இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சாந்தம் எப்படி அனுசரிக்கப்பட வேண்டும்?

சாந்தம் எப்படி அனுசரிக்கப்பட வேண்டும் என்று சிந்திப்போம். முதலாவதாக, உன் பலம் முழுவதையும் கொண்டு, கோபத்தின் ஒவ்வொரு இயக்கத்தையும் கட்டுப்படுத்து. அடுத்து, பிறரை நோகச் செய்கிற எல்லா வார்த்தைகளையும், எல்லா விதமான முரட்டுத் தனத்தையும், ஆணவமுள்ள நடத்தையையும் தவிர்ப்பதில் நீ கவனமாக இருக்க வேண்டும்; ஏனெனில்ட முரட்டுக் குணம் சில சமயங்களில் அவமதிக்கும் வார்த்தைகளை விட அதிகம் நோகச் செய்வதாக இருக்கிறது. ஒருவன் உன்னை இழிவாக நடத்துகிறான் என்றால், உன் மீதுள்ள அன்பிற்காக இதை விட எத்தனையோ மடங்கு அதிகமான அவமானங்களைத் தாங்கிக் கொண்ட சேசுநாதரின் அன்பிற்காக அதைப் பொறுமையோடு அனுபவி. என் தேவனே! மன ஜெபத்தை அனுசரிப்பவர்களும், அடிக்கடி தேவத் திரவிய அனுமானங்களைப் பெறுபவர்களுமாகிய சில ஆத்துமங்கள் ஒரு சுடுசொல்லையும், பிறருடைய அலட்சியத்தையும் டப் பொறுக்க முடியாமல் இருப்பதைக் காண்பது எவ்வளவு வேதனையானது! பரலோக ஆரோகணத்தின் சகோதரி மேரி ஒரு அவமானத்தை எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம் திவ்விய நற்கருணை ஆண்டவருக்கு முன்பாகச் சென்று, ""என் மணவாளரே, இந்தச் சிறு பரிசை நான் உமக்குத் தருகிறேன்; இதை ஏற்றுக் கொண்டு, என்னை நோகச் செய்தவரை மன்னிக்கும்படி உம்மை இரந்து மன்றாடுகிறேன்'' என்று சொல்வாள். இந்தத் துறவறக் கன்னிகையை நீ ஏன் கண்டுபாவிக்கக் கூடாது? பிறர்சிநேகத்தைப் பாதுகாத்துக் கொள்ள, நீ எல்லாவற்றையும் ஏற்று அனுபவிக்க வேண்டும். புண்ணியம் மற்றவர்களால் மோசமான நடத்தப் படுவதன் மூலம் எண்பிக்கப்படும் வரைக்கும், அது பலவீனமாக இருக்கிறது என்று சுவாமி ஆல்வாரெஸ் கூறுவது வழக்கம். தான் இழிவையும், அவமானத்தையும் தாங்கிக் கொள்ளும் முறையைக் கொண்டே அது பிறர்சிநேகத்தில் செழித்து வளர்கிறதா, அல்லது தோற்றுப்போகிறதா என்பதைக் காட்டுகிறது.

யாராவது உன்னிடம் கோபமான வார்த்தைகளில், அல்லது அவமானமும், கண்டனமும் உள்ள வார்த்தைகளில் பேசினால், இனிமையோடு அவனுக்குப் பதில் சொல். அப்போது அவனுடைய கோபம் அந்தக் கணமே தணிந்து போகும். ""சாந்தமுள்ள பதில் கடுங்கோபத்தை முறிக்கிறது'' (பழ.15:1). ""நெருப்பை நெருப்பாலும், கடுஞ்சினத்தைக் கோபத்தாலும் அணைக்க முடியாது.'' உன்னிடம் கோபத்தோடு பேசுபவர்களுக்கு வெறுப்பும் கசப்புமுள்ள முறையில் நீ பதில் சொன்னால், அவர்களுடைய கோபம் அடங்கி விடும் என்று நினைக்கிறாயா? அதற்கு மாறாக, நீ அதைத் தூண்டி விடுவாய்,மேலும் பிறர்சிநேகச் சட்டத்தையும் நீ மீறி விடுவாய். கோபமான ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் பதில் இனிமை நிறைந்ததாக இருக்கட்டும். அப்போது கோப நெருப்பு அதே கணத்தில் அணைந்து விடும். ஸோஃப்ரோனியுஸ் இரு துறவிகளைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை விவரிக்கிறார். அவர்கள் ஒரு பயணத்தில் வழிதவறி, எதிர்பாராமல் அப்போதுதான் விதை விதைக்கப் பட்டிருந்த ஒரு வயலுக்குள் நுழைந்த விட்டார்கள். அந்த வயலைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த விவசாயி கோபவெறி கொண்டு மிகக் கேவலமான வார்த்தைகளால் அவர்களைத் திட்டத் தொடங்கினான். முதலில் அவர்கள் அமைதியாக இருந்தாலும், தங்கள் மெளனம் அவனுடைய கோபத்தை அதிகமாக்க மட்டுமே உதவுகிறது என்பதைக் கண்டு, தாழ்ச்சியோடு, ""சகோதரனே, நாங்கள் தவறு செய்து விட்டோம். கடவுளின் பெயரால் எங்களை மன்னித்து விடு'' என்றார்கள். இந்தத் தாழ்ச்சியுள்ள பதில் அவனுடைய கோபத்தை உடனே தணித்து, தனது நடத்தைக்காக அவன் மனம் வருந்தும்படி செய்தது. அவன் உடனே அந்த இரு துறவிகளிடமும் தனது கொடிய வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டான். அது மட்டுமின்றி, மற்றொரு அதிசயமும் அதன்பின் நடந்தது--அவன் விரைவில் உலகத்தைத் துறந்து, அடைபட்ட மடத்தில் அவர்களோடு சேர்ந்து கொண்டான்!

சில சமயங்களில், குறிப்பாக நீங்கள் ஒரு மடத்தின் அதிபராக இருக்கும்போது, மற்றொருவன் பேசிக் கொண்டே போவதைத் தடுக்கும்படி, அல்லது உங்களுக்கு மரியாதை செலுத்த அவனுக்குக் கற்றுத் தரும்படி ஒரு கூரிய பதிலால் அவனது வாயை அடைப்பது சரியானதும், அவசியமானதும் கூட என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் அத்தகைய கூரிய வார்த்தைகள் அறிவிலிருந்து வருவதற்குப் பதிலாக, கோபத்திலிருந்தே வருகிறது என்பதில் உறுதியாயிருங்கள். கோபம் சில சமயங்களில் நியாயமானது என்பது எனக்குத் தெரியும். ""உன் கோபத்தில் பாவமிராதிருக்கக் கடவது'' என்கிறார் சங்கீத ஆசிரியர் (சங்.4:5). ஆனால் பாவமின்றிக் கோபிப்பது நடைமுறையில் மிகக் கடினமான காரியம். கோபத்திற்குத் தன்னைக் கையளிக்கும் எவனும் தனது ஆத்துமத்தை நிச்சயமான ஓர் ஆபத்துக்கு உள்ளாக்குகிறான். இதனாலேயே அர்ச். பிரான்சிஸ் சலேசியார் தமது ஃபிலோத்தியா என்ற நூலில் ஞானத்தோடு, கோபத்திற்கான சந்தர்ப்பங்கள் எவ்வளவு நியாயமானவையாக இருந்தாலும், அதன் வெளிப்பாடுகள் அடக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார். ""நீ நியாயத்தோடு கோபப்படுகிறாய் என்பதை விட நீ கோபப்படுவதேயில்லை என்று உன்னைப் பற்றிச் சொல்லப்படுவது அதிக நல்லது'' என்று புனிதர் கூறுகிறார். ஆத்துமத்தில் நுழைய ஒரு முறை அனுமதிக்கப்பட்ட கோபம் அதன்பின் சிரமத்தோடுதான் வெளியேற்றப்படுகிறது என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார். ஆகவே கோபத்தை அதன் முளையிலேயே கிள்ளி எறியும்படி அவர் உறுதியான முறையில் நமக்கு அறிவுறுத்துகிறார். அக்ரிப்பினுஸ் என்னும் ஒரு தத்துவஞானி, தம் நிலச் சொத்தை இழந்த போது, ""நான் என் உடைமைகளை இழந்திருக்கிறேன் என்றாலும், என் சமாதானத்தை இழக்கவில்லை'' என்றார். நீ நிந்திக்கப்படும் ஒவ்வொரு முறையும், உன் பதிலும் இப்படிப்பட்டதாகவே இருக்கட்டும். ஓர் அவமானத்தைப் பெற்றுக் கொண்டிருப்பது உனக்குப் போதாதா? கோபத்திற்கு இடம் கொடுத்து, உன் ஆத்தும சமாதானத்தையும் இழக்க நீ விரும்புகிறாயா? கோபத்தினால் வரும் மன உளைச்சல், நீ பெற்றுக்கொண்ட அவமானத்தை விட உனக்கு அதிகத் தீமையானது. தான் அவமானப்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் கோபத்திற்கு இடமளிப்பவன் தன்னைத் தானே தண்டிப்பவனாக இருக்கிறான் என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார். ஆத்துமம் ஒரு தவறுதலுக்கான வருத்தத்திலிருந்து மீண்டு வரும்போது, அது அமைதியை இழப்பது, அதற்கு எப்போதுமே தீங்கு விளைவிப்பதாகத்தான் இருக்கும். ஏனெனில் அர்ச். அலாய்சியஸ் வழக்கமாகக் கூறுவது போல, குழம்பிய நீரில் மீன் பிடிப்பது பசாசுக்கு இன்பமான காரியம்.

கோபம் அல்லது இழிவின் தொனியோடு யாராவது உன்னிடம் பேசும்போது, நீ இனிமையோடு பதில் சொல்ல வேண்டும் என்று நான் சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் இப்போது சொல்கிறேன்: ஆத்துமம் குழப்பத்திற்கு உள்ளாகும்போதெல்லாம் அது மவுனமாக இருப்பதே நல்லது; ஏனெனில் அப்போது கோபமானது கடுமையான வார்த்தைகளை நியாயமானவையாகவும், அறிவுக்கு உகந்தவையாகவும் தோன்றச் செய்யும். ஆனால் சமாதானம் திரும்பி வரும்போது, உன் வார்த்தைகள் நியாயப்படுத்தப்பட முடியாதவை என்று நீ காண்பாய். கோபம் ஓர் இருண்ட போர்வையைக் கொண்டு ஆத்துமத்தை மூடுகிறது, இந்தப் போர்வை எது சரி, எது தவறு என்று அந்த ஆத்துமம் பிரித்தறிய முடியாதபடி அதைத் தடுத்து விடுகிறது என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார்.

உன்னை நோகச் செய்த மனிதன் உன்னிடம் மன்னிப்புக் கேட்க வருகிறான் என்றால், கடுகடுப்பான முகத்தோடு அவனை எதிர் கொள்ளாதபடியும், உன் வார்த்தைகளிலும் பார்வையிலும் அதிருப்தியும், மரியாதைக் குறைவும் தோன்றாதபடியும் கவனமாயிரு.

ஆனால் நீ மற்றொருவனை நோகச் செய்த அல்லது கோபப் படுத்திய ஒவ்வொரு முறையும், உன் பலம் முழுவதையும் பயன்படுத்தி, உடனடியாக அந்த மனிதனின் வேதனையைத் தணிக்கவும், உன்மீது அவன் இருதயத்தில் எந்த விதமான கோப உணர்வும் தோன்றாதபடி செய்யவும் முயற்சி செய். ""காயப்படுத்தப் பட்ட பிறர்சிநேகத்திற்குத் தாழ்ச்சி மட்டுமே பரிகாரமாக இருக்கிறது'' என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார். சுய அவமதிப்பு பிறர்சிநேக மீறுதலைச் சரி செய்வதற்கு மிகவும் பயனுள்ள ஒரு வழியாகும். ஆகவே, பிறர்சிநேகத்திற்கு எதிராக நீ குற்றம் செய்யும் ஒவ்வொரு முறையும் உடனடியாக உன்னையே தாழ்த்தி, அவமானத்தைப் பற்றிய உன் இயல்பான வெறுப்பின் மீது பலவந்தமான முறையில் வெற்றி கொள்; நீ செய்த தீமைக்கான பரிகாரத்தை எவ்வளவு காலம் தள்ளிப் போடுவாயோ, அவ்வளவு அதிகமாக, பரிகாரம் செய்ய உனக்கிருக்கும் வெறுப்பும் அதிகரிக்கும். ""நீ பீடத்தண்டையில் உன் காணிக்கையைச் செலுத்தும்பொழுது உன் சகோதரன் உன்மேல் ஏதோ மனத்தாங்கலா யிருக்கிறானென்று அங்கே நினைவுகூர்வாயாகில், உன் காணிக்கையை அங்கே பீடத்தின் முன்பாக வைத்துவிட்டு, முந்த உன் சகோதரனோடு உறவாடப் போ; பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்துவாயாக'' என்கிறார் நம் மீட்பர் (மத்.5:23,24). நீ உன் காணிக்கையைச் செலுத்தவோ, திவ்ய நன்மை வாங்கவோ, பூசை காணவோ பீடத்தை நெருங்கி வரும்போது, உன் சகோதரனை நீ மனம் நோகச் செய்திருக்கிறாய் என்பது உன் நினைவுக்கு வந்தால், பீடத்தினின்று உடனே புறப்பட்டுப் போய், அவனோடு மீண்டும் ஒப்புறவாகு.