ஆண்டவரை நேசிக்கும் ஓர் ஆன்மா அவரைப் பற்றி துல்லியமான அறிவைப் பெறும்போது அவர் எவ்வளவோ மகிழ்ச்சியடைகிறார். அதற்காக இவ் வெளிப்படுத்தலை நமக்கு அருளியிருக்கிறார்.
சத்திய திருச்சபை மீது சேசுவுக்கிருக்கிற அன்பும் ஆர்வமும், அதற்கு தம்மைப் பற்றிய இந் நீண்ட வெளிப்படுத்தலை அளிக்க அவரைத் தூண்டியுள்ளன.
20-ம் நூற்றாண்டில் "அழிந்து வருகிற” நம்மை மீட்டுக் கொள்ளும்படியாகவும், அவருடைய "ஞானப் பாதையில் நாம் மேலேறிச் செல்ல உதவும்படியாகவும் " தம்மைப் பற்றிய இவ்வரலாற்றை மரியா வால்டோர்ட்டா வழியாக நமதாண்டவர் நமக்குத் தருகிறார்.
நவீனத்தின் தீமைகளுக்கு ஒரு தகுந்த மாற்றாக தம்முடையவும், தம் திரு அன்னையுடையவும் வாழ்க்கையை அவை நடந்தபடியே நமக்குக் காட்டுகிறார்.
மேலும் உலக இரட்சகராகிய சேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நெருங்கியிருக்கிறது என்பதையும் இந்நூலின் மூலம் நாம் உணர வேண்டும் என்றும் அவர் ஆசிக்கிறார். அவரை எதிர்பார்த்து, "ஆண்டவராகிய சேசுவே வாரும்" என்று நாம் அவரை அன்போடு அழைக்கும்படியும் விரும்புகிறார்.
ஆகவே மரியா வால்டோர்ட்டாவின் இவ்வெளிப்படுத்தலை "இறுதிக்கால சுவிசேஷம்" என்று நாம் கொள்ளலாம். ஆயினும் இந்த "சுவிசேஷம் '' நான்கு சுவிசேஷகர்கள் எழுதிய நமதாண்ட வரின் வரலாற்றை எவ்வகையிலும் மாற்றவில்லை. அதன் இடத் தையும் எடுத்துக் கொள்ளவில்லை. சுவிசேஷத்திற்குப் பதிலாக வும் இது தரப்படவில்லை. மாறாக, நம் சுவிசேஷத்தை இது விளக்கஞ் செய்கிறது. பொருத்திக் காட்டுகிறது, ஒளிர்விக்கிறது, படிக்கிறவர் களின் இருதயத்தில் சேசுவையும் மாதாவையும் அதிகமதிகமாக நேசிக்கும் தாகத்தை எழுப்புகிறது.
மாதா, அர்ச். சூசையப்பர், அர்ச். அன்னம்மாள், அர்ச். சுவக்கின், அர்ச். சக்கரியாஸ், அர்ச். எலிசபெத், அர்ச். ஸ்நாபக அருளப்பர், அர்ச். லாசர், அர்ச். மார்த்தா , அர்ச். மரிய மதலேனம்மாள், அப்போஸ்தலர்கள் போன்ற ஆண்டவரின் உறவினர்கள் சிநேகிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களையும், பல முக்கிய சுவிசேஷ சிறப்பு வாய்ந்த மனிதர்களையும் இடங்களையும், நிகழ்ச்சிகளையும் விவரித்துக் கூறி, சுவிசேஷ வரலாற்றைப் பூர்த்தி செய்கிறது.
நமதாண்டவரின் பல அரிய முழு நீளப் பிரசங்கங்களையும், விசேஷ போதனைகளையும், தனி உரையாடல்களையும் அப்படி அப்படியே நமக்குத் தருகிறது. மலை மேல் பிரசங்கத்தின் எட்டுப் பாக்கியங்களை முழு அர்த்த விவரங்களுடன் அளிக்கிறது. ஆண்டவருடைய வாழ்க்கையும், திருப்பாடுகளும், மாதாவின் வியாகுலங்களும் அவை அன்று நடந்தவாறே தத்ரூபமாக விவரிக்கப்படுகின்றன. மாதாவின் பிறப்பு முதல், அவர்கள் பரலோகம் சென்றது வரையிலான மானிட இரட்சணிய வரலாறு முழுவதும் நம் கண்முன் காட்சியாகக் கொண்டுவரப்படுகிறது. இவ் வெளிப்படுத்தல் இம்முறையில் மிக அபூர்வமானது, தனிச் சிறப்புடையது, இதுவரையிலும் எங்கும் அருளப்படாதது. நமக்கு தேவ திருவுளத்தின் பரிசு இது என்னலாம்.
இத்தகைய அரிய பொக்கிஷம் நமதாண்டவருடையவும் தேவ அன்னையினுடையவும் அன்பாலும் ஆசீராலும் நம் மக்களுக்குக் கிடைப்பது நம் பெரிய பாக்கியமாகும். சேசுவை நேசித்து, நேசிக்கச் செய்யும் விருப்பமுடைய அனைவரின் உள்ளங்களும் மகிழ்ச்சியாலும், நன்றியாலும், தேவ வரப்பிரசாதங்களாலும் நிரம்புவனவாக!
இந்த நூலை தமிழில் பதிப்பிக்க எவ்வகையிலேனும் உதவியவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக! அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம்.
இந்நூலின் மொத்தம் பத்துப் புத்தகங்களையும் இவ்வாறு வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து வெளியிட சேசு மரியாயின் அன்பர்கள் உதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
மாதா அப்போஸ்தலர்கள் சபை
ரோஸாமிஸ்திக்கா, 9A516 - 1, New No. 111519,
சகாயமாதாட்டணம், 2- வது தெரு, வி.வி.டி. மேல்நிலைப் பள்ளி எதிரில்,
தூத்துக்குடி - 628 002. தமிழ்நாடு.
0461-2361989
tutirosamystica@gmail.com