இரண்டு நீதிமன்றங்கள்

“கடவுள் ஏன் இவ்வளவு கடுமையாக இருக்கிறார்?'' என்ற எண்ணம் சில சமயங்களில் நம் மனங்களின் ஊடாகக் கடந்து செல்கிறது, சில சமயங்களில் அதுவே வார்த்தை களில் உரைக்கப்படுவதையும் நாம் கேட்கிறோம்.

ஆகவே, தெய்வீக நீதியும், மனித நீதியும் செயல் படுத்தப்படுவதில் பின்பற்றப்படும் முறைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நமக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கும்.

மனித நீதியின் காரியத்தில், பலவீனனும், தவறக் கூடியவனுமாகிய மனிதன் தன்னையே தன் சக மனிதனின் நீதிபதியாக ஏற்படுத்திக் கொள்கிறான்.

ஒரு குற்றம் கட்டிக்கொள்ளப்படுகிறது. அதைச் செய்தவன் உடனே குற்றஞ்சாட்டப்படுகிறான். அந்தக் குற்றஞ்சாட்டுதல் வெளிப்படையாயிருக்கிறது, தீர்ப்பு கடுமையாக இருக்கிறது, தண்டனை கொடூரமானதாக இருக்கிறது.

ஓர் அன்றாட நிகழ்வைப் பார்ப்போம். ஒரு மனிதன் ஒரு மோசமான குற்றத்தைக் கட்டிக் கொள்கிறான், ஒரு திருட்டை, ஒரு கொலையைச் செய்து விடுகிறான். உடனே காவல் துறையினர் ஏராளமான வேட்டைநாய்களைப் போல அவனைத் தீவிரமாகத் தேடுகிறார்கள், அந்தத் தீயவன் சென்ற பாதையைப் புலன் விசாரிக்கிறார்கள். எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும், குற்ற வாளியை அவமானத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவர்களுக்கு இல்லை.

அவன் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், என்னதான் புனிதமான காரியத்தில் தற்போது ஈடுபட்டிருந் தாலும், அவனைக் கண்டவுடன் கைது செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடந்தது பற்றி எதையும் அறியாத, குற்றத்தில் எந்தப் பங்கும் இல்லாத அவனுடைய பரிதாபமான குடும்பத்தின் மத்தியிலோ, பொழுதுபோக்கு மன்றத்தில் தன் நண்பர்களுக்கு மத்தி யிலோ, அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும்போது ஒரு பொதுவான இடத்திலோ அவன் கண்டுபிடிக்கப் படலாம். எந்த எச்சரிக்கையுமின்றி அவன் கைது செய்யப் பட்டு, தெருக்களின் வழியாக இழுத்து வரப்படுகிறான், மக்கள் கூட்டம் அவனைப் பார்க்கிறது, அவனை இகழ்ந்து, ஏளனம் செய்து சிரிக்கிறது.

நீதிபதிகளுக்கு முன்பாக அவன் அவசரமாக இழுத்து வரப்பட்டு, இரக்கமற்ற விதமாக குற்றம் சாட்டப்படுகிறான், குறுக்கு விசாரணை செய்யப்படுகிறான், அவன் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்யும்படி அவனை வலையில் விழச் செய்வதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தந்திர மான கேள்விகளால் திணறடிக்கப்படுகிறான். மிகக் கண்டிப்பான அவனுடைய இரகசியமான காரியங்களும் கூட விசாரிக்கப்படுகின்றன. தனது ஒவ்வொரு அசைவைப் பற்றியும் விளக்கம் தரவும், தான் செய்ததையெல்லாம் நினைவுகூரும்படியும், தன்னுடைய ஒவ்வொரு வார்த்தை யையும் ஒத்துக்கொள்ளவும், அல்லது மறுதலிக்கவும் அவன் கட்டாயப்படுத்தப்படுகிறான்.

செய்தித்தாள்கள் இந்த வழக்கைப் பற்றி விவாதிக் கின்றன, வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன, அவனுடைய செயல்களை விமர்சிக்கின்றன. அவனுடைய நோக்கங்களைத் திரித்துக் கூறுகின்றன. வெறும் சாத்தியக் கூறுகளாக மட்டுமே இருக்கும் யூகங்களை உண்மையைப் போல சித்தரிக்கின்றன.

அவனுடைய குடும்பம் கடும் துன்பத்தினுள் மூழ்கடிக்கப்படுகிறது, அவனுடைய நண்பர்கள் அவனை விட்டு விலகுகிறார்கள், சந்தேகம் அவன்மீது பாரமாக விழுகிறது.

அவனுடைய இந்தத் துன்பத்தின் முதல் நிலைக்குப் பிறகு, தன் வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் வரையிலும் வாரக்கணக்கில் அல்லது மாதக் கணக்கில் அவன் சிறையில் முடங்கிக் கிடக்கும்படி விட்டுவிடப்படுகிறான். கடும் வேதனைக்கும், அச்சத்திற்கும், கவலைக்கும் இரையாகி றான். அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கப் படுகிறது. முடிந்தால் அவை அவனுக்கு எதிராகப் பயன் படுத்தப்படும்.

இதனிடையே, அவனைக் குற்றஞ்சாட்டியவர்கள் அவனது குற்றத்தை நிரூபிக்கும்படி சாட்சியங்களைத் தேடுகிறார்கள்; அவனுடைய தண்டனைத் தீர்ப்பை உறுதி செய்வதற்காக அவர்கள் எடுக்காத முயற்சி எதுவுமில்லை.

வெகு காலத்திற்குப் பிறகு, அவனுடைய வழக்கு விசாரணை தொடங்குகிறது. நீதிமன்றம் வினோதப் பிரிய முள்ள பார்வையாளர்களால் நிரம்பி வழிகிறது. மனித துன்பத்தின் இந்தக் காட்சியைக் கண்டு களிக்கவும், குற்றம் சாட்டப்பட்ட மனிதன் தனது நீதிபதிகளுக்கு முன்பாக விசாரிக்கப்படும்போது, இறுகிய மனதுடன் அந்த விசாரணையைக் கவனித்துக் கொண்டிருக்கவும் அவர்கள் அங்கே கூடியிருக்கிறார்கள். ஆணவத்தோடு அவனை நோக்கித் திரும்பியுள்ள முகங்கள், அவற்றில் அவனைப் பற்றிய பரிதாப உணர்வின் சுவடே இல்லை, இரக்கமுள்ள வார்த்தை ஒன்றுகூட பேசப்படவில்லை.

சிரமத்தைத் தவிர்க்கும் விதத்தில் உறுதியான வார்த்தைகளில் குற்றம் விவரிக்கப்படுகிறது. வழக்கறிஞர் களால் முன்கூட்டியே ஜோடிக்கப்பட்ட சாட்சிகள் அடுத் தடுத்து விசாரிக்கப்படுகிறார்கள். அந்த மனிதனின் வாழ்வு முழுவதும் எல்லோருடைய கண்களுக்கு முன்பாகவும் திறந்து காட்டப்படுகிறது.

சாட்சியங்கள் எவ்வளவு திறமையாக உருவாக்கப் பட்டுள்ளன என்றால், அவன்தான் குற்றவாளி என்று அவை அனைவரையும் நம்பச் செய்கின்றன. ஒரு திறமையும், நுண்ணறிவும், அனுபவமும் உள்ள வழக்கறிஞன் பயன் படுத்தக்கூடிய அனைத்து வகை வாதமும் குற்றஞ்சாட்டப் பட்டவனுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. அதிக நிச்சயமான சம்பவங்களோடு, புரிந்து கொள்ளக் கடினமான, மர்மமான, தந்திரமான சந்தேகங்களும் கலக்கப் படுகின்றன.

அவனுக்கு ஆதரவாக ஒரு வழக்கறிஞர் இருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அவருடைய வேலை எவ்வளவு கடினமானதாக இருக்கிறது! அவர் என்ன செய்தாலும், வாதியைக் குற்றச்சாட்டுகளின் அவமானங் களிலிருந்து காப்பாற்ற அவரால் முடியவில்லை. எவ்வளவு தான் முயன்றாலும் மிகுந்த திறமையும், குறுக்கு புத்தியும் உள்ள அரசுத் தரப்பு வழக்கறிஞர் அவனுடைய நற்பெயரைக் கெடுப்பதையும், அவனுடைய குற்றம் உறுதி யாகாத நிலையிலும், அவர் மிக ஆபத்தான சந்தேகத்தை அவனுக்கெதிராக எழுப்புவதையும் தடுக்க முடியவில்லை.

குற்றஞ்சாட்டப்பட்டவன் தனக்கு ஆதரவான சாட்சிகளை அழைக்க அனுமதிக்கப்படுவது உண்மைதான். ஆனாலும் இவர்கள் அரசு வழக்கறிஞரின் குறுக்குக் கேள்விகளின் நெருப்பால் பொசுக்கப்படுகிறார்கள். அவர் களுடைய சாட்சியங்களை உடைத்து விடுவதே அவரு டைய ஒரே நோக்கமாக இருக்கிறது. அந்த சாட்சியங்கள் உண்மையாயிருந்து, குற்றம் சாட்டப்பட்டவன் உண்மையில் எந்தக் குற்றமும் செய்யாதவனாக இருந் தாலும், அதைப் பற்றி அவருக்குக் கவலையில்லை. குறுக்கு விசாரணை எவ்வளவு வலுவானதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த வழக்கறிஞர் திறமையானவராக மதிக்கப் படுகிறார். அதுவும் ஒரு சாட்சி தான் சொல்ல வந்ததைச் சொல்ல விடாமல் தடுத்து விட்டால், கேட்கவே வேண்டாம்! அவர்தான் மிகச் சிறந்த வழக்கறிஞர் என்று உலகம் புகழும்! இத்தகைய ஒரு காட்சியை நேரடியாகக் கண்டவன் எவனும் அதை எளிதில் மறந்து விட முடியாது. இதைத் தவிர்க்க முடிந்தவன் ஒரு வழக்கில் ஒருபோதும் சாட்சியாக மாறவோ, அல்லது வழக்கு விசாரணையில் பங்குபெறவோ ஒருபோதும் விரும்ப மாட்டான்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவன் குற்றமே செய்யாதவனாக இருக்கலாம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. மனித நீதிமன்றத்தில் உண்மையான குற்றவாளி விடுவிக்கப்படுவதும், மாசற்றவர்கள் தண்டிக்கப் படுவதும் மிக அடிக்கடி நடப்பது நமக்குத் தெரியும்.

கைதியின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டம் அவனிடம் கடுமையாக நடந்து கொள்கிறது. அது தான் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். தீர்ப்பு அவனை நசுக்குவதாக இருக்கிறது; தண்டிக்கப்பட்ட மனிதனின் கெளரவம் நிரந்தரமாகத் தகர்க்கப்பட்டு விடுகிறது. அவனுடைய மனைவியும், மாசற்ற குழந்தைகளும் அவனுடைய நிரந்தர அவமானத்தில் பங்குபெறுகிறார்கள். இந்த இருண்ட மேகம் விலகிப் போய்விடும் என்று நம்ப இடமேயில்லை. அவர்கள் இனி ஒரு பெரிய குற்றவாளியின் மனைவி என்றும், ஒரு கொலைகாரனின் குழந்தைகள் என்றும்தான் சமூகத்தால் மதிக்கப்படுவார்கள்.

மனித நீதிமன்றங்களின் செயல்முறை இப்படித்தான் இருக்கிறது. அங்கே மனிதன் குற்றம் சாட்டுகிறான், அவனே தீர்ப்பிடுகிறான், அவனே தன்னைப் போன்ற மனிதனைத் தண்டிக்கிறான்.

ஆனால் இதெல்லாம் அவசியம் என்று அவர்கள் சொல்கிறார்கள். சமூகம் காப்பாற்றப்பட வேண்டும். கெட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்.

நீதிமன்றத்தின் நல்ல நோக்கங்களை நாம் எதிர்த்துப் பேசவில்லை. ஒழுங்கை நிலைநாட்டும் அவசியத்தையும் நாம் மறுக்கவில்லை. அவசியமானால், இப்படிப்பட்ட கொடுமையான நடவடிக்கைகளைத் தடுக்கும் அவசியத் தைத்தான் நாம் வலியுறுத்துகிறோம்.

நாம் சித்தரித்துள்ளது மிகைப்படுத்திக் கூறப் பட்டதுமல்ல. உலகின் ஊடகங்களால் வெளியிடப்படும் அன்றாட நிகழ்வுகளைத்தான் நாம் விளக்கியிருக்கிறோம்.

ஆனால் மேல் முறையீடு இல்லையா? தவறாகத் தண்டிக்கப்பட்டவன் மீண்டும் தன் நேர்மையை நிரூபிக்க வாய்ப்பேயில்லையா? இருக்கிறது. ஆனாலும் அதற்கான செலவை நினைத்துப் பாருங்கள். தண்டிக்கப்பட்ட ஓர் ஏழை என்ன செய்ய முடியும்? மேல் முறையீடு என்பதை யெல்லாம் அவனால் நினைத்துப் பார்க்கவும் முடியாது. அப்படியே மேல் முறையீடு செய்தாலும், அவன் உறுதியாக தண்டனையிலிருந்து விடுபடுவான் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.