இதுவரையும் சொல்லப்பட்டவைகளால் பெற்றோரின் அந்தஸ்து எவ்வளவு மேன்மையுள்ளதென்று வெளியாகும். பெற்றோர் அனுபவிக்கும் இந்த உன்னத மேன்மையானது தனக்கேற்ற அதிகாரத்தையுங் கொண்டிராமல் இல்லை. பிள்ளைகள் மேல் அதிகாரமில்லாமற்போகில், பெற்றோருடைய மேன்மையானது பெயரளவிலே ஒரு மேன்மையாயிருக்குமல்லாமல் காரியத்தளவில் அப்படியிராது.
சருவேசுரன் பெற்றோருக்குப் பிள்ளைகள் பேரில் பூரண அதிகாரம் அளித்திருக்கிறார். இராசாக்களுக்குக் கட்டளைச்சட்டத்துளடங்கிய அதிகாரம் மாத்திரம் பிரசைகளின்மேலுண்டு. ஆனால் பெற்றோரே! உங்களுக்கோ உங்கள் பிள்ளைகள்மேல் சுபாவமுறைக்கு மாறில்லாதவைகளிலெல்லாம் சர்வ அதிகாரமும் அருளப்பட்டிருக்கிறது. உங்கள் அதிகாரமே அதிக பூர்வீகமானதென்றும் அது தேனுடைய பரம அதிகாரத்தின் ஒரு பிரதிமையென்றும் ஓர் நூலாசிரியர் கூறுகிறார்.
உங்கள் பிள்ளைகளை நீங்கள் சிநேகித்து வளர்த்துக் காப்பாற்றினாலும் கிரயத்துக்கு விற்றாலும், அவர்களைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும், தழுவி அணைத்தாலும் அவர்களுக்கு அபராதமிட்டு ஆக்கினைப்படுத்தினாலும், அவர்களுக்குள்ளவைகளை எடுத்துக்கொண்டாலும் உங்கள் பொருள்பண்டங்களை அவர்களுக்குக் கொடுத்தாலும், கொடாதுவிட்டாலும், அவர்கள் உங்களை மதியாமல் உங்களுக்கு அமையாமல் துன்மார்க்கராய்ப்போகையில் நீங்கள் அவர்களை வெறுத்துச் சபித்தாலும் உங்களிடம் நியாயம் கேட்கத்துணிபவர் யார்?
பிள்ளைகளின் ஆத்தும சரீர நன்மைகளுக்கேற்ற ஒழுங்குக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, ஒவ்வொரு பிள்ளையின் தன்மைக்கும் குணத்துக்கும் வேண்டியவிதமாய் அக் கட்டுப்பாடுகளைக் கூட்டவும் குறைக்கவும், மாற்றவும் அழிக்கவும், பாவமற்ற எதையும் செய்யும்படி கற்பிக்கவும் செய்வதைத் தடுக்கவும் பெற்றோருக்குப் பூரண தத்துவமுண்டு.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠