இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வேதசாட்சிகளுடைய இராக்கினியே!

“இதென்ன விந்தையாக இருக்கிறது! தேவதாய் தனது இரத்தத்தைச் சிந்தி மரித்ததாக நாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லையே. அவர்கள் அர்ச்சியசிஷ்டவர்களில் எல்லாம் பெரிய அர்ச்சியசிஷ்டவர்கள் ஆதலால், அவர்களை “சகல அர்ச்சியசிஷ்டவர்களின் இராக்கினியே” என்று அழைத்தல் முறை. ஆனால் “வேதசாட்சிகளின் இராக்கினியே” என்று அவர்களை அழைப்பதில் ஒரு அர்த்தமுமில்லையே!” தலைப்பைப் பார்த்தவுடன் சிலருடைய உள்ளாந்தரங்கங்களில் எழக்கூடிய ஆத்திரக் கேள்வி இது.

உண்மை. தேவதாய் இரத்தம் சிந்தி மரிக்கவில்லை. ஆயினும் சத்திய திருச்சபை அவர்களை வேத சாட்சி என்று அழைத்ததோடு நில்லாமல் வேதசாட்சிகளின் இராக்கினி என்றும் அழைக்கத் தயங்கவில்லை. கீழ்வரும் பத்திகளில் இதன் காரணத்தை எடுத்துக் காட்டுவோம்.

கிறீஸ்துநாதருக்காக, அல்லது அவர் ஏற்படுத்திய மெய்மறைக்காகத் தங்கள் இரத்தத்தைச் சிந்தி மரித்தோர் யாவரும் வேதசாட்சிகள் எனப்படுவர். ஆனால் இவர்கள் மாத்திரம் வேதசாட்சிகள் என்று எண்ணுவது தவறு; வேதசாட்சிகளாய் மரிக்காவிடினும், வேத விரோதிகள் கையில் சாவுக்கேதுவான வேதனை அனுபவிப்போருக்கும் வேதசாட்சிகள் என்ற பெயர் செல்லும். அர்ச். சுவிசேஷக அருளப்பர் கொதித்திருக்கும் எண்ணெய்க் கொப்பரையில் போடப்பட்டபோது சாகவில்லை; மாறாக, எண்ணெய்க் கொப்பரையில் போடப்படுவதற்கு முன் இருந்ததைவிட அதிக சுகசரீரத்தோடு வெளிவந்தார். (“Vegetior exiverit quam intraverit”--Brev. Rom. May 6; Noc. 2, Lec. 2). ஆயினும் அவர் ஒரு வேதசாட்சியாகக் கொண்டாடப்படு கிறார். 

மாமரி அன்னையும் இவ்விதமாகவே வேதசாட்சியானார்கள். அர்ச். பெர்நார்து கூறுவதுபோல், கொலைஞனின் வாள்முனையாலல்ல, ஆனால் அவர்கள் தன் ஆன்மாவில் அனுபவித்த சகிக்கவியலா வியாகுலத்தால் வேதசாட்சியானார்கள். இவ்வியாகுலம் ஒரு முறையல்ல, இரு முறையல்ல, அநேகமநேக முறை அவர்களுக்கு மரணம் வருவிக்கக் கூடியதாயிருந்தது. ஆகவே மாதா ஓர் உண்மை வேதசாட்சி. அதுமட்டுமல்ல, அவர்கள் ஏனைய வேதசாட்சிகளை விட பன்மடங்கு மேலான வேதசாட்சியு மாவார்கள். காரணம், மாமரி அன்னை மற்ற வேதசாட்சி களை விட அதிக வேதனை அனுபவித்தார்கள். அவ்வேதனையைத் தன் ஆன்மாவில் அனுபவித்தார்கள்; அவ்வேதனை நீண்டகால வேதனையாயிருந்தது.

முதலாவது, மாமரி அன்னை மற்ற வேதசாட்சிகளைக் காட்டிலும் அதிக வேதனை அனுபவித்தார்கள்:- 

கிறீஸ்துநாதருககுப் பிறகு மாதாவைப் போல அதிக வேதனை அனுபவித்தவர் ஒருவருமில்லை. உலகம் உண்டானது முதல் இந்நாள் வரை எத்தனையோ பேர் வேதனை பல அனுபவித்து, தங்கள் இரத்தத்தைச் சிந்தி வேதசாட்சிகளாக மரித்திருக்கிறார்கள். இன்னும் எத்தனையோ பேர் அவ்விதம் மரிக்கலாம். ஆனால் அவர்களது வேதனைகளையெல்லாம் ஒன்றாகத்திரட்டி னாலும், அன்னை அனுபவித்த வேதனைக்கு ஈடாகாது. “எருசலேம் குமாரத்தியே, உன்னை யாருக்கு ஒப்பிடுவேன்? உன்னை யாரைப் போல் என்பேன்? உன்னை யாருக்குச் சமமென்பேன்? சீயோன் கன்னிகா குமாரத்தியே, உன்னை நான் எவ்வாறு தேற்றுவேன்? உன் நெருக்கிடை கடலைப் போல் அபாரமாயிருக்கிறதே” (புலம்பல் 2:13) என்று ஜெரேமியாஸ் தீர்க்கதரிசி கூறிய வார்த்தைகள் மாதாவுக்கு முற்றிலும் பொருந்தும். “வீதியில் நடக்கும் நீங்கள் எல்லோரும் உற்றுப் பாருங்கள்; என் உபாதைக்குச் சமமான உபாதை உண்டா?” (புலம்பல் 1:12) என்ற வார்த்தைகளை மாதாவும் சொல்லக் கூடியவர்களாயிருந்தார்கள். அர்ச். சியென்னா பெர்னார்தீன் சொல்லுவது போல், மாதாவின் வியாகுலம் எத்துணை பெரிது என்றால், அவ்வியாகுலத்தைச் சகல மனிதருக்கும் பகிர்ந்து கொடுத்தால், அவர்களை அக்கணமே சாகடிக்க அது போதுமானதாயிருக்கும்.

இரண்டாவது: மாதா தன் ஆன்மாவில் வேதனை அனுபவித்தார்கள்:- 

ஏனைய வேதசாட்சிகளெல்லோரும் தங்கள் சரீரங்களில்தான் முக்கியமாக வேதனை அனுபவித்தனர். மாதாவோ, அர்ச். சிமியோன் மொழிந்தாற்போல் (லூக். 2:35) தன் அதிபரிசுத்த ஆன்மாவில் வேதனை அனுபவித்தார்கள். ஒரு பொருள் எவ்வளவுக்கெவ்வளவு மேன்மையுறுகிறதோ, அவ்வளவுக் கவ்வளவு அது அனுபவிக்கும் வேதனையும் அதிகரிக் கிறது; ஆத்துமம் சரீரத்தை விட பன்மடங்கு மேன்மை யானது. ஆகவே அது அனுபவிக்கும் வேதனையும் சரீரம் அனுபவிக்கும் வேதனையைவிட பன்மடங்கு கடுமை யாகிறது. தங்கள் ஆன்ம வேதனையை விட சரீர வேதனையை விரும்புவோர் எத்தனை பேர்! ஆன்ம வேதனையைத் தாங்கமாட்டாமல் எத்தனை பேர் தற்கொலை செய்துகொள்ளுகின்றனர்!

மேலும் ஒரு ஆன்மா எவ்வளவுக்கெவ்வளவு மேன்மையுற்றிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது அனுபவிக்கும் வேதனை அதிகமாகும். உதாரணமாக, புண்ணியவாளர் ஒருவரையும், தனது ஆன்ம நலத்தைச் சட்டை பண்ணாது காலங் கடத்தும் மனிதன் ஒருவனை யும் எடுத்துக் கொள்ளுவோம். இவர்கள் மீது ஒரு அபாண்டம் கூறப்படுவதாக வைத்துக் கொள்ளுவோம். இதனால் இவ்விருவரும் மனவேதனை அனுபவிப்பர்; ஆனால் அதனால் ஏற்படும் அவமானத்தை அதிகமாய் உணருபவர் முன்னவரே. இது போன்றே, படிப்பு வாசனையற்றவரைவிட கல்வி கேள்விகளில் தேர்ந்தவர் களும், சாதாரண மனிதரை விட, புண்ணிய பாதையில் முன்னேறியவர்களும், ஈவு இரக்கமற்ற கன்னெஞ்சரை விட தயாள குணசீலரும், தங்களுக்கு ஏற்படும் மன வேதனையை அதிகமாய் உணருகின்றனர். மாமரி அன்னையின் ஆன்மா, கிறீஸ்துநாதரின் ஆன்மா நீங்கலாக, சிருஷ்டிக்கப்பட்ட மற்றெல்லா ஆன்மாக்களையும் விட ஆயிரமாயிர முறை சிறந்தது; உயர்ந்தது. ஆகவே, மரியன்னையின் பரிசுத்த ஆன்மா அனுபவித்த வேதனை யும், அதன் வருணிக்கவியலா மேன்மைக்குத் தக்கபடி அதிகமாயிருந்ததென்பது வெளிப்படை.

மூன்றாவது: மாதாவின் வேதனை நீண்டகால வேதனையாயிருந்தது:- 

ஏனைய வேதசாட்சிகளெல்லோரும் தங்கள் வாழ்வின் ஒரு சிறு பகுதியில் மாத்திரம் வேதனை அனுபவித்தனர். ஆனால் மாதாவின் வாழ்வோ பெரும்பாலும் ஆன்ம வேதனையில்தான் கழிந்தது. மாதாவின் வியாகுலங்கள் ஏழு எனத் திருச்சபை கூறுகிறது. இதிலிருந்து மாதா ஏழு விசை மாத்திரம்தான் வியாகுலம் அனுபவித்தார்கள் என்று முடிவு கட்டிவிடலாகாது. ஏழு எனத் திருச்சபை கூறும் வியாகுலங்கள் மாதா அனுபவித்த அதிமுக்கிய வியாகுலங்கள். ஆகவே மாதா ஏழு தடவை மாத்திரம் வியாகுலம் அனுபவித்தார்களில்லை. முன் கூறியவாறு அவர்களது வாழ்வின் பெரும் பகுதியே துயரத்தில்தான் கழிந்தது.

இரட்சகரின் தாயாவதற்குத் தன் சம்மதத்தைத் தெரிவிப்பதற்கு முன்னரே மாதா வியாகுலம் அனுபவித் தார்கள். திவ்விய இஸ்பிரீத்துசாந்துவின் விசேஷ ஞான ஒளியால் மெசியாவைப் பற்றியும், அவருடைய பாடுகளைப் பற்றியும் வேத புத்தகங்களில் கூறப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்களை, அவற்றை எழுதியவர்களை விட வெகு தெளிவாக அறிந்திருந்தார்கள் மாதா. இது தேவ சிநேகத்தால் பற்றியெரிந்த அவர்களது உள்ளத்தில் சொல்லவியலாத வியாகுலத்தை உண்டுபண்ணியது என்பதில் சந்தேகமில்லை.

சர்வேசுரன் தன் உதரத்தில் மனுவுருக் கொள்ள சம்மதம் தெரிவித்த அக்கணம் அவர்களது வியாகுலம் அதிகரித்தது. அவர் இவ்வுலகில் மனிதனாய்ப் பிறந்த பொழுது, அவ்வியாகுலம் முழு வேகத்துடன் அவர்களது மாசற்ற ஆன்மாவைப் பீடித்தது.

நாட்கள் செல்லச் செல்ல அவர்களது மனத்துயரும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. “முட்கள் நடுவில் ரோஜா மலரென தேவமாதா துன்பங்களுக் கிடையில் காலம் கடத்தினார்கள். ரோஜா வளர வளர முட்களும் அதிகரிப்பது போல், கடவுளால் தெரிந் தெடுக்கப்பட்ட ரோஜா மலரான மாதாவும், வயதில் வளர வளர, துன்பங்களாகிய முட்களால் அதிகமதிகமாய்த் துன்புறுத்தப்பட்டார்கள்” என்று அர்ச். பிரிஜெத் அம்மா ளுக்கு ஓர் சம்மனசானவர் அறிவித்தார். காலப்போக்கில் அநேகருடைய மனக்கவலை மறைந்தொழிவதுண்டு. ஆனால் மாதாவின் மனக்கவலையோ அதற்கு நேர்மாறாக இருந்தது. காலம் செல்லச் செல்ல, தன் நேசப் புதல்வர் படப்போகும் பாடுகளும், நிந்தை அவமானங்களும், கோர மரணமும் நெருங்கி வருவதை அவர்கள் உணர்ந்தார்கள். இந்நினைவால் அவர்களது அன்புள்ளம் பட்ட பாட்டை சர்வேசுரனே அறிவார்.

கடைசியாக, அந்த நாள் விடிந்தது. மாதாவின் வியாகுலம் உச்ச நிலையடைந்த நாள் அது. முகத்தில் ஏற்பட்ட காயங்களாலும், இரத்தக் கறைகளாலும் முற்றிலும் உருமாறிப் போய், பாரச் சிலுவையொன்றைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு, தள்ளாடித் தள்ளாடி வரும் தன் மகனைத் தன் கண்கொண்டு பார்க்கிறார்கள் மாதா. பெற்ற உள்ளம் அலறுகின்றது; கண்கள் கண்ணீ ரைப் பெருக்குகின்றன; ஆறுதலற்றுத் தவிக்கிறார்கள் சர்வேசுரனுடைய திருமாதா... தன் அருமை மகனைக் கல்வாரி மலை உச்சியில் மரத்தோடு மரமாக இருப்பாணி களால் அறையும் சத்தம் அத்தாயின் இருதயத்தைத் துண்டுதுண்டாகப் பிளக்கிறது...வானத்தையும் பூமியையும் படைத்த கடவுள் அவைகளுக்கு நடுவே இப்போது தொங்குகிறார். சரீர வேதனையோடு சொல்லவியலா ஆன்ம வேதனையும் அனுபவிக்கிறார் தேவசுதன். மூன்று மணி நேரம் அகோர வேதனை அனுபவித்த பிறகு தலை சாய்த்து உயிர் விடுகிறார். அவரது திரு விலா ஈட்டியில் குத்தித் திறக்கப்படுகிறது; இக்கோரக் காட்சிகளையெல் லாம் பார்த்துக் கொண்டு சிலுவையடியில் நின்று கொண்டிருந்த மாதாவின் வியாகுலங்களை மனித பாஷை களில் வார்த்தைகளால் வருணிப்பது சாத்தியமன்று.

கர்த்தர் பரலோகத்திற்கு எழுந்தருளிப் போன பிறகும், அவரது பாடுகளும் கோர மரணமும் மாதாவின் நினைவை விட்டு என்றும் அகலவில்லை. மாதாவே இதை அர்ச். பிரிஜெத்தம்மாளுக்கு வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஆம். மெய்யாகவே மாதா வேதசாட்சிகளின் இராக்கினி! சொல்ல முடியாத மனவேதனை அவர்கள் அனுபவித்தார்கள்; ஆதலால் மனவேதனையின் தன்மையை நம்மைவிட அவர்கள் நன்கு அறிவார்கள். ஆகையால், நாம் கவலைகளால் மன அமைதியிழந்து வருந்தும் போது, “வேதசாட்சிகளின் இராக்கினியாகிய” மாதாவின் சலுகையைத் தடையின்றி நாடுவோம். அவர்கள் நம் கண்ணீரைத் துடைப்பார்கள். அமைதியற்ற நம் உள்ளத்திற்குச் சாந்தி நல்குவார்கள்; நமது சிலுவை களை இன்னும் கொஞ்ச காலம் நாம் சுமக்க வேண்டு மென்பது சர்வேசுரனுடைய சித்தமானால், அவைகளைப் பொறுமையோடு சுமப்பதற்கு வேண்டிய வரத்தைப் பெற்றுத் தந்தருளும்படி மாதாவிடம் கெஞ்சிக் கேட்போம்.

மைந்தனார் சிலுவை மீது - மாதுயருடன் வருந்த
நொந்தழுதாள் தாய்மரி

1. திருமகன் அறையுண்ட சிலுவை - அடியில் நின்ற
தேவதாய் நொந்தழுதாள்

2. வேதனை கடலமிழ்ந்த மாதா - ஆத்துமம் வதைய
வாள் பாய்ந்தூடுருவிற்று

3. நேச மகனை இழந்த தாய் - அனுபவித்த துயர்
தானுரைக்க நாவுண்டோ?

4. அருமையாய் ஈன்ற சுதன் - அவஸ்தையைக் கண்டிளகி
உருகிப் புலம்பினாள்

5. இரட்சகர் திருத்தாயார் - இக்கொடிய வாதைப்பட
யார் கண்டழாதிருப்பார்?

6. திருமகன் துயரத்தால் - உருகுந்தாயைக் கண்டுள்ளம்
கரையாதார் யாருண்டு?

7. அன்புள்ள தன்திருமகன் - துன்பதுயர் அவஸ்தையுள்
தன் சீவன் தரக் கண்டாள்

8. பட்ச ஊரணி மாதாவே - பரிதவித்தே உம்மோடு
பாவி நான் அழச் செய்யும்

9. ஆதி இயேசுவை நேசித்தே - யான் அவருக்கினியனாய்
அன்பால் என்னுள்ளம் சுடும்

10. தேவதாயே தயை கூர்ந்து - பாவி என்னிருதயத்தில்
இயேசு காயம் பதியும்

11. சிலுவைக்கடியில் நின்று - தேவ தாயே உம்மோடே நான்
புலம்ப ஆசிக்கின்றேன்

12. கன்னிய அரச தாயே - என் கண்ணீரே உம்முடைய
கண்ணீரோ டேற்றருளும்

13. அன்பாம் அக்கினி மூட்டி - அடியேனைத் தீர்வை நாளில்
ஆதரிப்பீர் கன்னியே

14. மண் உடல் பிரிந்ததால் - வான் மோட்சத் தாத்துமம் சேர்ந்து
வாழவுஞ் செய்தருளும்


வேதசாட்சிகளுடைய இராக்கினியே!
 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!