இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியின் வேதனையின் சிகரம்!

 ஜூலை 2, 1943

சேசு கூறுகிறார்:

"... மாமரி தன் வாழ்வு முழுவதும் நற்கருணை ரீதியான வாழ்வு நடத்தினார்கள்.

மனித சுபாவத்தில், அல்லது மனித சுபாவத்திற்கு அப்பாற்பட்ட இரட்சணிய அலுவலில், மாதா தன் திருக்குமாரனிடமிருந்து வேறுபட்டிருக்கவில்லை.

தேவ சுதனானவர், வேதனையின் உச்சத்தைத் தொடுவதற்கு, பிதாவிடமிருந்து பிரியும் கடும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது: ஜெத்சமெனியிலும், சிலுவையின் மீதும். அது அளவற்ற உயரங் களுக்கும், கடுமைக்கும் எடுத்துச் செல்லப்பட்ட வேதனையாக இருந்தது. அவருடைய திருமாதாவோ, வேதனையின் உச்சத்தைத் தொடுவதற்காக, தன் திருக்குமாரனிடமிருந்து பிரியும் கடும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது: நான் அடக்கம் செய்யப்பட்டிருந்த மூன்று நாட்களிலும்.''

அப்போது மாதா தனியாயிருந்தார்கள். அவர்கள் விசுவாசத் தோடும், நம்பிக்கையோடும், தேவசிநேகத்தோடும் மட்டுமே தனித்து விடப்பட்டிருந்தார்கள். ஆனால் நான் அவர்களோடு இல்லாதிருந்தேன். அது அவர்களுடைய இருதயத்தினுள் செலுத்தப் பட்ட வாளாக இல்லாமல், அதை ஊடுருவி, அதனுள் துருவித் தேடிய வாளாக இருந்தது. ஏனெனில் தன் திருமகனும், தன் சர்வேசுரனுமாக இருந்தவரோடு தனக்கிருந்த ஐக்கியத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாக இருப்பது, தேவ இஷ்டப்பிரசாதத்தால் பூரணமாயிருந்த ஸ்திரீக்கு எப்பேர்ப்பட்ட தாங்க முடியாத அவஸ்தையாக இருந்தது என்றால், ஒரு விசேஷ வரத்தால் அன்றி, அவர்கள் நிச்சயமாக இந்தக் கொடிய அவஸ்தையால் இறந்திருப் பார்கள்.

மகா பரிசுத்த இணை இரட்சகியின் வாழ்வோடு தொடர் புள்ளவையும், நீங்கள் அறியாதவையுமான அநேக இரகசிய பக்கங்கள் இருக்கின்றன. மரியாயின் இரகசியங்கள் மனித மனத்தால் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிகப் பரிசுத்தமானவையாகவும், மிகவும் தெய்வீகமானவையாகவும் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை மட்டும் நான் உங்களுக்கு சுட்டிக் காட்டுவேன், கடவுளுக்குப் பிறகு, மோட்சத்தில் அனைவரிலும் அதிக பரிசுத்ததனம் உள்ள என் தாய் மீது உங்களிலுள்ள வணக்கத்தை அதிகரிக்க அது போதுமானது.

அனைத்திலும் பெரிய துயரத்திற்கும், அனைத்திலும் பெரிய மகிழ்ச்சிக்கும் நியமிக்கப்பட்டிருந்த என் தாயாரின் வாழ்வாகிய துயரக் கடலில், அனைத்திலும் அதிக வேதனையுள்ள அந்த நேரம், என் திருப்பாடுகளில் குறைவாயிருந்ததை நிறைவுசெய்யத் தேவையாயிருந்தது. 

மாமரி இணை இரட்சகியாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களில் உள்ள சகலமும் கடவுளுக்கு மட்டுமே தாழ்ந்ததாக இருக்க, அவர்களுடைய வேதனையும் கூட, வேறெந்த மனித சிருஷ்டியின் வேதனையும் சமமாக முடியாத அளவுக்கு மிகப் பெரியதாகவே இருக்க வேண்டியிருந்தது...''


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...