இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே!

கன்னிமரியம்மாள் கடவுளின் தாய்! என்ன மேன்மையான பட்டம்! தேவமாதாவின் பிரார்த்தனையில் நாம் நம் அன்னைக்குச் சாற்றும் புகழ்மாலைகளுள் இது தனிச்சிறப்பு வாய்ந்ததொன்று என்றால் பொய்யன்று. இத்தலைப்பின் முழு அர்த்தத்தையும், முக்கியத்துவத்தையும் சரிவர அறிவது எளிதல்ல. எனினும் நம்மால் இயன்றவரை இதன் கருத்தை உணர முயலுவோம்.

நமது கத்தோலிக்க வேதத்தில் மனிதனின் அறிவுக்கெட்டாத அநேக பரம இரகசியங்கள் (Mysteries) இருக்கின்றன; அவைகள் இருக்கத்தான் வேண்டும். ஏனெனில் நம் பரிசுத்த வேதம் தெய்வீகத் துவக்கம் கொண்டது; கடவுளிடத்திலிருந்து பிறந்து, அவரையே ஆதாரமாகக் கொண்டது. ஆனால் கடவுளே முதலில் இரகசியங்களுள் பெரிய இரகசியம். அவர் நம் அறிவுக்குச் சரிவர எட்டாதவர். நம் அறிவு குறுகியது; அதற்கோர் வரம்புண்டு. 

எனவே இவ்வித அறிவால் வரம்பற்ற சர்வேசுரனையும், அவர் வெளிப்படுத்திய சத்தியங்களையும் தெளிவாக ஆய்ந்தறிய நாம் வலிமையற்றவர் களாயிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. கடவுளின் மனிதாவதாரம், திவ்விய நற்கருணையில் சேசுவின் பிரசன்னம், பரிசுத்த தமத்திரித்துவம் இவைகள் போன்ற தேவ இரகசியங்களைத் தெளிவாக அறிந்தவர் யார்? அல்லது தேவ பராமரிப்பு (Providence), கடவுளின் காத்தல் தொழில் (Conservation) போன்ற சத்தியங்களை நன்கு உணர்ந்தவர் யார்?

ஆயினும் இப்பரம இரகசியங்கள் உண்மையாகவே உள்ளன என்பதை விசுவாசம் நமக்குப் படிப்பிக்கின்றது. ஆனால் அவற்றை ஆராய்ந்தறிதல் எளிதன்று. நமது அனுதின வாழ்க்கையில் நடைபெறும் பல சம்பவங்களை முதலாய் நன்கறிதல் கடினம். உதாரணமாக, நாம் எத்தனையோ கனவுகள் காண்கிறோம்; ஆயினும் இக்கனவுகள் எவ்விதம் உதிக்கின்றன என்பதை இதுவரை ஒருவரும் சரிவரக் கண்டுபிடிக்கவில்லை. இப்படியிருக்க பரம இரகசியங்களைக் கண்டுபிடிப்பது எங்ஙனம்?

“அர்ச். கன்னிமரியம்மாள் கடவுளின் தாய்” என்ற பரம இரகசியம், பரிசுத்த தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனின் மனிதாவதாரப் பரம இரகசியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விசுவாச சத்தியம். மனிதவுருவெடுத்த சுதன் கடவுள்; எனவே அவரை ஈன்றெடுத்தவர்கள் “கடவுளின் தாய்” என்றழைக்கப் படுதல் முற்றிலும் சரியே. இதை வேதாகமம் நமக்குப் படிப்பிக்கின்றது; தவறாவரம் பெற்ற திருச்சபை போதிக்கின்றது; இது எவ்விதம் சாத்தியமாகுமென்பது நமது சிற்றறிவுக்கு எட்டாவிடினும், இவ்விதம் கன்னிமரியம்மாளைக் கடவுளின் தாயென அழைப்பது நியாயமெனக் கூறுகின்றது.

திருச்சபையின் துவக்கத்திலிருந்த சில வேத விரோதிகள் இவ்வுண்மையை மறுத்து வந்தனர். அவர்களில் ஒரு சாரார், “கிறீஸ்துநாதர் கடவுள் அன்று; எனவே அவரைப் பெற்ற தாய் “தேவதாய்” என அழைக்கப்பட அருகதையற்றவள்” என்று தேவதூஷணம் கக்கினர். 

மற்றொரு சாரார், “கிறீஸ்துநாதர் மனிதனைப் போல் தோற்றமளித்தாரேயன்றி, அவர் மெய்யான மனிதனல்ல; எனவே அவரை மரியம்மாள் பெற்றெடுக்க வில்லை” என்று கூறித் தங்கள் அறியாமையைக் காட்டினர். 

மற்றும் சிலர், “சேசுநாதர் ஒரு சாதாரண மனிதன் மட்டுமே; இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன், கிறீஸ்துநாதர் என்ற அந்தச் சாதாரண மனிதனில், ஒரு தேவாலயத்தில் வசிப்பது போன்று வசித்து வந்தார்; ஆகையால் மரியம்மாள் மனித சுபாவம் மட்டும் அடங்கிய கிறீஸ்துநாதரைப் பெற்றதால் அவர்களைக் “கிறீஸ்துவினுடைய மாதா” (Christotokos) என்று அழைப்பதே சரி, “கடவுளுடைய மாதா” (Theotokos) என்று அழைப்பது சரியல்ல” என்று விதண்டாவாதம் செய்தனர். 

இவர்களெல்லோருடைய கொட்டங்களையும் கி.பி. 431-ல் எபேசுஸ் நகரில் கூடிய திருச்சபையின் பொதுச்சங்கம் (Oecumenical Council) கண்டித்து, “அர்ச். மரியம்மாள் மெய்யாகவே கடவுளின் தாய்” என்னும் சத்தியத்தை எவரும் மறுக்கக் கூடாத விதமாய் ஸ்திரப்படுத்தியது. இதனாலன்றோ இன்றும், “அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் சேசுகிறீஸ்துவையும் விசுவசிக்கிறேன்; இவர்... அர்ச். கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்... மரித்து அடக்கம் செய்யப்பட்டார்” என்று, விசுவாச மந்திரத்தைச் சொல்லும் ஒவ்வொரு தடவையும், இச்சத்தியத்தை நாம் விசுவசிப்பதாகக் கூறுகிறோம்.

அர்ச். மரியம்மாள் தேவதாய் என்பதற்கு சுவிசேஷத்தில் பல ஆதாரங்களுண்டு. தேவதாய்க்கு மங்களவார்த்தை கூற வந்த கபிரியேல் தூதன், “இஸ்பிரீத்துசாந்து உமது மேல் எழுந்தருளி வருவார்; உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும்; ஆகையால் உம்மிடம் பிறக்கும் பரிசுத்தர் “தேவசுதன்” எனப்படுவார்” (லூக்.1:35) என்னும் வார்த்தைகளால் இச்சத்தியத்தை வெளிப்படுத்தினார். 

அன்றியும் நம் மாதா எலிசபெத்தம்மாளைச் சந்திக்கச் சென்றபோது, “என் ஆண்டவருடைய தாய் என்னிடத்தில் எழுந்தருளி வர எனக்குக் கிடைத்ததெப்படி?” (லூக். 1:43) என்று அவர்களை எலிசபெத்தம்மாள் புகழ்ந்து கூறினாள். 

மேலும் “கன்னிமரியம்மாள் சேசுநாதரைப் பெற்றெடுத்தார்கள்” எனப் பலமுறை சுவிசேஷத்தில் வாசிக்கிறோம். கிறீஸ்துநாதரில் தேவசுபாவம், மனித சுபாவம் என இருவகைச் சுபாவம் உண்டு. ஆனால் அவரில் ஒரே ஒரு ஆள் (Person) மாத்திரம் உண்டு; அந்த ஆள் தேவ ஆள் (Divine Person) ; மனித ஆள் (Human Person) அல்ல. சுபாவத்தை (Nature) யல்ல, ஆனால் ஆளையே பெற்றெடுத்தார்கள் மாமரி. எனவே இந்த தேவ ஆளைப் பெற்றெடுத்த தாய் “தேவதாய், கடவுளின் தாய், சர்வேசுரனுடைய மாதா” என்பதில் என்ன சந்தேகம்?

“கன்னிமரியம்மாள் கடவுளின் தாய்” என்பதால் கிறீஸ்துநாதரிடமிருந்த தேவ சுபாவத்துக்குக் காரணம் மரியம்மாள் என்று நாம் கூறுவதில்லை. கிறீஸ்துநாதரிட மிருந்த மனித சுபாவத்திற்கு மட்டுமே அவர்கள் காரணம். எனினும் தேவ சுபாவமும், மனித சுபாவமும் கொண்ட கிறீஸ்துநாதரைப் பெற்றெடுத்தவர்கள் அவர்களே.

பின்வரும் உதாரணத்தால் இச்சத்தியம் ஒரு சிறிது தெளிவாகும். அருளப்பன், அருளாயி என்னும் தம்பதிகளுக்கு இராயப்பன் என்ற மகவு பிறக்கிறதென்று வைத்துக் கொள்ளுவோம். இராயப்பன் ஒரே குழந்தை; இரு குழந்தைகளல்ல; ஆயினும் அக்குழந்தையினிடம் ஆத்துமம், சரீரம் என்னும் இரு பொருட்கள் உண்டு. ஆத்துமத்தை உண்டாக்கியது தாயுமல்ல, தகப்பனுமல்ல--கடவுளே அதை நேரடியாக உண்டாக்கினார். தாயும், தகப்பனும் குழந்தையின் சரீரத்துக்கே காரணமாயிருக்கின்றனர்; உண்மை இதுவெனினும் இராயப்பன் தன் குழந்தை என்று பெருமை கொள்ளுகிறாள் அருளாயி; இதை எல்லோரும் ஆமோதிக்கின்றனர். அருளாயி இராயப்பனின் தாய் எனக் கூறாமல், அவள் குழந்தையின் சரீரத்துக்கு மட்டுமே தாய் என எவரும் கூறுவதில்லை. இராயப்பனைப் பெற்றவள் அருளாயி. எனவே இராயப்பனின் தாய் என அழைக்கப்பட அவளுக்குச் சகல உரிமையும் உண்டு.

“கன்னிமரியம்மாள் கடவுளின் தாய்.” உண்மைக் கிறீஸ்துவர் அனைவருக்கும் ஆனந்தமளிக்கும் சத்தியம் இது. ஆதிகால முதல் திருச்சபையின் வேதசாஸ்திரிகள் இந்த சத்தியத்தின் நினைவால் அகமகிழ்ந்தனர்; கன்னி மரியம்மாளுக்குக் கிடைத்த இவ்வுன்னத பதவியைக் குறித்து அவர்களைப் பலவாறாய்ப் புகழ்ந்தேற்றினர். அவர்களை விட மேன்மை பொருந்திய சிருஷ்டியொன்றைக் கடவுள் இனி சிருஷ்டிக்க முடியாதென ஒருவாய்ப்படக் கூறினர். 

“இப்போது நாம் காணும் உலகைவிடப் பன்மடங்கு மேலான உலகைத் தேவன் படைக்க முடியும்; மேலான மோட்சத்தையும் படைக்க முடியும்; ஆனால் தேவதாயைவிட மேலான ஒரு தாயைப் படைப்பது அவரால் கூடாது” என்று அர்ச். பொனவெந்தூரா எழுதுகிறார். (Speculum B.M.V.Lec. 10).

மனுக்குலத்தின் பெருமையான இக்கன்னி மரியாயைக் கண்டு நாமும் அக்களிப்போம்; தாயின் பெருமையில் பிள்ளைகளுக்கும் பங்குண்டன்றோ? படைக்கப்பட்ட சகல சிருஷ்டிகளுக்கும் மேலாக அவளை உயர்த்திய தேவனுக்கு நன்றி கூறுவோம்; அவளைப் பாடிப் புகழுவோம்.

“ஓ! பரிசுத்த மரியாயே! நீர் மெய்யாகவே “தேவதாய்” என்று நாங்களனைவரும் விசுவசிக்கிறோம். நீர் பெற்ற குமாரன் தேவனின் திருச்சுதன் என்று விசுவசிக்கிறோம். படைப்புண்ட சிருஷ்டிகள் யாவற்றிலும் உயர்ந்தவர் நீரே! உம்மை இவ்வுன்னத பதவிக்கு உயர்த்திய திரியேக தேவனுக்கு எங்கள் நன்றியையும் வணக்கத்தையும் செலுத்துகிறோம். 

அம்மணீ! நீர் தேவனுக்கு மட்டும் தாயன்று; தேவனுடைய கரைகாணா இரக்கத்தால், நீர் எங்களுக்கும் தாய்! நாங்கள் உம்முடைய பிள்ளைகள்! ஆ! எங்களுடைய பாக்கியத்தை என்னென்று உரைப்பது! தேவதாயின் பிள்ளைகள் என்னும் பெயருக்கேற்ப நாங்கள் ஜீவிக்க வரம் பெற்றுத்தாரும் அம்மா!” 

சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!