இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயின் வழியே செயல்படுவதானது தம திரித்துவ மூன்று தேவ ஆட்களையும் கண்டு பாவிப்பதாகும்.

35. இப்பக்தி முயற்சியின் சிறப்பை சரியான விதமாய் விவரித்துச் சொல்வதற்கு சுபாவத்திற்கு மேலான ஒளி எனக்கு அதிகம் தேவைப்படும். சில குறிப்புகள் கொடுப்பதோடு நான் திருப்தியடைந்து கொள்கிறேன்.

(1) மரியாயின் கரங்கள் வழியாக சேசுவிடம் நம்மைக் கொடுப்பதானது, பிதாவாகிய சர்வேசுரனைக் கண்டு பாவிப்பதாகும். அவர் தமது ஏக குமாரனை மாமரி வழியாகவே நமக்குக் கொடுத்தார். தம்முடைய வரப்பிரசாதத்தை மாதாவின் வழியாகவே நமக்குத் தருகிறார்.

அது சுதனாகிய சர்வேசுரனையும் கண்டு பாவிப்பதாகும். அவர் மாதா வழியாகவே நம்மிடம் வந்தார். "அவர் செய்தது போல் நாமும் செய்யும்படி நமக்கு மாதிரிகை காண்பித்து'' அவர் நம்மிடம் வந்த வழியாகவே நாமும் அவரிடம் போகும்படி விரும்பிக் கேட்டிருக்கிறார் -- மாதாவே அந்த வழியாவார்கள்.

மேலும் அது பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனையும் கண்டு பாவிப்பதாகும். அவர் தமது வரங்களையும் கொடைகளையும் மாமரி வழியாகவே நம்மீது பொழிகிறார். "வரப்பிரசாதம் எந்த வாய்க்கால் வழியாக நமக்கு அருளப்பட்டதோ அந்த வாய்க்கால் வழியாகவே அதன் கர்த்தாவிடம் திரும்பிச் செல்ல வேண்டுமென்பது நீதியல்லவா?" என்று அர்ச். பெர்னார்ட் கேட்கின்றார்.

இப்பக்தி முயற்சி சேசுவை மகிமைப்படுத்துவதாகும். 

36. (2) மாதாவின் வழியாக சேசுவிடம் செல்வது உண்மையிலேயே சேசு கிறீஸ்துவை மகிமைப்படுத்துவதாகும். ஏனென்றால், நம் பாவங்களின் காரணமாக அவருடைய அளவற்ற பரிசுத்ததனத்தை நேரடியாகவும், நாமாகவும் அணுகிச் செல்ல நாம் தகுதியல்ல என்பதை அது நமக்குக் காட்டுகிறது. நம் மத்யஸ்தரான அவரி டத்தில் நமக்காக பரிந்து பேசுகிறவராயும், மத்யஸ்தியாகவும் இருக்க மாதா நமக்குத் தேவைப்படுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது. 

சேசுவை நம் மத்யஸ்தராகவும், நம் சகோதரராகவும் அணுகுவதும், அதே சமயத்தில் நம் கடவுளும், நீதிபதியுமான அவர் முன்னிலையில் நம்மையே தாழ்த்துவதாகவும் அது ஆகிறது. ஒரு வார்த்தையில் சொன்னால், கடவுளின் உள்ளத்திற்கு எப்போதும் மிகவும் பிரியமாயிருக்கிற தாழ்ச்சியைக் கைக்கொள்வதே இப்பக்தி முயற்சியாகும்.