இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசு கூறுகிறார்

5 செப்டம்பர்  1944.

சேசு கூறுகிறார்:

ஞானாகமம் ஞானத்தைப் புகழ்ந்து என்ன சொல்கிறது?  “ஞானம் அறிவுடையது, பரிசுத்தமானது, தனிச்சிறந்தது, பலதிறத்தது, சூட்சமானது.” (7:22)  இவ்வாறே அதன் இலட்சணங்களைக்கூறி இறுதியில்:  “ஞானமானது எல்லா வல்லமையும் உடையது;  யாவற்றையும் நோக்குவது; அறிவுடைய தூய மிக நுண்ணிய ஞானப் பொருளையெல்லாம் ஊடுருவுவது; கடவுளின் வல்லமையின் மூச்சாக இருக்கின்றது.  அதனால் மாசு எதுவும் அதனுட் செல்லாது.  அவருடைய நன்மைத்தனத்தின் சாயலாக அது இருக்கின்றது.  தனித்திருக்கின்றது, ஆயினும் சகலத்தையும் அது செய்யக் கூடும்.  ஆயினும் தான் மாறாதிருந்து யாவற்றையும் புதுப்பிக்கும்.  பரிசுத்த ஆன்மாக்களுடன் சேர்ந்து அவர்களை சர்வேசுரனுடைய சிநேகிதராகவும் தீர்க்கதரிசிகளாகவும் ஆக்கும்” என்கிறது (ஞானாகமம் 7:23,25,27).

சூசையப்பரை நீ காண்கிறாய்.  அவர் மனித கலைக்கியானத்தினால் அல்ல, சுபாவத்திற்கு மேலான கல்வியில் மாசற்ற கன்னிகையான முத்திரையிடப்பட்ட புத்தகத்தை வாசிக்கக் கூடியவரானார்.  மற்றவர்கள் ஒரு பெரிய புண்ணியத்தை மட்டுமே காண்கின்ற இடத்தில் அவர் மனிதத் தன்மைக்கு மேலான ஒரு பரம இரகசியத்தைக் “காண்கிறார்.”  இதனால் அவர் தீர்க்தரிசன உண்மைகளுக்கருகில் வருகிறார்.  கடவுளுடைய வல்லமையின் மூச்சாகவும், எல்லாம் வல்லவரின் நிச்சயமான நீட்டமாகவுமிருக்கிற ஞானம் ஊட்டப்பெற்றவராக அவர் இருப்பதால், வரப்பிரசாதத் திருநிகழ்ச்சியாயிருக்கிற மரியாயென்னும் சமுத்திரத்தில் அவர் பாதுகாப்பான உள்ளத்துடன் பயணம் செல்கிறார்.  மரியாயின் ஞானத் தொடர்புகளினால் அவர் ஊடுருவப்படுகிறார்.  புனிதமான அவர்களுடைய ஆன்மாக்களின் அமைதியிலே உதடுகளல்ல, உள்ளங்கள் பேசுகின்றன.  அங்கே கடவுள் மாத்திரமே குரலோசைகளைக் கேட்க முடியும்.  மேலும் கடவுளால் நன்கு விரும்பப்பட்டவர்களும் அவைகளைக் கேட்பார்கள்.  ஏனெனில் அவர்கள் அவருடைய பிரமாணிக்கமுள்ள ஊழியரும் அவரால் நிரம்பியவர்களுமாயிருக்கிறார்கள்.

நீதிமானாகிய சூசையப்பர் வரப்பிரசாதத்தால் நிறைந்திருக்கிற மரியாயுடன் ஒன்றுபட்டிருப்பதாலும், அவர்களின் அருகாமையில் இருப்பதாலும், அவருடைய ஞானம் வளருகின்றது.  கடவுளின் மிக ஆழ்ந்த இரகசியங்களைக் கண்டுபிடிக்க அவரைத் தயாரிக்கின்றது.  அப்பரம இரகசியங்களை மனிதனுடையவும் பசாசினுடையவும் கண்ணிகளிலிருந்து அவர் காப்பாற்றவும் தற்காக்கவும் உதவுகிறது.  அதே சமயத்தில் அவருக்கும் அது சக்தியூட்டுகிறது.  அது நீதிமானை அர்ச்சிஷ்டவனாக்குகிறது.  அர்ச்சிஷ்டவனை மணவாளியினுடையவும் தேவ குமாரனுடையவும் காவலன் ஆக்குகிறது.

கற்புள்ளவரான அர்ச். சூசையப்பர், கடவுளின் முத்திரையை அகற்றாமலே, தம்முடைய கற்பை சம்மனசுக்களின் வீர வைராக்கியத்திற்கு உயர்த்தி, அதனால் கடவுள் தம் கன்னி இரத்தினத்தில் நெருப்பால் எழுதிய வார்த்தையை வாசிக்கக் கூடியவராகிறார்.  அவர் வாசித்த வார்த்தையை அவருடைய ஞானம் மறுமுறை கூறுவதில்லை.  ஆனால் அவர் வாசித்தது மோயீசன் கற்பலகைகளில் வாசித்ததை விட மேலானது.  சங்கையற்ற கண்கள் இந்தப் பரம இரகசியத்தை துருவிப் பார்ப்பதைத் தடுக்கும்படி, அவர் அந்த முத்திரையின் மேல், சிங்கார வனத்தின் வாசலிலே வைக்கப்பட்ட நெருப்பான அதிதூதனைப் போல தம்மையே முத்திரையாக வைத்தார்.  அதனுள்ளே நித்திய பிதா “குளிர்ச்சியான மாலைப் பொழுதில் உலாவியும்” அவருடைய சிநேகமாயிருக்கிற அவர்களுடன் சம்பாஷித்துக் கொண்டும் தம் மகிழ்வைக் காண்கிறார்.  அவர்களே பரம பிதாவின் லீலி மலர்த்தோட்டம், நறுமணங்களால் வாசனையூட்டப் பெற்ற ஆகாயம், புதிய காலைத் தென்றல், அழகிய விண்மீன், கடவுளின் ஆனந்தம்.  புதிய ஏவாள் அங்கே இருக்கிறாள் சூசையப்பருக்கு முன்பாக.  அவருடைய எலும்பின் எலும்பாக அல்ல,  அவருடைய மாம்சத்தின் மாம்சமாக அல்ல, ஆனால் அவருடைய வாழ்வின் துணையாக.  கடவுளின் உயிருள்ள பேழையை அவர் தம் பாதுகாப்பில் ஏற்றுக் கொள்கிறார்.  எப்படி அவைகளை அவர் பெற்றுக் கொண்டாரோ அப்படியே, அதே பரிசுத்தமாக, கடவுளிடம் அவர்களைத் திரும்பவும் அவர் ஒப்படைக்க வேண்டும்.

மறைபொருளான அநதப் புத்தகத்தின் மாசற்ற பக்கங்களிலே “கடவுளுக்கு மணவாளி” என்று எழுதப்பட்டிருந்தது... பரிசோதனையின் நேரத்திலே சந்தேகம் என்னும் அரவின் சீறுதல் அவரை வதைத்த போது அவர் ஒரு மனிதன் என்ற முறையிலும், கடவுளின் ஊழியன் என்ற முறையிலும் வேதனைப்பட்டார்.  சந்தேகிக்கப்பட்ட தேவ துரோகத்தினிமித்தம் வேறு எந்த மனிதனும் படாத வேதனையைப் பட்டார்.  ஆனால் அது இனி வரவேண்டியிருந்த சோதனையே.  இப்பொழுது இவ்வரப்பிரசாத வேளையில் மிக உண்மையுள்ள தேவ ஊழியத்தைக் காண்கிறார்.  தம்மை அதில் ஈடுபடுத்துகிறார்.  பரிசோதிக்கப்பட்டு, கடவுளின் துணை உதவியாளர்களாவதற்கு எல்லாப் புனிதர்களுக்கும் நேரிடுவதுபோல் அவருக்கும் சோதனையின் புயல் வீசும்.

லேவியராகமத்தில் நீ என்ன வாசிக்கிறாய்? “ஆரோன் என்னும் உன் சகோதரன் சாகாதபடிக்கு திருஸ்தலத்திலே அதாவது பெட்டகத்திற்கு மேலிருக்கிற கிருபாசனத்திற்கு முன் தொங்கும் திரைக்குள்ளே எப்போதும் வர வேண்டாம் என்று சொல்.  ஏனென்றால் கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நாம் காணப்படுவோம்.  அதில் பிரவேசிக்கும் முன் அவன் செய்ய வேண்டியது ஏதெனில், பாவ நிவாரணப் பலியாக ஓர் இளங்காளையையும், சர்வாங்க தகனப் பலியாக ஓர் ஆட்டுக்கடாவையும் செலுத்தக்கடவான்.  மெல்லிய சணல் நூல் ஆடை உடுத்தி சணல் நூல் சல்லடத்தால் தன் நிர்வாணத்தை மறைப்பானாக” (லேவியர். 16:2-4).

இங்கோ சூசையப்பர் உண்மையிலேயே கடவுளுடைய பரிசுத்த முற்றத்தில் நுழைகிறார்.  கடவுள் விரும்பும் போதும், அவர் விரும்பும் அளவிலும், கடவுளின் ஆவியானவர் அசைவாடும் பெட்டகத்தை மறைக்கும் திரைக்கப்பால் நுழைகிறார்.  அவர் தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்கிறார்.  உலகின் பாவத்திற்காகவும், அவ்வித பாவப் பரிகரிப்பாகவும் செம்மறியானவரைத் தகனப் பலியாக ஒப்புக்கொடுப்பார்.  அதை அவர் சணல் ஆடை உடுத்தியவராகச் செய்கிறார்.  தன் மாம்சத்தின் புருஷ புலன் உணர்தல்களை அழிப்பதற்காக அவைகளை பரித்தியாகம் பண்ணுகிறார்.  அவை முன்பு ஒரு தடவை, காலத்தின் தொடக்கத்திலே, கடவுளுக்கு மனிதன் மேலிருந்த உரிமைகளைப் பாழாக்கி வெற்றி பெற்றன.  ஆனால் அவை இப்பொழுது சுதனிலும், அவருடைய தாயிலும், அவருடைய தந்தையாக எண்ணப்பட்டவரிடத்திலும் நசுக்கப்படுகின்றன.  இதனால் மனிதர்கள் திரும்பவும் வரப்பிரசாதத்திற்குக் கொண்டு வரப்படுவார்கள்.  மனிதன் மேல் கடவுளுக்குரிய உரிமை மீண்டும் நிலைநாட்டப்படும்.  சூசையப்பர் இதை தமது நிரந்தர கற்பினால் நிறைவேற்றுகிறார்.

சூசையப்பர் கல்வாரியில் இருக்கவில்லையா?  இணை மீட்பர்களுடன் அவரும் இருக்கவில்லை என்று நினைக்கிறாயா?  அவர்தான் அவர்களுள் முதலாவதாயிருக்கிறவர்.  அதனால் கடவுளின் பார்வையில் பெரியவராயிருக்கிறார் என்று இதோ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.  அவருடைய பலி பெரிது;  அவருடைய பொறுமை பெரிது;  அவர் நீடித்து நிலைத்தது பெரிது; அவருடைய விசுவாசம் பெரிது.  மெசையாவின் புதுமைகளைக் காணாமலே விசுவசித்தவருடைய விசுவாசத்தைக் காட்டிலும் வேறெந்த விசுவாசம் பெரியது?  என் தந்தையாகக் கருதப்பட்டவர் வாழ்த்தப்படுவாராக!   உங்களிடம் கூடுதல் இல்லாதிருக்கும் தூய்மை, பிரமாணிக்கம், உத்தம சிநேகம் இவற்றிற்கு அவர் உங்களுக்கொரு முன்மாதிரிகையாயிருக்கிறார்.  முத்திரையிடப் பட்ட புத்தகத்தின் மிகச் சிறந்த வாசகர் வாழ்த்தப்படுவாராக!  வரப்பிரசாதத்தின் மறைபொருள்களைக் கண்டுபிடிக்கும் ஞானம் ஊட்டப்பெற்றவர் அவர்.  உலகத்தின் இரட்சண்யமானவரை எல்லா எதிரிகளின் கண்ணிகளிலிருந்தும் காப்பாற்றத் தெரிந்து கொள்ளப்பட்டவரும் அவரே.