வதிப்பேன்.  நீங்கள் மட்டும் இங்கிருப்பதால் உங்களிடத்தில் நான் இஸ்ராயேல் முழுவதையும் ஆசீர்வதிப்பேன்.”

சேசு சொன்னதை மற்ற இருவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.  அதன்பின் ஒரு வாக்குவாதம்:  இஸ்ராயேல் மக்கள் அவ்வளவு தூரம் பயணம் செய்த பிறகும் எஜிப்தை விட்டுப் புறப்படும்போது வைத்திருந்த அதே வண்டிகளையா வைத்திருந்தார்கள்.  இதிலே அபிப்பிராய பேதம் ஏற்படுகிறது.

அவர்கள் மாதாவிடம் வந்து அதைப்பற்றிக் கேட்கிறார்கள்: “அம்மா, இஸ்ராயேலர் அதே வண்டிகளைத்தான் வைத்திருந்  தார்கள் என்று நான் சொல்லுகிறேன்.  யாகப்பன் சொல்லுகிறான் அப்படி அல்லவாம்.  இவ்விரண்டிலும் எது சரி என்று யூதாவுக்குத் தெரியவில்லை.  உங்களுக்குத் தெரியுமா அம்மா?” என்று  சேசு கேட்கிறார்.

“ஆம் மகனே.  அந்த யாத்திரைக்காரர்கள் அதே வண்டிகளைத்தான் வைத்திருந்தார்கள்.  ஓய்வுக்காக அவர்கள் பயணத்தை நிறுத்தும்போது அந்த வண்டிகளைப் பழுது பார்த்துக் கொண்டார்கள்.  உடற்பலம் குன்றியவர்கள், அவைகளில் பயணம் செய்தார்கள்.  உணவும் பொருள்களும் இத்தனை மக்களுக்கும் தேவையான பல ஜாமான்களும் வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டன.  உடன்படிக்கைப் பேழை மட்டும் கையால் தூக்கிச் செல்லப்பட்டது.  மற்ற எல்லாம் வண்டிகளில் வந்தன.”

பிரச்னை தீர்ந்தது.  சிறுவர்கள் தோட்டத்தின் கடைசிக்குச் செல்கின்றனர்.  அங்கிருந்து சங்கீதங்கள் பாடிக்கொண்டு வீட்டை நோக்கி வருகின்றனர்.  சேசுதான் முதலில் வருகிறார்.  அவருடைய மணி போன்ற குரலில் சில சங்கீதங்களைப் பாடுகிறார்.  அவருக்குப் பின்னால் யாகப்பனும் யூதாவும், ஒரு வண்டியை, பெட்டகத்தின் அந்தஸ்துக்கு உயர்த்தி அதைக் கையால் ஏந்திக் கொண்டு வருகிறார்கள்.  ஆனால் அவர்கள் ஆரோன், ஜோஸுவா ஆகியோராக நடிப்பது மட்டுமல்ல, இஸ்ராயேல் மக்களாகவும் நடிக்க வேண்டியிருப்பதால் அவர்கள் தங்கள் இடைவார்களைக் கொண்டு தங்கள் கால்களுடன் சின்ன வண்டிகளைக் கட்டி இழுத்துக் கொண்டே உண்மை நாடக நடிகர்களைப்போல் மெல்ல முன் செல்கிறார்கள்.

அப்படியே அவர்கள் செடிப் பந்தல் வழியே, மாதாவின் அறையின் முன்பாகக் கடந்து செல்கிறார்கள்.  அப்போது சேசு:  “அம்மா பேழை வரும்போது அதற்கு வணக்கம் செய்யுங்கள்” என்கிறார்.  அப்படியே மாதா சிரித்தபடி எழுந்து நின்று சூரிய பிரகாசத்தில் ஒளி பொருந்த கடந்து செல்லும் சேசுவுக்குத் தலை வணங்குகிறார்கள்.

இதன்பின் சேசு மேலே ஏறுகிறார்.  அதாவது வீட்டின் வேலிப்பக்கமுள்ள - அதுவே தோட்டத்தின் வேலியுமாகும் - குன்றின் சரிவில் ஏறுகிறார்.  அங்கேயிருந்த சின்னக் கெபியின் மேல் நேரே நின்றபடி... இஸ்ராயேலருடன் பேசுகிறார்.  கடவுளுடைய கட்டளைகளையும் வாக்குறுதிகளையும் சொல்கிறார்.  பின் ஜோஸ்வாவை தலைவனாக்குகிறார்.  பின் யூதாவைக் கூப்பிட, யூதா மேலே ஏறுகிறான்.  அவனை சேசு ஊக்கப்படுத்தி ஆசீர்வதிக்கிறார்.  பின் ஒரு... பலகையைக் கேட்கிறார்.  (அது ஒரு பெரிய இலை), அதிலே மோயீசனின் பாடலை  - எல்லாமல்ல ஒரு பெரும் பாகம் - எழுதி வாசிக்கிறதுபோல் வாசிக்கிறார்.  இதன்பின் மோயீசன் ஜோஸுவாவுக்கு விடை கொடுக்க ஜோஸுவா அழுதபடி மோயீசனை அரவணைக்கிறார்.  மோயீசன் மேலும் உயர ஏறி உச்சிக்கு வருகிறார்.  அங்கிருந்து எல்லா இஸ்ராயேலையும் அதாவது,         தரையில் சாஷ்டாங்கமாய்ப் படுத்திருக்கிற மற்ற இருவரையும் ஆசீர்வதிக்கிறார்.  பின் அங்கேயே குட்டையான புல்லின் மேல் படுத்தபடி கண்களை மூடி இறக்கிறார்.

இதையெல்லாம் வாசலில் நின்று புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்த மாதா, சேசு தரையில் அசைவற்றுப் படுத்திருப்பதைப் பார்த்து: “சேசு, சேசு! எழுந்திரும் மகனே!  அப்படிப் படுத்திருக்க வேண்டாம்.  நீர் இறப்பதை நான் பார்க்க விரும்பவில்லை” என்று சத்தமாக சொல்கிறார்கள்.

சேசு சிரித்துக் கொண்டு எழுந்து தாயிடம் ஓடிச் சென்று முத்தமிடுகிறார்.  யூதாவும் யாகப்பனும் அருகில் வருகின்றனர்.  அவர்களையும் மாதா அரவணைத்துக் கொள்கிறார்கள்.

“சேசு எப்படி உன்னால் அந்த நீளமான கடின பாடலையும் அந்த ஆசீர்வதிக்கிற வார்த்தைகளையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடிந்தது?” என்று யாகப்பன் கேட்கிறான்.

மாதா சிரித்தபடி பதில் கூறுகிறார்கள்: 

“சேசுவுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டு.  நான் எதையும் வாசிக்கும்போது அதிக கவனத்துடன் சேசு கேட்பதினால்தான்.”

“நானும் பள்ளியில் கவனத்துடன்தான் இருக்கிறேன்.  ஆனால் அந்த சந்தடியில் அப்படியே தூக்கம் வந்துவிடுகிறது... அப்போ எனக்கு படிப்பு வராதா?” 

“உனக்கு படிப்பு வரும்.  நல்ல பிள்ளையாயிரு.” 

அப்போது கதவில் தட்டும் சத்தம் கேட்கிறது.  சூசையப்பர் தோட்டத்தையும் அறையையும் விரைவாகக் கடந்து சென்று கதவைத் திறக்கிறார்.  

அங்கே வருகிறார்கள் அல்பேயுஸும் (சூசையப்பரின் சகோதரர்) அவருடைய மனைவியும்.  இருவரையும்: “உங்களுக்கு சமாதானம்!” என்று கூறி வரவேற்கிறார் அர்ச். சூசையப்பர்.

“உங்களுக்கும் சமாதானமும் ஆசீர்வாதங்களும்” என்று அல்பேயுஸும் அவர் மனைவி மேரியும் பதிலுக்குக் கூறுகிறார்கள்.  ஒரு நாட்டுப்புற வண்டியும் அதை இழுக்கும் கழுதையும் தெருவில் நிற்கின்றன.

“உங்கள் பயணம் நன்றாயிருந்ததா?” 

“ரொம்ப நன்றாயிருந்தது.  குழந்தைகளை எங்கே?” 

“அவர்கள் மரியாயுடன் தோட்டத்தில் நிற்கிறார்கள்.”

ஆனால் அதற்குள் அவர்கள் தங்கள் தாயைத் தேடி வந்துவிட்டார்கள்.  மாதா சேசுவைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கே வருகிறார்கள்.  இரண்டு மைத்துனிகளும் ஒருவருக்கொருவர் வாழ்த்து முத்தம் கொடுக்கிறார்கள்.

“பையன்கள் இருவரும் நன்றாயிருந்தார்களா?” என்று கேட்கிறாள் மேரி.

“மிக நன்றாகவும் மிக அன்பாகவும் இருந்தார்கள்.  அங்கே எல்லாரும் செளக்கியமாயிருக்கிறார்களா?” 

“ஆம்.  எல்லாரும் நல்ல சுகம்.  அவர்கள் உங்களை அதிகம் விசாரிக்கிறார்கள்.  கானாவிலிருந்து பல பரிசுகளும் அனுப்பியிருக் கிறார்கள்.  திராட்சை, ஆப்பிள், பால்கட்டி, முட்டை, தேன் எல்லாம்.  சூசையப்பர் சேசுவுக்கென ஆசித்ததையும் கொண்டு வந்திருக்கிறேன்.  அது வண்டியில் வட்டக் கூடையில் இருக்கிறது.”   மேரி சிரித்துக் கொண்டே தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டு நிற்கிற சேசுவை முத்தமிடுகிறாள்.  “சேசு, உனக்கு நான் என்ன கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல் பார்க்கலாம்” என்கிறாள்.

சேசு நினைத்துப் பார்க்கிறார்.  அவரால் யூகிக்க முடியவில்லை.  அவர் எதுவும் பேசவில்லை.  சூசையப்பர் ஒரு பெரிய வட்டக் கூடையைத் தூக்கி வருகிறார்.  அதை சேசுவின் முன்பாக தரையில் வைக்கிறார். கயிற்றை அவிழ்த்து மூடியைத் திறக்க... அங்கே ஒரு சின்ன வெள்ளைவெளேரென்ற ஆட்டுக்குட்டி சுத்தமான வைக்கோலின்மேல் படுத்தபடி உறங்குகிறது!

“ஆ!” என்கிறார் சேசு ஆச்சரிய மகிழ்ச்சியுடன்.  ஆட்டுக் குட்டியை நோக்கிப் போகப் புறப்பட்ட அவர் சூசையப்பரிடம் ஓடிச் சென்று அவரைக் கட்டிக் கொள்கிறார், நன்றியாக.

மற்ற இரு சிறுவர்களும் ஆச்சரியத்தோடு அந்த ஆட்டுக் குட்டியைப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.  அது விழித்துக் கொண்டு தன் சின்ன தலையைத் தூக்கி தன் தாயை கூப்பிட்டுக் கத்துகிறது.  அதை கூடையைவிட்டு வெளியே எடுத்து கொஞ்சம் இளம் புல் தின்னக் கொடுக்கிறார்கள்.  அது அதைக் கடித்துக் கொண்டே சாந்தமாய்ப் பார்க்கிறது.

சேசு: “இது எனக்கு!  அப்பாவுக்கு நன்றி!” என்கிறார்.

“சேசுவுக்கு இது ரொம்பப் பிடிக்கிறதோ?” 

“ஆம்.  ரொம்பவும் பிடித்திருக்கிறது.  சுத்தமான... சின்ன ஆட்டுக்குட்டி...” என்று கூறியபடி ஆட்டுக்குட்டியை கழுத்தில் அரவணைத்துக் கொண்டு தன் தலையை அதன் தலையுடன் சேர்த்து வைத்து மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.

அப்போது அல்பேயுஸ் தன் இரு மகன்களிடமும்: “உங்களுக்கும் நான் இரண்டு ஆட்டுக் குட்டிகள் கொண்டு வந்திருக்கிறேன்.  ஆனால் அவை கறுப்பு நிறம்.  நீங்கள் சேசுவைப் போல் சுத்தமாயில்லை.  உங்கள் ஆடுகளும் வெள்ளையாயிருந்தால் அப்படித்தான் இருக்கும்.  உங்கள் மந்தை அவைதான்.  அவைகளைச் சேர்த்தே வைத்திருக்க வேண்டும்.  குறும்புக்காரன்கள்.  இனிமேல் தெருவில் அலைந்து கொண்டும் ஒருவன்மேல் ஒருவன் கல்லெறிந்து கொண்டும் திரியக் கூடாது” என்கிறார்.

அவர்கள் வண்டிக்கு ஓடிச் சென்று ஆட்டுக் குட்டிகளைப் பார்க்கிறார்கள்.  அவை வெண்மையாயில்லை.

சேசு தன் ஆட்டுக் குட்டியுடனே தங்கிவிட்டார்.  அதை தோட்டத்திற்குள் கூட்டிச் செல்கிறார்.  அதற்கு தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறார்.  அதுவும் அவரை எப்போதும் அறிந்துள்ளது போல அவர் பின்னாலே செல்கிறது.  சேசு அதை “பூம்பனி” என்று அழைக்கிறார்.  அவர் அப்படி கூப்பிட்டதற்கு அது மகிழ்ச்சியுடன் பதிலுக்கு குரல் கொடுக்கிறது.

விருந்தினர்கள் உண்ண அமர்கிறார்கள்.  மாதா அவர்களுக்கு உரொட்டியும், ஒலிவ காய்களும் பால்கட்டிகளும் பரிமாறுகிறார்கள்.  தேன்விட்ட தண்ணீர்ச் சாடியையும் மேசையில் வைக்கிறார்கள்.  அது ஆப்பிள் சாறாகவும் இருக்கலாம்.  எனக்கு நிச்சயமில்லை.  வெளிறிய நிறமாகத் தெரிகிறது.

மூன்று ஆடுகளையும் மொத்தமாகக் கொண்டு வந்து அவற்றிற்கு தண்ணீர் காட்டவும் பெயர் வைக்கவும் சேசு விரும்பியபடி, அவரும் மற்ற இரு சிறுவர்களும் மூன்று ஆட்டுக் குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  “யூதா, உன்னுடைய ஆட்டின் பெயர் “நட்சத்திரம்.”  ஏனென்றால் அதன் நெற்றியில் அந்த அடையாளம் காணப்படுகிறது.  உன்னுடைய ஆட்டில் புதர்ச்செடி போன்ற எரியும் நிறங்கள் இருப்பதால் அதை “சுடர் ” என்று கூப்பிடலாம்” என்று சேசு சொல்ல, மற்ற இருவரும் “சரி” என்கிறார்கள்.

பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  அல்பேயுஸ் சொல்கிறார்: “பையன்களுடைய சண்டைகள் விஷயத்தைத் தீர்த்து விட்டேன் என நினைக்கிறேன்.  சூசையே நீங்கள் என்னிடம் ஓர் ஆட்டுக்குட்டி வேண்டும் என்று கேட்டீர்களல்லவா, அப்போது எனக்கு இவ்வாறு தோன்றியது:  “சேசு விளையாடுவதற்கென என் சகோதரன் ஓர் ஆட்டுக்குட்டி கேட்கிறார்.  என்னுடைய குறும்புக்காரப் பையன்களுக்கும் இரண்டு ஆட்டுக் குட்டிகளை நான் வாங்க வேண்டும்.  அது அவர்களை சற்று அமைதிப்படுத்தும்.  மேலும் மண்டையை உடைத்து விட்டார்கள்.  முட்டின் தோல் வரிந்து போயிற்று என்று கூறும் மற்ற பெற்றோரின் இடைவிடா ஆவலாதிகளும் நிற்கும்.  பள்ளிக்கூடத்திலும் ஆட்டுக் குட்டிகளிடத்திலுமாக அவர்களை நான் அமைதியாக வைத்துக் கொள்ளலாம்” என்று கூறுகிறார்.  பின்னும் மாதாவைப் பார்த்து: “இந்த வருடம் நீங்களும் சேசுவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டுமே!  காலமாயிற்றே” என்கிறார்.

“சேசுவை நான் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மாட்டேன்” என்று மாதா தீர்மானமாகச் சொல்கிறார்கள்.  மாதா இப்படிப் பேசியது - அதிலும் அர்ச். சூசையப்பர் இருக்கும்போது - ரொம்ப அபூர்வமாகத் தெரிகிறது.

“அதெப்படி!  காலாகாலத்தில் அவன் தயாரிப்பாயிருக்க கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?  அப்போதுதானே முது வயதுக்குரிய தேர்வில் தேற முடியும்?” 

“பையன் தயாராகிவிடுவார்.  ஆனால் அவர் பள்ளிக்கூடம் போக மாட்டார் என்பது உறுதிதான்.” 

“இஸ்ராயேலிலேயே இப்படிச் செய்கிற ஸ்திரீ நீங்கள் மட்டுமாகத்தான் இருக்கும்.” 

“அது நான் மட்டுமாகத்தான் இருப்பேன்.  அப்படித்தான் செய்யப்போகிறேன்” என்று கூறிய மாமரி சூசையப்பரைப் பார்த்து: “அது சரிதானே?” என்கிறார்கள்.

“ஆம்.  அது சரிதான்.  சேசு பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டிய அவசியமில்லை.  மரியா தேவாலயத்தில் வளர்ந்தார்கள்.  வேதப்பிரமாணத்தைப் பற்றி எந்த வேதபாரகருக்கும் தெரிவதெல்லாம் அவர்களுக்கும் தெரியும்.  சேசுவுக்கு  அவர்களே ஆசிரியராக இருப்பார்கள்.  எனக்கும் அதுவே விருப்பம்” என்கிறார் அர்ச். சூசையப்பர்.

“பையனை நீங்கள் கெடுக்கிறீர்கள்.” 

“அப்படிச் சொல்ல முடியாது.  நாசரேத்தில் மிகச் சிறந்த சிறுவன் சேசுதான்.  சேசு அழுவதையோ, குறும்பு செய்வதையோ கீழ்ப்படியாமலிருப்பதையே மரியாதைக் குறைவாக நடப்பதையோ எப்பொழுதாவது நீங்கள் பார்த்ததுண்டா?” 

“பார்த்ததில்லைதான்.  ஆனால் நீங்கள் தொடர்ந்து அவனைக் கெடுத்தால் அதையெல்லாம் அவனும் செய்ய வந்து விடும்.” 

“குழந்தைகளை வீட்டில் வைத்திருப்பதால் மட்டும் அவர்களைக் கெடுப்பதாகிவிடாது.  அவர்களை வீட்டில் வைத்திருப்பதென்பது அவர்களை புத்திசாலித்தனமாகவும் முழுமனதுடனும் நேசிப்பதை உள்ளடக்கியதே.  அப்படித்தான்  நாங்கள் சேசுவை நேசிக்கிறோம்.  மேலும் மரியா ஓர் ஆசிரியரைவிட அதிகம் கற்றிருப்பதனால் அவர்களே சேசுவுக்கு உபாத்தியாயராயிருப்பார்கள்.” 

“இப்படி உங்கள் சேசு ஒரு மனிதனாகும்போது அவன் மனவலிமையற்று ஒரு ஈயைக் கண்டும் பயப்படும் சின்ன பெண்ணைப்போல இருப்பான்.” 

“அப்படி சேசு இருக்க மாட்டார்.  மரியா ஒரு உறுதியுள்ள ஸ்திரீ.  அவர்கள் சேசுவுக்கு ஓர் ஆண்மகனுக்குரிய கல்வியை ஊட்டுவார்கள்.  நானும் கோழையல்ல.  ஓர் ஆண்மகனுக்குரிய நன்மாதிரிகையை சேசுவுக்கு நான் கொடுக்க முடியும்.  சேசுவிடம் எந்த உடல், உள்ளக் கோளாறும் கிடையாது. ஆகவே அவர் தன் உடலிலும் உள்ளத்திலும் நேரிய திடமுள்ளவராய் வளருவார்.  அல்பேயுஸ், இதைப்பற்றி நீர் உறுதியாயிருக்கலாம்.  சேசு குடும்பத்திற்கு மதிப்புக் குறைவாக இருக்க மாட்டார்.  எதுவென்றாலும் நான் அப்படித்தான் தீர்மானம் செய்திருக்கிறேன்.” 

“ஒருவேளை இத்தீர்மானத்தை மரியா செய்து நீர் அதை...”

“அப்படியிருந்தாலும்தானென்ன?  நேசிக்கிற இருவர் ஒரே எண்ணங்களையும் ஒரே விருப்பங்களையும் கொண்டிருந்து ஒருவரின் விருப்பமே மற்றவரின் விருப்பமாக ஏற்றுக் கொள்ளப்படுவது நல்லதுதானே?  மரியா சில்லரைக் காரியங்களை விரும்பினால் நான் மறுத்துவிடுவேன்.  ஆனால் ஞானம் நிரம்பிய காரியத்தை அவர்கள் சொல்கிறார்கள்.  அதற்கு நான் சம்மதிக்கிறேன்.  அதையே என்னுடையதாகவும் ஆக்கிக் கொள்கிறேன்.  நாங்கள் நேசிக்கிறோம்.  முதல் நாளில் செய்ததுபோலவே செய்கிறோம்.  அப்படியே வாழ்நாள் முழுவதும் செய்வோம்.  மரியா சரிதானே?” 

“ஆம்.  சரிதான்.   மேலும் - இது நடவாமலிருக்கட்டும் - நம் இருவரில் ஒருவரை விட்டுவிட்டு மற்றவர் மரணமடைந்தால், அப்போதும் அப்படியே நேசிப்போம்...” 

மாதாவின் மைத்துனி இப்போது கூறுகிறார்: “நீங்கள் சொல்வது மிக சரியாகத் தெரிகிறது.  நான் கற்றுக் கொடுக்க முடிந்தால் நன்றாயிருக்கும் என நினைக்கிறேன்.  பள்ளிக்கூடத்தில் நம் பிள்ளைகள் நல்லதையும் கெட்டதையும் கற்றுக் கொள்கிறார்கள்.  வீட்டில் நல்லதை மட்டும் கற்பார்கள்... ஆனால், மரியா நீங்கள்...” 

“மைத்துனி, நீ என்ன விரும்புகிறாய்?  சும்மா சொல்.  உன்னை நான் நேசிப்பதும் உனக்குப் பிரியமான ஏதாவது செய்வதில் நான் மகிழ்ச்சியடைவதும் தெரியும்தானே?” 

“நான் நினைக்கிறேன், யாகப்பனும் யூதாவும் சேசுவைவிட கொஞ்சம் மூத்தவர்கள்.  அவர்கள் ஏற்கெனவே பள்ளிக்கூடம் செல்கிறார்கள்.  அங்கே என்னத்தைத்தான் படித்து விட்டார்கள்...?  சேசு இதற்குள்ளாகவே வேதப்பிரமாணங்களை எவ்வளவு அழகாக அறிந்து வைத்திருக்கிறான்!  நீங்கள் சேசுவுக்குப் படிப்பிக்கும்போது இவன்களையும் கூடவைத்துச் சொல்லிக் கொடுப்பீர்களானால் அவர்கள் அதிகம் கற்றவர்களாயும் அதிக நல்ல நடத்தை யுள்ளவர்களாயும் இருப்பார்களே.  அவர்கள் ஒன்றுவிட்ட சகோதரர்கள்தானே?  ஒருவரையயாருவர் அண்ணன் தம்பியாக நேசிக்க வேண்டியவர்கள்தானே?  அப்படியானால் எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சியாயிருக்கும் மரியா!” 

“சூசையப்பர் விரும்பி உன் கணவரும் ஒத்துக் கொண்டால் எனக்கும் அது விருப்பம்தான்.  ஒருவனுக்குப் போதிப்பதும் மூன்று பேருக்குப் போதிப்பதும் ஒன்றுதான்.  வேதாகமம் முழுவதையும் கற்பிப்பது ஒரு சந்தோஷமான காரியமே.  அவர்கள் வரட்டும்.”

இதற்கிடையில் அங்கு வந்து அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களும் கடைசி முடிவுக்குக் காத்திருக்கிறார்கள்.

அல்பேயுஸ் மாதாவைப் பார்த்து: “அவன்கள் உங்களுக்கு வெறுத்துப் போகும்படி ஆக்கிவிடுவார்கள் மரியா” என்கிறார்.

“இல்லையே.  அவர்கள் என்னுடன் எப்பொழுதும் நன்றாகவே இருக்கிறார்கள்.  (பின் சிறுவர்களைப் பார்த்து) நான் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தால் நல்ல பிள்ளைகளாயிருப்பீர்கள் அல்லவா?” என்று மாதா கேட்கவும், அவ்விரு சிறுவர்களும் ஒருவன் மாதாவின் வலப்பக்கமாகவும் ஒருவன் இடப்பக்கமாகவும் கிட்டப் போய் மாதாவின் தோளைப் பிடித்துக் கொண்டு தங்கள் தலைகளையும் அதிலே சாய்த்துக் கொண்டு தாங்கள் ரொம்ப நல்ல பிள்ளைகளாக இருப்போம் என்று சொல்கிறார்கள்.

அதற்கு மாதா: “அவர்கள் செய்து பார்க்கட்டுமே அல்பேயுஸ்.  நானும் செய்து பார்க்கிறேன்.  பரீட்சார்த்தமாக நடப்பதைப் பற்றி உங்களுக்கு அதிருப்தி ஏற்படாது என்று நினைக்கிறேன்.  தினமும் ஆறாம் மணியிலிருந்து மாலை வரை அவர்கள் வரட்டும்.  அது போதுமானது.  அவர்களுக்குக் களைப்பு ஏற்படாமல் நான் கற்றுக் கொடுக்கிறேன்.  அவர்களுடைய கவனத்தையும் ஈர்க்க வேண்டும். ஓய்வாகவும் இருக்கச் செய்ய வேண்டும்.  அவர்களைக் கண்டுபிடித்து அன்பாக வைத்திருக்க வேண்டும்.  அவர்களின் அன்பையும் பெற வேண்டும் - அப்போதுதான் நல்ல கல்விப் பயிற்சி கிடைக்கும்.  நீங்கள் என்னை நேசிப்பீர்கள்தானே?” 

இதற்கு சிறுவர்கள் இருவரும் மாதாவுக்கு தங்கள் முத்தத்தால் பதில் கொடுக்கிறார்கள்.

“பார்த்தீர்களா?” 

“ஆம். அது சரி.  உங்களுக்கு நான் நன்றிதான் கூற முடியும்.  ஆனால், தன்னுடைய தாய் மற்றவர்களுடன் அலுவலாயிருப்பதைக் காணும்போது சேசு என்ன நினைக்கக் கூடும்?  சேசு!  என்ன சொல்கிறாய்?” 

“நான் சொல்வது:  அவர்களுக்குக் காது கொடுப்பவனும் தன் இல்லத்தை அவர்களுக்கருகில் அமைத்துக் கொள்கிறவனும் பாக்கியவான்.  ஞானத்தைப் பொறுத்த வரையிலும் என் தாயின் நண்பர்களாயிருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.  நான் நேசிக்கிறவர்கள் என் தாயின் நண்பர்களாக இருப்பதைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்.” 

“இப்படிப்பட்ட வார்த்தைகளை இந்தச் சிறுவனின் வாயில் வைப்பது யார்?” என்று சொல்லி அல்பேயுஸ் ஆச்சரியப்படுகிறார்.

“இந்த உலகிலுள்ள யாருமில்லை சகோதரா!” என்று அர்ச். சூசையப்பர் கூற காட்சி முடிகிறது.


சேசு கூறுகிறார்:

எனக்கும் யாகப்பன், யூதாவுக்கும் மாமரி ஆசிரியரா யிருந்தார்கள்.  நாங்கள் உறவினராக இருந்ததால் மட்டுமல்ல, நாங்கள் கற்ற கல்வியாலும் நாங்கள் மூவரும் ஒன்றாக வளர்ந்ததாலும் ஒருவரையயாருவர் சகோதரர்களைப்போல் நேசித்தோம் - ஒரே கொம்பால், என் மாதாவால் தாங்கப்பட்ட மூன்று கிளைகளைப் போலிருந்தோம்.  என் இனிய தாயைப்போன்ற ஒரு வேதசாஸ்திரி இஸ்ராயேலிலே கிடையாது.  அவர்கள ஞானத்தின் இருப்பிடம் - உண்மையான ஞானத்தின் இருப்பிடமா யிருந்தார்கள்.   இவ்வுலகத்திற்கும் மோட்சத்திற்குமாக எங்களுக்குக் கற்பித்தார்கள்.  “எங்களுக்குக் கற்பித்தார்கள்” என்கிறேன்.  ஏனென்றால் என் ஒன்றுவிட்ட சகோதரர்களைப் போலவே நானும் அவர்களுடைய மாணவனாயிருந்தேன்.  இவ்வாறு கடவுளுடைய முத்திரை சாத்தானின் விசாரணைகளிலிருந்து காப்பாற்றப்பட்டது.  ஒரு சாதாரண வாழ்வின் தோற்றத்தினால் அது பாதுகாக்கப்பட்டது. இந்த இனிமையான காட்சியை நீ சுவைத்தாயா?  இப்பொழுது சமாதானத்தில் இரு.  சேசு உன்னுடன் இருக்கிறார்.