கல்வி பற்றி டொன் போஸ்கோ எழுதிய ஒரு கடிதம்

இந்தக் கட்டுரை ஒரு பொக்கிஷம். இது சலேசிய இல்லங்களுக்கான தடுப்பு முறை மற்றும் ஒழுங்கு விதிகளின் மீதான சுருக்கமான ஆய்வுக் கட்டுரையோடு சேர்ந்து, டொன் போஸ்கோவால் தமது மகன்களுக்கு தந்தை வழிச்சொத்தாக விட்டுச் செல்லப்பட்ட கல்வி சார்ந்த முப்பெரும் தொகுதியாக விளங்குகிறது. இது ஒரே சமயத்தில் எளிமையானதாகவும், அதே நேரத்தில் நம் மிக மேலான மதிப்புக்குரியதாகவும் இருக்கும் கல்வி முறையாக இருக்கிறது. இது நன்றாகப் புரிந்து கொண்டு, நன்கு செயல்படுத்தப் படும்போது, கல்வி நிறுவனங்களை மகிழ்ச்சிக்குரிய இடங் களாகவும், மாசற்றதனத்தின் தஞ்ச ஸ்தலங்களாகவும், புண்ணி யத்தின் உலைக்களங்களாகவும், ஆராய்ச்சி மையங்களாகவும், மிகச் சிறந்த கிறீஸ்தவர்களையும், நல்ல குடிமக்களையும், தகுதியுள்ள குருநிலையினரையும் உருவாக்கும் நாற்றங்கால்களாகவும் இருக்க முடியும். ஆனாலும், நல்ல மனதும், பரித்தியாகமும் மிகவும் அவசியம்.
- D. செரியா.

இயேசு கிறீஸ்துவில் என் அன்புள்ள மகன்களே,

நான் உங்களுக்கு அருகில் இருந்தாலும், தூரத்தில் இருந்தாலும் நீங்கள் எப்போதுமே என் சிந்தனையில் இருக்கிறீர்கள். காலத்திலும், நித்தியத்திலும் உங்களை மகிழ்ச்சியானவர்களாகக் காண்பதே என் ஒரே ஆசையாக இருக்கிறது. இந்த எண்ணம், இந்த ஆசைதான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதும்படி தீர்மானிக்கச் செய்தது. என் அன்புச் சிறுவர்களே, உங்களிடமிருந்து தொலைவில் இருப்பது எனக்கு ஒரு மிகப் பெரிய சுமையாக இருக்கிறது. உங்களைப் பார்க்கவும், நீங்கள் பேசுவதைக் கேட்கவும் முடியாமலிருப்பது எனக்குத் தரும் வேதனையை உங்களால் கற்பனை செய்ய முடியாது.

அதனால்தான் ஒரு வாரத்திற்கு முன்பே இந்த வரிகளை எழுத நான் விரும்பினேன். ஆனால் என் இடைவிடாத வேலைகள் அப்படிச் செய்ய முடியாமல் என்னைத் தடுத்து விட்டன. எது எப்படியானாலும், நான் திரும்பி வர இன்னும் ஒரு சில நாட்கள்தான் இருக்கின்றன என்றாலும், உங்களிடம் நான் வருவதை மேலும் துரிதப்படுத்த நான் விரும்புகிறேன். நானே நேரில் உங்களிடம் வர என்னால் முடியாது என்பதால், இந்தக் கடிதத்தின் வாயிலாக உங்களிடம் வருகிறேன். இந்த என்னுடைய வார்த்தைகள் இயேசு கிறீஸ்துவில் உங்களை வெகுவாக அன்பு செய்கிற ஒருவனுடைய வார்த்தைகள், ஒரு தந்தையின் சுதந்திரத்தோடு உங்களிடம் பேசக் கடமையுள்ளவனாயிருக்கிற ஒருவனுடைய வார்த்தைகள். இதை நான் செய்ய நீங்கள் என்னை அனுமதிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நான் சொல்லவிருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள், அதை நடைமுறையில் கடைப்பிடிப்பீர்கள். 

கனவு 1870க்கு முன் ஆரட்டரியின் நிலை

நீங்களே எப்போதும் என் சிந்தனையில் இருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன். நல்லது, ஒரு சில இரவுகளுக்கு முன், நான் வேலைகளை முடித்து விட்டு, ஓய்வெடுக்க என் அறைக்குச் சென்றிருந்தேன். உறங்குவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த போது, என் நல்ல தாய் எனக்குக் கற்றுத் தந்த ஜெபங்களை நான் சொல்லத் தொடங்கினேன்.

அதன்பின் உறக்கம் என்னை மேற்கொண்டதா, அல்லது நான் பராக்குக்கு உட்பட்டேனா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை - நான் ஆரட்டரியின் இரண்டு முன்னாள் மாணவர் களுக்கு முன் நின்று கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவர்களில் ஒருவன் என்னிடம் வந்து, அன்போடு எனக்கு வாழ்த்துச் சொன்ன பிறகு, என்னிடம்:

“டொன் போஸ்கோ, உங்களுக்கு என்னைத் தெரிகிறதா?” என்று கேட்டான்.

“நன்றாகவே தெரிகிறது” என்று நான் பதிலளித்தேன்.

“இன்னும் என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று அவன் தொடர்ந்து கேட்டான்.

“உன்னையும், மற்ற எல்லோரையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். உன் பெயர் வால்ஃப்ரே. நீ 1870-க்கு முன் ஆரட்டரியில் இருந்தாய்.”

அவன் தொடர்ந்து, “எனக்குச் சொல்லும், நான் இருந்த போது, ஆரட்டரியில் இருந்த சிறுவர்களை நீங்கள் பார்க்க விரும்பு கிறீர்களா?” என்று கேட்டான்.

“நிச்சயமாக! நான் அவர்களைப் பார்க்க வேண்டும்” என்று நான் பதிலளித்தேன். “அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும்.” 


கடந்த காலத்தின் காட்சி

வால்ஃப்ரே அதன்பின் அந்தச் சிறுவர்களை, அந்நாட்களில் அவர்கள் இருந்தவாறே - அதே தோற்றத்திலும், உயரத்திலும், வயதிலும் - எனக்குக் காட்டினான். நான் பழைய ஆரட்டரியில் பொழுது போக்கு நேரத்தில் அவர்களோடு இருப்பதாகத் தோன்றியது. அது ஓர் உயிரோட்டமான காட்சி - அதில் எல்லா வித இயக்கமும், மகிழ்ச்சியும் இருந்தது. சிலர் ஓடிக் கொண்டிருந்தார்கள், சிலர் குதித்துக் கொண்டும், மற்றவர்களைக் குதிக்கச் செய்து கொண்டும் இருந்தார்கள்; இங்கே அவர்கள் தவளைத் தாண்டுதல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கே அவர்கள் பராரோட்டா அல்லது கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் சிறுவர்கள் கூட்டம் ஒன்று, ஒரு குருவானவர் சொல்லிக் கொண் டிருந்த ஒரு கதையை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. வேறொரு இடத்தில் ஒரு துறவற சகோதரர் சிறுவர்கள் கூட்டம் ஒன்றின் நடுவில் இருந்து அவர்களோடு சேர்ந்து தோல்விகளுக்கு அபராதம் கட்டும் ஒரு வகை விளையாட்டை விளையாடிக் கொண் டிருந்தார். அங்கே எல்லாப் பக்கங்களிலும் பாட்டும், சிரிப்புமாக இருந்தது. குருக்களும், சகோதரர்களும் எல்லா இடங்களிலும் இருந்தார்கள். சிறுவர்கள் அவர்களைச் சுற்றி உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிறுவர்களுக்கும், அவர்களது மேலதிகாரிகளுக்கும் இடையில் மிக மேலான நட்புறவும், நம்பிக்கையும் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. இதெல் லாம் என்னை வெகுவாக வசீகரித்தது. வால்ஃப்ரே என்னிடம், “பார்த்தீர்களா, நல்ல மரியாதையுள்ள நட்பு பாசத்தையும், நம்பிக்கையையும் வளர்க்கிறது: இதுதான் சிறுவர்களின் இருதயங் களைத் திறக்கிறது, அவர்கள் எந்த வித அச்சமுமின்றி தங்கள் ஆசிரியர்களிடமும், உதவியாளர்களிடமும், மேலதிகாரிகளிடமும் எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிறார்கள். பாவசங்கீர்த்தனத் திலும், வெளியிலும் அவர்கள் நேர்மையுள்ளவர்களாக இருக் கிறார்கள். தங்கள் மேலதிகாரியால் தங்களுக்குக் கட்டளையிடப் படும் எல்லாவற்றிற்கும் அவர்கள் கீழ்ப்படிகிறார்கள், அவர் அவர்கள் மேல் வைக்கும் அன்பால் அவர்கள் முழுமையாக உறுதிப் படுத்தப்படுகிறார்கள்” என்றான். 


மிகப் பெரும் முரண்பாடு

அந்தச் சமயத்தில் அந்த மற்றொரு முன்னாள் மாணவர் - இவருக்கு வெண்ணிறத் தாடி இருந்தது - என்னை நெருங்கி வந்து, “டொன் போஸ்கோ, தற்போது ஆரட்டரியில் இருக்கும் சிறுவர் களைக் காணவும், அறிந்து கொள்ளவும் நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். “ஆம், நான் அவர்களைப் பார்த்து, ஒரு மாதமாகி விட்டது” என்றேன் நான். ஆகவே ஜோசப் புஸ்ஸெட்டி எனக்கு அவர்களைக் காட்டினார். நான் ஆரட்டரியையும், பொழுதுபோக்கு நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த உங்கள் எல்லோரையும் கண்டேன். ஆனால் இப்போது அந்த மகிழ்ச்சியாக கூச்சல்களும், பாடல்களும் இல்லை, அந்த முதல் காட்சியிலிருந்த உயிரோட்டமும், உற்சாகமும் இப்போது கொஞ்சமும் இல்லை.

பல சிறுவர்களின் செயல்பாடுகளிலும், முகங்களிலும் அதிருப்தியைக் காண முடிந்தது. அவர்களிடம் இருந்த களைப்பும், மனச் சோர்வும், நம்பிக்கையின்மையும் என் இருதயத்தை வலிக்கச் செய்தன. பல சிறுவர்கள் எந்தக் கவலையுமின்றி ஓடியாடி விளை யாடிக் கொண்டிருந்ததை நான் கண்டேன் என்பது உண்மைதான். ஆனால் இன்னும் பலர் தனியாக நின்று கொண்டோ , தூண்களின் மீது சாய்ந்து கொண்டோ , ஆறுதலற்ற சிந்தனைகளில் தங்களைப் புதைத்தபடியோ இருப்பதை நான் கண்டேன். இன்னும் பலர் பொது ஓய்வு நேரப் பொழுதுபோக்கைத் தவிர்க்கும்படியாக, படிக்கட்டு களிலும், நடைபாதைகள், அல்லது தோட்டத்தை நோக்கிய முகப்பு மாடிகளில் இருப்பதை நான் கண்டேன். இன்னும் சிலர் ஒரு குழு வாக நடந்து கொண்டிருந்தார்கள். பிறர் கேட்காதபடி தங்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். படபடப்பான, தவறான அர்த்தம் தரும் பார்வைகளை சுற்றிலும் வீசிக் கொண் டிருந்தார்கள், எப்போதாவது புன்னகைத்தார்கள்; ஆனால் அந்தப் புன்னகையோடு கெடுமதியுள்ள பார்வையும் சேர்ந்திருந்தது. அது இப்படிப்பட்ட தோழர்களுக்கு மத்தியில் இருக்க அர்ச். ஞானப் பிரகாசியார் வெட்கப்பட்டிருப்பார் என்று நம்பும் அளவுக்கு இருந்தது. விளையாட்டுகளில் சேர்ந்து கொண்ட சிறுவர்களுக்கு மத்தியிலும் கூட, சிலர் விருப்பமில்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தங்கள் பொழுதுபோக்கிலிருந்து அவர்களுக்கு எந்த சந்தோஷமும் கிடைக்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

“உங்கள் சிறுவர்களைக் கண்டீர்களா?" என்று அந்த முன்னாள் மாணவர் கேட்டார்.

“ஆம்” என்றபடி நான் பெருமூச்சு விட்டேன்.

“நாங்கள் முன்பு இருந்ததிலிருந்து இவர்கள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார்கள்!” என்று அவர் வியந்தபடி கூறினார்.

“அந்தோ, உண்மைதான்! இந்தப் பொழுதுபோக்கில் என்ன ஒரு உற்சாகமின்மை தெரிகிறது!”

“அதனால்தான் திருவருட்சாதனங்களை அணுகிச் செல்வதில் அவர்கள் குளிர்ந்தவர்களாக இருக்கிறார்கள்; அது, கோவிலிலும், மற்ற இடங்களிலும் பக்தி முயற்சிகளை அவர்கள் அலட்சியம் செய்யும்படி செய்கிறது, அதுவே தேவ பராமரிப்பானது அவர் களுடைய உடலுக்கும், ஆன்மாவுக்கும், அறிவுக்கும் நல்லதாக இருக்கிற அனைத்தையும் அவர்கள் மீது பொழியும் இடத்தில் தங்கியிருக்க அவர்கள் தயக்கம் கொள்ளச் செய்கிறது. இதன் காரணமாக, பலர் தங்கள் தேவ அழைத்தலுக்கு ஒத்தவர்களாக இல்லை. தங்கள் மேலதிகாரிகளிடமும் அவர்கள் காட்டும் நன்றி யற்றதனத்திற்கும், தந்திரமான நடத்தைக்கும், எதற்கெடுத்தாலும் முறையிடுவதற்கும், அவற்றின் புலம்பலுக்குரிய விளைவுகளுக்கும் அதுதான் காரணம்.”


தீர்வு

“ஆம், அதை நான் காண்கிறேன். ஆனால் அவர்களுடைய பழைய உயிரோட்டத்தையும், மகிழ்ச்சியையும், வெளிப்படையான தன்மையையும் நான் என் சிறுவர்களிடம் எப்படித் திரும்பக் கொண்டு வர முடியும்?” என்று நான் கேட்டேன்.

“பிறர்சிநேகத்தைக் கொண்டு!”

“பிறர்சிநேகத்தைக் கொண்டா? ஆனால் என் சிறுவர்கள் போதிய அளவுக்கு அன்பு செய்யப்படவில்லையா? நான் அவர்களை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும். நாற்பது வருடங்களாக அவர்களுடைய குறைகளை நான் எவ்வளவு அதிகமாக சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது என்பதும், இப்போதும் கூட நான் எவ்வளவு துன்பப்படுகிறேன் என்பதும் உமக்குத் தெரியும். அவர்களுக்கு நல்ல உணவும், தங்குமிடமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களுக்கு ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களுடைய ஞான நன்மைக்கு அவசியமான எல்லாமும் அவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதற்காகவும் எவ்வளவு பரித்தியாகங்கள், எவ்வளவு அவமானங்கள், எவ்வளவு எதிர்ப்புகள், கலாபனைகளை நான் தாங்கி யிருக்கிறேன்! என் சிறுவர்களுக்காக என்னால் செய்யப்படக் கூடிய எல்லாவற்றையும் நான் செய்து விட்டேன். அவர்கள் என் கண்ணின் மணிகள்.”

“நான் உங்களைப் பற்றிப் பேசவில்லை .”

“அப்படியானால், யாரைப் பற்றிப் பேசுகிறீர்? என் இடத்தை வகிக்கிறவர்களைப் பற்றியா? மடத்தின் அதிபர்கள், தலைவர்கள், ஆசிரியர்கள், உதவியாளர்களைப் பற்றியா? அவர்கள் கடமை, படிப்பு ஆகியவற்றின் வேதசாட்சிகள் என்பது உமக்குத் தெரியாதா? தேவ பராமரிப்பு அவர்களிடம் ஒப்படைத்துள்ளவர்களுக்காக அவர்கள் தங்கள் இளமைப்பருவத்தின் வருடங்களை எப்படி செலவிடுகிறார்கள் என்று பாரும்!”

“ஆம், அது எனக்குத் தெரியும். ஆனால் அது போதாது - இன்னும் அதிக நல்லதாயிருக்கிற ஒன்று குறைவுபடுகிறது.”

“என்ன அது?”

“சிறுவர்கள் அன்பு செய்யப்படுவது மட்டும் போதாது. தாங்கள் அன்பு செய்யப்படுவதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.”

“ஆனால் அவர்களுக்குக் கண்கள் இல்லையா? புத்தி இல்லையா? அவர்களுக்காகச் செய்யப்படும் எல்லாமும், அவர்கள் மீதுள்ள அன்பிற்காகவே செய்யப்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியாதா?”

“இல்லை. நான் திரும்பவும் சொல்கிறேன், அது போதாது.”

“சரி, அப்படியானால், எங்களுக்கு இன்னும் என்ன தேவைப் படுகிறது?”

“இது: அதாவது அவர்கள் விரும்புகிற காரியங்களில் அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலமும், அவர்களுடைய சிறுவர்களுக்குரிய நாட்டங்களில் பங்குபெறுவதன் மூலமும், அவர்கள் இயல்பாகவே வெறுக்கிற காரியங்களில் நீங்கள் அவர்கள் மேல் கொண்டுள்ள அன்பைக் காண அவர்கள் கற்றுக் கொள் வார்கள், உதாரணமாக, ஒழுக்கம், கல்வி, சுய ஒறுத்தல் போன்ற காரியங்கள். இந்தக் காரியங்களை மகிழ்ச்சியோடும் அன்போடும் செய்ய அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.”

“எனக்கு சரியாக விளங்கவில்லை .”

“பொழுதுபோக்கில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்களைப் பாருங்கள்.”

நான் பார்த்தேன், அதன்பின் தொடர்ந்து, “பார்ப்பதற்கு அவ்வளவு விசேஷமான காரியம் அங்கே என்ன இருக்கிறது?” என்று கேட்டேன்.

“இத்தனை வருடங்களாக சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்த பிறகும், உங்களுக்கு இது புரியவில்லையா? இன்னும் அதிக கவனமாகப் பாருங்கள். நம் சலேசியர்கள் எங்கிருக்கிறார்கள்?"

நான் பார்த்தேன். அப்போது மிகச் சில குருக்களும், சகோதரர்களும் மட்டுமே சிறுவர்களோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததை நான் கவனித்தேன். இப்போது சிறுவர்களின் மேலதிகாரிகள் அவர்களுடைய பொழுதுபோக்கின் மையமாக இருக்கவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற அக்கறை எதுவுமின்றி, ஒரு தனிக் குழுவாக நடந்து கொண்டும், உரையாடிக் கொண்டும் இருந்தார்கள். மற்றவர்கள் சிறுவர்களின் மீது எந்த ஆர்வமுமின்றி விளையாட்டு களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் தொலை விலிருந்து கண்காணித்துக் கொண்டிருந்தார்கள், பல சிறிய ஒழுங்கீனங்களை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் வேறு சிலர் அவற்றைக் கவனித்தாலும், அச்சுறுத்தும் முறையில் நடந்து கொண்டார்கள், அதுவும் மிக அபூர்வமாகவே நிகழ்ந்தது. மேலும் சிறுவர் குழுக்களுடன் சேர்ந்து கொள்ள விரும்பிய சில சலேசியர் களும் இருந்தார்கள். ஆனாலும் அந்தச் சிறுவர்கள் முடிந்த வரை தங்கள் ஆசிரியர்களிடமிருந்தும், அதிகாரிகளிடமிருந்தும் தொலை வாக இருந்து கொள்ளத் தங்களால் முடிந்ததையெல்லாம் செய்வதை நான் கண்டேன். அப்போது என் நண்பர் என்னிடம்:

“ஆரட்டரியின் பழைய நாட்களில், குறிப்பாக பொழுது போக்கு நேரத்தில், நீங்கள் எப்போதும் சிறுவர்களோடு இருந்தீர்கள் அல்லவா? அந்த அற்புதமான வருடங்கள் உங்களுக்கு நினைவிருக் கிறதா? அது மோட்சத்தின் ஒரு சிறு துண்டு போல் இருந்தது. அது நாங்கள் எல்லோரும் எப்போதும் அன்போடு நினைத்துக் கொள்கிற ஒரு காலமாக இருந்தது, ஏனெனில் அப்போது அன்புதான் எங்கள் வாழ்வின் விதியாக இருந்தது. நாங்கள் உங்களிடமிருந்து எதையும் இரகசியமாக மறைத்ததில்லை ” என்றார்.

“ஆம். உண்மைதான். அக்காலத்தில் எல்லாமே எனக்கு ஒரு மகிழ்ச்சியாக இருந்தது. சிறுவர்கள் நான் பேசுவதைக் கேட்பதற்காக என்னிடம் வர விரும்பினார்கள். என் அறிவுரையைக் கேட்டு, அதன்படி செயல்பட அவர்கள் மிகுந்த ஆசை கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது தொடர்ச்சியான சந்திப்புகளும், வேலைகளும், என் உடல்நலமின்மையும் எப்படி என்னை அவர்களிடமிருந்து பிரித்து வைத்திருக்கின்றன என்பதை நீரே பார்க்கிறீர்.”

“மிக நல்லது; ஆனால் உங்களால் அதைச் செய்ய முடிய வில்லை என்றால், உங்கள் சலேசியர்கள் உங்களை ஏன் கண்டு பாவிப் பதில்லை ? நீங்கள் சிறுவர்களை நடத்தியபடி, அவர்களும் சிறுவர் களை நடத்துமாறு நீங்கள் ஏன் அவர்களை வற்புறுத்துவதில்லை, கேட்பதில்லை ?” |

“எனக்குத் தொண்டை கட்டிப் போகும் வரைக்கும் நான் பேசுகிறேன், ஆனால் துரதிர்ஷ்ட வசமாக, இதனால் வரும் உடல், மன அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள தங்களால் முடியும் என்று பலர் நினைப்பதில்லை.”

“ஆகவே அவர்கள் உங்கள் எளிய செயல்முறையை அலட்சியம் செய்தார்கள், அதனால் தங்கள் உழைப்பின் பலனை இழந்து போகிறார்கள். சிறுவர்களுக்கு எது பிடித்திருக்கிறதோ, அதை அவர்களும் நேசிக்கட்டும். அப்போது தங்கள் அதிகாரி களுக்குப் பிடித்தவற்றைச் செய்ய சிறுவர்களும் விரும்புவார்கள். இது அவர்களுடைய வேலையை சுலபமாக்கும். முன்னாட்களில், இருதயங்கள் அதிகாரிகளுக்குத் திறப்பாயிருந்தன. சிறுவர்கள் அவர்களை அன்பு செய்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்தனர். ஆனால் இப்போது அதிகாரிகள் அதிகாரிகளாகவே மதிக்கப்படுகிறார்கள், இப்போதெல்லாம் சிறுவர்கள் அவர்களைத் தந்தையராகவும், சகோதரர்களாகவும், நண்பர்களாகவும் மதிப்பதில்லை . ஆகவே அவர்கள் தங்கள் அதிகாரிகளுக்குப் பயப்படுகிறார்கள், அவர்களை அன்பு செய்வதில்லை. ஆகவே, எல்லோரும் இயேசுவின் அன்புக்காக ஒரே மனமும், ஒரே ஆன்மாவும் உள்ளவர்களாக மீண்டும் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவநம்பிக்கையின் ஆபத்தான அந்தத் தடை நீக்கப்பட வேண்டும். அதன் இடத்தை மகன்களுக்குரிய நம்பிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு தாய் தன் குழந்தையை வழிநடத்துவது போல, கீழ்ப்படிதல் மாணவர்களை வழிநடத்த விடுங்கள். அப்போது மீண்டும் ஆரட்டரியில் சமாதானமும், மகிழ்ச்சியும் ஆட்சி செய்யும்.”

“ஆனால் இந்தத் தடையை எப்படி அகற்றுவது?"

“குறிப்பாக பொழுதுபோக்கு நேரங்களில் சிறுவர்களோடு நெருங்கிப் பழகுதல். இந்தப் பழக்கம் இன்றி, அன்பு எதையும் நீங்கள் காட்ட முடியாது. இந்த அன்பின் வெளிப்படுத்தல் இன்றி, நம்பிக்கை எதுவும் இருக்க முடியாது. அன்பு செய்யப்பட விரும்பு கிறவன் முதலில் தன் அன்பைக் காட்ட வேண்டும். இயேசு கிறீஸ்து, சிறியவர்களைக் கையாளுகையில், அவர்களில் ஒருவரைப் போல் ஆனார். அவர் நம் நோய்களைத் தம்மீது சுமந்து கொண்டார். நல்ல நட்போடு பழகுதலுக்கு அவரே நமக்கு உத்தம முன்மாதிரியாக இருக்கிறார். வேறெங்குமன்றி, வகுப்பறையில் மட்டும் காணப்படும் ஆசிரியர், ஓர் ஆசிரியராக மட்டுமே இருக்கிறார், வேறு யாராகவும் இருப்பதில்லை. மாறாக அவர் பொழுதுபோக்கு நேரத்தில் தம் சிறுவர்களிடம் செல்லட்டும். அப்போது அவர் அவர்களுக்கு ஒரு சகோதரர் ஆகிறார்.

“ஒருவர் போதக மேடையிலிருந்து போதிப்பவராக மட்டும் காணப்படுகிறார் என்றால், அவர் தமது கண்டிப்பான கடமையை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் அவர் பொழுதுபோக்கு நேரத்தில் சிறுவர்களிடம் ஒரு நல்ல வார்த்தை பேசட்டும். அது ஒரு நேசமுள்ள இருதயத்தின் வார்த்தையாக இருக்கும். ஒரு சிறுவன் தன் விளையாட்டில் மூழ்கி யிருக்கும் போது, அவனுடைய காதில் கிசுகிசுக்கப்படுகிற உங்களுடைய ஒரு சில வார்த்தைகளால் எத்தனை மனந்திரும்பு தல்கள் நிகழ்ந்துள்ளன! ஒரு சிறுவன் தான் அன்பு செய்யப்படுவதாக அறிந்து கொள்கிறான் என்றால், அவனும் பதிலுக்கு அன்பு செய்வான்; சிறுவர்களின் மீது அதிகாரமுள்ள ஒருவர் அன்பு செய்யப் படுகிறார் என்றால், குறிப்பாக சிறுவர்களிடமிருந்து அவரால் எதையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நம்பிக்கை சிறுவர் களுக்கும், அவர்களுடைய அதிகாரிகளுக்குமிடையே ஒரு மின்னோட்டத்தை உண்டாக்குகிறது; சிறுவர்களின் இருதயங்கள் திறக்கின்றன, அவர்களுடைய தேவைகள் அறியப்படுகின்றன, அவர்களுடைய உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த நம்பிக்கை வேலையை அதிக எளிதாக்குகிறது. அதன் காரணமாக சிறுவர்களின் நன்றியற்றதனமும், அவர்களால் ஏற்படும் பிரச்சினை களும், அவர்களுடைய குற்றங்களும், தவறுதல்களும் தாங்கக் கூடியவையாகின்றன.

“இயேசு கிறீஸ்து நெறிந்த நாணலை முறிக்கவில்லை, புகையும் திரியை அணைக்கவுமில்லை. அவர்தான் உங்களுக்கு முன்மாதிரிகை! அவரைப் பின்பற்றும்போது, வீண் மகிமைக்காக யாரும் வேலை செய்ய மாட்டார்கள்; யாரும் காயப்படுத்தப்பட்ட தங்கள் சுய அன்பைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டும் தண்டிக்க மாட்டார்கள்; யாரும் மற்றொருவருடைய புகழைப் பற்றிய பொறாமையுள்ள பயத்தின் காரணமாக சிறுவர்களுக்கு உதவி செய் வதைத் தவிர்க்க மாட்டார்கள்; யாரும் தனிப்பட்ட முறையில் தனக்காக மட்டும் சிறுவர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு - ஆனால் உண்மையில் இவர்கள் சிறுவர்களின் இகழ்ச்சியையும், ஒருவேளை ஒரு பொய்யான புன்னகையும் தவிர வேறொன்றையும் பெற்றுக் கொள்வதில்லை - தன் சக துறவிகளை விமர்சிப்பதில்லை . அப்போது ஒரு சிறுவன் மீது மட்டும் தனிப்பட்ட பாசம் கொண்டு, அவனை நன்கு கவனித்துக் கொள்வதற்காக மற்றவர்களை அலட்சியம் செய்ய தன்னையே அனுமதிக்கும் யாரையும் நீங்கள் கண்டுபிடிக்க மாட்டீர்கள். சொகுசாகவும், சௌகரியமாகவும் இருக்கும் ஆசையால் சிறுவர் களை விழிப்பாயிருந்து கண்காணிக்கத் தனக்குள்ள கடமையைத் தவிர்க்கிற, அல்லது முகத்தாட்சணியத்தின் காரணமாக, கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கத் தவறுகிற யாரையும் நீங்கள் காண மாட்டீர்கள்.

“இந்த அன்பு அரசாட்சி செய்யும் என்றால், எல்லோரும் கடவுளின் மகிமையையும், ஆன்மாக்களின் மீட்பையும் மட்டுமே தேடுவார்கள். இந்த அன்பு குளிர்ந்து போகும்போதுதான் காரியங்கள் தவறாக நடக்கத் தொடங்குகின்றன. பிறர்சிநேகத்தை அகற்றி விட்டு அதன் இடத்தில் ஒரு சில விதிகளின் கடுமையை வைக்க நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்? சிறுவர்களின் அதிகாரி களுக்காக நீங்கள் உருவாக்கிய கல்வியின் மீதான விதிகளை அனுசரிப்பதை அவர்கள் ஏன் தவிர்க்கிறார்கள்? அன்பின் செயல்முறையையும் தவறுகளையும், பாவத்தையும் தடுக்கும் விழிப்புள்ள கண்காணிப்பின் செயல்முறையையும் அகற்றி விட்டு, அவற்றின் இடத்தில் சட்டமிடப்பட்ட விதிகளின் செயல்முறையை - சிறுவர்களின் மீது அதிகாரம் கொண்டுள்ளவர்களுக்கு குறைந்த சுமையுள்ளதும், அதிக வசதியானதுமாகிய ஒரு செயல்முறையை ஏன் கொண்டு வருகிறீர்கள்? விதிகள் தண்டனைகளால் நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்றால், அவை வெறுப்பைக் கிளறி விடுகின்றன, மனக்கசப்புக்கு வழிவகுக்கின்றன. ஆனால் அவற்றை அனுசரிப்பது சிறுவர்களின் மீது கட்டாயமாக சுமத்தப்படவில்லை என்றாலோ, அவை அதிகாரிகளின் மீது இகழ்ச்சியையும், மோசமான ஒழுங்கீனங்களையும் சிறுவர்களிடம் விளைவித்து விடுகின்றன.

“எங்கே குடும்ப உணர்வு இல்லையோ, அங்கே இது கண்டிப்பாக நிகழ்கிறது. ஆகவே, பழைய மகிழ்ச்சியான நாட்கள் ஆரட்டரிக்குத் திரும்பி வர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பழைய முறையே மீண்டும் அனுசரிக்கப்படட்டும். சிறுவர்களின் அதிகாரியாக இருப்பவர் எல்லோருக்கும் எல்லாமுமாகவும், கேட்பவராகவும், அவர்களுடைய நடத்தையை விழிப்பாயிருந்து கண்காணிப்பவராகவும் இருப்பாராக. தேவ பராமரிப்பு அவரிடம் ஒப்படைத்துள்ளவர்களின் ஞான, உலக நலன்களைத் தேடுவதி லேயே அவருடைய இருதயம் எப்போதும் ஈடுபட்டிருப்பதாக. அப்போது சிறுவர்களின் இருதயங்கள் திறக்கும்; அப்போது அந்த இரகசியம் மற்றும் எல்லாவற்றையும் மறைத்துக் கொள்கிற ஆபத்தான மனநிலை ஆகியவற்றின் சூழல் மறைந்து போகும். இடறலின் காரியங்களில் மட்டும் மேலதிகாரி சற்றும் இளகாதவராக இருக்க வேண்டும். இடறலை ஏற்படுத்தும் ஒருவனை வைத்திருப் பதை விட மாசற்றவனாகிய ஒரு சிறுவனை வெளியே அனுப்பி விடும் ஆபத்திற்கு உட்படுவது அதிக நல்லது. உதவியாளர்கள், கடவுளுக்கு எதிரான ஒரு குற்றமாக எந்த விதத்திலாவது இருக்கக் கூடிய எல்லாவற்றையும் அதிபருக்கு அறிவிப்பது தங்கள் மனச்சான்றின்படி தங்கள் மீது சுமந்த கண்டிப்பான கடமை என்று எண்ண வேண்டும்.”

அதன்பின் நான் அவரிடம், “அந்த நல்ல நட்புறவும், அன்பும், நம்பிக்கையும் மீண்டும் எங்கள் மத்தியில் வளம் பெறச் செய்ய மிகச்சிறந்த வழி எது?” என்று கேட்டேன்.

“இல்லத்தின் விதிகளை நுட்பமாக அனுசரிப்பது.” “வேறு ஏதும் இல்லையா?”

“இரவுணவின்போது மிகச் சிறந்த பசி ஊக்கியாக இருப்பது உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சிரித்த முகம்தான்.”

என் பழைய நண்பர் தம் உரையாடலை முடிவுக்குக் கொண்டு வந்தபோது, நான் கனத்த இருதயத்தோடு அந்த உயிரற்ற பொழுதுபோக்குகளைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் சிறிது சிறிதாக நசுக்கப்படுகிற ஓர் உணர்வால் மிகவும் சோர்ந்து போனதாகவும், மிக பாரமாகவும் உணர்ந்தேன். இந்த பாரம் எந்த அளவுக்குத் தொடர்ந்து அதிகரித்தது என்றால், நான் விழித்துக் கொண்டு, என் படுக்கையின் அருகில் நின்று கொண் டிருப்பதை உணர்ந்தேன். என் கால்கள் எவ்வளவு விறைப்பாகவும், வேதனை தருபவையாகவும் இருந்தன என்றால், என்னால் மேற்கொண்டு நிற்க முடியவில்லை. ஏற்கனவே இரவு வெகுநேரமாகி விட்டிருந்தது. ஆகவே இந்தக் காரியங்களை என் சிறுவர்களுக்குக் கடிதமாக எழுதுவது என்ற தீர்மானத்தோடு உறங்கச் சென்றேன்.

இந்தக் கனவுகள் வருவதை நான் விரும்புவதில்லை , ஏனெனில் அவை என்னை முற்றிலும் களைப்படையச் செய்து விடுகின்றன. அடுத்த நாள் முழுவதும் நான் அளவுக்கு மீறி பலவீன மாக உணர்கிறேன். நான் அமைதியாக, ஆழ்ந்து உறங்கக் கூடிய இரவு வர வேண்டும் என்று நான் ஏங்கினேன். ஆனால் நான் உறங்கத் தொடங்கியவுடன், அந்தக் கனவு மீண்டும் தொடங்கியது. எனக்கு முன்னால் விளையாட்டு மைதானம் இருந்தது. தற்போதைய ஆரட்டரி சிறுவர்களும், ஆரட்டரியின் அதே முன்னாள் மாணவரும் என் முன்னால் இருந்தார்கள். நான் அவரிடம் உடனடியாக மீண்டும் கேள்விகள் கேட்கத் தொடங்கினேன்:

“நீர் என்னிடம் சொன்ன எல்லாவற்றையும் சலேசியர்களுக்கு அறிவிக்க நான் தவற மாட்டேன், ஆனால் ஆரட்டரி சிறுவர்களுக்கு நான் என்ன சொல்வது?”

“மேலதிகாரிகள், ஆசிரியர்கள், உதவியாளர்கள் ஆகிய அனைவரும் தங்களுக்காகச் செய்யும் அனைத்தையும், அவர்கள் தங்களுக்காக எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறார்கள் என்பதையும் அவர்கள் உணர வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். சிறுவர்கள் மேல் அவர்களுக்கு அன்பு இல்லை என்றால், இவ்வளவு அதிகமான பரித்தியாகங்களுக்கு அவர்கள் தங்களை ஒருபோதும் உட்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தாழ்ச்சியே எல்லா மகிழ்ச்சிக்கும் ஊற்றாக இருக்கிறது என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தும்; மற்றவர்களுடைய குறைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று அவர்களுக்குக் கூறும், ஏனெனில் உத்தமதனம் என்பதை இந்த உலகத்தில் காண முடியாது. அது மோட்சத்துக்குரிய ஒரு காரியம். அவர்கள் இருதயத்தை ஸ்தம்பிக்கச் செய்கிற எல்லா விதமான முறுமுறுப்புகளையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களுடைய முக்கியமான முயற்சிகள் எல்லாமே தேவ அருளில் வாழ்வதற்காகவே இருக்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்லும். கடவுளோடு சமாதானத்தில் இருக்காதவன் யாராயிருந் தாலும் அவன் தன்னோடு அல்லது மற்றவர்களோடு சமாதானமாக இருக்க முடியாது.”

“அப்படியானால், என் சிறுவர்களில் சிலர் தேவ இஷ்டப் பிரசாத நிலையில் இல்லை என்று சொல்கிறீரா?”

“காரியங்கள் இப்படிப் புலம்புதலுக்குரிய நிலையில் இருப்பதன் முக்கிய காரணம் இதுதான் - இதுவும், நான் குறிப்பிடாமலே நீர் அறிந்திருப்பவையும், நீர் தீர்வு காண வேண்டியவையுமான மற்ற காரியங்களும். தன்னிடம் சில இரகசியங்களைக் கொண்டிருப்பவன்தான் மற்றவர்களை நம்ப மாட்டான், ஏனெனில் இந்த இரகசியங்கள் வெளியாகி விடுமோ என்று அவன் எப்போதும் பயப்படுகிறான். அவை வெளியாகி விடும் என்றால், தான் அவமானத்தாலும், குழப்பத்தாலும் மூடப்படுவான் என்பதை அவன் முழுமையாக அறிந்திருக்கிறான். இது போக, அவனுடைய இருதயம் கடவுளோடு சமாதாமாக இல்லை என்றால், அவன் அமைதியற்றவனாகவும், கலக்கமுள்ளவனாகவும், கீழ்ப்படிதலைச் சகித்துக் கொள்ளாதவனாகவும், அற்ப காரியத் திற்கும் நிலைகுலைந்து போகிறவனாகவும் இருப்பான்; எல்லாமே அவனுக்கு எதிராக இருப்பதாக அவனுக்குத் தோன்றும். அவன் எந்த அன்பையும் உணர்வதில்லை என்பதால், தன் மேலதிகாரிகள் தன்னை அன்பு செய்வதில்லை என்ற முடிவுக்கு அவன் வந்து விடுவான்.”

“இருந்தாலும் எவ்வளவு அதிகமான சிறுவர்கள் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து, திவ்விய நன்மை வாங்குகிறார்கள்!”

“உண்மைதான்; பலர் பாவசங்கீர்த்தனம் செய்கிறார்கள், ஆனால் அவர்களிடம் எது முழுமையாகக் குறைவுபடுகிறது என்றால், தங்கள் பிரதிக்கினைகளில் அவர்கள் உறுதியாக இல்லாதது தான். அவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்கிறார்கள், ஆனால் எப்போதும் அதே பாவங்களைத் திரும்பவும் கட்டிக் கொள் கிறார்கள், அதே பாவ சந்தர்ப்பங்களை மீண்டும் தேடிப் போகிறார்கள், அதே கீழ்ப்படியாமையின் செயல்கள், கடமை மீறுதல்கள். மாதக் கணக்காக, வருடக் கணக்காக இப்படியே அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் பள்ளி நாட்களின் இறுதி வரைக்கும் கூட இதே போலத் தொடர்ந்து வாழ்கிறார்கள். அவர்களுடைய பாவசங்கீர்த்தனங்கள் மிகக் குறைந்த மதிப்புள்ளவை, அல்லது மதிப்பே இல்லாதவை. ஆகவே ஆன்ம சமாதானம் அவற்றிலிருந்து பெறப்படுவதில்லை. ஒரு சிறுவன் இந்த நிலையில் கடவுளின் நீதியாசனத்திற்கு முன் அழைக்கப் படுவான் என்றால், அது உண்மையாகவே மோசமான காரியமாகத் தான் இருக்கும்.” |

“ஆரட்டரியில் இது போல பலர் இருக்கிறார்களா?”

“இல்லை. உங்கள் இல்லத்திலுள்ள சிறுவர்களின் பெரும் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இப்படிப்பட்டவர்கள் அதிகமாக இல்லை . அவர்களைப் பாருங்கள்.” அவர் அவர்களை எனக்குச் சுட்டிக் காட்டினார். நான் கவனித்தேன், அந்தச் சிறுவர் களை ஒருவர் பின் ஒருவராகப் பார்த்தேன். ஆனால் அந்த ஒரு சில சிறுவர்களில், என் இருதயத்தை மிக ஆழமாகத் துயரப்படுத்திய காரியங்களை நான் கவனித்தேன். அவற்றைக் காகிதத்தில் எழுத நான் விரும்பவில்லை. ஆனால் நான் திரும்பி வரும்போது, சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் நான் அதை விளக்கிக் கூறுவேன். இப்போதைக்கு, ஜெபிக்கும்படியாகவும், உறுதியான பிரதிக்கினை எடுக்கும்படியாகவும், நீங்கள் உறுதியுள்ளவர்கள் என்று உங்கள் நடத்தையின் மூலம் காட்டும்படியாகவும், நம் மத்தியில் கொமோல்லோக்களும், டோமினிக் சாவியோக்களும், பெசுக்கோக்களும், சக்கார்திகளும் மீண்டும் வாழும்படி பார்த்துக் கொள்ளும்படியாகவும் மட்டும்தான் உங்களிடம் நான் சொல்ல முடியும். நான் என் நண்பரிடம் கடைசி வார்த்தையாக, “நீர் என்னிடம் சொல்ல வேண்டியது வேறு ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டேன்.

“இளையோரும், முதியோருமான அவர்கள் எல்லோரும் கிறீஸ்தவர்களின் சகாயமான மாமரியின் மக்கள் என்றும், அவர்கள் ஒருவரையொருவர் சகோதரர்களாக அன்பு செய்து, தங்கள் நன்னடத்தையும் மூலம் கடவுளுக்கும், அவருடைய அன்னைக்கும் மகிமை செலுத்தும்படியாக, அந்த அன்னைதான் உலகின் ஆபத்துக் களிலிருந்து அவர்களைப் பாதுகாக்குமாறு அவர்களை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் எல்லோரிடமும் சொல்லுங்கள். நம் திவ்விய அன்னைதான் உபகாரங்கள், வரப்பிர சாதங்கள் ஆகியவற்றின் ஒரு முடிவற்ற நீரோடையைக் கொண்டு, அவர்களுக்கு அப்பமும், அவர்களுடைய கல்விக்குத் தேவையான எல்லாவற்றையும் தந்து வருகிறார்கள் என்று அவர்களிடம் கூறும். அவர்கள் தங்கள் பரிசுத்த மாதாவின் திருநாளின் வாசலில் இருக்கிறார்கள் என்பதையும், அந்த அன்னையின் உதவியால்தான் அந்தத் தடை - சில ஆன்மாக்களின் அழிவுக்கான ஒரு வழியாக அதைப் பயன்படுத்தும்படி, மேலதிகாரிகளுக்கும், சிறுவர்களுக்கும் இடையே பசாசு மிகத் தந்திரமாக எழுப்பியுள்ள அவநம்பிக்கையின் தடை - தகர்ந்து விழ வேண்டும் என்பதையும் அவர்கள் நினைவு கூர்வார்களாக."

“அந்தத் தடைச்சுவரை அகற்றுவதில் நாங்கள் வெற்றி பெறுவோமா?"

“இளையோரும், முதியோரும் மாமரியின் அன்பிற்காக சில சிறு ஒறுத்தல்களை அனுபவிக்கத் தயாராக இருந்து, நான் உங்களுக்குச் சொன்னவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பார்கள் என்றால் மட்டும் நிச்சயமாக அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.”

இதனிடையே, நான் தொடர்ந்து என் சிறுவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தங்கள் நித்திய அழிவை நோக்கி விரைந்து கொண்டிருந்தவர்களைக் கண்டு, என் இருதயம் எவ்வளவு அதிகமாக வலித்தது என்றால், நான் கண்விழித்து விட்டேன். மிக முக்கியமான இன்னும் மிகப் பல காரியங்களையும் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் அதற்கு எனக்கு இப்போது நேரமும் இல்லை, சந்தர்ப்பமும் இல்லை.

இப்போது உங்களை விட்டுப் பிரிகிறேன். தன் பிரியமுள்ள சிறுவர்களுக்காக தன் வாழ்வைச் செலவிட்டுள்ள இந்தக் கிழவனின் ஒரே ஆசை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? முடிந்த வரை, அந்தப் பழைய ஆரட்டரியின் மகிழ்ச்சியான நாட்கள், சிறுவர்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையே பாசமும், கிறீஸ்தவ நம்பிக்கையும் நிறைந்திருந்த நாட்கள், இயேசு கிறீஸ்துவின் அன்பிற்காக, தங்களுக்குக் கீழ்ப்பட்டவர்களிடம் அன்பும், பரஸ்பர சகிப்புத்தன்மையும் நிறைந்திருந்த நாட்கள், இருதயங்கள் முழு எளிமையிலும், கள்ளங்கபடின்மையிலும் திறப்பாயிருந்த நாட்கள், எல்லோருக்கும் பிறர்சிநேகமும், உண்மையான மகிழ்ச்சியும் நிறைந் திருந்த நாட்கள், திரும்பி வர வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை .

உங்கள் ஆத்துமத்தின் நன்மைக்காக நான் உங்களிடம் கேட்கிற அனைத்தையும் செய்வீர்கள் என்ற உங்கள் வாக்குறுதியின் ஆறுதல் எனக்குத் தேவைப்படுகிறது. ஆரட்டரியில் வாழ்வது எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்பதை நீங்கள் போதுமான அளவுக்கு உணரவில்லை. ஒரு சிறுவன் ஒரு சலேசிய இல்லத்தில் சேர்ந்து விட்டால் போதும், திவ்விய கன்னிகை அவனை உடனே தன் விசேஷ பாதுகாவலின் கீழ் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். ஆகவே நாம் ஒரே மனத்தோராய் இருப்போம். கட்டளைகள் தரும் நிலையில் இருப்போரிடம் பிறர்சிநேகம், கீழ்ப்படியும் நிலையில் இருப்போரிடம் பிறர்சிநேகம்; புனித பிரான்சிஸ் சலேசியாரின் பரிசுத்தமான உணர்வு நம் மத்தியில் அரசாள்வதே இதன் விளைவாக இருக்கும்.

என் அன்புச் சிறுவர்களே, நான் உங்களிடமிருந்து பிரிந்து, நித்தியத்திற்குள் நுழைவதற்கான காலம் நெருங்கி வருகிறது. ஆகவே, கருக்களும், சகோதரர்களும், என் அன்புச் சிறுவர்களுமாகிய நீங்கள் செல்ல வேண்டும் என்று ஆண்டவரே விரும்புகிற பாதையில் உங்களை விட்டுச் செல்ல வேண்டும் என்ற தணியாத ஆசையை நான் கொண்டிருக்கிறேன்.

இந்த நோக்கத்திற்காக, மே 9, வெள்ளியன்று நான் சந்தித்த பரிசுத்த பிதா பாப்பரசர், தம் முழு இருதயத்தோடும் உங்களுக்குத் தமது ஆசீர்வாதங்களை அனுப்புகிறார். கிறீஸ்தவர்களின் சகாய மாதா திருநாளன்று, நான் நம் மகா பரிசுத்த மாதாவின் திருப்படத் திற்கு முன்பாக உங்களோடு இணைந்திருப்பேன். இந்தத் திருநாள் சாத்தியமான மிகப் பெரும் ஆடம்பரச் சிறப்புடன் கொண்டாடப் பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உணவறையில் இந்தத் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் பொறுப்பை நான் சுவாமி லாஸ்ஸெலோவிடமும், சுவாமி மார்ஷிஸியோவிடமும் ஒப்படைக் கிறேன். ஒரு நாள் மோட்சத்தில் நாம் கொண்டாட இருக்கிற அந்த முடிவில்லாத திருநாளுக்கு, கிறீஸ்தவர்களின் சகாய மாதா திருநாள் ஒரு முன்னோட்டமாக இருக்க வேண்டும். 

ரோம், மே 10, 1884.
இயேசுக்கிறீஸ்துவில் உங்கள்மீது மிகுந்த பாசமுள்ள, 
சுவாமி ஜான் போஸ்கோ.