இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நமக்குக் குறிக்கப்பட்டிருக்கிற யுத்தத்திற்கு ஓடக்கடவோம்

நாம் நம் பலவீனத்தின் காரணமாக, நாம் இடைவிடாமல் போரிட வேண்டியுள்ள நம் எதிரிகளின் தாக்குதல்களின் கீழ் விழுந்து விடுவோமோ என்று பயப்படுவோமானால், அப்போஸ்தலர் நமக்கு அறிவுறுத்துகிறபடி நாம் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்: ""நமது விசுவாசத்தின் ஆதிகர்த்தரும், அதைச் சம்பூரணமாக்கு கிறவருமாகிய சேசுநாதரை எப்போதும் கண்முன்பாக வைத்துக் கொண்டு, நமக்குக் குறிக்கப்பட்டிருக்கிற யுத்தத்துக்குப் பொறுமையோடு ஓடக்கடவோம்; அவர் சந்தோஷ ஜீவியம் தமக்கு முன் வைக்கப்பட்டிருக்க, அவமானத்துக்குக் கூச்சப்படாமல், சிலுவையை ஏற்றுக்கொண்டார்'' (எபி.12:2). தமது சிலுவையிலிருந்து நமக்கு உதவியையும், வெற்றியையும், கிரீடத்தையும் தருகிற சிலுவையில் அறையுண்ட சேசுநாதரைப் பார்த்துக் கொண்டு, மிகுந்த தைரியத்தோடு போர்க்களத்துக்கு ஓடக் கடவோம். கடந்த காலங்களில், நம் மீட்பர் அனுபவித்த காயங்களையும், வேதனைகளையும் நாம் தியானிக்காததால், பாவத்தில் விழுந்தோம். ஆகவே உதவிக்காக நாம் அவரிடம் தஞ்சமடையவில்லை. ஆனால் எதிர்காலத்தில் நம் மீதுள்ள அன்பிற்காக அவர் அனுபவித்த அனைத்தையும், நாம் அவரிடம் தஞ்சமடையும்போது, நமக்கு உதவ அவர் எப்படி எப்போதும் ஆயத்தமாக நிற்கிறார் என்பதையும் நம் கண்களுக்கு முன்பாக நாம் வைத்துக் கொள்வோமானால், நம் எதிரிகளால் நாம் வெற்றி கொள்ளப்பட மாட்டோம் என்பது உறுதி. அர்ச். தெரேசம்மாள் தனக்கு வழக்கமான தாராளத்தோடு: ""கடவுளே! கடவுளே! என்று சொல்வதன் மூலம் சாத்தானை நடுங்கச் செய்ய நம்மால் முடியும் என்னும்போது, பசாசு! பசாசு! என்று சொல்லிக் கொண்டிருக்கும் மனிதர்களின் பயங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை'' என்கிறாள். மறு புறத்தில், இதே புனிதை, நாம் நம் நம்பிக்கையை எல்லாம் கடவுளில் வைக்காவிடில், நம் சொந்த முயற்சிகளால் மிகக் குறைந்த அளவு பயனே இருக்கும், அல்லது எந்தப் பயனும் இருக்காது என்கிறாள். அவளது சொந்த வார்த்தைகளில் கூறுவதானால்:""நாம் நம் நம்மில் உள்ள நம்பிக்கை முழுவதையும் முற்றிலுமாகக் கைவிட்டு, அதை முழுமையாகக் கடவுளில் வைக்காவிடில், நம் முயற்சிகள் அனைத்தும் சிறிதளவு பயனுள்ளவையாகவே இருக்கும்.''

ஓ, சேசுநாதரின் திருப்பாடுகளும், பீடத்தின் தேவத்திரவிய அனுமானமும் நமக்கு நம்பிக்கை மற்றும் அன்பு ஆகியவற்றின் எப்பேர்ப்பட்ட இரு மாபெரும் பரம இரகசியங்களாக இருக்கின்றன! விசுவாசம் நமக்கு உறுதி தந்திராவிட்டால், நாம் ஒருபோதும் விசுவசித்திருக்கவே முடியாத பரம இரகசியங்கள்! எல்லாம் வல்ல சர்வேசுரன் மனிதனாகத் திருவுளம் கொள்வதும், தமது இரத்தமெல்லாம் சிந்தி, ஒரு சிலுவையின் மீது துன்ப துயரமிக்க மரணம் அடைவதும்--இதெல்லாம் எதற்காக? நம் பாவங்களுக்குரிய பரிகாரத்தைச் செலுத்தவும், கலகக்காரப் புழுக்களாகிய நமக்கு இரட்சணியத்தை சம்பாதித்துத் தரவுமே! அதன்பின் நம்மோடு தம்மை இணைத்துக் கொள்ளும்படியாக, முன்பு சிலுவையின் மீது நமக்காகப் பலியாக்கப்பட்ட தமது சொந்த திருச்சரீரத்தை நமக்கு உணவாகத் தர அவர் தயைபுரிகிறார்! ஓ சர்வேசுரா, இந்த இரு பரம இரகசியங்களும் சகல மனிதர்களின் இருதயங்களையும் அன்பினால் சுட்டெரிக்காதிருப்பது எப்படி! மிகவும் கைவிடப்பட்டவனாகவே இருந்தாலும், மனிதர்கள் மீது இவ்வளவு அதிகமான அன்பு கொண்டுள்ளவரும், அவர்களுக்கு நன்மை செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டவருமான ஒரு கடவுளைத் தான் காணும்போது, தான் செய்த தீமைக்காக அவன் வருந்துவான் என்றால், தான் மன்னிக்கப்படுவது பற்றி அவநம்பிக்கை கொள்ளக் கூடிய பாவி யார் இருக்க முடியும்? இதனாலேயே அர்ச். பொனவெந்தூர் மிகுந்த நம்பிக்கையுடன், ""என் இரட்சணியத்திற்காக மிக அதிகமாகச் செய்துள்ளவரும், துன்பப் பட்டுள்ளவருமான ஆண்டவர் எனக்குத் தேவைப்படும் எதையும் எனக்குத் தர மறுக்க மாட்டார் என்று உறுதியாக நம்பி, நான் பெரும் நம்பிக்கை கொண்டிருப்பேன்'' என்றார். என்னை இரட்சிப்பதற்காக இவ்வளவு அதிகமாகச் செய்துள்ளவரும், இவ்வளவு அதிகமாகத் துன்புற்றவருமான அவர் என் இரட்சணியத்திற்குத் தேவையான வரப்பிரசாதங்களை எனக்குத் தர எப்படி மறுக்க முடியும்?

"ஆதலால் நாம் இரக்கம் பெறும்படிக்கும், அவசிய சமயத்துக்குக் கிருபையைக் கண்டடையும்படிக்கும் அவருடைய கிருபைச் சிம்மாசனத்தை நம்பிக்கையோடு அண்டிப் போவோமாக'' (எபி.4:16) என்று அப்போஸ்தலர் நமக்கு அறிவுறுத்துகிறார். சிலுவையே இந்தக் கிருபையின் சிம்மாசனம். சேசுநாதர் தம்மிடம் வரும் அனைவருக்கும் வரப்பிரசாதங்களையும், இரக்கத்தையும் தந்தருளும்படியாக அதன் மீது வீற்றிருக்கிறார். அவசிய நேரத்தில் நம் இரட்சணியத்துக்குரிய உதவியை நாம் அடைய வேண்டுமானால், உடனே அவரிடம் தஞ்சம் புகுவது அவசியம். ஆகவே, நாம் விரைந்து போய், சேசுநாதரின் சிலுவையைத் தழுவிக் கொள்வோம். நாம் மிகுந்த நம்பிக்கையோடு அதனிடம் செல்வோம். நம் துன்பங்களைக் கண்டு நாம் அச்சம் கொள்ளலாகாது. சிலுவையில் அறையுண்ட சேசுநாதரில், நாம் எல்லா செல்வ வளங்களையும், எல்லா வரப்பிரசாதத்தையும் கண்டடையலாம். ""நீங்கள் அவரிடத்தில் எல்லாவற்றிலும் செல்வந்தராக்கப் பட்டிருக்கிறீர்கள். இவ்விதமாக, நமது ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துநாதர் வெளிப்படுவதற்கு எதிர்பார்த்திருக்கிற உங்களுக்கு எந்த வரப்பிரசாதத்திலும் யாதொரு குறைவுமில்லை'' (1 கொரி. 1:5,7). சேசுநாதரின் பேறுபலன்கள் எல்லா தேவ பொக்கிஷங்களையும் கொண்டு நம்மை செல்வந்தர்கள் ஆக்கியுள்ளன; நாம் ஆசிக்கக்கூடிய ஒவ்வொரு வரப்பிரசாதத்தையும் அடைய வல்லவர்களாக நம்மை ஆக்கியுள்ளன.

"பசாசு பாவத்தின் மூலம் நமக்குச் செய்துள்ள தீமையை விட, சேசுநாதர் தமது மரணத்தின் மூலம் நமக்கு அதிக நன்மையைச் செய்திருக்கிறார்'' என்று அர்ச். லியோ கூறுகிறார். இரட்சணியமாகிய கொடை பாவத்தை விடப் பெரியது என்றும், வரப்பிரசாதம் பாவத்தின் மீது வெற்றிகொண்டு விட்டது என்றும் தமக்கு முன்பு அர்ச். சின்னப்பர் கூறியுள்ள காரியத்தை இந்த வார்த்தைகளின் மூலம் அவர் விளக்குகிறார்: ""வரப்பிரசாதத்தின் அளவு குற்றத்தின் அளவைப்போல் அல்ல... குற்றம் பெருகின இடத்தில் வரப்பிரசாதம் அதிமிகப் பெருகிற்று'' (உரோ.5:15,20). இதிலிருந்து, தமது பேறுபலன்களின் வழியாக ஒவ்வொரு நன்மையையும், ஒவ்வொரு வரப்பிரசாதத்தையும் நாம் பெற்றுக் கொள்வோம் என நம்பியிருக்கும்படி நம் இரட்சகர் நம்மை ஊக்கப் படுத்துகிறார். தமது நித்தியப் பிதாவிடமிருந்து நமக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் வழியை அவர் நமக்கு எப்படிக் கற்பிக்கிறார் என்று பாருங்கள்: ""என் நாமத்தினால் நீங்கள் பிதாவினிடத்தில் எதையாகிலும் கேட்டால், அதை அவர் உங்களுக்குத் தந்தருளுவார் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' (அரு.16:23). நீங்கள் எதை ஆசித்தாலும், என் பெயரால் அதைப் பிதாவிடம் கேளுங்கள், அப்போது உங்கள் ஜெபம் கேட்கப்படும் என்று நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன் என்று அவர் சொல்கிறார். உண்மையில், தமது நேசமுள்ள ஏக பேறான திருச்சுதனையே பிதாவானவர் நமக்காகத் தந்திருக்க, அவர் வேறு எதைத்தான் நமக்குத் தர மறுக்க முடியும்? ""தமது சொந்தக் குமாரன்மேல் முதலாய் இரக்கமில்லாமல், நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் மற்றெல்லாவற்றையும் அவரோடு நமக்குத் தானம் பண்ணாதிருப்பது எப்படி?'' (உரோ.8:32). எல்லாவற்றையும் என்று அப்போஸ்தலர் சொல்கிறார். இவ்வாறு, மன்னிப்போ, நிலைமை வரமோ, பரிசுத்த நேசமோ, உத்தமதனமோ, மோட்சமோ--எந்த வரப்பிரசாதமும் நமக்கு மறுக்கப்படுவதில்லை. ""எல்லாவற்றையும், எல்லாவற்றையும், அவர் நமக்குத் தந்திருக்கிறார்.'' ஆனால் நாம் அவரிடம் ஜெபிக்க வேண்டும். கடவுள் தம்மைக் கூவியழைக்கும் அனைவருக்கும் முழு தாராளமுள்ளவராக இருக்கிறார்: ""அவர் தம்மை மன்றாடுகிற யாவர் மட்டிலும் செல்வந்தராயிருக்கிறார்'' (உரோ.10:12).