மகிமைக்குரிய பாத்திரமே!

சர்வேசுரனுடைய சாயலாக உண்டாக்கப்பட்ட ஆத்துமத்துடன் ஐக்கியப்பட்டுள்ள சரீரத்தின் மகிமையே மகிமை. எவ்வெளவுக்கெவ்வளவு இவ்வாத்துமம் தேவ வரப்பிரசாதத்தினால் நிறையப் பெற்றுத் தூய்மையாய் விளங்குகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் மேன்மை உயருகிறது; இவ்வுன்னத ஒன்றிப்பால் சரீரத்தின் மகிமை உயருகிறது.

தூய வெள்ளியால் செய்யப்பட்ட இரு பாத்திரங்களை எடுத்துக் கொள்வோம்: அவற்றில் ஒன்று விலையுயர்ந்த பரிமளத் தைலத்தால் நிரம்பியுள்ளது. மற்றது தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது. இவையிரண்டில், பரிமளத் தைலத்தைக் கொண்டுள்ள பாத்திரமே அனேகரைத் தன்பால் கவர்ந்திழுக்கிறது. எனவே, ஒரு பாத்திரம் தன்னகத்தே கொண்டுள்ள பொருளின் தன்மையையொத்து உயர்ந்ததாகவோ, தாழ்ந்ததாகவோ மதிப்பிடப்பெறும். 

தேவதாயின் சரீரமாகிய பாத்திரத்துடன் சேர்ந்துள்ள அவர்களது ஆத்துமம் தன்னிகரில்லாத் மகத்துவத்துடன் விளங்குகிறது. நமதாண்டவருக்குப்பின், தேவதாயின் ஆத்துமமே எல்லாவற்றிலும் மிகவும் உன்னதமானது; மிக்க தூய்மையானது; களங்கமற்றது; தேவனின் விசேஷ வரங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளதன்றோ இவ்வாத்துமம்! 

மேலும், கன்னிமரியின் தெய்வீகத் தாய்மையை (Divine Motherhood) நோக்குங்கால், அவர்களது திருமேனி எவ்வளவு மகிமையானது என்று தெரியவரும். முன்னொருநாள் பிதாப் பிதாவாகிய ஆபிரகாம், சம்மனசு உருவில் தோன்றிய கர்த்தருடன் அன்னியோன்னியமாய்ச் சல்லாபித்தார்; (ஆதி. 18). இதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார் அபிரகாம். இவ்வுத்தம பிதாப்பிதாவுக்கு, நமக்கிருப்பது போன்ற உண்மையான சரீரத்துடன் கர்த்தர் தோன்றவில்லை. 

மோயீசன் சீனாய் மலைமீது கருமேகங்களின் நடுவே, இடி மின்னல்களுக்கு இடையே அதியுன்னத தேவனை முகமுகமாய்க் கண்டு அவருடன் வார்த்தையாடினார் (யாத். 19:20); இதை ஒரு பெரும் பாக்கியமாக அவர் கருதினார்; எனினும் என்றும் நிலைத்துள்ள பத்துக்கற்பனைகளை மக்களுக்குக் கொணர்ந்த இம்மகாத்துமாவுக்கும் சர்வேசுரன் தோன்றியது மெய்யான சரீரத்துடன் அல்ல. எலியாசும் அதியுன்னதரைக் கண்டும், அவரது வார்த்தைகளைக் கேட்டுமிருக்கிறார் (3 அரசர் 19); இவ்வுத்தம ஊழியரும் தூய அரூபியான தேவனை உண்மைச் சரீரத்துடன் காணவில்லை.

மெய்யான மனிதனாய்ப் பிறந்த நமதாண்டவரை சக்கேயுஸ் தன் விட்டிலே உபசரித்தார்; லாசரும் அவருடைய சகோதரிகளும் அவருக்கும் பணிவிடை செய்தனர்; அப்போஸ்தலர்கள் அவருடன் அன்னியோன்னியமாய் மூன்று வருடங்கள் ஜீவித்து வந்தனர். அவர்களின் பாக்கியமே பாக்கியம்! ஆயினும் தேவ மனிதனிடம் அவரது திருத்தாயாருக்கிருந்த ஒப்பற்ற அன்னியோன்னிய ஐக்கியத்திற்குமுன் இவையெல்லாம் எம்மாத்திரம்? 

இத்திருத்தாயின் மகிமைப் பிரதாபத்தின் முன் திருச்சபையின் புனித வேதபாரகர்களும் ஆச்சரியத்தினால் பிரமிப்படைந்தனர். வார்த்தையானவர் மனுவுருவெடுத்த இத்திவ்விய தாயின் திருவுதரத்தை மங்காப் புகழ்பெற்ற வார்த்தைகளால் புகழ்ந்தனர். “தேவதாயின் திரு மாமிசம், சேசுவின் திரு மாமிசம்”( Sermon de Assumpt.B.M.V. Cap.5) என்கிறார் அர்ச். அகுஸ்தீனார். 

“அதுவே உயிருள்ள மோட்சம்; தெய்வீகத்தின் சரீரப்பெட்டகம்”( Serm. 3 de Nativ. B.M.V.) என்று அர்ச். தமியான் இராயப்பரும், “ஆதாமின் சந்ததியாரில் ஓர் கன்னிகையை சர்வேசுரன் தனது மாதாவாகத் தெரிந்தெடுத்தார். எல்லா மானிடரிலும் வானதூதர்களிலும் மேலாக அவர்களை உயர்த்தினார்,” (Counc. de Annunt) என்று அர்ச். வில்லநோவா தோமையாரும் கூறுகின்றனர். 

பரிசுத்த பரம திவ்விய நற்கருணை அடங்கியுள்ள திருப்பாத்திரங்களை நாம் சங்கை செய்கிறோம். இரத்தமும் சதையுமாய் ஒரு தெய்வீக மீட்பரை நமக்களித்த திருச்சரீரத்தின் மகிமை பெருமைக்கு முன், நவ இரத்தினங்கள் பதிக்கப் பெற்றிருப்பினும் இப் பொன் வெள்ளிப் பாத்திரங்கள் எம்மட்டும்?.... உண்மையிலேயே, ஆண்டவரால் தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரமாகிய மரியன்னையின் சரீரம் இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற தூய தங்கப் பாத்திரங்களைவிட எவ்வளவோ மேலானது. இதனால்தான் திருச்சபை அவர்களை “மகிமைக்குரிய பாத்திரமே” எனத் துதிக்கிறது.

இதைத் தெளிவுற அறிந்து, நாம் நமது விசுவாசத் தைப் புதுப்பிப்போம்; நமதுடல் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும் என்பது உண்மைதான்; ஆயினும், நாம் தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்திலிருக்கும்போது சர்வேசுரன் நம்மிடத்தில் வாசம் செய்கிறார். இஷ்டப் பிரசாத அந்தஸ்துடன் பரிசுத்த திவ்விய நற்கருணையை உட்கொள்ளும்போது தேவகுமாரன் சேசுநாதர், தமது ஆத்தும சரீரத்தோடும், தேவ சுபாவத்தோடும், நம்மிடத்தில் எழுந்தருளி வருகின்றார். நாம் அவர் வாசம் செய்ய ஏற்ற பாத்திரமாக மாறுகின்றோம். இந்நிலையில் நம் உடலும் “மகிமையின் பாத்திரமாகிறது.” 

எனவே அற்பக் குற்றத்தினாலும் இம்மேலான பாத்திரத்தை அவசங்கைப்படுத்தாதப்படி என்றும் விழிப்பாயிருப்போமாக... திவ்விய நன்மை உட்கொள்ளும் போது நாம் சேசு குடியிருக்கும் திரு ஆலயமாகிறோம்: இது மட்டுமோ? சேசுவின் பீடம் திருப்பெட்டகம் அவர் தங்கி இளைப்பாறும் உயிருள்ள பாத்திரங்களாக மாறுகின்றோம். என்ன ஆச்சரியம்! இதோடு நின்றுவிடவில்லை. நாம் இயேசுவுடன் எவ்வளவு அன்னியோன்னியமாக பிணைக் கப்பட்டிருக்கிறோம் என்றால், அர்ச். சிரில் சொல்வது போல், இயேசுவும் நாமும் ஒன்றாகக் கலந்து விடுகிறோம். (Lib. iv. in Joan., Cap. 17).

இவ்வளவு மேலான மகிமையுற்ற நாம் இயேசுவை இழந்து விடும் நிர்ப்பாக்கியத்துக்கு உள்ளாகாமல் விழிப்பாய் இருப்போமாக. பூசைப் பாத்திரங்களை நாம் சங்கிக்கிறோம்; நம்மை நாமே சங்கிக்கக் கற்றுக்கொள்ளுவோம்; நமது மனோ வாக்குக் கிரிகைகளையும் கட்டுப் படுத்தி வைக்கக் கற்றுக்கொள்ளுவோம்.

“மாமரியே! கடவுளுக்கு அடுத்தபடியாக நீர் சகல வணக்கத்திற்கும் உரியவர்கள். சம்மனசுக்கள் ஆராதிக்கும் இராஜாதி இராஜனை, ஒன்பது மாதம் உமது திருவுதரத்தில் சுமந்தீர். அவர் தமது உடலை உமது உடலிலிருந்து பெற்றார். இதனால் அவருடைய சாயல் உமது சாயலுடன் இணைந்தது. அன்னையே! இதோ பக்தி பரவசத்தால் எழும்பும் எங்கள் உள்ள உணர்ச்சிகளை ஏற்றுக் கொள்ளும். 

தேவநற்கருணை எங்களை எவ்வளவுதூரம் சிருஷ்டிகளுக்கு மேல் உயர்த்துகிறது என்பதையும் நாங்கள் அதைப் பெறும்போது நற்கருணைப் பாத்திரத்தைக் காட்டிலும் எவ்வளவு மகிமைப் படுத்தப்படுகிறோம் என்பதையும் நன்றாக உணரச் செய்யும். நாங்கள் மோட்ச பேரின்பத்திற்காக உண்டாக்கப்பட்ட “மகிமைக்குரிய பாத்திரங்கள்” என்பதை எங்கும், என்றும், எப்பொழுதும் மனதில் இருத்தித் தியானிக்க உதவி புரிந்தருளும்.” 


மகிமைக்குரிய பாத்திரமே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!