விடா முயற்சி

ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் ரோமையில் ஒரு வாலிபன் கல்வி பயின்று கொண்டிருந்தான். அவன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவன். அவன் பெயர் ப்ளேக் (Blake). அவனும் வேறு சிலரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் வசித்தார்கள். படிக்க வேண்டிய நேரத்தில் கல்லூரியில் போய் கல்வி கற்பார்கள். ப்ளேக் திறமை வாய்ந்தவனல்ல. அவனுடைய நண்பர்கள் அவன் படிப்பில் முழு மோசம் எனக் கருதி அவனை நடத்தி வந்தனர். அவன் திக்குவாயன். படிப்பில் திறமை வாய்ந்தவன் முதலாய் திக்குவாயனாயிருந்தால் பிறர் அவனைக் கேலி செய்வார்கள்.

ஒரு நாள் சில பாடங்களைப் பற்றி மாணவர்களுக்குள் வாக்குவாதம் ஒன்று நடந்தது. மூன்று மாதங்களுக்கொருமுறை இது பொதுவில் நடப்பது வழக்கம். அந்த வாக்குவாத நேரத்தில் ப்ளேக் பேச வேண்டிய நேரம் வந்தது. அவன் எழுந்து வாயைத் திறந்தான். முதல் வார்த்தையை உச்சரிக்க அவனால் முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் அது வெளியே வரவில்லை. உடனே அவனருகில் உட்கார்ந்திருந்த ஒருவன், "உட்கார்ந்து கொள். கல்லூரியிலேயே நீ தான் பெரிய முட்டாள்'' என்றான். இந்த வார்த்தைகள் பிளேக்கின் உள்ளத்தில் அம்பு போல் தைத்தன; வெட்கி அவன் உட்கார்ந்தான்.

அவன் இடத்தில் நாம் இருந்தால் நமக்கு என்னமாயிருந்திருக்கும்? திக்குவாய் அவனது குற்றமா? தன்னுடைய உடன் மாணவர்களை அவன் நேசித்தான். அவர்களது நல்ல மனதையும் நட்பையும் அவன் எதிர்பார்த்தான். அந்த நண்பன் சொன்ன பட்சமற்ற வார்த்தைகள் அவனுக்கு சொல்லொண்ணா வேதனை கொடுத்தன. ''கல்லூரியிலேயே நீ பெரிய முட்டாள்'' என்னும் வார்த்தைகள் அன்று முழுதும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. ஒருவனே வாய் திறந்து இந்த வார்த்தைகளைச் சொன்ன போதிலும் அவை எல்லோரது அபிப்பிராயத்தையும் தெரிவித்தன; ஏனெனில் ஒருவனாவது ப்ளேக்கை ஆதரித்துப் பேசவில்லை. அன்று ப்ளேக் வெகு துயரப்பட்ட போதிலும் அன்று அவன் சில நல்ல தீர்மானங்கள் செய்தான்.

இந்தத் தீர்மானங்களை மறுநாள் அவன் மறந்து விடவில்லை. மறுநாள் துயரம் தணிந்திருந்த போதிலும் அந்தத் தீர்மானங்கள் அவனை விட்டகலவில்லை. நேரமானது சகல காயங்களையும் ஆற்றுகிறது என்பார்கள். பிறசிநேகமற்ற நண்பன் சொன்ன சொற்கள் வெகு ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும், அவனது தீர்மானங்கள் அதை விட ஆழமாக வேரூன்றியிருந்தன. "கல்லூரியில் நீயே மிகப் பெரிய முட்டாள்." நான் பெரிய முட்டாளல்ல என எண்பிக்கப் போகிறேன் என தீர்மானித்தான். பழி வாங்கும் நோக்கத்துடனல்ல, ஆங்காரத்தினாலல்ல, ஆனால் தன் மரியாதையைக் காப்பாற்றும்படி அவன் இந்தத் தீர்மானத்தைச் செய்தான்.

"கல்லூரியில் நீயே மிகப் பெரிய முட்டாள்'' என் னும் சொற்களை ஓர் அட்டையில் பெரிய எழுத்துக்களில் எழுதி, தனியே இருக்கையில் தன் முன் வைத்திருந்தான். யாராவது தன் அறைக்கு வந்தால் அதை மறைத்து வைத்துக் கொள்வான், "கல்லூரியில் நீயே மிகப் பெரிய முட்டாள்'' என்னும் சொற்கள் எப்பொழுதும் அவன் கண்முன் நின்றன. என்னவானாலும் சரி, இந்த வார்த்தைகள் பொய் என்று எண்பிக்கத் தீர்மானித்தான்.

ஒரே கவனத்துடன் படிக்க ஆரம்பித்தான். மாலை நேரத்திலும், இரவில் நெடு நேரம் விழித்திருந்தும் வாசிப்பான். நண்பர்கள் ஆடல் பாடல்களுக்குப் போவார்கள். ப்ளேக் உட்கார்ந்து புத்தகமும் கையுமாயிருப்பான். ஆசிரியர்கள் போதிக்கையில் இமை கொட்டாமல் காது கொடுத்துக் கேட்பான். சில சமயங்களில் அலுத்துப் போய், தீர்மானத்தை விட்டுவிட நினைப்பான், உடனே அந்த அட்டையை நோக்குவான். “கல்லூரியில் நீயே பெரிய முட்டாள்'' என்னும் வார்த்தைகள் அவனது உற்சாகத்தைப் புதுப்பிக்கும்.

திக்குவாயைச் சரிப்படுத்தவேண்டும், அது ஆகக்கூடிய காரியமா? எப்படியும் ஆகித் தீரவேண்டும், கற்றதை பிறருக்கு எடுத்துரைக்க முடியாதிருந்தால் என்ன பயன்? அன்றிலிருந்து அவன் மிக நிறுத்தி, யோசித்து, தன்னடக்கத்துடன் பேசத் தீர்மானித்தான். தனியே இருந்து பல மணி நேரமாக சத்தமாக வாசிப்பான், பேசுவான். அது சிரமமே. சிரமத்தை அவன் பொருட்படுத்தவில்லை. உற்சாகம் குறையும்போதெல்லாம், அந்த அட்டையைப் பார்ப் பான். "கல்லூரியில் நீயே பெரிய முட்டாள்'' என்னும் வார்த்தைகளைப் பார்த்ததும் அவனது முந்திய தீர்மானம் திடப்படும்,

தங்களுக்குத் தாங்களே உதவி செய்கிறவர்களுக்கு கடவுளும் உதவி செய்கிறார் என்பது பழமொழி. அதாவது நாம் நம்மாலானதையெல்லாம் விடாமுயற்சியுடன் செய்து வந்தால் கடவுளும் நம் முயற்சிகளுக்கு பலன் கொடுப்பார். நெடுநாள் முயன்றதன் பயனாக ப்ளேக் சரிவரப் பேசினான். மாணவர் யாவருக்கும் அவன் மேல் மதிப்பு ஏற்பட்டது. ஆண்டு தோறும் அவனுக்கு பரிசுகள் கிடைத்தன. ப்ளேக் குருவானார். 1838-ம் ஆண்டில் அவர் ட்ரோமோர் நகரின் மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்டார். இவர் இவ்வளவு உயர்ந்த பதவிக்கு வர முதற் காரணமாயிருந்தது, ஒரு நண்பனது பட்சமற்ற வார்த்தைகளே.