இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயம்!

சேசுவின் திரு இருதயம் பொருண்மை ரீதியாக பரிசுத்த தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளோடு ஒன்றித்திருக்கிறது என்று நாம் பார்த்தோம். இந்தத் திரு இருதயத்தில் இரண்டாம் ஆள் ஜீவித்திருக்கிறார், அல்லது அதைவிட மேலாக, இரண்டாம் ஆள்தான் சேசுவின் மனித சுபாவம் பிழைத்திருப்பதின் ஏக காரணமாக இருக்கிறார் என்பது இதன் பொருளாக இருக்கிறது. அவரும், அவருடைய மனித சுபாவமும் பிரிக்கப்பட முடியாதவர்கள். ஆனால் இரண்டாவது தேவ ஆள் எங்கெல்லாம் இருக்கிறாரோ, அங்கே தேவ சுபாவமும் இருக்க வேண்டும். ஏனென்றால் இரண்டாவது தேவ ஆளும், தேவ சுபாவமும் பிரிக்கப்பட முடியாதவர்கள் - அவரும் அதுவும் ஒன்றாக இருக்கிறார்கள். ஆகவே, நம் இரட்சகரின் திரு இருதயத்தில் ஒரு தேவ ஆளை மட்டுமல்ல, மாறாக, அவருடைய தேவ சுபாவத்தையும் நாம் கொண்டிருக்கிறோம். இனி, தேவ சுபாவம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கு பிதாவும், இஸ்பிரீத்து சாந்துவானவரும் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தேவ சுபாவத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதவர்களாய் இருக்கிறார்கள். மூன்று தேவ ஆட்களும் தேவ சுபாவத்தோடு ஒன்றாயிருக்கிறார்கள். “பிலிப்புவே, நான் பிதாவிலும், பிதா என்னிலும் ஜீவித்திருக்கிறோம் என்பதை நீ அறியாதிருக்கிறாயோ?” என்று நம் ஆண்டவர் கூறியது போல, (அரு. 14:10) அவர்கள் மூவரும் மற்ற ஒவ்வொருவருக்குள்ளும் வாசமாயிருக்கிறார்கள். இந்த மூன்று தேவ ஆட்களும் எப்படி மற்ற ஒவ்வொருவருக்குள்ளும் ஜீவிக்க முடியும் என்பது ஒரு பெரும் பரம இரகசியம்! ஆயினும் அது உண்மை என்று நாம் அறிந்திருக்கிறோம். ஏனெனில் கடவுளே அப்படிச் சொல்லியிருக்கிறார்.

இந்த வேதசாஸ்திர சிந்தனையின் முடிவு இதுதான்: சுதனாகிய சர்வேசுரன் திரு இருதயத்தை சொந்தமாகக் கொண்டிருக்கிறார். அது அவருடைய இருதயமாயிருக்கிறது. இந்தத் திரு இருதயத்தில் சுதன் இருப்பதால், பிதாவாகிய சர்வேசுரனும், இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனும் அதில் வாசம் பண்ணுகிறார்கள். அவர்கள் ஒருவர் மற்றவர்களிடமிருந்து பிரிக்கப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். சேசுவின் இந்தத் திரு இருதயம் சர்வேசுரனுடைய எத்தகைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாக இருக்க வேண்டும்! அனைத்திலும் அதிக அழகான ஒரு தேவாலயத்தை நீயே கற்பனை செய்து பார். அது திடமான தந்தத்தினால் கட்டப்பட்டிருக்கிறது. அதன் மேற்கூரையும், தரையும் பசும்பொன்னால் மேவப்பட்டிருக்கின்றன. கோடிக்கணக்கான விலையுயர்ந்த வைரங்களாலும், அபூர்வமான முத்துக்களாலும் உருவாக்கப்பட்டிருக்கிற பலிபீடத்தைக் கற்பனை செய். பலிபீடப் பகுதி முழுவதும் எல்லா வண்ணங்களையும் கொண்டுள்ள விலையேறப்பெற்ற இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மிக மென்மையான பட்டுத் தொங்கல்கள் இவை எல்லாவற்றினுடையவும் அதியற்புத அழகை அதிகரிக்கின்றன. என்ன ஒரு தேவாலயம்! ஓ! ஆனாலும் கடவுள் தமக்கென தாமே கட்டிய சேசுவின் திரு இருதயம் என்னும் தேவாலயத்தின் முன்பாக அது ஒரு மதிப்பற்ற போலியாக மட்டுமே இருக்கும்!

இனி, சர்வேசுரனுடைய இந்த அர்ச்சிக்கப்பட்ட ஆலயத்திற்கும், சர்வேசுரனுடைய மற்ற ஆலயங்களாகிய நம் இருதயங்களுக்கும் இடையேயுள்ள ஒரு முக்கியமான வேறுபாட்டை நாம் இங்கு குறிப்பிடுவோம். நம் சரீரங்கள் இஸ்பிரீத்து சாந்துவின் தேவாலயங்கள் என்று அர்ச். சின்னப்பர் நமக்கு நினைவூட்டினார். மூன்று தேவ ஆட்களும் மிக அந்நியோந்நியமாக ஐக்கியப்பட்டிருப்பதால், பிதாவும், சுதனும் கூட அங்கிருக்க வேண்டும். ஆக, மூன்று தேவ ஆட்களும் நம் இருதயங்களில் வாசம் செய்கிறார்கள். “ஒருவன் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், என் பிதா அவனை நேசிப்பார். நாங்கள் அவனிடம் வந்து அவனுக்குள் வாசம் பண்ணுவோம்” என்றும் நம் இரட்சகர் கூறினார். கடவுளின் இரக்கம் அளவற்றது, அந்த இரக்கத்தில், அவர் நம் சிறு இருதயங்களில் ஜீவிக்க விரும்புகிறார் என்று இந்த ஆறுதல் தரும் வார்த்தைகள் காட்டுகின்றன. நம் இருதயம், குளிருள்ள, வெறுமையான, அழுக்கான ஒரு பழைய குடிசையேயன்றி வேறு என்ன? இருந்தாலும், “மகிமையின் சர்வேசுரன் தாழ்மையான இடத்தை நேசிக்கிறார்.” “உலகங்களால் அடக்கப்பட முடியாததைக் குழந்தைகளின் இருதயங்கள் அடக்கித் தாங்குகின்றன.” நம் இருதயங்களை அவருக்கு இன்னும் சற்று அதிக வசதியுள்ள இடமாக மாற்ற நம்மால் முடியாதா என்று பார்ப்போம். எல்லாவற்றிற்கும் முதலாவதாக, அவருக்குப் பிரியமில்லாத எல்லாவற்றையும் நாம் வெளியே வீசி விடுவோமாக. இனி எந்த விக்கிரகங்களோ, அல்லது செல்லப் பிராணிகளோ வேண்டாம்! நம் முழு கவனத்திற்கும், நேசத்திற்கும் கடவுள் ஒருவரே தகுதியுள்ளவராயிருக்கிறார். தரையைத் துடைத்தெடுப்போம். கொஞ்சம் தேய்த்துக் கழுவிவிட முயற்சி செய்வோம். மனஸ்தாபக் கண்ணீரும், இவ்வளவு குறைவாய் அவரை நேசித்தோமே என்னும் அவமான உணர்வும் நம் இருதயத்தைச் சுத்திகரித்து, கடவுளுக்குப் பிரியமுள்ளதாக்குகின்றன. அதன்பின் கொஞ்சம் நெருப்பைப் பயன்படுத்தினால் என்ன? நம் அயலார் மட்டில் நம் நேசச் செயல்கள் நம் இருதயங்களுக்கு அனலூட்டி, அவற்றைக் கடவுளுக்கு ஏற்புடையவையாக ஆக்குகின்றன. உன் மகத்துவத்தை நினைத்துப் பார் - நீ சர்வேசுரனுடைய ஆலயமாக இருக்கிறாய் - இனி ஒருபோதும் நீ உன் ஆத்துமத்தைப் பாவத்தினால் கறைப்படுத்தலாகாது.


சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திரு இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!