மாமரியின் மீதான பக்தி, சேசுவைச் சென்றடையும் வழி!

சேசுவே இரட்சகர்! சேசுவே ஆண்டவர் ! சேசுவே சர்வேசுரன்! சகல சிருஷ்டிகளும் அவருக்காக, அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டுள்ளன. ''அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாக்கப்பட்ட தொழிய உண்டாக்கப்பட்டவைகளில் எதுவும் அவராலேயன்றி உண்டாக்கப்படவில்லை " (அரு.1:3).

அவரே நம் இரட்சகர்! ''நாம் பாவங்களுக்கு மரித்தவர்களாய் நீதிக்கு ஜீவிக்கும்படி, அவர் தாமே சிலுவை மரத்தின் மேல் தமது சரீரத்தில் நமது பாவங்களைச் சுமந்தார். அவருடைய காயங்களினால் நாம் குணமாக்கப் பட்டோம்!" (1இரா.2:24). நாம் இரட்சணியம் அடைய வேண்டியதற்கு வானத்தின் கீழ் (அவருடைய நாமமல்லாது) வேறே நாமம் மனுஷருக்குக் கொடுக்கப்படவில்லை (அப். நட. 4:12).

சேசுவே ஆண்டவர்! ஏனெனில் "இவரே காணப்படாதவராகிய சர்வேசுர னுடைய சாயலும், சகல சிருஷ்டிகளுக்கும் முந்தின பேறுமானவர். அதெப்படியென்றால், பரலோகத்திலும் பூலோகத்திலும் காணப்பட்டவைகளும், காணப்படாதவைகளுமான சகலமும் இவருக்குள் சிருஷ்டிக்கப்பட்டன.... இவரே எல்லோருக்கும் முந்தினவராயிருக்கிறார். இவருக் குள்ளே சகலமும் நிலைபெறுகின்றது" (கொலோ.1:15-17).

சேசுவே சர்வேசுரன்! அவரே தேவ வார்த்தையானவர். ''அந்த வார்த்தை சர்வேசுரனிடத் திலிருந்தார். அந்த வார்த்தை சர்வேசுரனாகவும் இருந்தார்" (அரு.1:1). "சுயஞ்சீவிய சர்வேசுர னுடைய குமாரனும்." (மத்.16:16), பாவங்களை மன்னிக்கிறவரும், வரப்பிரசாதங்களின் கருவூலமும், சிநேகத்தின் ஊற்றும், " மறைவாயிருக்கிறவைகளை வெளிப்படுத்துகிறவரும்" (மத் 13:35), " மனித னைத் தீர்வையிடும் அதிகாரத்தைப் பிதாவிடமிருந்து பெற்றிருக்கிறவரும்” (அரு. 5:27), "ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பே இருக்கிறவரும்" (அரு. 8:58) அவரே. அவரே நம் இறுதிக்கதி!

எனவே, கிறீஸ்துநாதரைத் தன் இரட்சகராகவும், ஆண்டவராகவும், உன்னத சர்வேசுரனாக வும் ஏற்றுக்கொள்ளாதவன் எவனும் நித்தியத்திற்கும் இழக்கப்படும் ஆபத்திலிருக்கிறான்.

ஆனால் கத்தோலிக்கரிடையேயும் கூட அறியாமையில் மூழ்கியிருக்கிற அநேகர் கிறீஸ்து நாதரை விட்டுவிட்டு, தேவமாதா மீதும், அர்ச்சியசிஷ்டவர்கள் மீதும் உண்மையான அன்பில் லாமல், ஒரு முறையற்ற வெளியரங்க பக்தியை மட்டும் கொண்டிருக்கிறார்கள். திருநாட்களின் வெளிக் கொண்டாட்டங்கள், வரி வசூல், ஆடை அணிகலன்கள், குடிவெறி, உல்லாசம், சப்பரம், கும்பிடு சரணம் போன்ற வெளிக்காரியங்களில் மட்டுமே மூழ்கிக் கிடக்கிறார்கள். தேவமாதா மீதும், அர்ச்சியசிஷ்டவர்கள் மீதும் நாம் கொள்ளும் பக்தி (திவ்ய பலிபூசை, தேவ நற்கருணை, பாவசங்கீர்த்தனத்தின் வழியாக) நமதாண்டவராகிய சேசுவோடு நம்மை இணைக்காவிட்டால், நம் பக்தி உண்மையான கிறீஸ்தவ பக்தியல்ல. கிறீஸ்துநாதரை அறிந்து, நேசித்து, சேவிக்க எல்லா முயற்சியையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவமாதாவோ கிறீஸ்துநாதரை நாம் சென்றடையும் வழியாக இருக்கிறார்கள். மாதா பக்தி நம்மைக் கிறீஸ்துநாதரிடம் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை எனில், இந்த மகா உன்னத சிருஷ்டி யான திவ்ய கன்னிகை உலகிற்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் ஒருபோதும் நிறைவேற முடியாது. சேசுநாதர் மாமரியாகிய மரத்தில் கனிந்திருக்கிற கனியாயிருக்கிறார். இக்கனியைப் பெற்றுக் கொள்ளும் ஏக்கத்துடனேயே நாம் மாதாவை அணுகிச் செல்ல வேண்டும். ஆகையால் மாதா பக்தி யைப் பயன்படுத்தி, சேசுவைச்சென்றடைய நமக்கு உதவுமாறு மாதாவிடம் மன்றாடுவோமாக!