மேன்மை தங்கிய தூத்துக்குடி மேற்றிராணி ஆண்டவரின் மதிப்புரை

நம் தமிழ் நாட்டின் உள்நாட்டு குருக்களுக்குள் கல்வி ஆற்றலிலும், மறையுரை ஆற்றும் திறமையிலும் எழுத்து வன்மையிலும் காலஞ் சென்ற சேசு சபை சந்தியாகு சுவாமிகளுக்கு இணையானவர் ஒருவருமில்லையென்றால் மிகையாகாது.

அவர் பிறந்தது 1848-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி. சேசுசபையில் சேர்ந்தது 1869-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி. இறந்தது 1926-ம் ஆண்டு , ஜனவரி மாதம் 22-ம் தேதி. வயது 78.

இப்பெரியாருடைய பூத உடல் அழிந்து போனாலும் அவருடைய புகழ் உடம்பு கத்தோலிக்க தமிழ் உலகத்தில் அழியா தென்பது திண்ணம்.

இவர் வரைந்த பற்பல நூல்களுக்குள் மூன்று இவருடைய பெயரை எந்நாளும் அழியாப் புகழுடன் விளங்கச் செய்யும். அவை எவையெனில் பங்கிராஸ் அல்லது பூர்வீக சுரங்க சபையின் விநோத விளக்கம், தேவ ஸ்தோத்திரப் பாடல்கள், மன்ரேசா என்பவைகளாம். இம்மூன்று புத்தகங்களுள் கத்தோலிக்க ஆண், பெண்களுக்கும், குருக்கள் கன்னியர்களுக்கும், ஞான ஒடுக்கம் கொடுக் கிறவர்களுக்கும் மன்ரேசா ஓர் விலைமதிக்கப்படாத பொக்கிஷம்.

முழுமணிப் பூணுக்கும் பூண் வேண்டுமா? இவ்வரிய நூலின் நான்கு பதிப்புப் பிரதிகள் யாவும் செலவாகி, ஐந்தாம் பதிப்பு அவசியமாயிற்றென்றால், இப்புத்தகத்தின் மதிப்பைப் பற்றி விரிவாய் எடுத்துரைப்பது ஏன்?

சற்குரு சங். சந்தியாகு சுவாமி இந்நூலை 28 வருடங்களுக்கு முன் எழுதிய போது தமது நோக்கம் என்னதென்று முகவுரையில் வரைந்துள்ளார்? "சர்வேசுரனுடைய அதி உத்தம மகிமையையும் பிறருடைய ஆத்தும் இரட்சண்யத்தையும் முக்கிய நோக்கமாய் என் கண்முன் வைத்து, உடலில் உயிர் தங்குமட்டும், என்னால் செய்ய முடிந்தது எதுவோ, அது எவ்வளவு கொஞ்சமாயினும், அதை மூத்தோர் சொல்லுவதற்கிணங்கிச் செய்து கடைசியில் சாவது என் பெரிய பாக்கியமாக நான் என்றும் மனதில் எண்ணி வந்திருப்பதால் இந்த ஞான முயற்சிகளின் விளக்கத்தை எழுதுவதில் பலவகையில் வந்த சிரமங்களைக் கவனியாமல் சந்தோஷமும் உற்சாகமும் உள்ள மனதோடு இதை எழுதி முடித்தேன். இதனால் கடவுளுக்கு மகிமையும் ஸ்துதியும் உண்டானால் போதும்.''

ஆசிரியருடைய உயரிய நோக்கம் நிறைவேறிற்று என்பதற்குச் சந்தேகமில்லை. இப்புத்தகத்தைக் கையாண்டவர்கள் சந்தேகமற இதற்கு சாட்சி பகர்வார்கள்.

ஆகவே, குருக்கள் கன்னியர்கள் ஆசிரமங்களிலும், சிறுவர், சிறுமிகள் படிக்கும் பள்ளிக்கூடங்களிலும், விசுவாசிகள் வசிக்கும் ஒவ்வொரு இல்லத்திலும் மன்ரேசா என்கிற புத்தகத்தை வாங்கி, ஆற அமா வாசித்து அபரிமிதமான இகபர நன்மைகளை அடைய வேணுமென்று ஆவலுடன் ஆசித்து அன்புடன் ஆசீரளிக்கும்

X FRANCIS TIBURTIUS ROCHE, S.J.,
தூத்துக்குடி மேற்றிராணியார்.
கார்போல் மாதா திருநாள்,
16.07.39.