சமுசாரிகள் அனைவரும் பெற்றோராயிருக்கப் பேராசைப்படுவது வழக்கம். ஆனால் சிலர் எவ்வளவு ஆவல் கொண்டு நேர்ச்சிகளைப்பண்ணிவந்தாலும் அந்த வரத்தை அடையாமலிருக்கிறார்கள். தாய் தந்தையரே! கடவுள் உங்களைப் பெற்றோராக்கி உங்கள் பிள்ளைகளால் உங்கள் வயோதிகத்துக்கும் கிடைதலைகாலத்துக்கும் பெரும் ஆதரவுண்டாகவும் உங்கள் பேர் உங்களோடு அற்றுப்போகாமல் நிலைத்திருக்கவும் பண்ணத் தயைகூர்ந்தது உங்களுக்கு மேன்மையும் பாக்கியமுமல்லவா?
ஏழைகளான பெற்றோர் கூடத் தங்கள் பிள்ளைகள் தம்மார்பிலும் மடியிலும் முதுகிலும் சாய்ந்து தங்களைப் புடைசூழ்ந்திருப்பதில் பெருமையும் ஆனந்தமுங் கொள்ளுகிறார்கள். இவர்களுக்குத் தாங்கள் பிள்ளைகளால் சூழப்பட்டிருப்பது இராசாக்கள் தங்கள் பிரசைகள் மத்தியில் வீற்றிருப்பதைப்பார்க்கிலும் அதிக ஆனந்தமாகும். ஏனெனில் பயத்திலும் நேசமே மேலானது. பிரசைகள் பயத்தினால் அரசனைச் சங்கிப்பது வழக்கம். ஆனால் பிள்ளைகளோ நேசத்தினால் பெற்றோரைக் கனம்பண்ணுகிறார்கள். பிள்ளைகள் பெற்றோருக்குப்போல வேறுயாருக்குத் தங்கள் மனதிலுள்ள எல்லாவற்றையும் அச்சங் கூச்சமின்றி வெளிவிடுவார்கள்?
தாய் தந்தையர் பிள்ளைகள் மட்டில் தேவனுடைய ஸ்தானாபதிகளாகவும் அவர்களை ஆண்டு நடத்தும் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். தனவான்கள் அரசர்களின் ஸ்தானாபதிகளாயிருப்பதில் பெருமை பாராட்டுவது வழக்கம். தேவசமுகத்தில் அற்ப பூச்சி புழுக்களுக்கு ஒப்பாயிருக்கும் இராசாக்களின் ஸ்தானாபதிகளாயிருப்பது இவ்வளவு மேன்மையாகில், இராசாதிராசாவாகிய தேவனின் ஸ்தானாபதிகளாயிருப்பது பெற்றோருக்கு எவ்வளவு மேலான மகத்துவம்!
இராசகுமாரர்களைச் சம்பளத்துக்காக வளர்த்துப் பயிற்றுவதை உலகம் பெரும் மகிமையாக எண்ணினால், தேவாதிதேவனின் காரியஸ்தர்களாய்த் தெரியப்பட்டு அவர் தங்களுக்கு ஒப்படைத்த பிள்ளைகளை அவருக்கு ஏற்றவர்களாய் வளர்ப்பது பெற்றோருக்கு எவ்வளவு உன்னத மேன்மை! எவ்வளவு பெரும் பாக்கியம்! தேவன் பிள்ளைகளுக்குப் பெற்றோரைத் தமது பதிலாளிகளாகவும் பிள்ளைகளுடைய உயிருக்குக்காரணர்களாகவும் நல் வாழ்வுக்கு அடிஅத்திவாரமாகவும் அவர்களை மோட்ச வழியில் நடத்துங் காவல் சம்மனசுகளாகவும் அவர்களுக்கு வேத அறிவு உணர்த்தும் முதல் குருப்பிரசாதிகளாகவும் கல்வி அறிவூட்டும் பிரதம உபாத்திமாராகவும் அவர்களை ஆண்டு நடத்தும் அரசர் அதிகாரிகளாகவும் காப்பாளராகவும் ஏற்படுத்தியிருக்கிறார்.
தனவான்கள் அரசர்களாற் பிரபுத்துவநிலைக்குத் தெரிந்துகொள்ளப்படுவதைப் பெரும் மேன்மையாய் எண்ணுகிறார்கள். ஆனால் மனிதர் தேவனால் பெற்றோர் என்னும் பதவிக்கு அழைக்கப்படுவது அதிலும் மேலான மேன்மையல்லவா?
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠