வேதாபிமானம்

சனங்கள் ஆண்டவருடைய வாக்கியம் போதிக்கப்படக் கேட்டு அகமகிழ்ந்து அதை மகிமைப் படுத்தினார்கள். (அப்.நட. 13;)

பிரியமான கிறிஸ்தவர்களே , நம்முடைய திவ்விய குருவாகிய யேசுக்கிறிஸ்து நாதர் தம்மைப் பின் பற்றி விசுவசிக்கிறவர்களுக்குள்ளே, உலகத்திலே வேறு மார்க்கங்களிலே இல்லாததும், தன் நயம் பாராததுமான பிறர் சினேகம் விளங்க வேண்டும் என்றும், இந்தப் பிறர்சினேகத்தைக் கொண்டே உலகமானது தம்முடைய சீஷரைப் பிரித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றும் சித்தமானார் என்பதாகச் சென்ற கிழமைப் பிரசங்கத்திலே தெளிவித்தேன்.

இனி, யேசுநாத சுவாமியுடைய திரு வேதத்தின் மட்டிலே அவருடைய சீஷர்கள் நிறைவேற்ற வேண்டிய பிரதானமான கடமை ஒன்றைப் பற்றி யோசிப்போம். அந்தக் கடமையானது நான் இப்போது அப்போஸ்தலர் நடபடி ஆகமத்தினின்று எடுத்துரைத்த வாக்கியத்திலே குறிக்கப்பட்டிருக்கிறது. நமது கர்த்தருடைய திரு வேதத்தை அப்போஸ்தலர்கள் சனங்களுக்குப் போதித்தபோது அவர்கள் ''அதைக் கேட்டு அகமகிழ்ந்து, 'அத் திருப் போதகத்தை மகிமைப்படுத்தினார்கள்.''

திருச்சபையின் மூலமாய் அப் போதகத்தைக் கேட்கும் பாக்கியத்தைப் பெற்ற நாமும் அதை மகிமைப்படுத்தக் கடமைப்பட்டவர்கள். யேசுநாத சுவாமி தம்முடைய திரு வேதத்தை உலகத்திலே பிரசித்தமாக்கின போது அத் திருவேதத்தைக் கைக்கொண்டவர்கள் அதற்குக் காட்டும் மகிமையே அது மேலும் மேலும் உலகத்திற் பரம்புவதற்கு வழியாக வேண்டும் என்று திருச்சித்தமானார்.

ஆயினும், கிறீஸ்தவர்களுள் அநேகர் பிறர் சினேகத்தின் இன்றியமையா அவசியத்தைப் பற்றி யோசியாமலிருக்கிறது போலவே, தங்களுக்கு சத்திய வேதத்தின் பேரில் இருக்கவேண்டிய அபிமானத்தைப் பற்றியும் அனேகர் யோசியாமலும், சரியாய் அறியாமலும் இருக்கிறார்கள். வேதத்தின் மகிமையைத் தாங்கள் தேடாமலிருப்பதினால் அதை உண்டு பண்ணியவருக்கு எவ்வளவு துரோகிகளாய்ப் போகிறார்கள் என்றதையும் உணராமலிருக்கிறார்கள். ஆகையால், திருச்சபையானது நம்முடைய மீட்பின் இரகசியத்தைக் கொண்டாடுகிற இக்காலத்திலே பேசத்தக்கவைகளுள் அத் திருமீட்பை அடைந்து கொண்ட சத்தியவேதக்காரராகிய நமக்குச் . சத்தியவேதத்தை மகிமைப்படுத்துவதிலே இருக்கவேண்டிய அபிமானமும் ஒன்று என்று எண்ணுகிறேன்.

சத்திய வேதமே உலகத்திலே ஏக மெய்யான வேதம். ஆதலால், அதை நாம் விசுவசிக்கிறோம் என்று சசலரும் அறியக் காட்டுவதினால், அதை மகிமைப்படுத்த வேண்டும். இது முதலாம் பிரிவு. சத்தியவேதம் மாத்திரம் உலகத்திலே ஏக பரிசுத்தமான வேதம். ஆதலால், அதின்படி நடக்கிறதினால் நாம் அதை மகிமைப்படுத்த வேண்டும். இது இரண் டாம் பிரிவு