21 டிசம்பர் 1944.
ஜெருசலேம் தேவாலயத்தில் திருநாள் நடைபெறுகிறது. அடைப்பு வாசல்கள் வழியாகவும் முற்றங்களையும் சாலைகளையும் மண்டபங்களையும் கடந்தும் பற்பல தேவாலய கட்டிடங்களிலும் மக்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்.
சேசுவின் குடும்பத்தார் இருந்த குழுவும் மெதுவான குரல்களில் சங்கீதங்களைப் பாடிக் கொண்டு வருகிறார்கள். ஆண்கள் எல்லாரும் முதலிலும் அதற்குப்பின் பெண்களும் செல்கிறார்கள். வேறு ஆட்களும், அவர்கள் நாசரேத்தில் உள்ளவர்களாகவோ, ஜெருசலேமில் அவர்களுக்குத் தெரிந்தவர்களாகவோ இருக்கலாம், அவர்களுடன் சேர்ந்துள்ளார்கள்.
அர்ச். சூசையப்பர் ஆண்களுக்குக் குறிக்கப்பட்ட இடத்தில் தம் ஆராதனையை முடிக்கிறார். (பெண்கள் சற்றுத் தாழ்ந்த இடத்தில் நின்று கொள்கிறார்கள்.) பின்னர் தம் குமாரனுடன் சில முற்றங்களைக் கடந்து சென்று ஜெபக் கூடம்போல் காணப்படுகிற ஒரு பெரிய அறைக்குள் வருகிறார். எனக்குக் காரணம் தெரியவில்லை. தேவாலயத்திலும் ஜெபக்கூடங்கள் இருந்தனவா? ஒரு லேவியனிடம் சூசையப்பர் ஏதோ பேசுகிறார். அவன் ஒரு கோடிட்ட திரைக்குப் பின்புறம் செல்கிறான். பின்பு சில மூத்த அவர்கள் குருக்கள்தான் என நினைக்கிறேன். அவர்கள் நிச்சயம் வேதப்பிரமாணத்தில் தேர்ந்தவர்கள். ஆகவே விசுவாசிகளை பரிசீலனை செய்ய நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அர்ச். சூசையப்பர் சேசுவை அறிமுகம் செய்கிறார். முதன்முதலாக அவர்கள் அங்கு வந்துள்ள பத்து வேதபாரகர் களுக்கும் தலைதாழ்த்தி வணங்கி மரியாதை செலுத்துகிறார்கள். வந்தவர்கள் கண்ணியத்துடன் தாழ்ந்த மர ஆசனங்களில் அமர்ந்துள்ளார்கள். சூசையப்பர் அவர்களைப் பார்த்து: “இது என் மகன். மூன்று மாதம் பன்னிரண்டு நாட்களுக்கு முன்பு என் மகனுக்கு வேதப்பிரமாணத்தின் வயது நிறைவடைந்துள்ளது. இஸ்ராயேல் விதிமுறைப்படி என் மகன் ஒழுக வேண்டுமென நான் ஆசிக்கிறேன். சரீரப் பிரகாரம் இப்பொழுது அவர் குழந்தையல்ல. வேதப்பிரமாணத்தின் குமாரன் என்னும் தகுதிக்கு என் மகனை இந்நேரத்திற்காக நான் தயார் செய்திருக்கிறேன். அதை நீங்கள் தயவுடனும் நியாயமாகவும் பரிசீலித்து தந்தையாகிய நான் கூறுவது சரிதானா என தீர்மானிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என் மகனுக்கு கட்டளைகளும் பாரம்பரியங்களும், தீர்ப்புகளும் தெரியும். தொங்கல்களின் பழக்கங்களும், வேத வசனங்கள் அடங்கிய தாயத்துகளின் பொருள்களும் தெரியும். மேலும் அன்றாட ஜெபங்களும் ஆசீர்வாதங்களும் தெரியும். வேதப்பிரமாணத்தையும் அதன் மூன்று கிளைகளான ஹலாசியா, மிட்ராஸ்க், அகாதா ஆகியவைகளும் தெரியுமாதலால் இனி அவர் ஒரு மனிதராய் ஒழுக முடியும். ஆகவே அவரின் செயல்கள், பாவங்கள் ஆகிய பொறுப்புகளிலிருந்து நான் விடுபெற விரும்புகிறேன். இப்பொழுதி லிருந்து என் மகன் சடங்குகளுக்கு உட்பட்டு, அதில் தான் தவறினால் அவற்றிற்குரிய தண்டனையையும், தானே ஏற்றுக் கொள்ள வேண்டும். தயவுசெய்து பரிசோதனையைச் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொள்கிறார்.
“செய்கிறோம். குழந்தாய் முன்னால் வா. உன் பெயரென்ன?
“நாசரேத் சூசையின் மகன் சேசு.”
“ஒரு நசரேயன்... அப்போ உனக்கு வாசிக்கத் தெரியுமா?”
“ஆம் குருவே. எழுதப்பட்டுள்ள வார்த்தைகளையும் அந்த வார்த்தைகளின் பொருளையும் என்னால் வாசிக்க முடியும்.”
“நீ சொல்வதன் அர்த்தமென்ன?”
“அதாவது முத்தானது வெளியில் காணப்படாமல் அழகற்ற மூடிய சிப்பிக்குள் இருப்பதுபோல், வார்த்தையின் வெளித் தோற்றத்திற்குள் மறைந்திருக்கிற உருவகம் அல்லது அடையாளத்தின் பொருளையும் நான் கண்டுபிடிக்கிறேன்.”
“அறிவுள்ள, அதிலும் மிக ஞானமான பதில். இப்படி முதியோர் வாயில்கூட அபூர்வமாகவே காண்கிறோம். ஒரு குழந்தையிடம் - அதிலும் ஒரு நசரேயனிடம்!”
அந்தப் பத்துப் பேரின் கவனமும் விழிப்படைகிறது. ஒருகணம் முதலாய் அவர்களுடைய கண்கள், இளம் பொன் நிற அழகிய பாலனைவிட்டு நீங்கவில்லை. அவரோ சுய நிச்சயம் உள்ளவராய், துணிவைக் காட்டாமலும் பயமில்லாமலும் அவர்களைப் பார்த்தபடியே நிற்கிறார்.
“உனக்குக் கற்பித்தவருக்கு நீ மகிமையளிக்கிறாய். அவர் நிச்சயமாக ஆழ்ந்து கற்றவர்தான்.”
“அவருடைய நீதியான இருதயத்தில் கடவுளின் ஞானம் குவிந்திருந்தது” என்று சேசு பதிலளிக்கிறார்.
“இதைக் கவனித்தீரா? இப்படிப்பட்ட ஒரு மகனுக்குத் தந்தையான நீர் பாக்கியசாலிதான்.”
அந்த அறையின் கோடியில் இருந்த அர்ச். சூசையப்பர் சிரித்தபடியே தலைகுனிகிறார்.
அப்போது அவர்கள் சேசுவிடம் மூன்று வெவ்வேறு சுருள்களைக் கொடுத்து: “தங்க நாடா கட்டிய சுருளை வாசி” என்கிறார்கள்.
சேசு அந்த சுருளை திறந்து வாசிக்கிறார். அது பத்துக் கற்பனைகள் அடங்கியது. முதல் சில வார்த்தைகளை வாசித்ததும் நீதிபதிகளில் ஒருவர்: “இனி மனப்பாடமாய்ச் சொல்லு” என்று கூறி சேசுவிடமிருந்த சுருளை வாங்கிக் கொள்கிறார். சேசு தொடர்ந்து சொல்கிறார். அவருக்கு எவ்வளவு சுய நிச்சயம் இருக்கிறதென்றால் அவர் சொல்வது வாசிப்பதுபோலவே இருக்கிறது. “ஆண்டவர்” என்ற வார்த்தை வரும்போதெல்லாம் அவர் தாழ்ந்து தலை வணங்குகிறார்.
“உனக்கு யார் இதைச் சொல்லிக் கொடுத்தார்கள்? ஏன் அப்படிச் செய்கிறாய்?”
“ஏனென்றால் அந்த நாமம் பரிசுத்தமானது. அதை உச்சரிக்கும்போது அந்தரங்க வெளியரங்க மரியாதையைக் காட்டும் ஓர் அடையாளத்துடன் செய்ய வேண்டும். பிரஜைகள் தங்கள் அரசனுக்குத் தலைவணங்குகிறார்கள். அவனோ கொஞ்ச காலத்திற்குத்தான். பிறகு அவன் தூசியாகி விடுகிறான். இஸ்ராயேலின் மிக உந்நத ஆண்டவரான அரசர்க்கரசர் உள்ளத் திற்கு மட்டுமே காணக்கூடியவராயினும் பிரசன்னமாயிருக்கிறார். அவருக்கு ஒவ்வொரு சிருஷ்டியும் தாழ்ந்து பணிய வேண்டாமா? ஏனென்றால் ஒவ்வொரு சிருஷ்டியும் நித்தியமான ஆளப்படுதலினால் அவரையே சார்ந்துள்ளதல்லவா?”
“மிகுந்த புத்திசாலி. பாரும்! உம்முடைய மகனை ஹில்லல் சாஸ்திரியிடமாவது கமாலியேல் சாஸ்திரியிடமாவது கல்வி கற்க வையும். அவன் நசரேயன். ஆனால் அவனுடைய பதில்கள், அவன் ஒரு புதிய பெரிய பண்டிதன் ஆவான் என்கிற நம்பிக்கையை எங்களுக்கு ஊட்டுகின்றன.”
“என் மகன் மனித வயதை அடைந்துவிட்டதனால் தன் விருப்பப்படியே அதைத் தீர்மானிக்கலாம். அவருடைய நியாயமான எந்த முடிவையும் நான் எதிர்க்க மாட்டேன்.”
“குழந்தாய், கவனி. நீ சொன்னாய், “புனித நாட்களை அர்ச்சிக்க மறவாதிரு; நீ மட்டுமல்ல, உன் மகனும் மகளும், உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் உன்னுடைய குதிரையும்கூட ஓய்வுநாளில் வேலை செய்யக் கூடாது” என்று. ஆனால், ஒரு சாபத் நாளில் ஒரு கோழி முட்டையிட்டால் அல்லது ஓர் ஆடு குட்டிகளை ஈன்றால் அவற்றின் உதரக் கனிகளை பயன்படுத்துவது சரியாகுமா அல்லது பழியாகுமா?”
“அநேக போதகர்கள் - ஷாமேய் என்பவர்தான் அவர்களுள் கடைசியானவர், இன்னும் உயிரோடிருக்கிறார் - அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், சாபத் நாளில் இடப்பட்ட முட்டை பிரமாணத்திற்கு எதிரானது என்று. ஆயினும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் அதாவது, பிறப்பித்தல் போன்ற ஒரு இயற்கையான செயலைச் செய்வதில் வேறுபாடு உண்டென்று நினைக்கிறேன். ஒரு குதிரையை வேலை வாங்கினால் அதன் பாவத்திற்கு நான் பொறுப்பாளி ஆகிறேன். ஏனென்றால் சாட்டையைப் பயன்படுத்தி அதைக் கட்டாயப்படுத்துகிறேன். ஆனால் சாபத் நாளில் தன் வயிற்றினுள் முற்றிய முட்டையை ஒரு கோழி இடுமானால் அல்லது பிறப்பதற்கு ஆயத்தமாயிருக்கிற குட்டியை ஓர் ஆடு ஈனுமானால், அப்படிப்பட்ட செயல் பாவமல்ல. சாபத் தினத்தில் இடப்பட்ட முட்டையும் பிறந்த ஆட்டுக்குட்டியும் கடவுளின் பார்வையில் குற்றமுள்ளவையல்ல.”
“அதெப்படி? சாபத் நாளில் செய்யப்படும் எல்லா வேலையும் பாவமாகும்போது?”
“எப்படியென்றால், கருத்தாங்கி பெற்றெடுத்தல் சிருஷ்டிக ருடைய சித்தத்தின்படி நடக்கிறது. அந்தச் சட்டம் ஒவ்வொரு சிருஷ்டிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மணி நேரங்களில் ஒரு முட்டை முழுமையடைந்து இடப்பட தயாராக இருக்கிற சட்டப்படி கோழி நடந்து கொள்கிறதே தவிர அது வேறெதுவும் செய்வதில்லை. ஆடுகளும், அனைத்தையும் சிருஷ்டித்தவருடைய சட்டங்களையே அனுசரிக்கின்றன. அந்த சட்டப்படி வருடத்திற்கு இருமுறை இளவேனிற் காலத்தில் சம பூமிகளில் பூக்கள் மலரும் போதும், காடுகளில் மரங்கள் இலையுதிர, கூர்மையான குளிரினால் மனிதர்கள் தங்களை மூடிக் கொள்ளும்போதும், ஆடுகள் சினைப்பட்டு அதனால் அவைகள் பால், மாமிசம், ஊட்டமுள்ள பாற்கட்டி ஆகியவற்றை, ஆண்டின் எதிர்மாறான பருவ காலங்களில் - அதாவது பயிரிடுவதில் உழைப்பு கடினமாயிருக்கிற மாதங்களிலும், பனிவிழும் கடும்குளிர் அதிக வேதனையாயிருக்கிற போதும் - தர வேண்டியிருக்கிறது. ஆதலால் ஓர் ஆடு அதன் காலம் வந்ததால் ஒரு குட்டியை ஈன்றால் அந்த ஆட்டுக்குட்டி பீடத்திலும்கூட பரிசுத்தமாயிருக்க முடியும். ஏனென்றால் அது சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிதலின் பலனாக இருக்கிறது.”
“இதற்குமேல் அவனை நான் பரிசோதிக்க மாட்டேன். பெரியவர்களுடைய ஞானத்தைவிட அவனுடைய ஞானம் அதிகமாயிருக்கிறது.”
“இல்லை. அவன் உருவக அடையாளங்களையும் கண்டுபிடிப்பதாகக் கூறினான். அதையும் கேட்போம்.”
“முதலில் அவன் ஒரு சங்கீதத்தையும் ஆசீர்வாதங்களையும் ஜெபங்களையும் சொல்லட்டும்.”
“விதிமுறைகளையும் சொல்லட்டுமே.”
“சரி. நீ மிட்ராஷியத்தைச் சொல்லு.”
சேசு எந்தத் தயக்கமும் இல்லாமல் அதைச் செய்யாதே... இதைச் செய்யாதே... என்று ஒரு நீள பட்டியலை ஒப்பிக்கிறார். அந்த விலக்குதல்களையெல்லாம் இப்பொழுதும் அனுசரிக்க வேண்டியிருந்தால், புரட்சிக்காரராயிருக்கிற நம்மில் ஒருவர்கூட ஈடேற்றமடைய இயலாது...
“போதும். இனி பச்சை நாடா கட்டியுள்ள சுருளைத் திற.”
சேசு அதைத் திறக்கிறார். அதிலிருந்து வாசிக்கத் தொடங்கப் போகையில்,
“அங்கு தள்ளி வாசி. ஆம். மேலும் தள்ளி.”
சேசு கீழ்ப்படிகிறார்.
“போதும். இப்பொழுது, நீ இதிலே உருவக அடையாளம் இருக்கிறதாகக் கருதினால் வாசித்து அதை விளக்கு.”
“பரிசுத்த வசனங்களில் அது இல்லாமலிருப்பது அபூர்வம். நாம்தான் அதைக் காண்பதுமில்லை, நடைமுறைப்படுத்துவது மில்லை. நான் வாசிக்கிறேன்: அரசராகமம் நான்காம் புத்தகம் அதிகாரம் 22 வசனம் 10: பின்னும் சாப்பான் அரசனைப் பார்த்து, எல்கியாஸ் குருவானவர் என்னிடத்தில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் என்றான். பின்பு அவன் அதை இராசாவுக்கு முன்பாக வாசித்தான். இராசா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின் வாக்கியங்களைக் கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு... ”
“அதில் வருகிற பெயர்களுக்கெல்லாம் பின்னால் வாசி.”
“நீங்கள் போய் அகப்பட்ட புத்தகத்தின் வாக்கியங்கள் நிமித்தமாக என்னைப் பற்றியும் பிரசையைப் பற்றியும் யூதா சனம் எல்லாத்தையும் குறித்தும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள். ஏனெனில் நமக்காகவே எழுதியிருக்கிற எல்லா வாக்கியங்களின்படி நடக்க நமது பிதாக்கள் இப்புத்தகத்தின் வாக்கியங்களுக்கு செவி கொடாதபடியினாலேயன்றோ கர்த்தருடைய பெரும் கோபாக்கினியானது நமக்கு விரோதமாய்ப் பற்றியெரிகிறது என்றான்.”
“அவ்வளவு போதும். இது பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தது. இந்தப் பழைய சரித்திர நிகழ்ச்சியில் நீ என்ன உருவக அடையாளத்தைக் காண்கிறாய்?”
“எனக்கு இப்படித் தெரிகிறது: நித்தியமாயிருக்கிறதுடன் காலத்தைத் தொடர்புபடுத்த முடியாது. கடவுள் நித்தியராயிருக் கிறார். நம் ஆன்மாவும் நித்தியமாயிருக்கிறது. கடவுளுக்கும் ஆத்துமத்திற்கும் உள்ள உறவும் நித்தியமானதே. ஆகவே அன்று தண்டனைக்குரியதாயிருந்த ஒரு காரியம் இப்பொழுதும் தண்டிக்கப்பட வைக்கிறது. குற்றத்தின் விளைவு மாறாது.”
“அப்படியென்றால்?”
“கடவுளிடமிருந்து வருகிற ஞானம் இஸ்ராயேலிடம் இப்பொழுது இல்லை. நாம் அவரிடமே வெளிச்சத்தைக் கேட்க வேண்டுமன்றி பரிதாபமான மனிதர்களிடம் அல்ல. நீதியும் கடவுளுக்குப் பிரமாணிக்கமும் இல்லாவிடில் வெளிச்சத்தைக் காண இயலாது. அதனாலேயே மனிதர்கள் பாவஞ் செய்கிறார்கள். அவரும் தமது கோபத்தில் அவர்களைத் தண்டிக்கிறார்.”
“இப்பொழுது நம்மிடம் ஞானம் இல்லையா? நீ என்ன சொல்கிறாய் பாலகா? அறுநூற்றுப் பதின்மூன்று விதிமுறைகளும் இருக்கின்றனவே!”
“விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அவைகள் வெறும் வார்த்தைகளாகவே உள்ளன. அவற்றை நாம் அறிந்துள்ளோம். ஆனால் கடைப்பிடிப்பதில்லை. அதனாலேயே நாம் அவற்றுடன் தொடர்பற்றிருக்கிறோம். இதுதான் உருவக அடையாளம்: ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆண்டவரின் சித்தத்தை அறியும்படி அவரிடத்தில் விசாரிக்க வேண்டும். தன்மேல் அவருடைய கோபத்தை வருத்துவிக்காதபடி அச்சித்தத்தின்படி நடக்க வேண்டும்.”
“உத்தமமான குழந்தை! தந்திரமான கேள்வியின் கண்ணிகூட அவன் பதிலில் பதட்டத்தைக் கொடுக்கவில்லை. அவனை மெய்யான ஜெப ஆலயத்திற்குக் கூட்டிச் செல்வோம்.”
அதிக விசாலமும் பிரகாசமுமுள்ள அறைக்குள் அவர்கள் செல்கிறார்கள். அங்கே அவர்கள் முதற் காரியமாக, சேசுவின் முடியைக் குட்டையாக வெட்டுகிறார்கள். அவருடைய நீண்ட சுருள்களை அர்ச். சூசையப்பர் எடுத்துக் கொள்கிறார். பின்னும், அவருடைய சிவப்பு அங்கியை அவருடைய இடையில் ஒரு நீண்ட பட்டியால் பல தடவை சுற்றி இறுக்குகிறார்கள். அவருடைய நெற்றியிலும் கையிலும் மேற் சால்வையிலும் சின்னத் தொங்கல்களைக் கட்டுகிறார்கள். ஒருவித அமுக்குப் பொத்தான்களால் அவற்றைப் பதிக்கிறார்கள். பின்பு சங்கீதங்களைப் பாடுகிறார்கள். அர்ச். சூசையப்பர் ஆண்டவருக்கு ஒரு நீண்ட வாழ்த்து ஜெபம் சொல்லி தன் மகன்மேல் எல்லா ஆசீர்வாதங்களும் வர மன்றாடுகிறார்.
சடங்கு முடிந்தது. சூசையப்பருடன் சேசு வெளியே வருகிறார். தங்கள் உறவினர்களில் ஆண்கள் இருந்த இடத்திற்குச் செல்கிறார்கள். அங்கு ஓர் ஆட்டுக்குட்டியை வாங்கி, ஒப்புக் கொடுத்து, பலியிடப்பட்ட அதை எடுத்துக் கொண்டு தங்கள் உறவினர்களில் பெண்கள் இருந்த இடத்திற்கு வருகிறார்கள்.
மாதா சேசுவை முத்தமிட்டு அவரை நோக்கிப் பார்க்கிறார்கள். பல ஆண்டுகள் அவரைக் காணாதவர்கள் போல. சேசு இப்போது மனித தோற்றம் கூடுதல் உடையவராக, அவருடைய உடையிலும் தலை முடியிலும் காணப்படுகிறார். மாதா அவரைத் தட்டிக் கொடுக்கிறார்கள். எல்லாரும் வெளியே செல்கிறார்கள்.
காட்சி முடிகிறது.