9 ஜூன் 1944.
பின்வரும் காட்சியை என் உள்ளம் காண்கின்றது.
இரவு வேளை. சூசையப்பர் தம்முடைய சிறிய அறையில் ஒரு படுக்கையில் நித்திரை செய்கிறார். நேர்மையும் கரிசனமும் கூடிய கடின ஒருநாள் உழைப்பிற்குப் பின் அது அவருடைய அமைதியான நித்திரை.
இருளாயிருக்கிற அவ்வறையில் அவரை நான் பார்க்க முடிகிறது. ஏனென்றால் மெல்லிய நிலவுக் கதிர் திறந்து கிடக்கிற ஜன்னல் வழியே உள்ளே பாய்கிறது. அச்சிறு அறையில் சூசையப்பருக்கு உஷ்ணமாயிருந்ததாலோ அல்லது அதிகாலையின் வெளிச்சத்தில் உடனே துயில் எழுவதற்காகவோ ஜன்னல்களை அவர் திறந்து வைத்திருக்கக் கூடும். அவர் ஒரு பக்கமாய் சரிந்து படுத்திருக்கிறார். கனவில் தாம் காண்கிற ஏதோ காட்சியைக் கண்டு புன்னகை புரிகிறார்.
ஆனால் அவருடைய புன்னகை கவலைக்குறியாக மாறுகிறது. பயங்கர கனவு கண்டதுபோல் பெருமூச்சு விடுகிறார். திடீரென கண்விழிக்கிறார். எழுந்து படுக்கையில் அமர்கிறார். கண்களைக் கசக்கி சுற்றுமுற்றும் பார்க்கிறார். அவ் இளங்கதிர் வருகிற ஜன்னலை நோக்குகிறார். அது நடுச்சாம வேளை. அவருடைய படுக்கையின் அற்றத்தில் கிடந்த தம் ஆடையை எடுக்கிறார். அவர் அணிந்திருக்கிற குறுங்கை உடுப்பிற்கு மேலே அதை இழுத்துப் போர்த்தி உடுத்திக் கொள்கிறார். போர்வையை தூர நகர்த்திவிட்டு கால்களைத் தரையில் ஊன்றி காலணிகளைத் தேடுகிறார். அவைகளை அணிந்து வார்களைக் கட்டுகிறார். எழுந்து நிற்கிறார். படுக்கைக்கு எதிரேயிருக்கிற வாசலுக்குப் போகிறார். அது அவருடைய படுக்கையின் பக்கவாட்டில் ஞானிகளை வரவேற்ற பெரிய அறைக்குப் போகிற வாசலல்ல.
அறையின் கதவை விரல் நுனிகளால் மெல்லத் தட்டுகிறார். உள்ளே வரும்படி அங்கிருந்து பதில் குரலை அவர் கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அக்கதவைக் கவனமாக சத்தமில்லாமல் திறந்து வைக்கிறார். கதவைத் தட்டுமுன் அவர் ஒற்றைத் திரி எண்ணை விளக்கை ஏற்றி அதன் வெளிச்சத்தில் நடந்து சென்றார். மாதாவின் அறைக்குட் செல்கிறார். அது சூசையப்பருடைய அறையைவிட சற்று விசாலமானது. ஒரு தாழ்ந்த கட்டில் - அதன் பக்கத்தில் ஒரு தொட்டில். ஒரு மூலையில் ஒரு மங்கலான இரா விளக்கு இருக்கிறது. அசைகிற அதன் சுடர், ஒரு சிறு நட்சத்திரம் போல் தன் பொன் நிற மெல்லிய ஒளியில், உறங்கும் யாரையும் எழுப்பாமல் காணச் செய்கிறது.
ஆனால் மாதா விழித்தே இருக்கிறார்கள். தன் மெல்லிய ஆடையில் தொட்டிலின் பக்கத்தில் முழங்காலிலிருந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். அமைதியுடன் உறங்குகிற திவ்ய பாலனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மூன்று ராஜாக்கள் வந்தபோது சேசுவை நான் எப்படிக் கண்டேனோ அதே வயதில்தான் அவர் இருக்கிறார். சுமார் ஒரு வயதுக் குழந்தை. அழகுடன், ரோஜாப் பூ நிறத்தில் இளம் பொன் நிற முடியுடன். தம் சுருள் தலை தலையணையில் படிய, நாடியின் கீழ் இறுக்கிய கைவிரல்களுடன் காணப்படுகிறார்.
“நீங்கள் உறங்கவில்லையா? ஏன் சேசுவுக்கு நன்றாயில்லையா?” என்று மெதுவான குரலில் அர்ச். சூசையப்பர் ஆச்சரியத்துடன் கேட்கிறார்.
“அவர் நலமாயிருக்கிறார். நான் ஜெபிக்கிறேன். பிந்தி உறங்குவேன். சூசை நீங்கள் வந்தது ஏன்?” என்றுகேட்கிறார்கள் மாதா முழங்காலில் நின்றபடியே.
சேசு பாலன் விழித்துவிடக் கூடாதென்று சூசையப்பர் மிகத் தாழ்ந்த ஆனால் பரபரப்பான குரலில் பேசுகிறார்: “நாம் இங்கிருந்து உடனே போய்விட வேண்டும். உடனடியாகப் போக வேண்டும். பெட்டியைத் தயாரியுங்கள். ஒரு சாக்கில் வைக்கக் கூடுமான தெல்லாவற்றையும் எடுத்து வையுங்கள். மீதியை நான் தயாரிக்கிறேன். எவ்வளவு முடியுமோ என்னால் முடிந்த மட்டும் எடுத்துக் கொள்கிறேன். உதயத்தில் நாம் ஓடிப்போக வேண்டும். அதற்கு முன்பே கூட போகலாம். ஆனால் நான் வீட்டு எஜமானியிடம் பேச வேண்டும்...” என்கிறார் அர்ச். சூசையப்பர்.
“எதற்காக நாம் இப்படி ஓடிப்போக வேண்டும்?”
“அதை நான் பிந்திச் சொல்கிறேன், சேசுவுக்காகவே. ஒரு சம்மனசானவர் என்னிடம்: “பாலனையும் தாயையும் கூட்டிக் கொண்டு எஜிப்துக்கு தப்பி ஓடிப்போ” என்று கூறினார். நேரம் வீணாக வேண்டாம். என்னால் முடிந்ததை நான் தயாரிக்கப் போகிறேன்.”
நேரம் வீணாக வேண்டாமென்று மாதாவிடம் சொல்ல அவசியமேயில்லை. சம்மனசு-சேசு-ஓடிப்போதல் என்று கேட்ட உடனேயே பாலனுக்கு ஆபத்து வந்து விட்டது என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். அவர்கள் முகம் மெழுகைவிட வெளுத்து விட்டது. சடாரென எழுந்தார்கள். ஒரு கையை இருதயத்தில் வைத்தபடி முழுவதும் கலங்கிப் போனார்கள். ஆயினும் துரிதமாய் அங்குமிங்கும் போய் துணிகளைப் பெட்டியில் எடுத்து வைத்தார்கள். மாதாவின் மனம் கலங்கினாலும் அவர்களுடைய நிதானம் மறையவில்லை. துரிதமாக ஆனால் கிரமத்தோடு காரியங்களைச் செய்தார்கள். தொட்டிலைக் கடந்து செல்லும்போது குழந்தையைப் பார்த்துக் கொள்கிறார்கள். அவரோ அமைதியாக உறங்குகிறார்.
“நான் உதவட்டுமா?” என்று அர்ச். சூசையப்பர் இடைக்கிடையே வந்து கேட்கிறார்.
மாதா வேண்டாமென்று கூறுகிறார்கள். சாக்கு நிரம்பி அது பாரமாக ஆன பின்தான் அதைக் கட்டி கட்டிலிலிருந்து இறக்குவதற்கு அவரை மாதா கூப்பிட்டார்கள். ஆனால் சூசையப்பர் மற்ற எல்லாவற்றையும் அவரே செய்து, அந்த நீண்ட சாக்கையும் அவருடைய சிறிய அறைக்குத் தூக்கிச் செல்கிறார்.
“கம்பளிப் போர்வைகளையும் எடுத்துக் கொள்ளவா?” என்று மாதா கேட்க, அதற்குப் பதிலளித்த சூசையப்பர்:
“உங்களால் முடிந்ததையெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள். மீதமெல்லாம் நாம் இழந்து விடுவோம். அதனால் முடிந்தமட்டும் எடுங்கள். அவை பயன்படும். ஏனென்றால், அதாவது நாம் நீண்ட காலம் வெளியில் தங்க நேரிடும்.” இதைச் சொல்லும்போது அர்ச். சூசையப்பர் மிகத் துயரமாயிருந்தார். மாதா அப்போது எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பதை நாம் எளிதாக யூகித்துக் கொள்ள முடியும். ஆழ்ந்த பெருமூச்சு விட்டபடி அவர்கள் சூசையப்ப ருடையவும் தன்னுடையவும் போர்வைகளை மடிக்கிறார்கள். சூசையப்பர் அவைகளை ஒரு கயிற்றில் கட்டுகிறார். கட்டும்போது சொல்கிறார்: “மரியா, விரிப்பு மெத்தை பாய்களை விட்டு விடுவோம். மூன்று சுமை கழுதைகளை நாம் கொண்டு சென்றாலும் மிஞ்சிய பாரம் ஏற்ற முடியாது. நம் பயணமோ நீண்ட, அசெளகரியமானது. பாதி வழி மலைகளிலும் பாதி வழி பாலைவனங்களிலும். சேசுவை நன்றாக மூடிக் கொள்ளுங்கள். மலைப்பிரதேசங்களிலும் பாலைவனங்களிலும் இராக்காலங்கள் குளிராக இருக்கும். ஞானிகளின் காணிக்கைகளை நான் கொண்டு வருகிறேன். அவை அங்கே மிகவும் பயன்படும். என்னிடமிருக்கிற பணத்தையெல்லாம் கொண்டு இரண்டு கழுதைகளை வாங்கப் போகிறேன். அவைகளை திரும்ப அனுப்ப முடியாதாகையால் கிரயத்திற்குத்தான் வாங்க வேண்டும். விடியுமட்டும் காத்திராமல் உடனேபோய் அவைகளை வாங்கி வருகிறேன். அவை எங்கே கிடைக்குமென்று எனக்குத் தெரியும். நீங்கள் எல்லாவற்றையும் முஸ்திப்புப்படுத்தி வையுங்கள்” என்று கூறி சூசையப்பர் வெளியே செல்கிறார்.
மாதா இன்னும் சில பொருட்களை எடுத்து வைக்கிறார்கள். சேசுவைப் பார்க்கிறார்கள். வெளியே போகிறார்கள். இன்னும் ஈரமாகக் காணப்படும் சிறிய ஆடைகளை எடுத்து வருகிறார்கள். அவை முந்தின நாள் சலவை செய்யப்பட்டதாயிருக்கலாம். அவற்றை மடித்து ஒரு துணியில் பொதிந்து மற்ற ஜாமான்களுடன் வைக்கிறார்கள். இதற்குமேல் ஜாமான் எதுவுமில்லை. சுற்றிலும் பார்க்கிறார்கள். ஒரு மூலையில் மரத்தில் செதுக்கப்பட்ட ஒரு செம்மறி ஆடு: சேசு விளையாடும் பொம்மைகளுள் ஒன்று. அதை அழுகையுடன் எடுத்து முத்தமிடுகிறார்கள். அதிலே சேசு பாலனின் பல்பட்ட அடையாளங்கள் உள்ளன. ஆட்டின் காதுகள் கடிக்கப்பட்டுள்ளன. ஒரு விலை பெறாத மரத்துண்டை மாதா அன்பு பாராட்டுகிறார்கள். கரணம், அது அவர்களுக்கு பெருமதிப்புடைய பொருளாயிருக்கிறது. ஏனென்றால் அது சேசு மீது சூசையப்பருக்குள்ள அன்பைக் காட்டுகிறது. அம்மரத்துண்டு சேசுவைப் பற்றி அவர்களுக்குக் கூறுகிறது. அந்தப் பொம்மையையும் மாதா பெட்டிக்குள்ளே மற்றப் பொருள்களுடன் வைக்கிறார்கள்.
சின்னத் தொட்டிலிலிருக்கிற சேசுவைத்தவிர இனி எடுத்து வைப்பதற்கு வேறு எதுவுமில்லை. சேசு குழந்தையையும் பயணத்திற்கு ஆயத்தம் செய்ய வேண்டுமென்கிற எண்ணம் மாதாவுக்கு ஏற்படுகிறது. ஆகவே அவர்கள் சேசுவை எழுப்புவதற்காக தொட்டிலை சற்று அசைக்கிறார்கள். குழந்தையோ கொஞ்சம் சிணுக்கத்துடன் மறுபுறம் திரும்பிப் படுத்து தொடர்ந்து துயில் கொள்கிறார். மாதா அவருடைய தலைமுடியில் லேசாகத் தட்டுகிறார்கள். சேசு சின்ன வாய் திறக்க கொட்டாவி வருகிறது. பின் மாதா குனிந்து அவர் கன்னத்தில் முத்தமிட அவர் முழுவதும் விழித்துக் கொள்கிறார். கண்ணைத் திறந்து தாயைப் பார்த்துச் சிரிக்கிறார். கரங்களை நீட்டுகிறார். அவர் சிரித்து போர்வையை உதைத்து கைகளை அசைப்பது மிக இரம்மியமாக உள்ளது... மாதாவின் கண்களில் கண்ணீர் வழிகிறது. குழந்தை அதை ஆச்சரியமாகப் பார்க்கிறார். கையை மாதா முகத்தில்பட நீட்டுகிறார். மாதாவின் கண்ணீரால் அது நனைகிறது... மாதா அவரை உடுத்தி சின்னப் பாத அணிகளையும் மாட்டுகிறார்கள். அதன்பிறகு அமுதுண்ட பாலன் மீண்டும் அயர்ந்து உறங்குகிறார். மாதா மிக மெதுவாக எழுந்து தன் படுக்கையில் அவரைக் கிடத்துகிறார்கள். தன் மேலாடையால் அவரை மூடுகிறார்கள். தொட்டிலுக்குப் போய் சிறு விரிப்புகளை மடித்து வைக்கிறார்கள். சின்ன மெத்தையை எடுத்துச் செல்லவா என்று சிந்திக்கிறார்கள். அது மிகச் சிறியது. அதைக் கொண்டு போகலாம். அதையும் சிறு தலையணையையும் பெட்டிக்குப் பக்கத்தில் எடுத்து வைக்கிறார்கள். பின் வெறும் தொட்டிலைப் பார்த்து அழுகிறார்கள். பாவம், தன் குழந்தையில் இம்சிக்கப்படுகிற தாய்!
சூசையப்பர் திரும்பி வருகிறார். “எல்லாம் தயாரா? சேசு தயாரா? அவருடைய போர்வைகள், விரிப்பு எல்லாம் எடுத்தாயிற்றா? தொட்டிலைக் கொண்டுபோக முடியாது. சின்ன மெத்தையையாவது எடுத்துக் கொள்ள வேண்டும். பாவம் சேசு பாலன் - இவரையல்லவா கொல்லத் தேடுகிறார்கள்” என்று அவர் கூறக் கேட்டதும் மாதா சத்தமாக “சூசையே!” என்று கத்திவிட்டார்கள்.
“ஆம் மரியா. ஏரோது பாலனைக் கொல்லத் தேடுகிறான். அவனுடைய உலக அரச பட்டத்திற்கு இந்த மாசற்ற குழந்தை ஆபத்தென்று அந்த அசுத்த மிருகம் பயப்படுகிறது. குழந்தை அவனுக்குத் தப்பிவிட்டது என்று அறியும்போது அவன் என்ன செய்வானோ? அதற்குள் நாம் வெகுதொலைவு போய்விடுவோம். கலிலேயா வரையிலும் பாலனைத் தேடிச் சென்று தன் வஞ்சத்தை அவன் தீர்த்துக் கொள்வான் என்று நான் நினைக்கவில்லை. நாம் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிப்பது அவனுக்கு அதிக கடினமாயிருக்கும். நமக்கு நாசரேத் என்று அவனுக்குத் தெரிய வருவது மிக மிகக் கடினம். நாம் யார் உண்மையில் என்று கண்டுகொள்வது அவனுக்கு சிரம சாத்தியம் -ஒருவேளை அவன் பிரமாணிக்கமாயிருக்கிற சாத்தான் ஒரு நன்றியாக ஏரோதனுக்கு அதை அறிவித்தாலன்றி. ஆனால் அப்படி அவன் அறிந்து விட்டாலும்... எப்படியும் தேவன் நமக்கு உதவுவார். மரியா அழாதீர்கள். இப்படி அகதியாய்ப் போவதைவிட நீங்கள் அழுவது எனக்கு அதிக வேதனையாயிருக்கிறது” என்கிறார் சூசையப்பர்.
“மன்னியுங்கள். நான் எனக்காகவோ நான் இழந்து போகிற சில பொருள்களுக்காகவோ அழவில்லை. உங்களைப் பற்றித்தான். ஏற்கெனவே உங்களை நீங்கள் அதிகம் தியாகம் செய்திருக்கிறீர்கள். மறுபடியும் உங்களுக்கு வேலை அகப்படாது. ஒரு வீடு கிடையாது. என்னால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள்!”
“எவ்வளவு கஷ்டங்கள்? மரியா அப்படியல்ல. உங்களால் எனக்குக் கஷ்டமில்லை. எப்பொழுதுமே உங்களால் எனக்கு ஆறுதல்தான். வருங்காலத்தைப் பற்றிக் கவலை கொள்ளாதீர்கள். ஞானிகள் கொண்டு வந்த காணிக்கைகள் நம்மிடம் உள்ளன. ஆரம்பத்திற்கு அவை போதும். பிந்தி எனக்கு வேலைகள் வரும் - ஒரு நல்ல திறமையுள்ள தொழிலாளி எப்படியும் சமாளித்து விடுவான். இங்கு எப்படி நடந்ததென்று நீங்கள் பார்த் திருக்கிறீர்கள். எல்லா வேலைகளையும் செய்து முடிக்க இங்கு நேரம்தான் போதவில்லை.”
“உண்மைதான். ஆனால் உங்கள் சொந்த நாட்டை விட்டு அகன்றிருக்கும் உங்கள் துயரத்தை யார் போக்குவார்கள்?”
“இதே துயரம் உங்களுக்கும் உண்டல்லவா? உங்களுக்கு எவ்வளவோ விருப்பமான உங்கள் வீட்டின் மீதுள்ள ஏக்கத்தை யார் தீர்ப்பார்கள்?”
“சேசுதான். அவரைக் கொண்டிருப்பது அங்கு நான் கொண்டிருந்ததைக் கொண்டிருப்பதுதானே.”
“எனக்கும் சேசுவைக் கொண்டிருப்பதுதான் என் சொந்த நாட்டைக் கொண்டிருப்பது. சில மாதங்களுக்கு முன்புவரை அதைப் பற்றி நான் நம்பிக் கொண்டிருந்தேன். இப்பொழுது என் கடவுளை நான் கொண்டிருக்கிறேன். நான் எதையுமே இழந்து போகவில்லை என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்தானே. ஒரே ஒரு முக்கியமான காரியம் சேசுவைக் காப்பாற்றுவதுதான். அப்போது நமக்கு எல்லாம் இருக்கும். இந்த வானத்தை இனி ஒருபோதும் நாம் காணாதிருந்தாலும்கூட - இந்த நாட்டை - ஏன் இதை விட அருமையான கலிலேயாவையே காணாவிட்டாலும் நமக்கு எல்லாம் இருக்கும். காரணம் அவரை நாம் கொண்டிருப்போம். மரியா, பொழுது புலரப் போகிறது. இவ்வில்லத்தின் எஜமானியிடம் விடைபெற்றுக் கொண்டு ஜாமான்களை ஏற்ற நேரமாகிறது. எல்லாமே நன்றாக இருக்கும்.”
கீழ்ப்படிதலுடன் மாதா எழுகிறார்கள். தன் மேற்போர்வையை அணிகிறார்கள். சூசையப்பர் கடைசியான ஒரு சிறு மூட்டையைக் கட்டி எடுத்துச் கொண்டு வெளியே செல்கிறார்.
மாதா பாலனை மெல்ல எடுத்து ஒரு துப்பட்டியால் அவரைப் பொதிந்து அவரை அரவணைத்து வைத்துக் கொள்கிறார்கள். சில மாதங்களாக தங்களுக்குப் புகலிடம் அளித்த சுவர்களைப் பார்க்கிறார்கள். ஒரு கையால் அவற்றைத் தொடுகிறார்கள். மரியாயின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்ளத் தகுதி பெற்ற அவ்வில்லம் பாக்கியம் பெற்றது.
மாதா வெளியே வருகிறார்கள். சூசையப்பரின் சின்ன அறை வழியாக பெரிய அறைக்குள் செல்கிறார்கள். வீட்டெஜமானி வருகிறாள். அவள் கண்ணீர் சிந்தியபடி மாதாவை முத்தமிட்டு வழியனுப்புகிறாள். பின் துப்பட்டியின் ஓரத்தை உயர்த்தி அமைதியாக உறங்கும் ஆண்டவரின் நெற்றியில் முத்தஞ் செய்கிறாள். அவர்கள் படிக்கட்டுகளின் வழியே வெளிப்புறம் கீழே இறங்குகிறார்கள்.
அதிகாலையின் ஒளியில் அவர்களால் பார்க்க முடிகிறது. அம்மங்கல் வெளிச்சத்தில் மூன்று இளம் கோவேறு கழுதைகள் நிற்பது தெரிகிறது. அவைகளுள் அதிக வலிமையான கழுதைமீது தட்டுமுட்டுகளும் வேலைக் கருவிகளும் ஏற்றப்பட்டுள்ளன. மற்ற இரண்டும் சேணமிட்டபடி உள்ளன. பெட்டியையும் மூட்டைகளையும் முதல் மிருகத்தின் முதுகில் கட்டிக் கொண்டிருக்கிறார் சூசையப்பர். சாக்கின் மேல்புறத்தில் சூசையப்பரின் தச்சுவேலைக் கருவிகள் காணப்படுகின்றன. மேலும் வழியனுப்புதல்கள், கண்ணீர்களுக்குப் பின் மாதா ஒரு கழுதையின்மேல் ஏறும்போது பாலனை வீட்டெஜமானி ஏந்திக் கொண்டிருக்கிறாள். அவரை அவள் மறுபடியும் முத்தமிடுகிறாள். பின் மாதாவிடம் அவரைக் கொடுக்கிறாள். பொதி ஏற்றப்பட்டுள்ள கழுதையை, தான் ஏறும் கழுதையுடன் கட்டியபின் சூசையப்பரும் ஏறிக் கொள்கிறார். மாதா ஏறியிருக்கும் கழுதையின் கடிவாளத்தை சூசையப்பர் பிடித்துக் கொள்வதற்கு இது வசதியாயிருக்கிறது.
கனவில் நடந்தது போன்ற ஞானிகளின் வருகையைப் பற்றி பெத்லகேம் ஊர் கனவு கண்டபடி நிம்மதியாக உறங்குகிறது. அதற்கு நேரிடப் போவதை அது அறியவில்லை. அதே சமயம் திருக்குடும்பம் எஜிப்துக்கு ஓடிப் போகப் புறப்படுகிறது.
இக்காட்சி முடிகிறது.