இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே!

மனிதாவதாரத்தின் பரம இரகசியத்தை அறிவிக்க விண்ணிலிருந்து அனுப்பப்பட்ட கபிரியேல் சம்மனசு அர்ச். கன்னி மாமரியைப் பார்த்து, “தேவ வரப்பிரசாதத்தினால் நிறைந்தவளே, வாழ்க” என்று வாழ்த்தினார். “வரப்பிரசாதத்தினால் நிறைந்தவளே” - இவ்வுன்னத புகழ்ச்சியின் சிறப்பைக் கண்டுணர, முந்த முந்த வரப்பிரசாதமென்றால் என்ன என்பதை நாம் அறிவது அவசியம்.

சின்னக் குறிப்பிடத்தில் நாம் படித்திருப்பது போல, சர்வேசுரன் ஆதித்தாய் தந்தையரைப் பரிசுத்தமும் பாக்கியமுமான அந்தஸ்திலே உண்டாக்கினார்; அவர்களை மோட்சத்துக்காகவே உண்டாக்கியிருந்தார்; அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வரங்களைக் கொண்டு தங்களது கடைசிக் கதியான மோட்ச சம்பாவனையைச் சம்பாதித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தனர்; ஆனால் பசாசை நம்பி சர்வேசுரனால் விலக்கப்பட்ட கனியைத் தின்றவுடன், அவர்களும், அவர்களுடைய சந்ததியாராகிய நாமும், மோட்ச சம்பாவனையை அடைவதற்குரிய உரிமையையும், அதற்கு அவசியமான உதவி சகாயங்களையும் இழந்தோம்.

ஆயினும் தேவன் மனுக்குலத்தின்மீது இரக்கம் கொண்டு அதை இரட்சிக்கும் பொருட்டு, தமது திருக்குமாரனையே அனுப்பத் திருவுளங் கொண்டார். தமது பாடுகளாலும், சிலுவை மரணத்தாலும் நம்மைப் பேயின் அடிமைத்தனத்தினின்று மீட்டார் தேவசுதன். மேலும் நாம் மோட்சம் சேர நமக்கு உதவியாக இருக்கும்படி விலைமதிக்கப்படாத ஒரு பொக்கிஷத்தைத் திரட்டியுள்ளார். அவைகளுக்குப் பொதுவில் தேவ வரப்பிரசாதங்கள் என்று பெயர். 

தேவ வரப்பிரசாதம் நம்மிடமிருக்குமானால், நாம் சர்வேசுரனுக்கு உகந்த பிள்ளைகளாவோம். அவ்வரப்பிரசாதத்தின் உதவியின்றி நாம் மோட்சம் சேருவது கூடாத காரியம். ஆத்துமத்தில் இவ்வரப்பிரசாதத்தின் அளவு ஒவ்வொருவருடைய ஆத்துமத்தின் சக்தியையும், தேவ சிநேகத்தின் அளவையும் பொறுத்திருக்கும்.

“மண்ணுலகில் பிறந்த யாவருக்கும் தேவ வரப் பிரசாதம் ஓர் அளவோடு மட்டும் கொடுக்கப்படுகிறது. ஆனால் இரட்சகரைப் பெற்ற நமது பரிசுத்த அன் னைக்கோ, பூரணமாய் வழங்கப்பட்டுள்ளது.” (St. Peter Chrysologus: Serm. 143). 

அவர்கள் உன்னத பிதாவின் ஏக மகள்; இன்ப சேசுவின் அன்பு நிறை மாதா; திவ்ய இஸ்பிரீத்துசாந்துவின் நேச பத்தினி. இவ்வித மேலான பாக்கியம் பெற்ற அவர்களிடம், அவர் களுடைய உன்னத அந்தஸ்துக்கேற்றபடி தேவ வரப் பிரசாதம் பரிபூரணமாய் நிறைந்து விளங்குகின்றது. 

இக்காரணம் பற்றியே தேவதூதன் “மரியாயே” என்னும் மகிமை நிறைந்த பெயரை முதலாய் உச்சரிக்காமல், “தேவவரப்பிரசாதத்தினால் நிறைந்தவளே” என்று நம் ஆண்டவளை அழைத்தார். இது ஒன்றே, சகல படைப்புகளுக்கு மேலாக அவர்கள் கொண்டுள்ள சகல வரப்பிரசாதங்களின் பொலிவை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இக்கன்னியிடமிருந்தன்றோ வரப்பிரசாதங்களின் ஊறணியான தேவ சுபாவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் பிறந்தார். 

அர்ச். சின்னப்பர் சொல்லுவது போல, தேவ வரப்பிரசாதத்தின் கதிர்கள் ஒளிவிட்டு மனிதர்கள் முன் பிரகாசிக்கின்றது. இவ்வாறு கடவுளின் தாயாராகவும், நாம் நமது கடைசிக் கதியை அடைய நமக்கு வேண்டிய வரப்பிரசாதங்களைச் சர்வேசுரனிடமிருந்து அடைந்து தரும் வற்றாத வாய்க்காலுமான நமது அன்னைக்கன்றி வேறு யாருக்கு “தேவ வரப்பிரசாதத்தின் மாதா” என்னும் பெயரை நாம் வழங்கக் கூடும்?

“கடவுளிடமிருந்து மனிதர்களுக்கு அருளப்படும் எல்லா வரப்பிரசாதங்களும் மாமரியாயின் வழியாகவே வருகின்றன” என்று பல வேதசாஸ்திரிகளும், அர்ச்சிய சிஷ்டவர்களும் ஒருவாய்ப்படக் கூறியிருக்கின்றார்கள். பிள்ளைகள் தங்கள் தாயின் அன்புக்கு உரித்தாயிருப்பது போல், நாமும் நம் பரலோகத் தாயின் வரப்பிரசாதங்களுக்கு உரியவர்களாயிருக்கிறோம். இவ்வுரிமையை, பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையடியில் நின்றிருந்த அர்ச். அருளப்பர் வழியாய்த் தேவமாதாவை நமது மாதா வாக அடைந்தபோது அடைந்தோம். எனவே பிள்ளை களுக்குரிய அன்போடு நம் தாயை அண்டி, தேவ வரப்பிர சாதங்களால் நம்மை அலங்கரித்தருள வேண்டுமென்று அவர்களை மன்றாடுவோம். 

“மானிட சமூகம் தன் பாது காப்பையும், பராமரிப்பையும், சந்தோஷத்தையும் அவர்களை நாடுவதாலேயே அடைகின்றது” (Fr. op. Gr. Lat. t, iii) என்று அர்ச். எப் ரேம் கூறுகிறார். இளமையில் பாவச் சேற்றில் புதைந்து, வாழ்க்கை நடத்தி மனந்திரும்பின அர்ச். அகுஸ்தீன், தம் பிற்கால வாழ்வில் தேவதாயின் கருணையைக் கண்டுணர்ந்து கூறுவதாவது: “நீர் ஒருவரே பாவிகளின் தஞ்சமும், அடைக்கலமுமாயிருப்பதால், உமது வழி யாகவே அவர்கள் மன்னிப்பும், மோட்ச பாக்கியத்துக்குப் பங்காளிகளாகும் பேற்றையும் பெறுகின்றார்கள்.” (Sermon de Annuntiat). சுருங்கச் சொல்லின் மாந்தருள் மாமரி மட்டுமே வரப்பிர சாதங்களின் வற்றாத சமுத்திரமாயிருக்கிறார்கள்.

அன்பின் சுனையான சேசுவிடமிருந்து நித்தியத்துக்கும் தாகத்தைத் தீர்க்கும் வரப்பிரசாதத் தண்ணீர் அவர்கள் வழியாகவே நம்மிடம் வழிந்தோடி வருகின் றது. வரப்பிரசாதங்களின் வாய்க்காலான நம் மாதாவை அண்டிச் செல்வோம். நமது ஆத்தும இன்னல்களை அவர்களிடம் ஒப்படைப்போம். நமது சிலுவையின் பாரம் எத்தகையதென்று நம் பரலோக அன்னையிடம் சொல்லிக் காட்டுவோம். பாவச் சோதனைகள் நம்மைத் தாக்கும் போது, நம் தாயின் பாதத்தை நாடி ஓடி அவர்களுடைய ஆதரவைத் தேடக் கற்றுக் கொள்ளுவோம். ஏனெனில் “அவர்களை அடைக்கலம் என்று அண்டி அவர்களுடைய உதவியைத் தேடின எவரும் அவர்களால் கைவிடப்பட்டதாக உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை” என்று அர்ச். பெர்நார்து அழுத்தந் திருத்தமாகக் கூறுகிறார்.

“ஓ! எங்கள் ஆண்டவரைப் பெற்றெடுத்த மாதாவே, வரப்பிரசாதத்தாலும், புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்ட எங்கள் தாயே! இதோ, “பிரியதத்தத்தினால் பூரணமானவள்” என்று இன்றும் என்றும் உம்மை வாழத்துகின்றோம். வார்த்தையான தேவன் உமது உதரத்தில் உருவெடுத்ததால், “எல்லா வரங்களும் உன்னிடமே” என்று சொல்லப் பாக்கியம் பெற்ற உம்மை நோக்கி ஓடி வருகின்றோம். பாவிகள் நாங்கள் திவ்விய சேசுவிடம் நேரே செல்லப் பயந்து பரிதபிக்கின்றோம். எங்களுக்காக சேசுவிடம் பரிந்து பேசி எங்களை அவரிடம் அழைத்துச் செல்லும். உமது திருக்குமாரன் எங்கள் ஆண்டவரின் அன்பில் நாங்கள் என்றும் வளர்ந்து நிலைத்துநிற்க, உமது அருளை எங்களுக்குத் தந்தருளும்.”


தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே! 
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!